முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘ஒளி எனும் மொழி’ - ஒளிப்பதிவு தொழில்நுட்பப்புத்தகம்




ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் சார்ந்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, புத்தகமாக எப்போது வரும் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டேயிருந்த நண்பர்களின் கவனத்திற்கு இந்த கட்டுரை. தற்போது, அதாவது இன்றுதான் அந்த கேள்விக்கான விடை சொல்லும் தருணம் வாய்த்திருக்கிறது. ஆம் நண்பர்களே, இத்தளத்தில் சினிமா மற்றும் அதன் பிரதான பகுதியான ஒளிப்பதிவு பற்றி
எழுதப்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகள் மட்டும் தனியே தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, இயன்ற அளவில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டு ‘ஒளி எனும் மொழி’ என்ற தலைப்பில் புத்தகமாக
கொண்டுவரப்பெற்றுள்ளது. தமிழ் ஸ்டுடியோ அருண் அவர்களின் முயற்சியில் அவரின் ‘பேசாமொழி’ பதிப்பகத்தின் வாயிலாக‘ஒளி எனும் மொழி’ வெளியாகிருக்கிறது. ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களில் ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கு இது பயன்படும் என்று நம்புகிறேன். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழ்கண்ட பதிப்பகங்களில்  ‘ஒளி எனும் மொழி’ கிடைக்கும். புத்தக வெளியீடு நடத்த நேரமில்லை என்பதனால் நண்பர்களுக்கு இங்கே தெரிவிக்க வேண்டியதாயிற்று. இப்புத்தகம் உருவாக முதல் காரணமான இந்த வலைப்பூவின் வாசக நண்பர்களுக்கு இத்தருணத்தில் என் அன்பை உரித்தாக்குகிறேன். 288 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 



460: பரிசல் புத்தக நிலையம்
588: டிஸ்கவரி புக் பேலஸ்
577: பனுவல் விற்பனை நிலையும்
583: வம்சி புக்ஸ்
519 A: பூவுலகின் நண்பர்கள்


இப்புத்தகத்திற்கு இயக்குனர் திரு.மிஷ்கின் அவர்கள் அணிந்துரை தந்திருக்கிறார். அதை கீழே கொடுத்திருக்கிறேன்.

----------------------------------------------------------------------------

ஒரு மாலையில், தமிழ் ஸ்டுடியோ திரு. அருண் அவர்கள் என் அலுவலகத்திற்கு வந்து திரு. விஜய் ஆம்ஸ்ட்ராங் எழுதிய ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் பற்றிய புத்தகத்திற்கு முன்னுரை வேண்டும் என்றார். நான் சற்று பதறிப்போய் அருண் இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று சொல்லி மறுத்தேன். அதற்கு அவர், விஜய் ஆம்ஸ்ட்ராங் உங்களிடம்தான் முன்னுரையைப் பெற வேண்டும் என்று விரும்புவதாக சொன்னார்.

சரி, அவரை புத்தகத்துடன் வரச்சொல்லுங்கள் என்று கூறினேன். மறுநாள் மாலை திரு. ஆம்ஸ்ட்ராங் என் அலுவலகத்திற்கு வந்தார். அவரை ஏற்கனவே ஒரு முறை ஒளிப்பதிவாளர் பாலாஜியுடன் சந்தித்திருக்கின்றேன் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்). முதல் சந்திப்பிலேயே ஆம்ஸ்ட்ராங்கை எனக்கு பிடித்துப்போயிருந்தது. என் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமியைப் போல் மிகவும் அடக்கமும், அமைதியும் கொண்டவர். சிறிது நேரம் உரையாடினோம். அவர் கடந்து வந்த பாதை பற்றியும், அவரின் குரு கண்ணன் பற்றியும், திரு. பாரதிராஜாவின் உழைப்பைப் பற்றியும் ஈடுபாட்டுடன் பேசினார்.

எல்லாவற்றையும்விட அவர் இந்தப் புத்தகத்தை “என் தோழியாகவும் உடன் நிற்கும் அம்மா ராணி விஜயராகவனுக்கு” என அர்ப்பணம் செய்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் விடைபெற்றவுடன் புத்தகத்தைப் படித்தேன்.

ஒளிப்பதிவுக் கலையை நோக்கி நடந்து வர விரும்பும் இளைஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு நல்ல அறிமுக நூலாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் ஒளிப்பதிவு சார்ந்த சில முக்கியமான கடினமான விதிகளை மிக அழகாகவும், எளிமையாகவும் திரு. ஆம்ஸ்ட்ராங் விளக்குகிறார். இந்த விதிகள் மரத்தின் வேர்களைப் போன்றது. இந்த அடிப்படை விதிகளின் அறிவை நாம் உள் வாங்கிக் கொள்ளும் பொழுது நாம் செய்யும் திரைப்படங்கள் அழகாகவும், எளிமையாகவும் அமையும்.

ஒரு பெரிய அறிஞன் கூறுகிறான், “Learn the Basic Rules till they become your second nature”

நான் ஒவ்வொரு திரைப்படத்தை உருவாக்கும் பொழுதும், தயாரிக்கும் பொழுதும், தொழில் ரீதியாகவும், அறிவுரீதியாகவும் குழப்பங்கள் பல தடைக்கற்களாக வந்து கொண்டே இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் உதவிக்கு வருபவை இந்த அடிப்படை சினிமா விதிகளே.

ஒரு காட்சியை படம் பிடிக்கும் பொழுது அதிலுள்ள கதாப்பாத்திரங்களையும், அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும், அவர்கள் வெளிப்படுத்தாத உணர்வுகளையும் எப்படி கேமராவைக் கொண்டு அணுகுவது என்ற கேள்வி ஒவ்வொரு இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் அவசியம்.

இந்த கேள்விகளுக்கான பதில்கள் உண்மையிலிருந்தும், எதார்த்தத்திலிருந்தும், கருணையிலிருந்தும், அறிவிலிருந்தும், மனவலிமையிலிருந்தும் தோன்றுகின்றன. கடைசியில் சொல்லப்பட்ட மனவலிமை அதாவது Confidence உங்கள் வேர்களான அடிப்படை விதிகளிலிருந்தே வருகிறது.

ஒரு கவிதைக்கு இலக்கணம் அவசியமில்லைதான். ஆனால் மொழி அவசியம். மொழிக்குள் இலக்கணக் கட்டுமானம் ஒளிந்திருக்கின்றது. ஒவ்வொரு நல்ல திரைப்படமும் ஒரு தெளிவான கட்டுமானத்திலிருந்து (Structure) உருவாக்கப்படுகிறது. நேர்மையான கதை, பொய்யில்லா நடிப்பு, அழகான படப்பிடிப்பு, அறிவான படக்கோர்வை, வருடும் இசை இவை அனைத்தும் சேர்த்தே ஒரு மேன்மையான திரைப்படம் உருவாக்கப்படுகிறது. ஒரு மேன்மையான திரைப்படத்தை உருவாக்க விரும்பும் இளைஞனுக்கு, ஒவ்வொரு துறையைப்பற்றிய வேர்கள் பற்றிய அதாவது அடிப்படை விதிகள் பற்றிய அறிவு மிக அவசியம்.

திரு. ஆம்ஸ்ட்ராங் எழுதிய இந்தப் புத்தகம் திரைப்படத்தை நோக்கிப் போகும் உங்கள் பயணத்தில் விளக்காக இருக்கும் என நம்புகிறேன். பயணிகளே உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

அன்புடன்-
மிஷ்கின்.




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால