முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விண்ணைத் தாண்டி வருவாயா- நேர்த்தியான படைப்பு


"விண்ணை தாண்டி வருவாயா"வில் உயர்ந்த ரசனையையும், உண்மையான காதலையும், சிறந்த தொழில் நுட்பத்தையும், தகுதி வாய்ந்த கலைஞர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.

இந்த படத்தின் கதையைப்பற்றி நாம் பேச வேண்டியது இல்லை. ஏனெனில்.. காதலித்த அனைவருமே அதைத் தாண்டித்தான் வந்து இருப்பார்கள். யதார்த்தமான கதை, நம் வாழ்க்கையிலையே நடந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் கொண்ட காட்சியமைப்புகள், நாமே பேசின, கேட்ட, பழகின
வசனங்கள், நாம் அனுபவித்த உணர்வுகள் என படம் முழுக்க விரவி கிடக்கிறது.

தமிழில் நாம் நிறைய காதல் படங்களைப் பார்த்திருக்கிறோம். நெகிழவைத்தவை, அழவைத்தவை என அதில் சில படங்களுண்டு. அந்த படங்களெல்லாமே சினிமா என்ற எல்லைக்குள்ளிருந்தே செயல்பட்டு இருக்கின்றன. இங்கே தான் இந்த படம் வித்தியாசப்படுகிறது. சினிமாவின்
எல்லா கட்டுப்பாடுகிலிருந்தும் உங்களை விடுவித்து முழுமையான காதலை, வாழ்க்கையை உணரவைக்கிறது.

தொழில்நுட்பம் என்று பார்த்தால்.. உயர்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தொழில்நுட்ப விதிகளுக்குள் கட்டுப்படாமல் தன் தேவை, ரசனை, படைப்பு என சுதந்திரமாக எல்லைகளைக் கடந்து உருவாகிருக்கிறது.

இனிமையான பாடல்களும், நுட்பமான பின்னணி இசையும், எதார்த்தமான ஒளியமைப்பு மற்றும் அழகியலோடு கூடிய ஒளிப்பதிவும், ரசனையான ஆடைவடிவமைப்பு, வண்ண மயமான கலையமைப்பு, மனதை மயக்கும் வெளிப்புறத்தளம் என படம் முழுவதையும் மிக உயர்ந்த ரசனையில் உருவாக்கிருக்கிறார்.

சிம்பு, திரிஷா இருவருக்குமே இது மிக முக்கியமானப் படம். அவர்களின் வாழ்நாளில் இதுவரை கிடைக்காத கதாபாத்திரம். இருவருமே மிக நிறைவாக, சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

திரைப்படமென்பது.. ஒரு கதை, அதை சொல்லுவதற்கான கதாப்பாத்திரங்கள் என்ற முறையில் சொல்லுவது ஒருவிதம். சில கதாபாத்திரங்கள்,  அவர்களுடைய கதை என சொல்லுவது இன்னொரு முறை. இந்த படம் இரண்டாவது முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

சிம்பு(கார்த்திக்), அவருடைய அப்பா, அம்மா, தங்கை..

திரிஷா(ஜெசி), அவருடைய அப்பா, அம்மா, அண்ணன்..

கணேஷ் (ஒளிப்பதிவாளர்)எனும் சிம்புவின் நண்பர் ..

சிம்புவுக்கு வேலைத்தரும் இயக்குனராக கே.எஸ்.ரவிக்குமார்..

இவ்வளவுதான் இந்த படத்தின் கதாப்பாத்திரங்கள். இவர்களில் சிம்பு, திரிஷா, நண்பர் என மூன்று கதாபாத்திரங்களை முக்கியமாகக் கொண்டு இக்கதை நகருகிறது. நண்பர் கதாபாத்திரமும் மிக நன்றாக கையாளப்பட்டிருக்கிறது, மற்ற படமாகிருந்தால் நண்பரின் கதாப்பாத்திரத்திற்கு பிரபல
நகைச்சுவை நடிகர் யாரையாவது போட்டிருப்பார்கள், ஆனால் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு அறிமுக நடிகரைப் பயன்படுத்திருக்கிறார். அந்த நடிகரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். இதுவும் கூட படத்தின் இயல்புத் தன்மையை அதிகமாக்கியிருக்கிறது.

