முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படச்சுருள்கள் (Film Roles):



படம் பிடிக்க தேவையான ‘Film'-ஐ தமிழில் ‘படச்சுருள்’ என அழைப்போம். இப்படச்சுருள்கள், ஒளியை அவை ஏற்கும் தன்மைக்கு ஏற்றவிதத்திலும், அதன் செயல்திறனின் அடிப்படையிலும் பல வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

ஒளி வகைக்கான படச்சுருள்கள்:
ஒரு பொருளின் மீது விழும் ஒளியின் வண்ணத்தால் அப்பொருளின் ஆதார நிறம் மாறும். அதாவது ஒரு வெள்ளைக் காகிதத்தின் மேல் விழும் சிவப்பு ஒளி அந்தக் காகிதம், சிவப்புக் காகிதம் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தும். நீல ஒளி நீலக் காகிதமாக நினைக்கத் தூண்டும். இதை நாம் எல்லாரும் அனுபவத்தில் கண்டிருப்போம்.

ஆனால் நாம் வெள்ளைக் காகிதத்தை அறிந்திருப்பதனால், அதன் மீது விழும் ஒளி எந்நிறமானாலும் அது வெள்ளைக் காகிதம்தான் என்று மிகச்சுலபமாகத் தெரிந்து கொண்டுவிடுகிறோம். இதற்கு மூளையும், நம் நினைவாற்றலும், முந்தைய அனுபவமும் உதவுகின்றன.

ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு படச்சுருளினால் (Film) அப்படி உண்மையை உணர முடியாது. அது, தான் பார்க்கும் ஒளியை அப்படியே பதிவுசெய்கிறது. இங்கேதான் ஒரு பிரச்சனை. அதாவது ஒரு வெள்ளைக் காகிதத்தை 'டே லைட்'-இல் (Day light - சூரிய வெளிச்சம்) காட்டினால் அது வெள்ளைக் காகிதம் என்றும், செயற்கை விளக்குகளால் உருவாக்கப்பட்ட 'டங்ஸ்டன் லைட்'-டில் (Tungsten Light- இழை வெளிச்சம்) காட்டினால் அது வெள்ளைக் காகிதம்தான் என்றும் நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் படச்சுருள் (Film) சூரிய வெளிச்சத்தில் வெள்ளை நிற காகிதமாகவும், இழை வெளிச்சத்தில் காவி (warm) நிற காகிதமாகவும் பதிவுசெய்யும். அதாவது ஒரு படச்சுருளினால் இரண்டு வித ஆதார ஒளிகளைக் கையாள முடிவதில்லை. இச்சிக்கலைத் தீர்க்க இரண்டு விதமான படச்சுருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.

அதாவது 'டே லைட்' (Day light - சூரிய வெளிச்சம்) தன்மைக்கேற்ப ஒரு வகைப் படச்சுருளும் (Day Film), 'டங்ஸ்டன் லைட் (Tungsten Light- இழை வெளிச்சம்) தன்மைக்கேற்ப ஒரு வகைப் படச்சுருளும் (Tungsten Film) தயாரிக்கிறார்கள். முதலில் 'டங்ஸ்டன் ஃபிலிமும்' (Tungsten Film) பின்பு 'டே ஃபிலிமும்'(Day Film) கண்டுபிடிக்கப்பட்டது.

‘டே ஃபிலிம்'(Day Film):
டே ஃபிலிமானது (Day Film) பகல் வெளிச்சத்தில் பதிவு செய்யப்படும் வெள்ளைக் காகிதத்தை வெள்ளையாகயும், டங்ஸ்டன் லைட்டில் (Tungsten Light- இழை வெளிச்சம்) பதிவுசெய்யப்படும் வெள்ளைக் காகிதத்தைக் காவி நிறத்திலும்(Warm Color) பதிவுசெய்யும். (ஏனெனில் டங்ஸ்டன் லைட்டில் காவி நிறம் அதிகம்)


'டங்ஸ்டன் ஃபிலிம்'(Tungsten Film):
'டங்ஸ்டன் ஃபிலிம்' (Tungsten Film) செயற்கை விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட வெள்ளை காகிதத்தை வெள்ளையாகவும், சூரிய வெளிச்சத்தில் அதே வெள்ளை காகிதத்தை நீல நிறமாகவும் பதிவுசெய்கிறது. (ஏனெனில் சூரிய வெளிச்சத்தில் நீல நிறம் அதிகம்).

