முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைத்துறையில் முகமறியா மனிதர்கள்:


பொதுவாக,  ஒரு திரைப்படத்தில் நான் பணி புரியும் போது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அடைவேன். இந்தக் கணமே நிஜம் என்பதைப்போல முழு ஈடுபாட்டுடன் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். இத்தனை நாள் காத்திருந்ததும், போராடியதும் இதற்குத்தானே என்பதாய் என் மனநிலை இருக்கும். வாழ்க்கையின் அதி உன்னத கணத்தில் வாழ்வதாய் மகிழ்வேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும், முதல் நாள் படப்பிடிப்பைப் போன்றே மிகுந்த உற்சாகத்தோடு அணுகுவேன். அப்படியே ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆயினும், ஒரு சில நாட்கள் பதட்டம் நிறைந்ததாக இருந்துவிடுகின்றன. அத்தகைய நாட்களில் என் மனம் பெரும் போராட்டத்திற்க்கு ஆளாகும்.. உதவியாளராக இருந்த காலங்களில் அத்தகைய நாட்களைக் கடந்து வந்திருக்கிறேன். ஒளிப்பதிவாளராக உயர்ந்த பிறகு அப்படியான நாட்கள் மிக அரிதானவையே!ஆனால், தற்போது பணிபுரிந்துக்கொண்டிருக்கும் படமான ‘தொட்டால் தொடரும்’ திரைப்படத்தின் அண்மைக்காலப் படப்பிடிப்பில் அத்தகைய நாட்களைக் கடக்க வேண்டியிருந்தது...

ஒரு திரைப்பட உருவாக்கத்தில் பல தொழில்நுட்பாளர்கள் பங்கு பெறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், நடன இயக்குனர், சண்டைக் காட்சி இயக்குனர் என பலரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்களில் பெரும்பான்மையோர்களின் பெயர்களும், முகங்களும் கூட உங்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்கள் அனைவருமே, தங்களின் தகுதிக்கேற்ப ஊதியம் பெறுகிறார்கள், பெயரும் புகழும் அடைகிறார்கள். ஆனால், இவர்கள் எல்லோரையும் விட குறைந்த ஊதியத்துக்கு, அதிக ஆபத்தை சந்திப்பவர்கள் சிலரும் உண்டு, அவர்கள்தான் ‘Stunt Men'!!

சண்டைக்காட்சிகளில் வில்லன்களின் கைக்கூலிகளாக நாயகனிடம் அடிவாங்கும் இவர்களை, நீங்கள் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் ‘Stunt Drivers' என்றறியப்படுகிறார்கள். சண்டைக்காட்சிகளின் ஊடாக வரும் வாகனங்களை இயக்குபவர்கள் இவர்கள்தான். அற்புதமான வாகன ஓட்டிகளான இவர்கள்தான், பொதுவாக நீங்கள் பார்க்கும் அத்துனைப்படங்களிலும் வரும் வாகனங்களை ஓட்டுகிறார்கள். பிரதான நடிகர்கள், தங்களின் முகம் தெரியும் ஷாட்களில் மட்டுமே வாகனத்தை ஓட்டுகிறார்கள். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தைக் கவிழ்ப்பது, எதன் மீதோ முட்டி அந்தரத்தில் பறந்து போய் தலை குப்புற விழுவது போன்ற மிக ஆபத்தான வாகன சாகசங்களை நிகழ்த்திக் காட்டுவது இவர்கள்தான்.

கடந்த வாரத்தில் அப்படியான ஒரு காட்சியைத் ‘தொட்டால் தொடரும்’ திரைப்படத்திற்காக படம் பிடித்தோம். மிக வேகமாக வரும் கார் ஒன்று, மற்றொரு காரில் மோதிக் கவிழ்வதாய்க் காட்சி. சண்டைப் பயிற்சி இயக்குனர் திரு. நந்தா மற்றும் இயக்குனர் திரு.கேபிள் சங்கர் ஆகியோருடன் நானும் விவாதித்து அக்காட்சியை எப்படிப் படமாக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்தோம். பல சாத்தியங்கள் விவாதிக்கப்பட்டன. அக்காட்சியை தத்ரூபமாக படமாக்கி விடவேண்டும் என்பது எங்களின் ஆசை.  படப்பிடிப்பு நடந்தது புதுச்சேரியில். காரைக் கவிழ்க்கும் அந்த நாளும் வந்தது..

