ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் சார்ந்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, புத்தகமாக எப்போது வரும் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டேயிருந்த நண்பர்களின் கவனத்திற்கு இந்த கட்டுரை. தற்போது, அதாவது இன்றுதான் அந்த கேள்விக்கான விடை சொல்லும் தருணம் வாய்த்திருக்கிறது. ஆம் நண்பர்களே, இத்தளத்தில் சினிமா மற்றும் அதன் பிரதான பகுதியான ஒளிப்பதிவு பற்றி
எழுதப்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகள் மட்டும் தனியே தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, இயன்ற அளவில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டு ‘ஒளி எனும் மொழி’ என்ற தலைப்பில் புத்தகமாக
கொண்டுவரப்பெற்றுள்ளது. தமிழ் ஸ்டுடியோ அருண் அவர்களின் முயற்சியில் அவரின் ‘பேசாமொழி’ பதிப்பகத்தின் வாயிலாக‘ஒளி எனும் மொழி’ வெளியாகிருக்கிறது. ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களில் ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கு இது பயன்படும் என்று நம்புகிறேன். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழ்கண்ட பதிப்பகங்களில் ‘ஒளி எனும் மொழி’ கிடைக்கும். புத்தக வெளியீடு நடத்த நேரமில்லை என்பதனால் நண்பர்களுக்கு இங்கே தெரிவிக்க வேண்டியதாயிற்று. இப்புத்தகம் உருவாக முதல் காரணமான இந்த வலைப்பூவின் வாசக நண்பர்களுக்கு இத்தருணத்தில் என் அன்பை உரித்தாக்குகிறேன். 288 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
460: பரிசல் புத்தக நிலையம்
588: டிஸ்கவரி புக் பேலஸ்
577: பனுவல் விற்பனை நிலையும்
583: வம்சி புக்ஸ்
519 A: பூவுலகின் நண்பர்கள்
இப்புத்தகத்திற்கு இயக்குனர் திரு.மிஷ்கின் அவர்கள் அணிந்துரை தந்திருக்கிறார். அதை கீழே கொடுத்திருக்கிறேன்.
----------------------------------------------------------------------------
ஒரு மாலையில், தமிழ் ஸ்டுடியோ திரு. அருண் அவர்கள் என் அலுவலகத்திற்கு வந்து திரு. விஜய் ஆம்ஸ்ட்ராங் எழுதிய ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் பற்றிய புத்தகத்திற்கு முன்னுரை வேண்டும் என்றார். நான் சற்று பதறிப்போய் அருண் இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று சொல்லி மறுத்தேன். அதற்கு அவர், விஜய் ஆம்ஸ்ட்ராங் உங்களிடம்தான் முன்னுரையைப் பெற வேண்டும் என்று விரும்புவதாக சொன்னார்.
சரி, அவரை புத்தகத்துடன் வரச்சொல்லுங்கள் என்று கூறினேன். மறுநாள் மாலை திரு. ஆம்ஸ்ட்ராங் என் அலுவலகத்திற்கு வந்தார். அவரை ஏற்கனவே ஒரு முறை ஒளிப்பதிவாளர் பாலாஜியுடன் சந்தித்திருக்கின்றேன் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்). முதல் சந்திப்பிலேயே ஆம்ஸ்ட்ராங்கை எனக்கு பிடித்துப்போயிருந்தது. என் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமியைப் போல் மிகவும் அடக்கமும், அமைதியும் கொண்டவர். சிறிது நேரம் உரையாடினோம். அவர் கடந்து வந்த பாதை பற்றியும், அவரின் குரு கண்ணன் பற்றியும், திரு. பாரதிராஜாவின் உழைப்பைப் பற்றியும் ஈடுபாட்டுடன் பேசினார்.
எல்லாவற்றையும்விட அவர் இந்தப் புத்தகத்தை “என் தோழியாகவும் உடன் நிற்கும் அம்மா ராணி விஜயராகவனுக்கு” என அர்ப்பணம் செய்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் விடைபெற்றவுடன் புத்தகத்தைப் படித்தேன்.
ஒளிப்பதிவுக் கலையை நோக்கி நடந்து வர விரும்பும் இளைஞர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு நல்ல அறிமுக நூலாக இருக்கும். இந்தப் புத்தகத்தில் ஒளிப்பதிவு சார்ந்த சில முக்கியமான கடினமான விதிகளை மிக அழகாகவும், எளிமையாகவும் திரு. ஆம்ஸ்ட்ராங் விளக்குகிறார். இந்த விதிகள் மரத்தின் வேர்களைப் போன்றது. இந்த அடிப்படை விதிகளின் அறிவை நாம் உள் வாங்கிக் கொள்ளும் பொழுது நாம் செய்யும் திரைப்படங்கள் அழகாகவும், எளிமையாகவும் அமையும்.
ஒரு பெரிய அறிஞன் கூறுகிறான், “Learn the Basic Rules till they become your second nature”
நான் ஒவ்வொரு திரைப்படத்தை உருவாக்கும் பொழுதும், தயாரிக்கும் பொழுதும், தொழில் ரீதியாகவும், அறிவுரீதியாகவும் குழப்பங்கள் பல தடைக்கற்களாக வந்து கொண்டே இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் உதவிக்கு வருபவை இந்த அடிப்படை சினிமா விதிகளே.
ஒரு காட்சியை படம் பிடிக்கும் பொழுது அதிலுள்ள கதாப்பாத்திரங்களையும், அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளையும், அவர்கள் வெளிப்படுத்தாத உணர்வுகளையும் எப்படி கேமராவைக் கொண்டு அணுகுவது என்ற கேள்வி ஒவ்வொரு இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் அவசியம்.
இந்த கேள்விகளுக்கான பதில்கள் உண்மையிலிருந்தும், எதார்த்தத்திலிருந்தும், கருணையிலிருந்தும், அறிவிலிருந்தும், மனவலிமையிலிருந்தும் தோன்றுகின்றன. கடைசியில் சொல்லப்பட்ட மனவலிமை அதாவது Confidence உங்கள் வேர்களான அடிப்படை விதிகளிலிருந்தே வருகிறது.
ஒரு கவிதைக்கு இலக்கணம் அவசியமில்லைதான். ஆனால் மொழி அவசியம். மொழிக்குள் இலக்கணக் கட்டுமானம் ஒளிந்திருக்கின்றது. ஒவ்வொரு நல்ல திரைப்படமும் ஒரு தெளிவான கட்டுமானத்திலிருந்து (Structure) உருவாக்கப்படுகிறது. நேர்மையான கதை, பொய்யில்லா நடிப்பு, அழகான படப்பிடிப்பு, அறிவான படக்கோர்வை, வருடும் இசை இவை அனைத்தும் சேர்த்தே ஒரு மேன்மையான திரைப்படம் உருவாக்கப்படுகிறது. ஒரு மேன்மையான திரைப்படத்தை உருவாக்க விரும்பும் இளைஞனுக்கு, ஒவ்வொரு துறையைப்பற்றிய வேர்கள் பற்றிய அதாவது அடிப்படை விதிகள் பற்றிய அறிவு மிக அவசியம்.
திரு. ஆம்ஸ்ட்ராங் எழுதிய இந்தப் புத்தகம் திரைப்படத்தை நோக்கிப் போகும் உங்கள் பயணத்தில் விளக்காக இருக்கும் என நம்புகிறேன். பயணிகளே உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!
அன்புடன்-
மிஷ்கின்.
vazhthukal amrstrong sir. ungal pani menmelum thodara vazhthukal
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குமாரீஸ்
நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்கு