Friday, December 27, 2013

பிக்சல் - டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் வெளியீடுதகவல்:

இப்புத்தகம் ஜனவரி நான்காம் தேதி வெளியிடப்பட்டது.

கிடைக்குமிடம்:
டிஸ்கவரி புக் பேலஸ்.
கே.கே.நகர். சென்னை - 78
தொடர்புக்கு: https://www.facebook.com/discovery.palace?fref=ts

-------------------------------------------------
தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”, வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் மகிழ்ச்சியையும் ஆவலையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது. அவரிடமும் தொழில் பயின்றவன் என்ற முறையில் இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

பிக்சல் - முழுமையான டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்


இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரை நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்போது உபயோகத்தில் இருக்கும் பல்வேறு டிஜிட்டல் காமிராக்களையும் அது அறிமுகமான விவரங்களையும் அலசுகிறது.

இந்நூலில் இந்திய சினிமாவில் டிஜிட்டல் ஒளிப்பதிவின் பங்கு பற்றியும், சில முக்கியமான டிஜிட்டல் திரைப்படங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் கேனான் 5டி காமிரா முதல் ரெட், ஆரி அலெக்ஸா, சோனி போன்ற அனைத்து விதமான காமிராக்கள், அதன் செயல்பாடுகள் பற்றி மட்டுமல்லாமல் அவற்றை எப்படி இயக்குவது என்பது படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.

மிக சமீபத்திய வரவான ரெட் டிராகன் சென்சார் மற்றும் இனிமேல் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பமான “சினிமா க்ளவுட் கம்ப்யூட்டிங்” இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.

பிக்சல்
முழுமையான டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்

ஆசிரியர் : சி.ஜெ.ராஜ்குமார்
பக்கங்கள் : 176
பதிப்பு : டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.
விலை : 230/-
 டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் வெளியீடு

நாள் : 04-01-2014, சனிக்கிழமை,
நேரம்: மாலை 6 மணி
இடம்: பிரசாத் லேப் தியேட்டர்.
           அருணாச்சலம் சாலை, சாலிகிராமம். சென்னை - 93.


தலைமை : திரு.பாலு மகேந்திரா – இயக்குநர்
முன்னிலை: திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் – இயக்குநர்
நூல் அறிமுகம்: திரு.எஸ்.சிவராமன் –மேலாளர், பிரசாத் லேப்.
   
        நூல் வெளியிடுபவர்

திரு.எம்.ராஜா – இயக்குநர்

       பெற்றுக்கொள்பவர்கள்:

திரு.எஸ்.டி..விஜய் மில்ட்டன்  - இயக்குநர்/ஒளிப்பதிவாளர்
திரு.ஆர்.வேல்ராஜ் – இயக்குநர்/ஒளிப்பதிவாளர்

        வாழ்த்துரை:

திரு.என்.கே.விஸ்வநாதன். தலைவர், ஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA
திரு.வெற்றிமாறன். இயக்குநர்
திரு.ஜி.சிவா செயலாளர் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA
திரு.எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்குநர்
திரு.இளநகை அவர்கள் . மேலாளர் டிஸ்கவரி புக் பேலஸ்
திரு.கமலக்கண்ணன் – இயக்குநர் (மதுபானக்கடை)
திரு.நவீன் – இயக்குநர் (மூடர்கூடம்)
திரு.நட்டிகுமார் –இயக்குநர்

        ஏற்புரை.

திரு.சி.ஜெ.ராஜ்குமார். நூலாசிரியர்/ஒளிப்பதிவாளர்

      நன்றியுரை.
திரு.என்.ஏ.சீனிவாசன்  மேலாளர், டிஸ்கவரி புக் பேலஸ்

நிகழ்ச்சித் தொகுப்பு: திரு. ஈரோடு மகேஷ்  அவர்கள்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திரு.வேடியப்பன். மேலாளர், டிஸ்கவரி புக் பேலஸ்.

Friday, November 15, 2013

'Gravity' திரைப்படம் ஒரு பார்வை:


'Gravity' படத்தை எத்தனை முறை பார்த்தாலும், படத்தின் முடிவில் அது ஏற்படுத்தும் பரவச மனநிலையிலிருந்து அவ்வளவு சுலபமாக வெளிவரவே முடிவதில்லை. அத்திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அதுவெழுப்பும் மனக் கிளர்ச்சியை வார்த்தைகளால் இங்கே விவரித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். இசையை அனுபவிக்கும் போது ஏற்படுமே.. அதுபோன்றொரு மன ஓட்டத்தை இப்படம் தொடர்ந்து ஏற்படுத்துகிறது. சிந்தனைத் தொடர்ச்சி ஒன்று ஏற்பட்டு வளர்ந்துகொண்டே போகிறது. வாழ்க்கை, அறிவியல், தத்துவம், சித்தாந்தம், இயற்கை, ஆத்திகம், நாத்திகம், இன்பம், துன்பம் என அது பயணிக்கும் பாதைகள் சொல்லில் அடங்கா.

பூமியிலிருந்து 372 மைல் தூரத்தில் தனித்து விடப்படும் கதாப்பாத்திரங்களோடு நாமும் கைவிடப்பட்டதான ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துகிறது. அண்ட வெளியில் பரவிக்கிடக்கும் ஆழ்ந்த அமைதியே மனமெங்கும் எதிரொலிக்கிறது. பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தனித்து விடப்பட்டதாக உணர்கிறார்கள் என்பதை திரையரங்கில் விரவிக்கிடக்கும் அமைதி உணர்த்துகிறது. மற்ற திரைப்படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் வேறானதொரு தளத்தில் இயங்குவதை படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே புரிந்துக்கொள்ள முடிகிறது. படத்தின் மீதிருந்த பிரமிப்பு அகலாமல், அப்படத்தின் தயாரிப்புப் பணிகளைப்பற்றி தெரிந்துக்கொள்ள முயன்றேன். அது உண்டாக்கும் பிரமிப்பு படத்தை விட அதிகமானதாக இருக்கிறது.

வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளிலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. நீண்ட ஷாட்டுகள், அண்டவெளியில் விரவிக்கிடக்கும் அமைதியை முன்னிறுத்தும் இசைக்கோர்ப்பு, இயற்கையோடு இயைந்த ஒளியமைப்பு என பல காரணிகளால் இப்படம் முற்றிலும் வேறானதொரு அனுபவத்தை கொடுக்கிறது.