இந்த நாள்... இந்த நாள்தான், நான் முன்பே சொன்ன அந்த நாள்! பதட்டத்தையும், மனப்போராட்டத்தையும் எனக்குள் ஏற்படுத்தும் நாள். இத்தகைய நாட்களைத்தான் நான் தவிர்க்க விரும்புகிறேன். மற்ற தொழில்நுட்பாளர்களைப் போலவே ‘Stunt Drivers'-ம் ஒரு தொழில்நுட்பாளர்தான் என்றாலும், அவர்கள் அணுகும் ஆபத்தை நினைத்து மனம் பதறத்தான் செய்கிறது. என் பதட்டத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள முதலில் அக்காரைக் கவிழ்க்க என்ன செய்கிறார்கள் என்பது தெரியவேண்டும் உங்களுக்கு. கவிழ்க்க வேண்டியக்காரை மிக வேகமாக செலுத்தி, ஒரு ‘சாய்தளத்தின்’ (Ramp) மீது ஏற்றி அந்தரத்தில் பறக்க வைக்கிறார்கள். அந்த ரேம்ப், செயற்கையாக இரும்புத்துண்டுகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இந்த ரேம்பில் காரை ஏற்றும் போதே, கார் எவ்விதத்தில், எந்தப் பக்கத்தில் சாய்ந்து விழவேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். அதாவது கவிழும் காரானது, தலை குப்புற விழ வேண்டுமா? செங்குத்தாக விழ வேண்டுமா? அல்லது நீண்ட தூரம் உருண்டோட வேண்டுமா? என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது. இதை செய்வது அந்த 'Stunt Driver'கள்தான். ஆம்.. உங்களைப்போன்ற என்னைப்போன்ற மனிதர்கள்தான் இதைத் துணிந்து செய்கிறார்கள். வேகமாக ஓடி வரும் கார் அந்தரத்தில் பறந்து தலை குப்புற விழுந்து உருள்கிறது. அதன் உள்ளே மனிதன் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

இப்படிக் கவிழும் காரில் பாதுகாப்புக்காக பல முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவ்வாகனத்தை ஓட்டுபவர் தக்க பாதுகாப்புக் கவசங்களை அணிந்துக் கொள்கிறார். ஆயினும் அந்தக் கணம்.! அது, கடந்து வர முடியாததாய் மாறிவிடும் சாத்தியங்களை கொண்டது என்பதை சிந்தியுங்கள். ஒவ்வொரு முறையும், அப்படியான காட்சிகளில் துணிச்சலுடன் ஈடுபடும் அம்மனிதர்களை நினைத்துப் பார்த்தால்.. வியப்பும், துயரமும் ஒருசேர வருகிறது. என்னதான் பணத்திற்காக இதைச் செய்கிறார்கள் என்று கொண்டாலும்.. அத்தகைய துணிச்சலை எப்படி எடை போடுவது? இது அவர்களுக்கு பணம் ஈட்டும் ஒரு பணி என்பதையும் மீறி.. ஒரு சாகசச் செயலாகவும் அவர்களால் அணுகப்படுகிறது என்பதை அவர்களோடு பேசும் போது உணர முடிந்தது. வரலாற்றிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் வீரர்கள் என்றொரு சொல்லை கேள்வியுறுகிறோமே.! அது இவர்கள்தான் என்று நினைக்கிறேன். இத்தகையவர்களைத்தான் வீரர்கள் என்று அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இப்படியான காட்சிகளைப் படம் பிடிக்கும் ஒவ்வொரு தடவையும்.. கார் கவிழ்வதற்கு முன்பாகவும் பின்பாகவும் நான் அடையும் மன நிலையை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. அப்படிக் கவிழும் காரை சரியாக படம் பிடித்து விட வேண்டும் என்ற தேவை ஒரு புறம். இரண்டுக்கும் மேற்பட்ட கேமராக்கள் இருந்த போதும்.. முதன்மைக் கேமராவாக என் கேமரா இருக்கும். ஆகையால், கவிழும் அக்கணத்தை சரியாகப் பதிவு செய்துவிட வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். கூடவே.. ஒரு மனிதனின் உயிர் அந்தரத்தில் ஊசலாடவிடப்படுவதையும் நினைத்துப் பதறும் மனம் இன்னொருபுறம். கார் கவிழ்ந்த அடுத்த கணம், ஒரு வித மன அயர்ச்சியையும், பாரத்தையும் உணர்வேன். சண்டைப் பயிற்சி இயக்குனரோடு, பலரும் ஓடிச் சென்று கவிழ்ந்த காரிலிருந்து அந்த ஓட்டுனரை வெளியே எடுப்பார்கள். அத்தகையக் கணங்களில் நான் அடையும், துயரமும், பதட்டமும் மகிழ்ச்சியும் கலந்த கலவை உணர்ச்சியை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. கண்ணீர் கசிய, பதட்டத்தோடு அக்காரை நெருங்கி.. அதிலிருந்து வெளிப்படும் அம்மனிதரைப் பார்க்க ஏனோ மனம் கலங்கும். ஆனால், அவரோ விழுந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியோடு வெளியேறி வருவார். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கரவோசை செய்து தங்களின் மகிழ்ச்சியையும், பாராட்டையும் ஆரவாரத்தோடு தெரிவிப்பார்கள். அக்காட்சியைக் கண்டு அவ்வோட்டுனர் மகிழ்வதாக நினைத்தாலும்.. அவரது கண்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளில் ஒளிந்திருப்பது என்ன? அம்மனிதர்களின் கண்களே என் மனதெங்கும் நிறைந்திருக்கிறது.


