முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (PART 3)

முந்தைய இரண்டு கட்டுரைகளில்,  ‘VFX’ – இன் முன்னோடி தொழில்நுட்பங்கள் சிலவற்றைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்க்கலாம். முந்தைய கட்டுரைகளைப் படிக்காதவர்கள் படித்துவிட்டு வந்துவிடுங்கள்.

விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (PART 1)

விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (PART 2)



The Matrix — Bullet Time:


1999-இல் ‘The Matrix’ திரைப்படம் வெளியானபோது, அது பார்வையாளர்களை வேறொரு அனுபவத்திற்கு அழைத்துச் சென்றது. இதுநாள் வரை நாம் பார்த்து வந்த ‘Slow Motion Shot’ அனுபவத்தை இப்படம் முற்றிலுமாக மாற்றியது. ‘Slow Motion’ என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வழக்கமாக நொடிக்கு 24 ஃப்ரேம்களில் திரைப்படம் எடுக்கப்படுகிறது என்பதும், அதை நொடிக்கு 24 ஃப்ரேம்களில் திரையிட்டு காட்டுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். இது பொதுவாக பின்பற்றப்படும் நுட்பம். அதையே, 24 ஃப்ரேம்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் (48,60,90,120..etc) படம் பிடித்து அதை 24 ஃப்ரேம்களில் திரையிட்டால், அக்காட்சியில் நகரும் எதுவும் மெதுவாக நகர்வதாக தோன்றும் என்பதையும் நாம் அறிவோம்.

இந்த ஸ்லோ மோஷன் என்பதை பொதுவாக ‘overcranking’ என்பார்கள். இந்த வார்த்தை, கையினால் சுழ‌ற்றிப் படம் பிடித்த துவக்கக் கால கேமராக்கள் இருந்த போது, வழக்கமான வேகத்தைவிட அதிக வேகமாக சுற்றப்பட்டதின் அடிப்படையில் வந்தது. இப்போதெல்லாம், கணினியின் துணைகொண்டு வழக்கமான வேகத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளைக்கூட மெதுவான காட்சிகளாக்க முடியும். இரண்டு அடுத்தடுத்த ஃப்ரேம்களுக்கு இடைப்பட்ட பகுதிகளை கணினியில் உருவாக்கி விடுகிறார்கள். அதாவது 24 ஃப்ரேம்களில் எடுக்கப்பட்ட காட்சித்துண்டை, நமக்கு தேவையானப்படி 48 அல்லது அதற்கும் மேலாக அதிகப்படுத்திக்கொள்ள முடிகிறது.

அதேதான்.. மெதுவாக நகரும் காட்சியனுபவம், அதே நுட்பம் தான் மேட்ரிக்ஸ் திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் முற்றிலும் வேறொரு தொழில்நுட்ப உதவியோடு. இம்முறை காட்சியில் நகரும் தன்மைக்கொண்ட அத்தனையும் மெதுவாக நகரும் அதே நேரத்தில், அது நிகழும் அந்த கணமும் (நேரம்) மெதுவாக நகர்வதைப்போன்ற காட்சியனுபவ‌த்தை கொண்டு வந்திருந்தார்கள். அதாவது, ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டால், அது கண நேரத்தில் நிகழ்ந்து விடும் என்பதை நாம் அறிவோம். துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் குண்டு, அதன் இலக்கை தாக்க எடுத்துக்கொள்ளும் நேரம் என்பது மிகவும் குறைவு என்பதும், காரணம் குண்டின் வேகம் அத்தகையது என்பதையும் நாம் அறிவோம். அதனால், துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் குண்டு அதன் இலக்கை தாக்குவதை மட்டுதாம் நாம் பார்க்கமுடியும். அது பயணம் செய்யும் நேரத்தை நம்மால் பார்க்க முடியாது அல்லவா..? இங்கே தான், மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது. துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் குண்டு, அதன் இலக்கை தாக்க விரைவதையும், அப்படிப் விரைந்தோடி வரும் துப்பாக்கி குண்டின் பாதையிலிருந்து விலகி தன்னை தற்காத்துக்கொள்ளும் கதாப்பாத்திரத்தையும் காட்சிப்படுத்தி இருந்தார்கள். அதாவது, துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் குண்டின் வேகத்தை விட, அதனால் தாக்கப்படும் நபரின் வேகம் அதிகமாக இருப்பதைப்போல காட்டினார்கள். இதை பார்வையாளர்களுக்கு உணர்த்த, அக்காட்சியை மெதுவாக காட்ட வேண்டுமே.. அப்படி மெதுவாக காட்ட வேண்டுமானால், துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் குண்டு அதன் இலக்கை தாக்க எடுத்துக்கொள்ளும் அந்த குறைந்த நேரத்தையும் மெதுவாக்க வேண்டும். இங்கே மெதுவாக்க வேண்டும் என்பது, அந்த கணத்தை, நேரத்தை இழுத்து நீட்டி மெதுவாக்குவது. துப்பாக்கி குண்டு பயணம் செய்யும் நேரம் அது. அதனாலேயே அத்தொழில்நுட்பத்தை ‘Bullet Time'என்றார்கள். மேலும் அக்காட்சியை படம் பிடித்த கேமராவும் நகரும் விதத்தில் படம் பிடித்தார்கள். கண நேரத்தில் கேமரா அக்கதாப்பாத்திரத்தை சுற்றி வந்தது. இது முற்றிலுமாக புதிய வகை யுத்தி. அதுவரை நாம் பார்க்காதது.



இதை எப்படி சாத்தியமாக்கினார்கள்..?

துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் குண்டை அதி வேக கேமராவில் படம் பிடித்து விடலாம். அல்லது அதை கணினியின் துணைக்கொண்டு உருவாக்கிடலாம். அது பயணம் செய்யும் பாதையையும் கணினியில் கொண்டுவந்துவிடலாம் என்பதனால், அது பெரிய கவலையில்லை. அது தாக்க எந்தனிக்கும் மனிதன் அதன் பாதையில் இருந்து விலகி தப்பிக்கும் இடம் தான் இங்கே சிக்கலானது. அதை படம் படிக்கதான் புதிய யுத்தி ஒன்று தேவைப்பட்டது.



இக்காட்சியை படம் பிடிக்க ஒரு கேமரா அல்ல.. பல கேமராக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினார்கள். நொடிக்கு 24 ஃப்ரேம் என்பது, ஒரு நொடியில் நிகழும் காட்சியை படம் பிடிக்கவும், அதை நாம் பார்க்கவும் தேவைப்படும் ஃப்ரேம்களின் எண்ணிக்கையை குறிப்பதை நாம் அறிவோம். வழக்கமாக அந்த 24 ஃப்ரேமும் ஒரு கேமராவினால், ஒரே கோணத்திலிருந்து படமாக்கப்படும். அப்படி இல்லாமல், அந்த 24 ஃப்ரேமும் வெவ்வேறு கேமராவினால், வெவ்வேறு கோணத்திலிருந்து படமாக்கினால் எப்படி இருக்கும்?  அதுவும் அவை ஒரு குறிப்பிட்ட வரிசையில் தொடர்ச்சியாக வரையறுக்கப்பட்ட கோணத்தில் படமாக்கினால்..? அதாவது, துப்பாக்கி குண்டு தாக்க வரும் நபரைச் சுற்றி (180 to 360 டிகிரி கோணத்தில்) பல கேமராக்கள் வரிசையாக நிறுத்தி, ஒரே கணத்தில் அத்தனை கேமராக்களையும் இயக்குவது. இதற்கு நூற்றுக் கணக்கான கேமராக்களை பயன்படுத்தினார்கள். இப்போது நம்மிடம், ஒரு கணத்தின் பல கோணக் காட்சிகள் துண்டுகள் இருக்கும் அல்லவா? அந்தக் காட்சித்துண்டுகளை கணினியின் துணைக்கொண்டு ஒன்றினைக்க புதிய வகை காட்சியனுபவம் ஒன்று உருவானது. இப்படி ஒரு கணத்தின் பல காட்சித்துண்டுகளை படம் பிடிக்க ‘Still Camera’-களைப் பயன்படுத்தினார்கள். காரணம், ஒரு கோணத்தில் ஒரு ஃப்ரேம் போதுமானது, நம்மிடம் தான் பல கோணத்திலிருந்து படம் பிடித்த ஃப்ரேம்கள் இருக்கிறதே. அவற்றை நொடிக்கு 24 ஃப்ரேம்கள் என்ற எண்ணிக்கையில் ஒன்றினைக்க நமக்கு தேவையான காட்சி கிடைத்துவிடுகிறது. இத்தொழில் நுட்பத்தை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். அவை..  adrenaline time, focus time, frozen time, the big freeze, dead time, flow motion, slowing-your-roll மற்றும் time slice ஆகியவை ஆகும்.