இப்படம் வெறும் 200 ஷாட்டுகளால் பின்னப்பட்டிருக்கிறது. பொதுவாக படங்களில் ஏறக்குறைய 2000 ஷாட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. அண்டவெளியில் ஒலி இருப்பதில்லை என்பதால் இசையை மட்டுமே பயன்படுத்திருக்கிறார்கள். 'Sound Effects' என்று சொல்லப்படும் சூழல் ஓசைகளைப் பயன்படுத்தவில்லை என்கிறார்கள். அடுத்த முறை, படத்தைப்பார்க்கும் போது அதையும் கவனிக்க வேண்டும். மூன்று தடவைகள் படத்தைப்பார்த்தும் அது என் கவனித்திற்கு வரவே இல்லை. வழக்கமான முறைப்படி, எழுதப்பட்ட கதை, திரைக்கதை, வசனத்தைக் கொண்டு படம் பிடிக்கபட்டு, பின்பு மற்ற பிற்தயாரிப்புப் பணிகளால் முழுமையடையும் ஒரு திரைப்படத்தைப்போல இத்திரைப்படம் தயாரிக்கப்படவில்லை. இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.


இப்படத்தின் ‘Workflow’ பற்றிய ஒரு பார்வை:

1. Orbit Path: படத்தில் கதாப்பாத்திரங்கள் அண்டவெளியில் பயணிக்கும் பாதைகள் இவை. இதன் மூலம் கதாப்பாத்திரங்களின் பின்புலத்தில் தெரியும் காட்சிகள் முடிவு செய்யப்படும். முதலில் இது CG தொழில்நுட்பாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டன.

2. Previs: இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் அனிமேஷன் தொழில்நுட்பாளர்களுடன் இணைந்து, குறைந்த தரத்தில் (Low Res Images) உருவாக்கிய படத்தின் அனிமேட்டட் காட்சிகள். ‘Virtual Camera’ நகர்வோடு இருக்கும் இக்காட்சிகளே படத்தின் அடிப்படை பிரதியாக செயல்பட்டன.

3. Prelight: ஒளிப்பதிவாளர் CG தொழில்நுட்பாளர்களோடு இணைந்து படத்தில் வரும் ‘Virtual Sequence’-களுக்கு ஒளியமைப்பைச் செய்கிறார். இதன் மூலம் படத்தில் இடம்பெறும் அனிமேட்டட் காட்சிகளின் ஒளியமைப்பு முடிவு செய்யப்படுகிறது. இக்காட்சிகளும், படம் பிடிக்கப்படும் நடிகர்களின் பிம்பங்களும் ஒன்றிணைக்கப்படும் போது, ஒளியமைப்பு ஒத்துப்போக வேண்டுமல்லவா! இதன் அடிப்படையிலேயே ஒளிப்பதிவாளர் நடிகர்களை படம் பிடிக்கும்போது ஒளியமைப்பு செய்வார்.

4. Pre-DI: வடிவமைக்கப்பட்ட காட்சிகளின் வண்ணத்தை ஒழுங்கமைத்தல். DI முறையில் காட்சிகளின் வண்ணத்தை ஒழுங்கமைப்பதன் மூலம் திரைப்படத்தின் ‘Final Look’ எப்படி இருக்கும் என்பது முடிவு செய்யப்பட்டது.


5. Techvis: 'Previs'மற்றும் 'Prelight' தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கேமரா நகர்வைத் தீர்மானிப்பது. இதன் மூலம் கதாப்பாத்திரங்களின் பார்வைக் கோணத்தில் காட்சிகளை முடிவுசெய்து அதன் அடிப்படையில் ஒளியமைப்பு முறையை தேர்ந்தெடுப்பது. அதாவது, அக்காட்சிகளில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களின் மீது விழும் ஒளியின் மூலத்தை முடிவு செய்வது. இப்படம் முழுவதும் ஒளியானது மூன்று மூலங்களிலிருந்து வருவதாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று சூரியன், இரண்டாவது சூரிய ஒளி பூமியின் மீது பட்டுப் பிரதிபலித்து வரும் ஒளி.. அதாவது பூமியின் கடல் மீது இருக்கும் போது பிரதிபலிக்கும் ஒளியானது நீலமாகவும், பாலைவனத்தின் மீதிருக்கும் போது பிரதிபலிக்கும் ஒளி மஞ்சளாகவும் இருக்கும். மூன்றாவது நிலவில் பட்டு பிரதிபலிக்கும் ஒளி.

6. Live-Action Production with LED Box: அடுத்து, அனிமேட்டட் செய்யப்பட்ட கதைக் களத்தோடு கதாப்பாத்திரங்களை இணைக்க, நடிகர்களை படம் பிடிக்கும் செயல். அப்படிப் படம் பிடிக்கப்படும் கதாப்பாதிரங்களின் மீது விழும் ஒளியானது அவர்களின் பின்புலத்தின் ஒளியோடு ஒத்திருக்க வேண்டும் என்று முன்பே பார்த்தோம் அல்லவா? அப்படி ஒத்திருக்க என்ன செய்ய வேண்டும்? பின்புலக் காட்சியில் இருக்கும் ஒளியானது இவர்கள் மீது விழ வேண்டும். ஆனால் இங்கே காட்சிகள் உண்மையானது அல்ல. கணினியில் உருவாக்கப்பட்டவை. எனில், எப்படி அக்காட்சிகளின் ஒளியை இவர்கள் மீது விழ செய்வது? இங்கேதான் ஒரு புதுவகையான தொழில் நுணுக்கம் பின்பற்றப்பட்டிருக்கிறது. அதாவது நடிக்கும் நடிகர்களைச் சுற்றி LED Panels-ஐக் கொண்டு ஒரு அறை (20' cube) உருவாக்கப்பட்டு, நான்கு புறமும் சூழப்பட்ட அந்த LED Panel-களில் காட்சியில் இடம்பெறும் பின்புலக்காட்சிகளை ஒளிபரப்பு செய்வது. தொலைக்காட்சித் திரைகளிலிருந்து வெளி வரும் ஒளியை நினைவுகொள்ளுங்கள், அதேப்போலத்தான். காட்சிகளிலிருந்து வெளிப்படும் ஒளியானது நடிகர்களின் மீது படும். இதன் மூலம் ஒளியானது ஒத்திருப்பதைச் சாத்தியமாக்க முடிந்தது. இக்காட்சியை ‘Motion-Control Camera’-வைக் கொண்டு படமாக்கினார்கள். இந்த கேமராவிற்கான நகர்வுப் பாதையை முன்பே ‘Techvis’ மூலமாக முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

7. Live-Action Production with Puppeteering Rig: சிறப்புக் கருவிகள் கொண்டு நடிகர்களின் நகர்வு ‘Zero Gravity’ தன்மையில் அமைக்கப்பட்டு படம் பிடிக்கப்படுகிறது.

8.Live-Action Production/Traditional Shoot: பின்பு ‘Space-Capsule’-இன் உட்புறப் படப்பிடிப்பும், ஏனைய லைவ் ஆக்‌ஷன் படப்பிடிப்பும் நடத்தப்படுகிறது.


9. Conform and Rendering:  CG-இல் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்களின் இயக்கம், அங்க அசைவு போன்றவற்றையும், காட்சியில் இடம்பெறும் மற்ற விண்கலங்களின் இயக்கம் போன்றவற்றையும் அனிமேட்டர்கள் இறுதி செய்கிறார்கள். மேலும் திரைப்படத்திற்கு தேவையான அதிக அளவு தரத்தில் (high-quality) அனிமேஷன் செய்யப்படுகின்றன. படத்தில் இடம்பெறும் அண்ட வெளிக்காட்சிகள் மற்றும் பூமி பந்தின் காட்சிகள் ‘NASA’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில்/ பயன்படுத்தி/ சரி பார்த்து, நேர்த்தி செய்யப்படுகின்றன.

10. Integrating Live Action and CG: முழுமையடைந்த அனிமேஷன் காட்சிகளையும், நடிகர்களைக் கொண்டு படம் பிடித்த காட்சிகளையும் ஒன்றிணைக்கிறார்கள். இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் அனிமேட்டர்களும் இணைந்து நடிகர்களின் அசைவுகளுக்கு ஏற்ற விதத்தில் CG ஷாட்டுகளின் இயக்கத்தைச் சீர் செய்கிறார்கள். அதாவது நடிகர்களின் இயக்கமும் கணினியில் வடிமைக்கப்பட்ட ஏனைய துணை பாத்திரங்கள், பின்புலம் மற்றும் கருவிகளின் இயக்கமும் ஒத்திருப்பதை உறுதி செய்கிறார்கள். மற்றொருபுறம் ஒளிப்பதிவாளர் கணினி வல்லுநர்களோடு இணைந்து காட்சிகளுக்குத் தேவையான ஒளியமைப்பை டிஜிட்டலாக ஒழுங்கமைக்கிறார். இறுதியாக திரைப்படத்திற்கு தேவையான காட்சிகள், அதாவது கணினியில் வடிவமைக்கப்பட்ட காட்சிகளும், படம்பிடிக்கப்பட்ட காட்சிகளும் இணைந்த காட்சிகள் கிடைக்கின்றன. இதை, இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் சரி பார்த்து உறுதி செய்கிறார்கள்.

11. DI Ingest: கணினியில் வடிவமைக்கப்பட்ட ஏனைய துணைக் காட்சித்துண்டுகளுக்கு தனியாக வண்ண சீரமைத்தல் நடக்கிறது.


12. DI Grade: திரைப்படத்திற்கான காட்சிக் கோர்வைகள் கிடைத்த பின் அவற்றுக்கு 2D தரத்தில் வண்ண ஒழுங்கமைத்தல் (DI) நடக்கிறது. இறுதியாக 2-D DCP, Kodak Vision 2383 release prints and an HD master -ஆகப் பதிவு செய்யப்படுகிறது.

13. Stereoscopic Conversion: இருபரிமாணக் காட்சிகள் முப்பரிமாணக்காட்சிகளாக மாற்றப்படுகின்றன.

14. 3-D Grade: முப்பரிமாணக்காட்சிகளாக மாற்றப்பட்ட காட்சித்துண்டுகள், மீண்டும் முப்பரிமாணத் திரையிடலுக்காக வண்ணம் ஒழுங்கமைத்தல் செய்யப்படுகிறது. 3D திரையிடல் (4.5 foot-lambert) மற்றும் Imax 3-D (7 foot-lambert)-ஆன பிரதிகள் தனித்தனியாக ஒழுங்கமைக்கபட்டு தயார் செய்யப்படுகின்றன.File formats: படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகளின் தரம் பற்றிய தகவல்கள்:

- Live-action production: ArriRaw 2880x1620 deBayered to Log C v3

- Framestore CG output: 2060x876 10-bit Log C DPX

- Framestore external mattes output:16-bit RBGa TIFF

- 2-D graded files: 2048x858 10-bit Log Cஇயக்குனர் Alfonso Cuarón மற்றும் ஒளிப்பதிவாளர் Emmanuel Lubezki

இப்படியாக, நாம் திரையரங்கில் பார்க்கும் இறுதி வடிவ பிரதி தயார் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறியும் போது நம்முடைய பிரமிப்பு இரட்டிப்பாகிறது. மேலும், வருங்காலத் திரைப்படத் தயாரிப்பு முறைகள் அடையப் போகும் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதைத் தவற, நாம் இங்கே செய்யக்கூடியது ஏதுமில்லை. வேண்டுமானால், ஒன்று செய்யலாம்.. அது மிக சுலபமானதும் கூட..‘ஆ.. என்று வாயப்பிளந்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கலாம்’. அவ்வளவுதான்!
*

Gravity: IMAX Behind the Frame:


Gravity Official Main Trailer (2013) * Thanks to American Cinematographer Magazine

Saturday, November 2, 2013

திரைத்துறையில் முகமறியா மனிதர்கள்:


பொதுவாக,  ஒரு திரைப்படத்தில் நான் பணி புரியும் போது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அடைவேன். இந்தக் கணமே நிஜம் என்பதைப்போல முழு ஈடுபாட்டுடன் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். இத்தனை நாள் காத்திருந்ததும், போராடியதும் இதற்குத்தானே என்பதாய் என் மனநிலை இருக்கும். வாழ்க்கையின் அதி உன்னத கணத்தில் வாழ்வதாய் மகிழ்வேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும், முதல் நாள் படப்பிடிப்பைப் போன்றே மிகுந்த உற்சாகத்தோடு அணுகுவேன். அப்படியே ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆயினும், ஒரு சில நாட்கள் பதட்டம் நிறைந்ததாக இருந்துவிடுகின்றன. அத்தகைய நாட்களில் என் மனம் பெரும் போராட்டத்திற்க்கு ஆளாகும்.. உதவியாளராக இருந்த காலங்களில் அத்தகைய நாட்களைக் கடந்து வந்திருக்கிறேன். ஒளிப்பதிவாளராக உயர்ந்த பிறகு அப்படியான நாட்கள் மிக அரிதானவையே!ஆனால், தற்போது பணிபுரிந்துக்கொண்டிருக்கும் படமான ‘தொட்டால் தொடரும்’ திரைப்படத்தின் அண்மைக்காலப் படப்பிடிப்பில் அத்தகைய நாட்களைக் கடக்க வேண்டியிருந்தது...

ஒரு திரைப்பட உருவாக்கத்தில் பல தொழில்நுட்பாளர்கள் பங்கு பெறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், நடன இயக்குனர், சண்டைக் காட்சி இயக்குனர் என பலரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்களில் பெரும்பான்மையோர்களின் பெயர்களும், முகங்களும் கூட உங்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்கள் அனைவருமே, தங்களின் தகுதிக்கேற்ப ஊதியம் பெறுகிறார்கள், பெயரும் புகழும் அடைகிறார்கள். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட குறைந்த ஊதியத்துக்கு, அதிக ஆபத்தை சந்திப்பவர்கள் சிலரும் உண்டு, அவர்கள்தான் ‘Stunt Men'!!

சண்டைக்காட்சிகளில் வில்லன்களின் கைக்கூலிகளாக நாயகனிடம் அடிவாங்கும் இவர்களை, நீங்கள் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் ‘Stunt Drivers' என்றறியப்படுகிறார்கள். சண்டைக்காட்சிகளின் ஊடாக வரும் வாகனங்களை இயக்குபவர்கள் இவர்கள்தான். அற்புதமான வாகன ஓட்டிகளான இவர்கள்தான், பொதுவாக நீங்கள் பார்க்கும் அத்துனைப்படங்களிலும் வரும் வாகனங்களை ஓட்டுகிறார்கள். பிரதான நடிகர்கள், தங்களின் முகம் தெரியும் ஷாட்களில் மட்டுமே வாகனத்தை ஓட்டுகிறார்கள். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தைக் கவிழ்ப்பது, எதன் மீதோ முட்டி அந்தரத்தில் பறந்து போய் தலை குப்புற விழுவது போன்ற மிக ஆபத்தான வாகன சாகசங்களை நிகழ்த்திக் காட்டுவது இவர்கள்தான்.

கடந்த வாரத்தில் அப்படியான ஒரு காட்சியைத் ‘தொட்டால் தொடரும்’ திரைப்படத்திற்காக படம் பிடித்தோம். மிக வேகமாக வரும் கார் ஒன்று, மற்றொரு காரில் மோதிக் கவிழ்வதாய்க் காட்சி. சண்டைப் பயிற்சி இயக்குனர் திரு. நந்தா மற்றும் இயக்குனர் திரு.கேபிள் சங்கர் ஆகியோருடன் நானும் விவாதித்து அக்காட்சியை எப்படிப் படமாக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்தோம். பல சாத்தியங்கள் விவாதிக்கப்பட்டன. அக்காட்சியை தத்ரூபமாக படமாக்கி விடவேண்டும் என்பது எங்களின் ஆசை.  படப்பிடிப்பு நடந்தது புதுச்சேரியில். காரைக் கவிழ்க்கும் அந்த நாளும் வந்தது..

இந்த நாள்... இந்த நாள்தான், நான் முன்பே சொன்ன அந்த நாள்! பதட்டத்தையும், மனப்போராட்டத்தையும் எனக்குள் ஏற்படுத்தும் நாள். இத்தகைய நாட்களைத்தான் நான் தவிர்க்க விரும்புகிறேன். மற்ற தொழில்நுட்பாளர்களைப் போலவே ‘Stunt Drivers'-ம் ஒரு தொழில்நுட்பாளர்தான் என்றாலும், அவர்கள் அணுகும் ஆபத்தை நினைத்து மனம் பதறத்தான் செய்கிறது. என் பதட்டத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள முதலில் அக்காரைக் கவிழ்க்க என்ன செய்கிறார்கள் என்பது தெரியவேண்டும் உங்களுக்கு. கவிழ்க்க வேண்டியக்காரை மிக வேகமாக செலுத்தி, ஒரு ‘சாய்தளத்தின்’ (Ramp) மீது ஏற்றி அந்தரத்தில் பறக்க வைக்கிறார்கள். அந்த ரேம்ப், செயற்கையாக இரும்புத்துண்டுகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இந்த ரேம்பில் காரை ஏற்றும் போதே, கார் எவ்விதத்தில், எந்தப் பக்கத்தில் சாய்ந்து விழவேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். அதாவது கவிழும் காரானது, தலை குப்புற விழ வேண்டுமா? செங்குத்தாக விழ வேண்டுமா? அல்லது நீண்ட தூரம் உருண்டோட வேண்டுமா? என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது. இதை செய்வது அந்த 'Stunt Driver'கள்தான். ஆம்.. உங்களைப்போன்ற என்னைப்போன்ற மனிதர்கள்தான் இதைத் துணிந்து செய்கிறார்கள். வேகமாக ஓடி வரும் கார் அந்தரத்தில் பறந்து தலை குப்புற விழுந்து உருள்கிறது. அதன் உள்ளே மனிதன் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

இப்படிக் கவிழும் காரில் பாதுகாப்புக்காக பல முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவ்வாகனத்தை ஓட்டுபவர் தக்க பாதுகாப்புக் கவசங்களை அணிந்துக் கொள்கிறார். ஆயினும் அந்தக் கணம்.! அது, கடந்து வர முடியாததாய் மாறிவிடும் சாத்தியங்களை கொண்டது என்பதை சிந்தியுங்கள். ஒவ்வொரு முறையும், அப்படியான காட்சிகளில் துணிச்சலுடன் ஈடுபடும் அம்மனிதர்களை நினைத்துப் பார்த்தால்.. வியப்பும், துயரமும் ஒருசேர வருகிறது. என்னதான் பணத்திற்காக இதைச் செய்கிறார்கள் என்று கொண்டாலும்.. அத்தகைய துணிச்சலை எப்படி எடை போடுவது? இது அவர்களுக்கு பணம் ஈட்டும் ஒரு பணி என்பதையும் மீறி.. ஒரு சாகசச் செயலாகவும் அவர்களால் அணுகப்படுகிறது என்பதை அவர்களோடு பேசும் போது உணர முடிந்தது. வரலாற்றிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் வீரர்கள் என்றொரு சொல்லை கேள்வியுறுகிறோமே.! அது இவர்கள்தான் என்று நினைக்கிறேன். இத்தகையவர்களைத்தான் வீரர்கள் என்று அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இப்படியான காட்சிகளைப் படம் பிடிக்கும் ஒவ்வொரு தடவையும்.. கார் கவிழ்வதற்கு முன்பாகவும் பின்பாகவும் நான் அடையும் மன நிலையை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. அப்படிக் கவிழும் காரை சரியாக படம் பிடித்து விட வேண்டும் என்ற தேவை ஒரு புறம். இரண்டுக்கும் மேற்பட்ட கேமராக்கள் இருந்த போதும்.. முதன்மைக் கேமராவாக என் கேமரா இருக்கும். ஆகையால், கவிழும் அக்கணத்தை சரியாகப் பதிவு செய்துவிட வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். கூடவே.. ஒரு மனிதனின் உயிர் அந்தரத்தில் ஊசலாடவிடப்படுவதையும் நினைத்துப் பதறும் மனம் இன்னொருபுறம். கார் கவிழ்ந்த அடுத்த கணம், ஒரு வித மன அயர்ச்சியையும், பாரத்தையும் உணர்வேன். சண்டைப் பயிற்சி இயக்குனரோடு, பலரும் ஓடிச் சென்று கவிழ்ந்த காரிலிருந்து அந்த ஓட்டுனரை வெளியே எடுப்பார்கள். அத்தகையக் கணங்களில் நான் அடையும், துயரமும், பதட்டமும் மகிழ்ச்சியும் கலந்த கலவை உணர்ச்சியை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. கண்ணீர் கசிய, பதட்டத்தோடு அக்காரை நெருங்கி.. அதிலிருந்து வெளிப்படும் அம்மனிதரைப் பார்க்க ஏனோ மனம் கலங்கும். ஆனால், அவரோ விழுந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியோடு வெளியேறி வருவார். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கரவோசை செய்து தங்களின் மகிழ்ச்சியையும், பாராட்டையும் ஆரவாரத்தோடு தெரிவிப்பார்கள். அக்காட்சியைக் கண்டு அவ்வோட்டுனர் மகிழ்வதாக நினைத்தாலும்.. அவரது கண்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளில் ஒளிந்திருப்பது என்ன? அம்மனிதர்களின் கண்களே என் மனதெங்கும் நிறைந்திருக்கிறது.