அத்தகைய ஓட்டுனர்களில் ஒருவர்தான் திரு. குட்டியண்ணன். எங்கள் படத்திற்காக, கார் கவிழ்க்கும் காட்சியை மிக நேர்த்தியாக செய்தவர். பல நூறு படங்களில் பணியாற்றியவர். பல கார்களைக் கவிழ்த்தவர். ஒவ்வொரு கவிழ்ப்பின் போதும் பல காயங்களை அடைபவர். எங்கள் படத்தின் போதும்.. சற்றே காயம் பட்டவர். ஒவ்வொரு கவிழ்ப்பின்போதும் காயம் படுவதையும், பின்பு அதற்கு மருத்துவம் பார்ப்பதையும் தொடர்கதையாகக் கொண்டிருப்பவர். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அளப்பரியா அன்பும், மரியாதையும் வரும் எனக்கு. அவரோடு மிகுந்த நேசத்தோடு இருக்க முயல்கிறேன். ஒரு மாவீரனின் அருகில் நிற்பதாக உணர்ந்தாலும், ஏனோ மனது மகிழ்ச்சி கொள்வதில்லை. திரைப்படத்துறையைச் சார்ந்த பலரை நாம் தெரிந்து வைத்திருந்தாலும், பின்னணியில் இயங்கும் இத்தகையவர்களை நாம் அறிந்துகொள்வதே இல்லை. அது சரி, பணத்திற்காக இதை அவர்கள் செய்கிறார்கள் என்று சொன்னேனே.. அது எவ்வளவு தெரியுமா? அதிகபட்சம், ஒரு லட்சம் வரைதான். அதுவும் லட்சமெல்லாம் பெரிய படங்களில்தான். எங்கள் படம் போன்ற, சிறிய படங்களில் வெறும் முப்பதாயிரம் மட்டும்தான் என்பதையும் அறியத் தருகிறேன். இதைத் தவிர்த்து வேறு எவ்விதமான பணிப் பாதுகாப்பும், மரணமடைந்தால் காப்பீடும் கூட கிடையாது. இத்தகைய மனிதர்கள்தான் காலத்தால் எளிதில் மறக்கப்பட்டு விடுகிறார்கள். 

கருத்துகள்

  1. Sir மிகவும் நன்றி, நான் Photographer & Designer எனக்கு இந்த எடிட்டிங் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதைப்பற்றி இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் தாருங்கள். நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வாவ்...... சூப்பர்! ..................ரோ..........சூப்பர்...

    பதிலளிநீக்கு
  3. Good article. u took a good step by introducing real Heroes behind the screen sir. go ahead. waiting to read more good and interesting articles.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,