இயக்குனர் எந்த காட்சியையும் கற்பனையில் மட்டும் உருவாக்கியிருக்க முடியாது, எல்லா காட்சிகளின் சாரமும் இயக்குனரின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அல்லது தவறவிட்ட கணத்தை, வாழ்க்கையை பின்நாளில் யோசித்த போது இப்படிப் பேசி இருக்கலாமோ, நடந்திருக்கலாமோ என்ற அவரின் தவிப்பை பூர்த்தி செய்யக்கூடிய, வாழ்க்கையின் நிறைவை நோக்கி நகரக்கூடிய பார்வையாகத்தான் இருக்கிறது.

படமாக்கிய விதத்தையும் குறிப்பிடவேண்டும். வழக்கமான முறையில் "shot division" செய்யாமல், நீளமான, மிக நீளமான shots ஆக காட்சிப்படுத்திருக்கிறார். அதை அவர்கள் "Compose" செய்தவிதமும், "Movements"-உம், ஒளியமைப்பும் இந்த படத்தைப் பார்வையாளனின் கண்முன் நிகழ்வதாக எண்ணவைக்கிறது.

பொதுவாக எல்லாத் துறைகளிலும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பிறகு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், படைப்பு உருவாகும் என்பார்கள். அப்படி சினிமாவிலும் உண்டு. முந்தைய காலங்களில் அதற்கான உதாரணங்கள் உண்டு. அவ்வரிசையில் இப்படம் ஒரு
புதுவகையான நிகழ்தளத்தில், யதார்த்தமான, ரசனையான, உண்மையான படைப்பாக்கத்தில் அடுத்த தலைமுறைப் படைப்பாக இருக்கிறது.

வீட்டுக்கு வந்த பின்பும், எண்ணி நெகிழ்ந்து போகக்கூடிய பல காட்சிகள் இப்படத்தில் உண்டு. இப்படி ஒரு படத்தைத் தந்ததிற்கு கவுதம் வாசுதேவ் மேனனுக்கு பாராட்டு சொல்வதோடு, நன்றியையும் சொல்லிக்கொள்கிறேன்.



கருத்துகள்

  1. விஜய் சார்,

    ரொம்பவும் இயல்பான மென்மையான விமர்சனம்.

    மனோ

    பதிலளிநீக்கு
  2. இந்த படத்தின் கதை என்பது கௌதமுக்கு நடந்து விஷயம் கொஞ்சம் மாற்றி எடுத்து இருக்கலாம் அல்லமு நிஜமாலுமே அவர் காதலி அவரை விட்டு அமேரிக்காவில் செட்டில் ஆகி இருக்கலாம்.. அதனால்தான் எல்லா படத்திலும் மெரிக்கா வந்து விடுகின்றது என்று எழுதி இருந்தேன்...

    பண்ணை வீட்டில் சிம்பு திரிஷா கட்டி பிடிப்பு காட்சியில் அண்டர் எக்ஸ்போஸ் போல் இருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. ஒரு படம் திரையரங்கிற்கு வெளியிலும், வீட்டிலும், வீதியிலும் பேசப்படும்போதே அதன் இயக்குனர் ரசிகதளத்தில் வெற்றி பெற்று விடுகிறார். அந்த வகையில் கெளதம் மேனன் - விண்ணைத் தாண்டி வருவாயா-யில் பெற்றிருப்பது பெரும் வெற்றி.

    ஆனால் தொழில்நுட்பம் - இன்னபிற விஷயங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு பல நாட்களாக கதையின் நம்பகத்தன்மை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறது மனம். இந்தத்தலைமுறை காதல் பற்றி இவ்வளவு குழப்பங்களோடு இருக்கிறதா என்ற கேள்வி கேட்கிறது அது. அறிவார்ந்த காதல் விளையாட்டு வண்ண காகிதம் சுற்றப்பட்ட சாக்லேட்டாக சராசரி ரசிகனின் முன் நீட்டப் பட்டதா என்ற கேள்விக்கு அந்த மனதிடம் பதிலில்லை. காதல் மலையின் இருட்பாறைகளில் இருந்து நுட்பமாக செதுக்கப்பட்ட காமச்சிற்பத்தின் பேரழகில் மயங்கிய மனங்களின் வெற்றியா இது என்பது இன்னொரு கேள்வி.

    ம்ம்ம்...கதையைப் பற்றி பேச, கேட்க நிறைய இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி, இது அழகான படம்தான் நண்பரே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,