அத்தகைய ஓட்டுனர்களில் ஒருவர்தான் திரு. குட்டியண்ணன். எங்கள் படத்திற்காக, கார் கவிழ்க்கும் காட்சியை மிக நேர்த்தியாக செய்தவர். பல நூறு படங்களில் பணியாற்றியவர். பல கார்களைக் கவிழ்த்தவர். ஒவ்வொரு கவிழ்ப்பின் போதும் பல காயங்களை அடைபவர். எங்கள் படத்தின் போதும்.. சற்றே காயம் பட்டவர். ஒவ்வொரு கவிழ்ப்பின்போதும் காயம் படுவதையும், பின்பு அதற்கு மருத்துவம் பார்ப்பதையும் தொடர்கதையாகக் கொண்டிருப்பவர். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அளப்பரியா அன்பும், மரியாதையும் வரும் எனக்கு. அவரோடு மிகுந்த நேசத்தோடு இருக்க முயல்கிறேன். ஒரு மாவீரனின் அருகில் நிற்பதாக உணர்ந்தாலும், ஏனோ மனது மகிழ்ச்சி கொள்வதில்லை. திரைப்படத்துறையைச் சார்ந்த பலரை நாம் தெரிந்து வைத்திருந்தாலும், பின்னணியில் இயங்கும் இத்தகையவர்களை நாம் அறிந்துகொள்வதே இல்லை. அது சரி, பணத்திற்காக இதை அவர்கள் செய்கிறார்கள் என்று சொன்னேனே.. அது எவ்வளவு தெரியுமா? அதிகபட்சம், ஒரு லட்சம் வரைதான். அதுவும் லட்சமெல்லாம் பெரிய படங்களில்தான். எங்கள் படம் போன்ற, சிறிய படங்களில் வெறும் முப்பதாயிரம் மட்டும்தான் என்பதையும் அறியத் தருகிறேன். இதைத் தவிர்த்து வேறு எவ்விதமான பணிப் பாதுகாப்பும், மரணமடைந்தால் காப்பீடும் கூட கிடையாது. இத்தகைய மனிதர்கள்தான் காலத்தால் எளிதில் மறக்கப்பட்டு விடுகிறார்கள். 

Monday, October 7, 2013

Working Stills..நான் வேலைப்பார்த்த படங்களிலிருந்து சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். உடன் அப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கேமராக்களின் பெயர்களையும் கொடுத்துள்ளேன். ஒரு தகவலுக்காக..


Vijay Armstrong
‘தொட்டால் தொடரும்’ படத்திலிருந்து (Red Epic Digital Camera)

Vijay Armstrong
‘தொட்டால் தொடரும்’ படத்திலிருந்து (Red EPic Digital Camera with Optima Zoom)

Vijay Armstrong
‘தொட்டால் தொடரும்’ படத்திலிருந்து (Red EPic Digital Camera with Optima Zoom)

Vijay Armstrong
‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera)

Vijay Armstrong
‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera)

Vijay Armstrong
‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera)

Vijay Armstrong
‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera)

Vijay Armstrong
‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera)

Vijay Armstrong
‘மாத்தியோசி’ படத்திலிருந்து (Arri 435 Extreme Film Camera)

Vijay Armstrong
‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera)

Vijay Armstrong
‘அழகு குட்டிச் செல்லம்’ படத்திலிருந்து (Red MX Digital Camera)

Vijay Armstrong
‘அழகு குட்டிச் செல்லம்’ படத்திலிருந்து (Canon C300 Digital Camera)

Vijay Armstrong
‘அழகு குட்டிச் செல்லம்’ படத்திலிருந்து (Canon EOS 5D Mark III Digital Camera)

Vijay Armstrong
‘பொம்மலாட்டம்’ படத்திலிருந்து (Digital Light Meter)

Vijay Armstrong
‘அழகு குட்டிச் செல்லம்’ படத்திலிருந்து (Red MX Digital Camera)

Vijay Armstrong
‘அழகு குட்டிச் செல்லம்’ படத்திலிருந்து (Red MX Digital Camera)

Vijay Armstrong
‘மாத்தியோசி’ படத்திலிருந்து (Steadicam)

Vijay Armstrong
‘பொம்மலாட்டம்’ படத்திலிருந்து (Digital Light Meter)

Vijay Armstrong
‘ஒண்டிப்புலி’ படத்திலிருந்து (Arri Alexa Digital Camera)

Saturday, August 31, 2013

தங்க மீன்கள் - பாசவலைக்குள்..


வாத்தியாரின் பிள்ளை மக்கு என்பதாய், படிப்பில் நாட்டமில்லாது வளர்ந்த தகப்பனுக்கும், அவனைப் போலவே படிப்பில் விருப்பமில்லா மகளுக்குமிடையே நிகழும் பாசக் கதையிது. நம் கல்வி முறை, பிள்ளைகளின் குழந்தைப் பிராயத்தை எப்படி நாசமாக்குகின்றன என்பதை பேசும் கதை(?!) என்பதாக, அல்லது சராசரி I.Q-விற்கும் குறைவான அறிவு கொண்ட தகப்பன், மகளுக்குமிடையேயான கதை என்பதாக எடுத்துக் கொள்ளவும் சாத்தியம் கொண்ட கதை. தகப்பன் மகள் இருவருமே பிரதான கதாப்பாத்திரங்கள். அவர்களைச் சுற்றி பின்னப்பட்ட கதைக்குத் தகுந்த துணைப்பாத்திரங்கள். தாத்தா, அப்பத்தா, அம்மா, அத்தை, தந்தையின் நண்பன், தோழி, வாத்திச்சி, பள்ளி மேலாளர் என நேர்த்தியான பாத்திரப்படைப்புகள். அன்பை, பாசத்தை நெகழ்வாய் பேசும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் ராம் கொடுத்திருக்கிறார்.

கையாலாகாதவனாக மதிப்பிடப்படும் ஒரு தகப்பனின் பாசப்போராட்டத்தை, அவனது இயலாமையை, அப்படியான தகப்பன்களின் சார்பாக ஒரு கதையை இயக்குனர் ராம் எடுத்துக்கொண்டிருக்கிறார். பெரும்பான்மையோர்களுக்கு இது அவர்களின் வாழ்க்கை சம்பவங்களின் சாரத்தை நினைவூட்டலாம். பலருக்கு அப்படி இல்லாமலும் போகலாம். அவர்கள் இந்தப்படத்தை முற்றிலுமாக மறுதலிக்கவும் கூடும். தேர்ந்த படைப்பாளிக்கே உரிய பல காட்சிகளை இப்படத்தில் ராம் உருவாக்கியிருக்கிறார். அதே நேரம், பொருத்தமில்லா காட்சிகள் சில இருப்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எது எப்படி ஆகினும், ஒரு நெகழ்ச்சியான கதையாக இது இருப்பதை மறுக்க முடியாது.

நேற்று இரவுக் காட்சி, இந்தப் படத்தைப் பார்த்தேன். நெகிழ்ச்சியும், வருத்தமும், விவாதமும் உருவான ஒரு குழப்பமான மனநிலையிலேயே வெளியே வந்தேன். படத்தின் மேன்மையும் குறையும் ஒரு சேர வந்து போயின. ஆயினும் இது மற்றுமொரு படமாக, ஒதுக்கி தள்ளி விட்டு போய் விடக்கூடிய படமில்லை என்பதை அறிந்தே இருந்தேன்.

பொறுப்பும், நேர்மையும், தகுதியும் கொண்ட ஒரு கலைஞனின் படைப்பு இது என்பதை தெரிந்தே வைத்திருக்கிறேன். இயக்குனர் ராமின் இரண்டு படைப்புகளிலும் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. அவை கதையின் போக்கிலும் படைப்பாக்கத்திலுமிருந்த குறைகளின் அடிப்படையில் உருவானதே தவிர, ராம் என்னும் அற்புதமான படைப்பாளியின் மீதானதில்லை அது.

குழப்பத்தோடு உறங்கபோனவனின் கனவு முழுவதும் ‘செல்லமாவும் கல்யாணியும்’நிரம்பி வழிந்தார்கள். முதலில் இப்படம் குறித்து எதுவும் எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். காலையில் எழுந்த போது, அம்முடிவு மாறி இருந்தது. காரணம், ஒரு சிறந்த படமென்பது திரையரங்குக்கு வெளியேயும் நம்மை ஆக்கிரமித்திருக்க வேண்டும், சிந்தனைத் தொடர்ச்சி ஒன்றை அது உருவாக்க வேண்டும் என்பார்கள். அது ‘தங்கமீன்களால்’ சாத்தியமாயிற்று.

ஒரு ஓவியன், தான் தீட்டி முடிந்த ஓவியத்தை சற்றுத் தள்ளி வைத்து பார்த்து, மதிப்பிட்டு, திருத்தம் செய்வதைப்போல.. இயக்குனர் ராம் அவர்கள் தன் படைப்பைப் பார்க்க வேண்டும். சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறேன். இப்படி நான் சொல்வதை சரியானவிதத்தில் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி அவர் செய்தால்.. தகுதியான படைப்புகளை, அதன் வணிக வெற்றியோடு ராம் அவர்கள் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன். இயக்குனர் ராம் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

மக்களின் நலன் காக்க தாதாவாகும் (தாத்தா இல்லை) நாயகனின் கதையையும், பொறுக்கிகளிடமிருந்து தேசத்தைக் காக்க பொறுக்கியாய் மாறும் காவல் அதிகாரியின் கதையையும், காதலை வளர்க்கும் நாயக, நாயகியரின் கதையையும் பொறுப்புடன் பார்த்து மகிழும் நாம்.. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான அன்பைப் பேசும் கதையையும் ஒருமுறை பார்த்து வைக்கலாம், தப்பொன்றுமில்லை.

(ஒரு வித எள்ளல் தன்மையிலேயே மேலே இருக்கும் கடைசிப்பத்தியை நான் எழுதினாலும், உண்மையில்.. தவற விடக்கூடாத படமிது. இப்படியான படங்களை ஆதரித்தால்தான் சிறந்த படங்கள் வரும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் இப்படியான படங்களை பார்க்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்தையும், விவாதத்தையும் பிறகு வைத்துக்கொள்ளலாம். முதலில் ஒரு முறை படத்தைப் பார்த்துவிடுங்கள்)

Monday, August 12, 2013

‘ALEXA XT’ கேமரா ஒரு அறிமுகம்:


கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு படத்திற்காக, கதாநாயகியைத் தேர்வு செய்யும் வேலையிலிருந்தோம். கதாப்பாத்திரங்களுக்கான நடிகர்களை தருவித்துத் தரக்கூடிய ஒருங்கிணைப்பாளர்கள் (co-ordinators)பலர் இங்கே உண்டு. அதிலொருவர் எங்கள் அலுவலகம் வந்திருந்தார். எங்கள் கதாப்பாத்திரத்தின் தேவையைச் சொல்லி, அதற்கு ஏற்ற நாயகியை தருவித்துத் தரச்சொன்னோம். அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?! “படத்தை ஃபிலிமுல சூட் பண்றிங்கிளா, ரெட்ல சூட் பண்றிங்களா..?” எங்களுக்கு அவரது கேள்வியின் பொருள் புரிந்தாலும், அக்கேள்வி இங்கே கேட்கப்படுவதன் அவசியம் புரியவில்லை. “ஏன்..?” என்று கேட்டேன். அதற்கு அவர்.. “ரெட் ஃபிலுமுன்னா ஆர்டிஸ்டு நடிக்க மாட்டாங்க சார்.. ஃபிலிமில் சூட் செய்தாத்தான் நடிக்க வருவாங்க..” என்றார்.

எனக்கு அதிலிருக்கும் தர்க்கம் புரியவேயில்லை. “அட, இது என்னப்பா புது கதையா இருக்கே..!” என்றேன். “ஆமாம் சார்.. ரெட்டில் எடுத்தா படம் ஓடாது சார்.. அதனால நடிக்க மாட்டாங்க. அதுவுமில்லாம ரெட்டில் எடுத்தால் அது சின்னப்படம் என்று நினைக்கிறாங்க சார்” என்றார். “ஏம்பா.. பில்லா 2, தாண்டவம் போன்ற பெரிய படங்கள் ரெட்டில் எடுத்தவைதானேப்பா” என்றேன். “அதான் சார் அந்தப் படங்கள் ஓடல.. இவ்வளவு செலவு செஞ்சி படமெடுக்கறவங்க ஃபிலிமுலேயே எடுத்திருக்கிலாம் இல்லையா? இப்ப பாருங்க என்னாச்சின்னு..?!” என்று ஆதங்கப்பட்டார். ’அடப்பாவிங்களா.. என்னமா சிந்திக்கிறாங்க’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

விஷயம் என்னான்னா... டிஜிட்டலில் படமெடுத்தால் அது ஓடாது என்ற ஒரு கருத்து இங்கே தமிழ் சினிமாவில் பரவிக்கிடக்கிறது (கிடந்தது). துப்பாக்கி(அலெக்சா), சூது கவ்வும்(ரெட்), பீட்ஸா(ரெட்), நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் (5D)போன்ற படங்களின் வெற்றிக்குப் பின்தான் தமிழ் திரைப்படவுலகம் டிஜிட்டலின் மேலிருக்கும் அவநம்பிக்கையை கைவிடத்துவங்கிருக்கிறது. இதேப்போலானதொரு அவநம்பிக்கையை ‘கருப்பு வெள்ளை’ ஃபிலிமிருந்து ‘கலருக்கு’ மாறியபோதும், ‘35mm’ பிரதியிலிருந்து 'Cinemascope'-க்கு மாறியபோதும் இத்தமிழ்திரையுலகம் கொண்டிருந்ததாம். மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் அதை அவநம்பிக்கையோடு எதிர் கொள்வதைத்தான் வழக்கமாக கொண்டிருக்கிறது நம் தமிழ் திரையுலகம். இதே கதைதான் படத்தொகுப்புத்துறையில் ‘AVID' அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். Super 16mm, DI போன்றவற்றிற்கும் இதே நிலைமைதான்.

சரி, அது கிடக்கட்டும். நாம் விஷயத்திற்கு வருவோம். இந்திய/தமிழ் திரைப்படத்துறையில் ‘ALEXA, RED, CANON 5D, Blackmagic Cinema Camera’ என பலவகையான டிஜிட்டல் கேமராக்கள் புழக்கத்திலிருந்தாலும், இதில் ஆதிக்கம் செலுத்துவது ‘ARRI’ நிறுவனத்தின் ‘Alexa’ கேமராவும், ‘RED’ நிறுவனத்தின் ‘RedMX’ மற்றும் ‘Red Epic’ கேமராக்கள்தான். இதில் ‘ARRI’ நிறுவனம் தன் ‘Alexa’ வகை கேமராக்களின் வரிசையில் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியிருக்கிறது. பல புதிய கேமராக்களை அறிமுகப்படுத்திருக்கிறது. அவற்றைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இங்கே.

‘ARRI’ தன்னுடைய ‘ALEXA’ கேமராவை 2010-இல் அறிமுகப்படுத்தியது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான ‘ALEXA PLUS’-ஐ 2011 / 2012-இல் அறிமுகப்படுத்தியது. இக்கேமராக்கள்  ‘SxS Module’-ஐப் பயன்படுத்தி ‘SxS PRO card’-இல் பிம்பங்களை பதிவுசெய்கிறது. இவ்வகை கேமராக்களை ‘ALEXA Classic Cameras’ என்று அந்நிறுவனம் தற்போது அழைக்கிறது. காரணம் ‘ALEXA XT Cameras’ என்னும் புதியவகை கேமராக்களை அந்நிறுவனம் 2013-இல் அறிமுகப்படுத்திருப்பதே ஆகும்.

'ALEXA Classic Cameras' பிரிவில் ALEXA, ALEXA Plus, ALEXA Plus 4:3, ALEXA M, ALEXA Studio, ALEXA HD மற்றும் ALEXA HD Plus ஆகிய கேமராக்கள் உள்ளன. ஏழு வகையான கேமராக்கள்.


தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘ALEXA XT Cameras’ பிரிவில்  ALEXA XT, ALEXA XT M, ALEXA XT Plus and ALEXA XT Studio ஆகிய கேமராக்கள் உள்ளன. நான்கு வகையான கேமராக்கள்.

‘ALEXA XT’ என்பதை ‘Xtended Technology’ என்பதன் சுருக்கம் என்று ARRI சொல்லுகிறது. இக்கேமராக்களின் சிறப்புத் தகுதிகளாக ‘XR Module (Xtended Recording), Internal ND Filtration, 4:3 Super 35 Sensor, Built-in CDL server மற்றும் LDS PL mount என வரையறுக்கப்பட்டிருக்கிறது.


Codex

‘XR Module’

‘XR Module’(Xtended Recording) என்பது ‘ARRI RAW Footage’-ஐ நேரடியாக கேமராவிலேயே பதிவு செய்ய ஏதுவாகும் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. முன்பு ‘ALEXA PLUS’ கேமராக்களில் ‘ARRI RAW Footage’ பதிவு செய்ய ‘Codex Recorder'-ஐப் பயன்படுத்த வேண்டியதிருந்தது. தற்போது  ‘Codex Recorder’ சிறிதாக்கப்பட்டு ‘Hard Disc'வடிவில் கேமராவிலேயே இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தரமான RAW Footage-ஐ பெறுவது சுலபமாகிறது. மேலும் கேமராவின் எடை அதிகரிப்பதை இது தடுக்கிறது.‘Internal ND Filtration’ என்பது, கேமராவிற்கும் லென்சிற்கும் இடையே ND ஃபில்டர்களை பொருத்துவதைக் குறிக்கிறது. லென்ஸ் மவுண்டில் ND ஃபில்டர்களை பொருத்த முடியும். இவை லென்சின் பின்புறம், சென்சருக்கு முன்பாக அமைந்திருக்கிறது. பொதுவாக ஃபில்டர்களை லென்சின் முன்புறம்தான் பொருத்துவார்கள். அப்படிப் பொருத்தப்படும் ஃபில்டர்களிலிருந்து பிரதிபலிக்கும் தேவையற்ற ஒளியைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியம். தற்போது லென்சிற்கு உட்புறம் பொருத்துவதால் இந்த தேவையற்ற பிரதிபலிப்புகள் தடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கு தெரியும் இதன் தேவை என்ன என்பதைப்பற்றி. ஆகையால், இது ஒரு முக்கியமான தகுதி மேம்பாடு என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.

‘4:3 Super 35 sensor’ என்பதை விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக HD கேமராக்களைப்போல 16:9 வகை சென்சாராக இல்லாமல், ஒரு முழுமையான 35mm ஃபிலிமைப்போல 4:3 சென்சாராக வைத்திருப்பது பிம்பத்தின் தரத்தை அதிகரிக்க பயன்படும். மேலும் சில பயன்களும் உண்டு.

