முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தங்க மீன்கள் - பாசவலைக்குள்..


வாத்தியாரின் பிள்ளை மக்கு என்பதாய், படிப்பில் நாட்டமில்லாது வளர்ந்த தகப்பனுக்கும், அவனைப் போலவே படிப்பில் விருப்பமில்லா மகளுக்குமிடையே நிகழும் பாசக் கதையிது. நம் கல்வி முறை, பிள்ளைகளின் குழந்தைப் பிராயத்தை எப்படி நாசமாக்குகின்றன என்பதை பேசும் கதை(?!) என்பதாக, அல்லது சராசரி I.Q-விற்கும் குறைவான அறிவு கொண்ட தகப்பன், மகளுக்குமிடையேயான கதை என்பதாக எடுத்துக் கொள்ளவும் சாத்தியம் கொண்ட கதை. தகப்பன் மகள் இருவருமே பிரதான கதாப்பாத்திரங்கள். அவர்களைச் சுற்றி பின்னப்பட்ட கதைக்குத் தகுந்த துணைப்பாத்திரங்கள். தாத்தா, அப்பத்தா, அம்மா, அத்தை, தந்தையின் நண்பன், தோழி, வாத்திச்சி, பள்ளி மேலாளர் என நேர்த்தியான பாத்திரப்படைப்புகள். அன்பை, பாசத்தை நெகழ்வாய் பேசும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் ராம் கொடுத்திருக்கிறார்.

கையாலாகாதவனாக மதிப்பிடப்படும் ஒரு தகப்பனின் பாசப்போராட்டத்தை, அவனது இயலாமையை, அப்படியான தகப்பன்களின் சார்பாக ஒரு கதையை இயக்குனர் ராம் எடுத்துக்கொண்டிருக்கிறார். பெரும்பான்மையோர்களுக்கு இது அவர்களின் வாழ்க்கை சம்பவங்களின் சாரத்தை நினைவூட்டலாம். பலருக்கு அப்படி இல்லாமலும் போகலாம். அவர்கள் இந்தப்படத்தை முற்றிலுமாக மறுதலிக்கவும் கூடும். தேர்ந்த படைப்பாளிக்கே உரிய பல காட்சிகளை இப்படத்தில் ராம் உருவாக்கியிருக்கிறார். அதே நேரம், பொருத்தமில்லா காட்சிகள் சில இருப்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எது எப்படி ஆகினும், ஒரு நெகழ்ச்சியான கதையாக இது இருப்பதை மறுக்க முடியாது.

நேற்று இரவுக் காட்சி, இந்தப் படத்தைப் பார்த்தேன். நெகிழ்ச்சியும், வருத்தமும், விவாதமும் உருவான ஒரு குழப்பமான மனநிலையிலேயே வெளியே வந்தேன். படத்தின் மேன்மையும் குறையும் ஒரு சேர வந்து போயின. ஆயினும் இது மற்றுமொரு படமாக, ஒதுக்கி தள்ளி விட்டு போய் விடக்கூடிய படமில்லை என்பதை அறிந்தே இருந்தேன்.

பொறுப்பும், நேர்மையும், தகுதியும் கொண்ட ஒரு கலைஞனின் படைப்பு இது என்பதை தெரிந்தே வைத்திருக்கிறேன். இயக்குனர் ராமின் இரண்டு படைப்புகளிலும் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. அவை கதையின் போக்கிலும் படைப்பாக்கத்திலுமிருந்த குறைகளின் அடிப்படையில் உருவானதே தவிர, ராம் என்னும் அற்புதமான படைப்பாளியின் மீதானதில்லை அது.

குழப்பத்தோடு உறங்கபோனவனின் கனவு முழுவதும் ‘செல்லமாவும் கல்யாணியும்’நிரம்பி வழிந்தார்கள். முதலில் இப்படம் குறித்து எதுவும் எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். காலையில் எழுந்த போது, அம்முடிவு மாறி இருந்தது. காரணம், ஒரு சிறந்த படமென்பது திரையரங்குக்கு வெளியேயும் நம்மை ஆக்கிரமித்திருக்க வேண்டும், சிந்தனைத் தொடர்ச்சி ஒன்றை அது உருவாக்க வேண்டும் என்பார்கள். அது ‘தங்கமீன்களால்’ சாத்தியமாயிற்று.

ஒரு ஓவியன், தான் தீட்டி முடிந்த ஓவியத்தை சற்றுத் தள்ளி வைத்து பார்த்து, மதிப்பிட்டு, திருத்தம் செய்வதைப்போல.. இயக்குனர் ராம் அவர்கள் தன் படைப்பைப் பார்க்க வேண்டும். சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறேன். இப்படி நான் சொல்வதை சரியானவிதத்தில் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி அவர் செய்தால்.. தகுதியான படைப்புகளை, அதன் வணிக வெற்றியோடு ராம் அவர்கள் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன். இயக்குனர் ராம் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

மக்களின் நலன் காக்க தாதாவாகும் (தாத்தா இல்லை) நாயகனின் கதையையும், பொறுக்கிகளிடமிருந்து தேசத்தைக் காக்க பொறுக்கியாய் மாறும் காவல் அதிகாரியின் கதையையும், காதலை வளர்க்கும் நாயக, நாயகியரின் கதையையும் பொறுப்புடன் பார்த்து மகிழும் நாம்.. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான அன்பைப் பேசும் கதையையும் ஒருமுறை பார்த்து வைக்கலாம், தப்பொன்றுமில்லை.

(ஒரு வித எள்ளல் தன்மையிலேயே மேலே இருக்கும் கடைசிப்பத்தியை நான் எழுதினாலும், உண்மையில்.. தவற விடக்கூடாத படமிது. இப்படியான படங்களை ஆதரித்தால்தான் சிறந்த படங்கள் வரும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் இப்படியான படங்களை பார்க்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்தையும், விவாதத்தையும் பிறகு வைத்துக்கொள்ளலாம். முதலில் ஒரு முறை படத்தைப் பார்த்துவிடுங்கள்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...