முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஷூவல் எஃபெக்ட்ஸ் : ஒரு மாயத்தூரிகை (Part 1)

இந்தியத் திரை வரலாற்றில் ‘பாகுபலி’ பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாகியிருக்கிறது. அதன் பிரம்மாண்டம், செய்யப்பட்ட செலவு, மனித உழைப்பு, படைப்பாற்றல், எடுத்துக்கொண்ட காலம் என எல்லாம் பிரம்மிப்பாகப் பேசப்படுகின்றன. இந்தியத் திரைத்துறையின் அடுத்த அடி, ஹாலிவுட்டுக்கே சவால் என புகழாரங்கள் சூட்டிப் பெருமிதம் கொள்கிறோம். உண்மைதான், இந்தியத் திரைத்துறை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் துவங்கி விட்டது. இந்திய திரைப்படங்களின் அடுத்தக் கட்டம் அல்லது வருங்காலம் என்பது பல தளங்களில் நிகழத் துவங்கிவிட்டது. அது எளிய மனிதர்களின் வாழ்வை, எதார்த்தத்தை, உணர்வைப் பேசும் எளிய படங்களிலிருந்து, மாபெரும் பொருட்செலவைக்கோரும் பிரம்மாண்ட படைப்புகள் வரை பல தளங்களில் நிகழ்கிறது. எல்லாம் ஒன்று சேர்ந்ததுதானே வளர்ச்சி.! ‘பாகுபலியின்’ வெற்றி இந்தியத் திரை உலகத்திற்கு வேறொரு முக்கியப் பாதையை திறந்து விட்டிருக்கிறது. அது மாபெரும் வணிக வெற்றி என்னும் பாதை. இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் இத்தகைய மாபெரும் வணிகப் பொருளீட்டல், இவ்வணிகத்தில் ஈடுபடும் அத்தனை பேரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இது, இத்துறை சார்ந்த படைப்பாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்றும் நம்பலாம். பெரும் பொருளாதாரத் தேவை கருதி, தடைப்பட்ட அல்லது யோசிக்கவே தயங்கிய களங்களை, படைப்புகளை இனி நிகழ்த்திப்பார்க்க முயற்சிக்கலாம். பெரும் முதலீடு என்பது மீட்டெடுக்க முடியாதது என்ற கவலையை பாகுபலியின் வெற்றி தகர்த்திருக்கிறது. சரியாக செய்யப்பட்ட வணிக முதலீடு, எப்போதும் லாபம் அள்ளிக் கொடுக்கும் என்பது அந்தந்தத் துறை சார்ந்த வல்லுனர்களின் நம்பிக்கை. அது திரைத்துறைக்கும் பொருந்தும். இங்கே, சரியாக செய்யப்பட்ட முதலீடு என்பதை, தகுதியான படைப்பாளிகளை நம்பி படைக்கப்படும்/ஒப்படைக்கப்படும் படைப்பு எனக் கொள்க. இயக்குனர் ராஜமௌலி, தன்னுடைய தொழில்நுட்ப வல்லூநர்கள், கலைஞர்கள் துணை கொண்டு அதை நிரூபித்திருக்கிறார்.



இதற்கு முன்பாகவும் இந்திய திரைத்துறையில் இத்தகைய முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியிலும், தமிழிலும் அத்தகைய பெரும் படைப்புகள் உருவாக்கப்பட்டு, பெரும் வணிக லாபத்தையும் ஈட்டியிருக்கின்றன.

பாகுபலியின் வெற்றியின் இரகசியங்களில் ஒன்று, அது உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தையும், உழைப்பையும், காலத்தையும் தன் வியாபார, சந்தைப் படுத்துதல் உத்திகளில் ஒன்றாக பயன்படுத்தியதும் ஒரு காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதன் பொருட்டே, இன்று அப்படைப்பின் பின்பிருந்த படைப்பாளுமைகள், படைப்பாக்கம், உயர்ந்த சிலை, பல ஏக்கர் நிலப்பரப்பில் அரங்கம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்/ துணை நடிகர்களின் பங்களிப்பு என எல்லாவற்றையும் தாண்டி, அதன் பின்பிருந்த தொழில்நுட்பம் கவனிக்கப்படுகிறது, பேசப்படுகிறது. ஆமாம், நாமும் அதன் தொழில்நுட்பத்தைப் பற்றிதான் பேசப்போகிறோம். ஆனால், அது பாகுபலி எப்படி உருவாக்கப்பட்டது என்பதாக அல்ல. சொல்லப்போனால், இது பாகுபலியின் தயாரிப்பு நுட்பங்களைப்பற்றியே அல்ல. பாகுபலி சாத்தியமாகக் காரணமாகிருந்த காட்சித் தொழில்நுட்பங்களையும், அது எத்தகையது, அதன் ஆரம்பம் என்ன, வளர்ச்சி என்ன, எங்கே துவங்கி எங்கே வந்து நிற்கிறது? என்பதைப் பற்றியெல்லாம் ஒரு பருந்துப் பார்வை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.




