முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேமரா

திரைப்பட உருவாக்கத்தில், பல கருவிகள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன. ஒரு திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை எனத் தொடங்கி படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசைக்கோர்ப்பு என பல நிலைகளில் தேவை சார்ந்து பல கருவிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. எழுதப்பட்ட ஒரு திரைக்கதை, ஒரு திரைப்படமாக உருமாற, முதலில் அத்திரைக்கதை செல்லுலாயிட் படச்சுருளில்(அல்லது டிஜிட்டலாக) பதியப்பட வேண்டும். நடிகர்களின் மூலமாக கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டி, கதையை நிகழ்த்திப் பதிவு செய்கிறோம். அப்படி பதிவு செய்வதை படப்பிடிப்பு என்கிறோம். அதைப்பதிவு செய்யும் கருவியை கேமரா (Camera) என்கிறோம்.

கேமரா என்னும் கருவியோடு இணைந்து பல தொழில்நுட்பங்கள் ஒரு காட்சியைப் படச்சுருளில் பதிவுசெய்ய உதவுகின்றன. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக வரும் கட்டுரைகளில் பார்க்கப் போகிறோம். முதலில் கேமரா என்னும் ஆதாரக் கருவியைப்பற்றி ஒரு அறிமுகம்.

ஒரு புகைப்படக் கேமராவை நாம் அறிவோம். அதன் செயல்படும் முறையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அறியாதவர்கள் அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதை நான் இங்கே விளக்கப்போவதில்லை. இக்கட்டுரைகள் ஒளிப்பதிவுத்துறையை சார்த்தது, புகைப்படத்துறையைச் சார்ந்தது அல்ல என்பதனால் என்னை மன்னியுங்கள். ஆக அவ்வடிப்படையை அறிந்தவர்கள் தொடருங்கள்.

திரைப்பட கேமரா:

திரைப்பட கேமரா என்பது படச்சுருளில் நிலையான பிம்பங்களை, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்யும் ஒரு கருவியாகும்.

நிமிடத்திற்கு இத்தனை ஃபிரேம்கள் என்ற கணக்கில் பிம்பங்களை காமிரா பதிவுசெய்கிறது. திரைப்படம் என்பது சராசரியாக நிமிடத்திற்கு 24 ஃபிரேம்கள் என்ற கணக்கில் படம் பிடிக்கப்படுகின்றது. ‘ஸ்லோ மோஷன்’ (Slow Motion - 48fps..72fps), 'ஃபாஸ்ட் மோஷன்’ (Fast Motion - 16fps..21fps) போன்றவை சிறப்பு வகை ஒளிப்பதிவாகும். அதையும் இக்கேமராக்கள் பதிவு செய்து கொடுக்கும்.




திரைப்படக் கேமராவின் முக்கிய பொதுவான பாகங்கள்:

மேகசின்ஸ் - ஒளிபுகா படச்சுருள் பெட்டி:
பிம்பங்கள் பதிவு செய்யப்படாத படச்சுருளை காமிராவுக்கு வழங்கி பின்பு பிம்பங்கள் பதிவுசெய்யப்பட்ட அதே படச்சுருளை தன்னுள் வாங்கிப் பாதுகாக்கும் ஒரு ஒளிபுகா பெட்டியே மேகசின் எனப்படுகிறது.

மேலும், பிம்பம் பதிவு செய்யப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ அப்படச்சுருள் மீது தேவையற்ற வெளி வெளிச்சம் படக்கூடாது. அப்படி பட்டால் அப்படச்சுருள் வீணாகிப்போகும் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். ஆகையால் இப்பெட்டியானது ஒளி ஊடுருவாத தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமா என்ன.?

1. இரண்டு அறை மேகசின்: இதில் இரண்டு தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட அறைகள் உண்டு, ஒன்றில் பதிவு செய்யப்படாத படச்சுருளும் மற்றொன்றில் பதிவு செய்யப்பட்ட படச்சுருளும் இருக்கும். பதிவு செய்யப்படாத படச்சுருளை வெளிவிடும் உருளை ‘Take off Spool’ என்றும், பதிவுசெய்யப்பட்ட படச்சுருளை சேகரிக்கும் உருளை ‘Take Up Spool’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்பெட்டியின் ஒரு பக்க வெளிப்புறத்தில்  பதிவு செய்யப்படாத படச்சுருளின் அளவையும், பதிவுசெய்யப்பட்ட படச்சுருளின் அளவையும் தெரிந்துகொள்ள, அடியிலும் (ft) மீட்டரிலும் (mt) அளவீடுகள் உண்டு.