தமிழ்ப்படங்களில், ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் வரும் ‘அலே அலே’ பாடலில் இவ்வகை தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்க்கலாம். சித்தார்த்தும் ஜெனலியாவும் துள்ளி குதித்து அந்தரத்தில் கொஞ்ச நேரம் நின்று பின்பு கீழே இறங்கும் அக்காட்சிகள் இப்படித்தான் எடுக்கப்பட்டன.  அதைப்போல ‘அந்நியன்’ திரைப்படத்தில் சண்டைக்காட்சிகளில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதற்கு ஹாலிவுட்டிலிருந்துதான் வல்லுநர்கள் வந்தார்கள். இங்கே இன்னும் அத்தொழில்நுட்பம் தயாராகவில்லை. 



இத்தொழில்நுட்பத்தின் முன்னோடி, நீண்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விட்டது. இத்தொடரின் ஆரம்ப அத்தியாத்தில் நாம் பார்த்த ‘Eadweard Muybridge’ தான் அதன் மூலகர்த்தா. ஆமாம்.. அவரின் குதிரை பரிசோதனைதான் இத்தொழில்நுட்பத்தின் ஆரம்பம். 1878 -இல் ‘Briton Eadweard Muybridge’, ஓடும் குதிரையை பன்னிரெண்டு புகைப்பட கேமராக்களை தொடர்ச்சியாக (line parallel) வைத்து படம் பிடித்தார். ஒரு கணத்தில் ஒரு ஃப்ரேம் என்று எடுப்பட்டது. ஓடும் குதிரையின் நான்கு கால்களும் நிலத்தில் படாமல் அந்தரத்தில் இருப்பதை கண்டு பிடிக்க செய்யப்பட்ட சோதனை அது. புகைப்படங்களை கண்ணாடி தகட்டில் பதிவெடுத்து, அதை, தானே வடிவமைத்த ‘zoopraxiscope’ என்னும் கருவியின் மூலம் காட்டினார். இதுவே முதல் புரெஜக்டர் (movie projector) எனப்படுகிறது. இதுதான்  ‘Thomas Edison’-க்கு துண்டுகோலாக இருந்து சினிமா தொழில்நுட்பத்தை அவர் கண்டுபிடிக்க வழிவகை செய்தது என்கிறார்கள்.

Briton Eadweard Muybridge





எது எப்படியோ.. புதிய வகை தொழில்நுட்பம் ஒன்று உருவாகி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வரிசையில் மேட்ரிக்ஸ் படத்தின் ‘Bullet Time’-க்கு ஒரு முக்கிய இடமுண்டு. இவை எல்லாம் VFX தொழில்நுட்பத்தின் ஒரு பகுதிதான் என்பதை  நினைவில் வையுங்கள். ஏனெனில் வருங்காலம் (இந்தத்தொடரைப் பொருத்தவரை ஏற்கனவே வந்துவிட்ட‌ காலம்தான்) பல புதிய யுத்திகளை, நுட்பங்களை கொண்டு வந்தது. அவற்றைப்பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்..)


கருத்துகள்

  1. நான் எனது குறும்படத்தில் மாயத்தாேற்ற காட்சிகளை பயன்படுத்த விரும்புகிறனே் ஆனால் ஒரு நல்ல அனுபவமுள்ள ஒளிப்பதிவாளர் உதவினால் இதனை சாதிககலாம் இது புதுமயைாக இருக்கும் என நம்புகிறனே்

    பதிலளிநீக்கு
  2. அமையானொழில்நுட்பதை அழகா புரிந்துகொள்ளும் படி உள்ளது

    பதிலளிநீக்கு
  3. அருமையான தொழில்நுட்பதை அழகா புரிந்துகொள்ளும் படி உள்ளது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...