பாகுபலியின் காட்சியனுபவம் சாத்தியமாகக் காரணமானவை, ‘CG’  ‘VFX' என்னும் தொழில்நுட்பங்கள் என்று ஏறக்குறைய நாம் எல்லோருமே அறிந்துவைத்திருப்போம். ‘CG’ அனிமேஷன் திரைப்படங்கள் என்றப் பதத்தை நாம் பல தடவைகள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஹாலிவுட் திரைப்படங்களின் வாயிலாக நாம் அதை அறிமுகப்படுத்திக்கொண்டோம். எனினும், இந்திய/தமிழ்த் திரைப்படங்களிலும் அதன் தாக்கம் நடைமுறைக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதையும் நாம் அறிவோம். இந்திய/தமிழ்ப் படங்களில் எப்படியோ, ஆனால் ஹாலிவுட் படங்களில் அத்துறையால் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்களை இங்கே இரண்டொரு பாராக்களில் சொல்லிவிட முடியாது. எத்தனை எத்தானைப்படங்கள்! நம்மைப் பரவசப்படுத்திய, ஆச்சரியத்தில் ஆழ்த்திய திரைப்படங்கள்தான் எத்தனை, எத்தனை!









' Toy Story', 'Finding Nemo', ' Wall-E', ' Monsters, Inc.', ' The Lord of the Rings', ' The Hobbit', 'Life of Pie', ' The Adventures of Tintin: The Secret of the Unicorn', ' Avatar', ' The Lost World: Jurassic Park', - என அதன் பட்டியலின் நீளம் அதிகம். முழுமையாக அனிமேஷனில் உருவாக்கிய படங்கள் மட்டுமல்லாமல், சிறுபகுதியோ அல்லது தேவையான இடங்களில் மட்டும் இத்தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டோ தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் என்ற பட்டியலும் மிகப்பெரியது.

இன்று நாம் அனிமேஷன் என்று அழைக்கும் இத்துறை, அண்மையில் உருவான தொழில்நுட்பம் அல்ல. அதன் வரலாறு மிக நீண்டதாகும். முழுமையான அனிமேஷன் திரைப்படங்களின் பயணம் 1930 -களின் இறுதி ஆண்டுகளின் துவங்கிவிட்டதையும், அது தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்டதையும், கூடவே வளர்ந்து வந்த பல தொழில்நுட்பங்களைப் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்வது இன்றைய நவீன தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ள உதவும்.

CG,VFX என பொத்தம் பொதுவாக பெயரிட்டு அழைக்கப்படும் இத்தொழில்நுட்பங்கள் எதை குறிக்கின்றன, அதன் துவக்கம், பயன்பாடு, வளர்ச்சி, உட்பிரிவுகள் ஆகியவற்றை பற்றிப் பேசுவோம். கல்லூரிக் காலத்தில், ஆர்வ மிகுதியிலும், பிற்காலத்தில் ஒளிப்பதிவாளராக இயங்கும்போது உதவுமே என்ற எண்ணத்திலும். பகுதி நேரமாகப் படித்த ‘Diploma in Multimedia' படிப்பும், இத்துறை சார்ந்த சில, பல தகவல்களை தெரிந்து வைத்திருப்பதோடு, இத்துறை சார்ந்த தகவல்களை தேடிப் படிக்கப் போகிறேன். படிப்பதை, புரிந்ததை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள முயல்கிறேன். ஆர்வம் கொண்டவர்கள் தொடர்ந்து வாருங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கும் எனக்கும்.   







கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்  (Computer Generated Imagery - CGI)  என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படும் இத்தொழில் நுட்பம் பல உட்பிரிவுகளைக் கொண்டது.  'Previsualisation', ' Animation', ' Performance Capture', ' Simulation', ' Compositing', 'Modeling', 'Rendering' - எனப் பல பிரிவுகளில் இயங்குகிறது. இவ்வற்றைப்பற்றி ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு முன்பாக, திரைப்படங்களில் இந்த VFX என்ற பதம் அல்லது தொழில்நுட்பம் எப்போது நுழைந்தது. அதன் ஆரம்பம், வரலாறு என்ன என்பதையும் பார்த்துவிடுவோம்.