அதாவது 'டே ஃபிலிம்'(Day Film) நீலம் கலந்த ஒளியை வெள்ளையாகவும், 'டங்ஸ்டன் ஃபிலிம்'(Tungsten Film) காவி கலந்த ஒளியை வெள்ளையாகவும் பார்க்கிறது.

இதை இன்னும் விரிவாகப் பார்ப்போம். ஒளியின் தன்மையை - வண்ணத்தை 'கெல்வின்' (Kelvin) என்ற அலகால் அளக்கிறார்கள். 'கெல்வின்' என்பது வெப்பத்தை (Temperature) அளக்கப்பயன்படும் அலகு. அதாவது வெப்பம் வண்ணத்தையும், வண்ணம் ஒளியையும் நிர்ணயிக்கின்றன. இங்கு ஒளியின் வண்ணத்தைக் கொடுக்கும் வெப்பம் (Color Temperature) கெல்வினால் அளக்கப்படுகிறது.

ஒரு கறுப்பு இரும்புத் துண்டை (Carbon Block) சூடாக்கினால் முதலில் அது சிவப்பு நிறமாகவும் பின்பு படிப்படியாக ஆரஞ்சு, மஞ்சளென மாறி நீல நிறமாக மாறுகிறது. அந்தக் கறுப்பு இரும்புத் துண்டு குறிப்பிட்ட நிறத்திற்கு மாறும் போது அதன் அப்போதைய வெப்பத்தைக் குறித்துக் கொள்கிறார்கள். அதன்படி குறிப்பிட்ட வெப்ப அளவைக்கொண்டு ஒளியின் அப்போதைய வண்ணத்தைத் தெரிந்துகொள்ளலாம். கெல்வினை 'K' என்று குறிக்கிறார்கள்.

அதன்படி பார்க்க சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியானது காலையிலிருந்து மாலை வரை 5400'K விலிருந்து 25000'K வரை மாறுபடுகிறது. பெரும்பான்மையான நேரங்களில் சூரிய ஒளியானது 5500'K விலிருப்பதால், 'டே ஃபிலிம்'-ஐ 5500'K விற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள். செயற்கை விளக்குகளால் உருவாக்கப்பட்ட இழை வெளிச்சமானது 3200'K என்ற அளவிலிருக்கிறது. எனவே 'டங்ஸ்டன் ஃபிலிம்'-ஐ 3200'K விற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள்.

இன்னும் எளிமையாக சொல்வதானால் டே ஃபிலிமானது 5500'K  ஒளியை வெள்ளையாகவும், டங்ஸ்டன் ஃபிலிமானது 3200'K  ஒளியை வெள்ளையாகவும் பார்க்கின்றன.

டே ஃபிலிமை 3200'K இழை வெளிச்சத்தில் உபயோகிக்க '#80A' என்ற ஃபில்டரும், டங்ஸ்டன் ஃபிலிமை 5500'K சூரிய ஒளியில் உபயோகிக்க '#85' வகை ஃபில்டரும் உபயோகிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒளியின் தன்மையை மாற்றுகிறார்கள்.

இவ்வகை ஃபில்டர்கள் ஒளியின் வண்ணத்தைக்கொடுக்கும் வெப்பத்தின் அளவை மாற்றுவதின் மூலம் ஒளியின் வண்ணத்தை(தன்மை) மாற்றுகின்றன. ஃபில்டர்களைப் பற்றி விரிவாக வேறொரு கட்டுரையில் பார்க்கலாம்.