(உ.ம்) மிட்செல் கேமராக்கள் (Mitchell Cameras)

Mitchell Camera


2. ஒரு அறை மேகசின்: பதிவுசெய்யப்படாத படச்சுருளை வழங்கும் உருளையும், பதிவுசெய்யப்பட்ட படச்சுருளைப் பெற்றுக்கொள்ளும் உருளையும் ஒரே அறையில் வெவ்வேறு அச்சில் இருக்கும்.

(உ.ம்) ARRI III, ARRI 435
 ARRI III

ARRI 435


3.கோ ஆக்சில் மேகசின்: பதிவுசெய்யப்படாத படச்சுருளைக் கொண்ட உருளையும்,பதிவுசெய்யப்பட்ட படச்சுருளை வாங்கிக்கொள்ளும் உருளையும் ஒரே அச்சில் அருகருகே அமைக்கப்பட்டிருக்கும்.

(உ.ம்) ARRI BL4,535

535B

ARRI BL4



படச்சுருளை இயக்கும் அமைப்பு (Pull Down Movement)

மேகசினில் இருந்து பதிவு செய்யப்படாத படச்சுருளை இழுத்து, பிம்பம் பதிவாகும் இடத்தில் சரியாக நிலை நிறுத்தும் செயலை 'புல் டவுன் மூவ்மெண்ட்' (pull down movement) என்கிறோம். படச்சுருளை கீழே இழுக்க 'கிளா' (claw) என்று அழைக்கப்படும் கொக்கி போன்ற அமைப்பு பயன்படுகிறது. 'ரிஜிஸ்டேஷன் பின்' (Registration Pin) என்று அழைக்கப்படும் ஊசியானது படச்சுருளில் உள்ள துளைகளைப் பயன்படுத்தி பிம்பம் பதிவாகும் இடத்தில் படச்சுருளை நிலையாக நிறுத்துகிறது.

படச்சுருளில் பிம்பம் பதிவாகும் அளவை (format) நிர்ணயிக்க 'ஃபிலிம் கேட்' (Film Gate) எனப்படும் அமைப்பும், படச்சுருளை பிம்பம் பதிவாகும் சரியான தளத்தில் (Plane)  நிறுத்த படச்சுருளின் பின்புறத்திலிருந்து அழுத்தி நிறுத்த 'ஃப்ரஷர் பிளேட்' (Pressure Plate) என்ற அமைப்பும் பயன்படுகிறது. இப்படி நிலையாக நிலை நிறுத்தப்பட்ட படச்சுருளில் தான் பிம்பமானது பதிவாகிறது. நிலையாக நிறுத்தப்படாமல் போனால், ’shake' ஆகி பிம்பமானது தெளிவில்லாமல் இருக்கும். புகைப்படம் எடுக்கும் போது நீங்கள் அதை உணர்ந்து இருக்கலாம்.


பிம்பம் பதிவுசெய்யப்பட்டவுடன் 'புல் டவுன் மூவ்மெண்ட்' (pull down movement) இயக்கத்தால் பதிவுசெய்யப்பட்ட படச்சுருள் கீழே நகர்வதால், பதிவுசெய்யப்படாத படச்சுருள் பிம்பம் பதிவாகும் இடத்தில் 'ரிஜிஸ்டேஷன்' பின்களால் மீண்டும் நிலை நிறுத்தப்படுகிறது.

'கிளா'வைப்(claw) பயன்படுத்தி 'புல் டவுன் மூவ்மெண்ட்' இயக்கத்தால் கீழே நகர்த்தப்படும் படச்சுருளானது 'ரிஜிஸ்டேஷன்' பின்களால் நிலை நிறுத்தப்பட்டு பிம்பம் பதிவுசெய்யப்பட்டவுடன் மீண்டும் கீழே நகர்த்தப்படுகிறது. இந்தச் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மேற்சொன்ன அமைப்பை 'இண்டர்மிட்டண்ட் மெக்கானிசம் (intermittent mechanism) என்று அழைக்கிறோம். இதுவே கேமராவின் ஆதார செயல்பாடாகும்.


'ஃபிலிம் கேட்' (Film Gate)
படச்சுருளில் பிம்பம் பதிவாகும் பரப்பளவை நிர்ணயிப்பது 'ஃபிலிம் கேட்' ஆகும். இப்பரப்பளவு என்பது உயரத்தையும் அகலத்தையும் குறிப்பது. இதுவே 'ஆஸ்பெக்ட் ரேஷியோ'(Aspect Ratio) என்று அழைக்கப்படுகிறது. படமாக்கலில் பல விதமான 'ஆஸ்பெக்ட் ரேஷியோ'க்கள் உள்ளன.

(உ.ம்) 1:1.33,  1:1.66, 1:1.85 ....1:2.35


கேமராவை இயக்கும் சக்தி (Drive System)

கேமராவை இயக்க மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டாருக்குத் தேவையான மின்சாரம் பேட்டரி மூலம் வழங்கப்படுகிறது.