Eadweard Muybridge's The Horse in Motion (1878)

திரைப்படத்தின் துவக்க காலத்தில் (சொல்லப்போனால் சினிமாவுமே இங்கேயிருந்துதான் துவங்குகிறது) 1878 -இல் ‘Briton Eadweard Muybridge’ என்னும் புகைப்பட நிபுணர் ஓடும் குதிரையை பனிரெண்டு புகைப்பட கேமராக்களை தொடர்ச்சியாக (line parallel) வைத்து படம் பிடித்தார். ஓடும் குதிரையின் நான்கு கால்களும் நிலத்தில் படாமல் அந்தரத்தில் இருப்பதை கண்டு பிடிக்க செய்யப்பட்ட சோதனை அது. புகைப்படங்களை கண்ணாடி தகட்டில் பதிவெடுத்து, அதை, தானே வடிவமைத்த ‘zoopraxiscope’ என்னும் கருவியின் மூலம் காட்டினார். இதுவே முதல் புரொஜக்டர் (movie projector) எனப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிகழ்ந்த சோதனைகள், பல மாற்றங்களை, வளர்ச்சியை திரைத்துறைக்குக் கொண்டு வந்தது. இன்றைய நவீன அனிமேஷன் துறைக்கு முன்னோடி இதுவே (ஒருவகையில்) எனலாம்.  












Gertie the Dinosaur — Animation

 1900-களில், முதன் முறையாக அனிமேஷன் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன. படக்கதைகளுக்கு(Comics) வரைவது போன்று ஒவ்வொரு காட்சி துண்டுகளாக வரையப்பட்டு, அதை இணைத்து ஒளிப்படமாக காண்பிக்கப்பட்டது. 1906 -இல் உருவாக்கப்பட்ட ‘Humorous Phases of Funny Faces’ என்னும் குறும்படம், கால ஓட்டத்தில் தப்பி பிழைத்து இன்றும் காணக்கிடைக்கும் ஒரே ஒரு திரைப்படம். ஆயினும் ‘Winsor McCay’ என்னும் ஓவியர் உருவாக்கிய ‘Gertie the Dinosaur (1914)’ திரைப்படம் தான் வெற்றிகரமான முதல் அனிமேஷன் கார்டூன் குறுந்திரைப்படம் என்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இத்துறை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து டிசம்பர்,  21, 1937 -இல் ஒரு முழு நீளத்திரைப்படமாக பரிமாணித்தது. அப்படி உருவான முதல் படம்  ‘Snow White and the Seven Dwarfs’. இதை உருவாக்கியவர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதே இல்லை. உங்களுக்கே தெரியும். ஆம்.. வால்ட் டிஸ்னியே தான் அவர்.  






வால் டிஸ்னியின் திரைப்படங்களை நாம் அறிவோம். எத்தனை வகையான கதாப்பாத்திரங்கள்! எத்தனை வகையான கதைகள்! புதிய புதிய பாத்திர வடிவமைப்புகள், மிருகங்கள் உயிர்த்தெழுந்து வந்து நம்மோடு உரையாடியதை, உரையாடுவதை எப்படி மறக்க முடியும்? இவைதான், இவை மட்டுதாம் திரைப்படங்களில் காட்சிப் படுத்த முடியும் என்ற தடையை உடைத்தெறிந்தவர் டிஸ்னி என்பதை நாம் அறிவோம். இன்று நவீன தொழில்நுட்பத்தில் அனிமேஷன் படங்கள் உருவாக்கப்பட்டாலும், அன்றைய நாளில் அத்தனைக்கும் கைகளாலேயே வரைந்து உயிர் கொடுத்தவர் அவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் தன்னுடைய கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமல்ல, திரைத்துறையில் ஒரு பிரிவிற்கு உயிர் கொடுத்தவர். அதன் பிதாமகன்களில் முக்கியமான ஒருவர்.


Metropolis — Miniatures:

ஜியார்ஜ் மெலிஸ் (George Méliès) தன்னுடைய  ‘Trip to the Moon (1902)’ படத்திலேயே மினியேச்சர் (Miniatures) தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துவிட்டார். அளவில் பெரியதாக இருக்கும் பொருளை, சிறியதாக வடிவமைப்பதை மினியேச்சர் என்கிறார்கள். பெரிய பங்களாவை, பேருந்தை, தொடர்வண்டியை, ஒரு நகரத்தை என எதை வேண்டுமானாலும் சிறிய வடிவில் ஒரு அரங்கிற்குள் வடிவமைத்து படம் பிடிப்பார்கள். இதை ஜியார்ஜ் மெலிஸ் தன்னுடைய படங்களில் முதல் முறையாக பயன்படுத்தினார். நிலவுக்குப் போகும் விண்கலனை, சிறிதாக வடிவமைத்து பயன்படுத்தி படம் பிடித்தார். தொடர்ந்து அவருடைய படங்களில் இத்தகைய மினியேச்சர்களை பயன்படுத்தினார். மேலும் ‘Stop Motion Effect', ‘jump cut', ‘stop-substitution effect’ போன்ற தொழில்நுட்ப யுத்திகளை கண்டறிந்து அவற்றையும் தம் படங்களில் பயன்படுத்தினார். அதனால் அவர்  'Father of Cinematic Special Effects' என்றும் அழைக்கப்படுகிறார். 