‘Color Decision List’ என்பதின் சுருக்கம் இந்த CDL. இதைப்பற்றி தகவல்களை வேறொரு கட்டுரையில் காண்போம். அல்லது இங்கே சென்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

‘LDS PL mount’ என்பது ‘Lens Data System’ அமைப்பு கொண்ட மவுண்டைக்குறிப்பது. லென்சிலிருந்து தகவல்களை கேமராவுக்கு அனுப்பும் தகுதி கொண்ட லென்சுகளை குறிக்கிறது. லென்சில் வைக்கப்படும் எக்ஸ்போஸர் என்ன? ஃபோகஸ் என்ன, எந்த Focal Length lens பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்களை கேமராவிற்கு அனுப்பி சேமிக்கவல்லது.

Alexa XT

Alexa XT M

Alexa XT Plus

Alexa XT Studio

‘XR Module’(Xtended Recording) மாற்றி விட்டு  ‘SxS Module’ வகையைக்கூட பயன்படுத்தும் வகையில்  ‘ALEXA XT’ கேமராக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சில மேம்பாடுகளை ‘ALEXA XT’ கேமராக்கள் கொண்டுள்ளன.

 ‘SxS Module’ மற்றும் ‘XR Module’


 டிஜிட்டல் கேமராக்களில், RED நிறுவனத்தின் EPIC வகை கேமராக்களுக்கு இந்த ‘ALEXA XT’ கேமராக்கள் சரியான சவாலாக இருக்கும் என்று படுகிறது. இரண்டு நிறுவனங்களும் அவற்றிற்கே உரிய பயனீட்டாளர்களை வைத்திருந்தாலும்.. Epic கேமராவின் 5K Footage-களுக்கு ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. ‘ALEXA’-வைப் பயன்படுத்தும் போது ‘Codex’-ஐ பயன்படுத்த வேண்டுமே என்பது சிறு இடையூராக இருந்தது வந்தது இதுவரை. காரணம் Codex இணைப்பதால் அதிகரிக்கும் கேமராவின் எடை. தற்போது அந்தப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ARRI நிறுவனம். இனி Epic vs Alexa போட்டியில் alexa முந்துவதில் எவ்வித இடையூறும் இருக்கப்போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இங்கே தமிழ்நாட்டில்/இந்தியாவில் 5K footage எல்லாம் தேவைக்கு அதிகமானது. இந்தியாவில் எல்லா திரையரங்கும் 2K-வில் தான் இயங்குகிறது. மேலும் 5K Footage எல்லாம் 'VFX' வேலை அதிகமுள்ள படங்களுக்குத்தான் தேவைப்படும். ஆகையால்  இன்னும் சில வருடங்களுக்கு நமக்கு 2K-வே போதுமானது. Epic-கின் 5K இன் மூலம் அதிகபடியாகும் 'Hard Disc'-களின் எண்ணிக்கை ஒரு குறையாகவே இங்கே பார்க்கப்படுகிறது.

RED நிறுவனம் துவங்கும்போதே டிஜிட்டல் கேமராக்களில்தான் தன் பயணத்தை துவங்கியது. ARRI அப்படி இல்லை. 'Film Cameras' வகைகளின் ஜாம்பாவான்களில் ஒன்றான இந்நிறுவனம் தன்னுடைய பதினொரு டிஜிட்டல் கேமராக்களை அறிமுகப்படுத்திருப்பதன் மூலம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் எதிர்கால சாத்தியத்தை உறுதிபடுத்துகிறது என்பதை நாம் இங்கே கவனிக்க தவறிவிடக்கூடாது.

காலம் அதன்போக்கில் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. மாற்றம் நிகழ்வதை நாம் உணர்வதற்குள்ளாக பெரும் மாற்றங்களை கடந்து வந்துவிடுகிறோம். வாழ்வின் சுவாரசியங்களில் / விநோதங்களில் ஒன்று இது. தனிப்பட்ட வாழ்தலில் எப்படியோ..! தொழிலில் இம்மாற்றங்களை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டியதும்.. அதில் தேர்ச்சியடைவதும்.. தொழில்நுட்பதின் வளர்ச்சியோடு நம் பாதையை அமைத்துக் கொள்வதும் தவிர்க்க முடியாததாகிறது. இல்லையேல் நம் பயணம் தடைபட்டுவிடும். வெற்றி என்பது தொடர்ந்து நடைபோடுவதன் மூலமாக கிட்டுவது.. கற்பனை செய்வதன் மூலமாக மட்டுமில்லை.

ALEXA Cameras Overview:


ALEXA Classic Upgrade: XR Module:

ALEXA Classic Upgrade: Internal Filter Module IFM-1:


பின் குறிப்பு:

என்னுடைய முந்தையப்படமான ‘ஒண்டிப்புலி’-ஐ Alexa Plus கேமராவில் எடுத்தோம். அதைப்பற்றி முன்பே என் தளத்தில் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றின் லிங்க் இங்கே:

'ALEXA' என்னும் புதிய 'HD' கேமரா:

'Arri Alexa' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்:

'ARRI ALEXA' ஒரு பார்வை - அனுபவத்தின் அடிப்படையில்_Part-2:
RED கேமராக்களின் லிங்க் இங்கே:

'RED ONE' கேமரா ஒரு அறிமுகம்:

'Red One 'EPIC' - ஒரு அறிமுகம்:

‘Scarlet-X’ - சவால் விடும் புது எதிரி:

  

Friday, August 2, 2013

ஆசீர்வதிக்கப்பட்ட கணம்

எங்கள் இயக்குனர் திரு.அந்தோணி சார்லஸின் குட்டி தேவதை ‘நிலா தெரசா’-க்கு நேற்று ‘BAPTISM’ நடந்தது. அப்போது நான் எடுத்த சில படங்கள் இங்கே. குழந்தைகளை படமெடுக்கும்போது உண்டாகும் அற்புத மனநிலையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஒரு தியானம் போல, இசையில் லயித்து நம்மை இழப்பது போல ஒரு கணம் அது. பொதுவாகவே புகைப்படம் எடுக்கும்போதும் ஒளிப்பதிவின் போதும்.. ஒரு அற்புத சூழலுக்கு நான் தள்ளப்படுவது வழக்கம். அந்தக் கணத்தில் வாழ்வது என்று சொல்லுவார்களே.. அதைப்போல ஒரு நிலையில் நான் இருப்பதை பல தடவை உணர்ந்து இருக்கிறேன். அதிலும் குழந்தைகளை படமெடுக்கும் போது.. அக்கணம் ஆசிர்வதிக்கப்பட்ட கணமாகிறது.