மோட்டாரின் வகைகள்:

1.வேரியபுள் ஸ்பீட் மோட்டார் (Variable Speed Motor): மாறுபட்ட வேகங்கள் கொண்ட மோட்டார். தேவைக்கு ஏற்றாற்போல், சாதாரணமாக ஒரு நொடிக்கு 24 பிம்பங்களோ, அல்லது அதிகரித்தோ, குறைத்தோ பதிவுசெய்யத் தேவையான வேகத்தில் படச்சுருளை நகர்த்த இவ்வகை மோட்டார் பயன்படுகிறது.

2.கான்ஸ்டன்ட் ஸ்பீட் மோட்டார் (Constant Speed Motor):  நிலையான வேக மோட்டார். இதில் ஒரு நொடிக்கு 24 பிம்பங்களை மட்டுமே பதிவுசெய்ய முடியும், வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது.

3.கிரிஸ்டல் கண்ட்ரோல் மோட்டார் (Crystal Control Motor (or) Quartz):

4.வைல்டு மோட்டார் (Wild Motor): அதிவேக மோட்டார். மிக அதிக எண்ணிக்கையில், நொடிக்கு 100க்கும் அதிகமான பிம்பங்களைப் பதிவுசெய்ய பயன்படுகிறது.

5. இண்டர்லோ மோட்டார் (Interlo Motor):  சூரியன் தோன்றுவது, மறைவது, பூக்கள் பூப்பது போன்ற அதிக நேரங்கள் எடுத்துக்கொள்ளும் காட்சிகளைப் பதிவு செய்யப் பயன்படுகிறது. ஒரு நிமிடத்திற்கோ, ஒரு மணிக்கோ, ஒரு நாளைக்கோ ஒரு பிம்பம் நகரும்படி இதில் வேகத்தை அமைக்க முடியும். இவ்வகை படப்பதிவு ‘Time Lapse Photography' எனப்படுகிறது.



கேமரா ஷட்டர் (Camera Shutter)

ஷட்டர் என்பது லென்சிலிருந்து வரும் ஒளியை படச்சுருளின் மீது விழ அனுமதிப்பதும் தடுப்பதுமான, ஒரு அச்சில் சுழலக்கூடிய அமைப்பாகும்.


லென்சுக்கு பின்புறம் பிலிம் பிளேனுக்கு (Film Plane) முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் வட்டவடிவ தட்டைபோன்ற இவ்வமைப்பு, லென்சின் வழியாக ஊடுருவி வரும் வெளிச்சத்தை, படச்சுருளில் விழாமல் தடுக்கவும் அனுமதிக்கவும் ஏற்ற அமைப்புக் கொண்டது. இது தொடர்ந்து சுற்றக்கூடியது. இப்படி சுற்றுவதின் மூலமாக ஒரு சமயத்தில் வெளிச்சம் படச்சுருளின் மீது விழச்செய்து பிம்பம் பதியப்பட்ட ஒரு பிரேமை(Frame) உருவாக்குகிறது. அடுத்த சமயம் வெளிச்சத்தை தடுப்பதின் மூலம், தொடர்ச்சியான படச்சுருளில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அதாவது இந்த ஷட்டர் ஒளியை தடுக்கும்போது, பிம்பம் பதிவுசெய்யப்பட்ட படச்சுருளானது ‘புல் டவுன்’ செயல்பாடு மூலமாக நகர்த்தப்பட்டு, அடுத்த பிம்பம் பதிவதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்படி நகர்த்தும் போது, இரண்டு பிரேம்களுக்கும் இடையில் குறிப்பிட்ட அளவு இடைவெளி உருவாக்கப்பட்டு தனித்தனி பிரேம்களாக பிம்பம் பதிவுசெய்யப்படுகிறது. அப்படி தனித்தனியாக பதிவுசெய்யப்பட்ட பிம்பங்களை நொடிக்கு 24 பிரேம்கள் என ஓடவிடுவதாலேயே, அந்த பிம்பங்களின் தொகுப்பு அசைபடமாக நம்மால் உணரப்பட்டு, நாம் திரைப்படத்தைக் கண்டுகளிக்க முடிகிறது. (நொடிக்கு 24 பிரேம்கள் ஏன் என்பதை வேறொரு கட்டுரையில் விளக்குகிறேன்)

இத்தகைய ஷட்டர்கள்  இரண்டு வகைப்படுகின்றன.

1.டிஸ்க் ஷட்டர் (Disc Shutter) - அரைவட்ட அமைப்புக் கொண்டது. டிஸ்க் ஷட்டர்-இல் (Disc Shutter) 180 டிகிரி அரைவட்டம் மறைக்கப்பட்டும், மற்றொறு 180 டிகிரி வெறுமையாகவும் இருப்பதனால் அது சுழலும் போது ஒரு பாதியால் ஒளி மறைக்கப்படுவதும் மறுபாதியால் அனுமதிக்கப்படுவதுமான செயல் நடைபெறுகிறது.

(உ.ம்)  மிட்செல் கேமராக்கள் (Mitchell Cameras)

2.பட்டர்பிளை ஷட்டர் (Butterfly Shutter) - பட்டாம்பூச்சியின் இறக்கை போன்று அமைப்புக்கொண்டது. பட்டர்பிளை ஷட்டரில் இரண்டு 90 டிகிரி கால்வட்டம் மறைக்கப்பட்டும், இரண்டு 90 டிகிரி கால்வட்டம் வெறுமையாகவும் அடுத்தடுத்திருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கால் பகுதியில் ஒளி மறைக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டு மீண்டும் மறைக்கப்பட்டு மீண்டும் அனுமதிக்கப்படுகிறது.

இப்பட்டர்பிளை ஷட்டர்-இன்(Butterfly Shutter) முன்பகுதியானது கண்ணாடி போன்ற பிரதிபலிக்கும் பொருளாயிருப்பதினால் ஒளி மறைக்கப்படும் போது பிரதிப்பலிக்கப்பட்டு அவை ‘வியூ ஃபைண்டர் ’ வழியாக பிம்பத்தைப் பார்க்கப் பயன்படுகிறது. இவ்வகை ஷட்டர்கள் 45 டிகிரி கோணத்தில் ஃபிலிம் கேட்டின் (Film Gate) முன்பாக சுழலும் அச்சில் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு வகை ஷட்டர்களிலும் - ஒளியானது படச்சுருளில் விழாமல் ஷட்டர்களினால் தடுக்கப்படும் போதுதான் படச்சுருளானது 'புல் டவுன்’ அமைப்பினால் கீழே தள்ளப்படுகிறது.


வியூ ஃபைண்டர் (View Finder)

பதிவு செய்யவிருக்கும் பிம்பங்களைக் கேமராவில் பார்ப்பதற்குப் பயன்படும் அமைப்பு 'வியூ ஃபைண்டர்' என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு வகைப்படும்.

1.ரிஃப்ளக்ஸ் வியூ ஃபைண்டர் (Reflex Viewfinder):
பட்டர்பிளை ஷட்டரில் (Butterfly Shutter) பதிக்கப்பட்டுள்ள கண்ணாடியால் லென்ஸின் வழியாக  ஊடுறுவி வரும் பிம்பத்தை பிரதிபலிப்பதினால் (மாற்றுக் கோணத்தில்)  நாம் வியூ ஃபைண்டரில் அப்பிம்பத்தைப் பார்க்கமுடிகிறது. எனவே பிம்பம் பதிவாகும் அதே நேரத்தில் நம்மால் பிம்பத்தைப் பார்க்க முடிகிறது.

2. நான் ரிஃப்ளக்ஸ் வியூ ஃபைண்டர் ( Non Reflex Viewfinder):
டிஸ்க் ஷட்டரில் (Disc Shutter) பிம்பத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இல்லாததனால், பிம்பம் பதிவாகும் போது நம்மால் அப்பிம்பத்தைப் பார்க்க முடியாது. பிரதிபலிக்கும் கண்ணாடி 'டிஸ்க் ஷட்டர்'-இல் இல்லாததனால் இது 'நான் ரிஃப்ளக்ஸ் வியூ ஃபைண்டர்' என அழைக்கப்படுகிறது.



டிரைப்பாட்(Tripod)


கேமராவை நமக்குத் தேவையானபடி நிலைநிறுத்தப் பயன்படும் அமைப்பே ட்ரைபாட் எனப்படுகிறது. தேவையானபடி உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய வசதியோடுகூடிய மூன்று கால்கள் இதில் உண்டு. அதோடு இடவலமாகவும், மேல்கீழாகவும் காமிராவை ஒரு அச்சில் அதிர்வின்றி நகற்றும் வசதியையும் இது நமக்குக்கொடுக்கிறது.

கருத்துகள்

  1. சினிமா தொழில்நுட்பங்கள் பற்றிய உங்கள் பதிவுகள் சூப்பர். தொடர்ந்து எழுதுங்கள். ஒரு வேண்டுகோள் இரட்டை வேடம் கட்சிகளை எப்படி படமாக்குகிறார்கள். இதை பற்றி ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி kaartz..விரைவில் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. Sir I was inspired. Your artical is very useful for me to learn about film cameras. Because I started with my career with digital only. Pls right more artical about cameras. Thank you sir !!!

    பதிலளிநீக்கு
  4. Nice information sir...thank you for this valuable information and as a student I am having a huge interest in film making and editing. So I need more information.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...