1927-இல் வெளியாகி பெரும் புகழ்பெற்ற படமான ‘Metropolis’ திரைப்படத்தில் பல மினியேச்சர்களை அதன் இயக்குனர் ‘Fritz Lang’ பயன்படுத்தினார். நகரத்தின் பெரும்பகுதி, கட்டிடங்கள், வாகனங்கள் என பெரும்பாலானவை மினியேச்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அத்திரைப்படத்தின் வெற்றி, இத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.


Star Wars, Star Trek போன்ற படங்களில் இந்த மினியேச்சர் தொழில்நுட்பமே அதிகம் பயன்படுத்தப்பட்டது. கணினி தொழில்நுட்பங்கள் வளர்ந்து  ‘CGI’ என்னும் தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் இன்றைய காலத்தில் கூட இந்த மினியேச்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பீட்டர் ஜேக்சன் தன்னுடைய  ‘Lord of the Rings trilogy’ படங்களில் மினியேச்சர் கட்டிடங்களை வடிவமைத்து அதை டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட பின்புலங்களுடன் இணைத்தார். மிடில் எர்த்தில் நாம் பார்த்த பெரும்பாலான கட்டிடங்கள் மினியேச்சர் நுட்பத்தில் உருவானவைதான். கம்பியூட்டர் கிராபிக்ஸின் அசுர கரங்கள் பரந்து விரிந்து விட்ட இக்காலங்களில் கூட, இந்த மினியேச்சர்  யுக்தி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.










The Wizard of Oz — Matte Paintings:

ஒரு நிலப்பரப்பை, மாளிகையின் நுழைவாயிலை, ஓவியமாக வரைந்து அதை கேமராவிற்கு முன்பு வைத்து அக்காட்சியை படம் பிடிப்பார்கள். இதன் மூலம் அக்காட்சியில் பங்குபெறும் கதாப்பாத்திரங்கள் அவ்விடத்தில் இருப்பதைப் போன்று தோன்றும். சாத்தியமில்லாத (nonexistent in real life) அல்லது செலவு பிடிக்க கூடிய இடம், நிகழ்தளம் போன்றவற்றை உண்மையாக உருவாக்குவதற்கு பதில், இவ்விடத்தை ஓவியமாக வரைந்து, தகுந்த தொழில்நுணுக்கத்துடன் (various techniques) பயன்படுத்தி அக்கதாப்பாத்திரங்கள் அவ்விடங்களில் சஞ்சரிப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவார்கள். அதாவது அக்காட்சியின் Foreground/ Background காட்சிகளை ஓவியமாக வரைந்து பயன்படுத்துவது. 
 ‘The Wizard of Oz’(1939) - படம் பார்த்தவர்கள் இதை உணரலாம். அதில் காட்சிப்படுத்தப்பட்ட பெரும்பாலான இடங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு பயன்படுத்தப்பட்டவைதான். ஓவியங்கள் மிக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும். இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே பெரும்பாலான படங்கள் படம் பிடிக்கப்பட்டன. 1990 வரை இத்தொழில்நுட்பம்  பெரும் பயன்பாட்டிலிருந்தது. பின்பு அது டிஜிட்டல் மேட் பெயிண்டிங் வகையாக மாறிவிட்டது. கணினி மயமான பின்பு, இவ்வகை ஓவியங்களை கணினியில் வரைந்து பயன்படுத்த துவங்கிவிட்டனர். 





தொடரும் கட்டுரைகளில் மேற்கண்ட இத்தகைய காட்சித் தொழில்நுட்பங்களையும், அவற்றின் உட்கூறுகளையும், முன்னோடிகளையும், தொடர்ச்சிகளையும், அவற்றில் பல இன்றைய நவீன அனிமேஷன் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்படும் வகைமையையும் காண்போம்.


-தொடரும்.

கருத்துகள்

  1. Mr.Vijay. Great .. Really nice Article. Wish to read continuously. Thanks a lot for sharing this.

    Aravindhan.K.V
    Marine Radio Officer.
    Shelf Drilling.

    பதிலளிநீக்கு
  2. கற்றதும் பெற்றதும் . . யாவருக்கும்! awesome line....
    Vijay Armstrong anna superb writing and great explanation about CGI and its techniques, sure it will be very use full for the one interested in filmmaking, hope this entire series will be come as a book soon... these kind of info in tamil is must - sure it will bring out many talents in tamil...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...