'ஃபிலிம் ஸ்பீட்' (Film Speed): 
மாறுபட்ட ஆதார ஒளிகளுக்கு ஏற்ப படச்சுருள்கள் இருப்பது போல, ஒளியின் அளவைப் பொருத்து பயன்படுத்தக்கூடிய படச்சுருள்களும் உண்டு. அதாவது அதிக அளவு ஒளியிருக்கும் போது பயன்படுத்த ஒருவகை படச்சுருளும், குறைவான ஒளியிருக்கும் போது பயன்படுத்தக்கூடிய வகையில் மற்றொரு வகைப் படச்சுருளும் பயன்படுத்தப்படுகின்றன.

குறைவான ஒளியமைப்பிருக்கும் போது கிடைக்கக்கூடிய குறைவான ஒளியையும் தேவையான அளவிற்கு உள்வாங்கிப் பதிவுசெய்ய படச்சுருளுக்குத் திறன் அதிகமாக இருக்கவேண்டும். அதாவது ஒளியை உள்வாங்கிக் கொள்ளும் வேகம் அதிகமாகத் தேவைப்படுகிறது. அதுவே அதிகமாக ஒளியமைப்பு இருக்கும் போது உள்வாங்கிக் கொள்ளும் திறன் குறைவாக இருந்தாலே போதுமானது. இதன் அடிப்படையில் மாறுபட்ட திறனுடைய (அ) வேகம் உடைய படச்சுருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

படச்சுருளின் திறனை (அ) வேகத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த அதன் தயாரிப்புச் செலவு அதிகரிப்பதோடு, படச்சுருளின் தன்மையும் நாம் விரும்பத் தகாதவாறு மாறுபடுகின்றன. பதிவு செய்யப்படும் காட்சியின் தரம் மாறுபடுகிறது. ஆழ்ந்து பார்ப்போமானால் படச்சுருளின் துகள்கள் (Grains), வெளிச்சம் மற்றும் நிழலுக்கான விகிதம் (Contrast) போன்ற காரணிகள் மாறுபடுகின்றன.

அது மட்டுமல்லாது அதிக திறன் (அ) வேகம் கொண்ட படச்சுருளைக் கொண்டு, அதிக ஒளியமைப்புக் கொண்ட காட்சிகளைப் பதிவுசெய்யும் போது சில நடை முறைச் சிக்கல்களும் உண்டு. தேவைக்கு அதிகமான பாரத்தை சுமப்பதைப் போன்றது அது. ஆகையால் அதிகமாக ஒளியமைப்பிருக்கும் போது குறைவான திறன் (அ) வேகம் கொண்ட படச்சுருளே போதுமானது.
எனவேதான் மாறுபட்ட ஆதார ஒளியமைப்புக்கு ஏற்பவும் (Temperature of Light - Day (or) Tungsten), கிடைக்கக் கூடிய ஒளியின் அளவை பொருத்தும் (Amount of Light) நாம் படச்சுருளைப் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படச்சுருளின் திறனை (அ) வேகத்தை ISO , ASA என்று குறிக்கிறோம்.

ISO என்பது INTERNATIONAL STANDARD ORGANISATION என்பதின் சுருக்கம்.
ASA என்பது AMERICAN STANDARD ASSOCIATION என்பதின் சுருக்கம்.

படச்சுருள்கள் 50 ASA, 100 ASA, 200 ASA, 500 ASA என்ற வகைகளில் கிடைக்கின்றன. அதாவது 50 ASA-ஐ விட 100 ASA என்பது ஒரு மடங்கு அதிகம் சக்தி வாய்ந்தது. அதே போல 100 ASA-ஐ விட 200 ASA ஒரு மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. அதன்படி 50 ASA-ஐ விட 200 ASA என்பது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...