முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளானாள்



1930 -களின் ஆரம்ப வருடங்களில் ஒன்று அது. அவருக்கு அப்போது வயது முப்பது இருக்கும். அவருடைய மனைவிக்கு இருபத்தைந்து.

ஐந்து பெண்கள், ஒரு ஆணென மொத்தம் ஆறு பிள்ளைகள்.  கடைசிப் பெண் கைக்குழந்தை. ஊரில் கௌரமான, வசதியான குடும்பம் அவர்களுடையது.

கணவனும் மனைவியும் அன்பானவர்கள்.  இருவரிடையில் என்னதான் அன்பு இருந்தாலும், மனைவி என்பவள் கணவனுக்கு அடிமைப்பட்டவள், கணவன் சொல்லே வேதம், அவன் சொல்லை மீறுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்கிற மனோபாவம் நிறைந்த காலம். அவருடைய மனைவியும் அப்படித்தான் வாழ்ந்து வந்தாள்.

ஒரு நாள் அதிகாலையில், கோவிலுக்கு சென்றிருந்தவள் வீடு திரும்ப நேரமாகிவிட்டது. வீட்டில் இவர் கோபமாகக் காத்திருக்கிறார். கோபத்திற்கு காரணம் பசியோ, பிள்ளைகள் தனித்துவிடப்பட்டதோ அல்லது வேறு எந்த காரணமோ.. தெரியவில்லை.

வீட்டிற்கு வந்த மனைவிடம் கோபத்தோடு கேட்கிறார் “கணவன் முக்கியமா கடவுள் முக்கியமா?”, மனைவி சொன்னாள் “நீங்கள்தான்”. “அதுசரி, இன்று செய்த தவறுக்கு தண்டனையாக வாசலில் நில்” என்றார்.  கணவனைப் பற்றித் தெரியும். கோபம் வந்தால் இப்படித்தான் அவர் தண்டிப்பது வழக்கம், பிள்ளைகளைக்கூட இப்படித்தான் தண்டிப்பார். அவரின் அதிகப்பட்ச தண்டனையே அதுதான். ஒன்றும் சொல்லாமல் வாசலில் சென்று நின்றாள். "வாசலில் நில்" என்றவர் கோபத்தில் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

வெளியே சென்றவர் அப்படியே விளைநிலத்திற்கு சென்றவர், மாலைதான் வீடு திரும்பினார்.  வீட்டில் நிற்கச் சொல்லிவிட்டுப்போன மனைவி அங்கேயே நின்றுக் கொண்டிருந்திருக்கிறாள், அவர் சொன்னபோது காலை பத்துமணி, இப்போது மாலை ஆறு மணி .

பதறிப்போனவர் மனைவியை உள்ளே போகச்சொன்னார். கணவன் சொன்னார் என்பதற்காக காலையிலிருந்து மாலை வரை வாசலிலேயே  நின்றுக் கொண்டிருந்ததினாலோ, வெய்யிலோ அல்லது வேறு காரணத்தினாலோ தெரியவில்லை, அடுத்து வந்த சில நாட்களில் நோய்ப்பட்டு படுக்கையில் விழுந்தாள் மனைவி.

மருத்துவர்களை வரவழைத்து பார்த்தார்கள். மனைவியின் நிலைமைக்குத் தானே காரணமென்றுத் தவித்தார், பதறினார். கூடவே இருந்து பார்த்துக்கொண்டார். ஆனாலும் மருத்துவம் கைவிட்டது. அவர் மனைவி அவரை விட்டுப் பிரிந்தாள்.

முழுமையாக உடைந்துப்போனார் அவர். குற்ற உணர்ச்சியும், பிரிவும் அவரை மிகுந்த துன்பத்தில் தள்ளின. மனைவியின் பிரிவை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனைவியை சிறுவயதிலிருந்தே தெரியும். ஒரே தெருதான். தன் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளித்தான் அவள் வீடு இருந்தது. அடக்கமான பெண். அன்பானவள், அவரிடம் மட்டுமல்ல எல்லோரிடமும். சிறுமியாக தெருவில் விளையாடியதும், வயதுக்கு வந்து வெட்கத்தோடு தன்னைக் கடந்து சென்றதும், பெண் கேட்டு சென்ற நாளும், தாலி கட்டி மனைவியாக்கிய நிமிடமும், மனைவியாக இவ்வீட்டில் அவள் வாழ்ந்த வாழ்வும், ஒவ்வொரு பிள்ளைகள் பிறக்கும்போதும் அவள் கொண்ட மகிழ்ச்சியும், பிள்ளைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவள் மேல் கூடிய அன்பும், தன்னைக் கவனித்துக்கொண்ட தன்மையும் அவரது கண் முன்னே வந்து போயின.

அவரால் துக்கத்தை அடக்க முடியவில்லை. அறையிலிருந்த அனைவரையும் வெளியே போகச் சொன்னார். அனைவரும் வெளியேறியதும் பட்டென்று கதவைச் சார்த்திக்கொண்டார். உள்ளே அவரும், மனைவியின் உடலும் மட்டுமே. பிணமாக அவளை வெளியே அனுப்ப அவரால் முடியவே முடியாது. வெளியே இருந்த உறவுகளும், ஊரும் கதவைத் தட்டிப் பார்த்தது. வெளியே வரும்படி கெஞ்சிற்று. கதறிற்று. ஆனால், அவர் வருவதாக இல்லை. எப்படி எப்படியோ அழைத்துப் பார்த்துவிட்டார்கள். பதிலேதுமில்லை. ஊர் பதறியது. ஏதேனும் தவறாக செய்து கொள்வாரோ என அஞ்சியது. அப்படியெல்லாம் செய்து கொள்ளமாட்டார் என்றும் தங்களுக்குள் நம்பிக்கை சொல்லிக் கொண்டது. அவர் ஊர்ப் பெரிய மனிதர்களுள் ஒருவர். அப்போது அவர்தான் நாட்டாமை. அவரது வாக்கே தீர்ப்பு. நல்லவர். புத்திசாலி. அப்படியெல்லாம் தவறாக நடந்துகொள்ளமாட்டாரென தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

ஆனாலும் அவரை வெளியே வரவழைப்பது எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை. கதவை தட்டுவதும், கெஞ்சுவதும், காத்திருப்பதும் தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவைத்திறந்து வெளியே வந்தார்.

அழுது அழுது கண்கள் வீங்கிப்போய், தலை கலைந்து, உருவம் தொலைந்து, கம்பீரம் இழந்து அவரிருந்த நிலை இதுவரை ஊர் பார்க்காதது. அவரது கோலம் கண்டு ஊரே அழுதது. அக்கணத்திலிருந்து அவர் வீட்டுத் துக்கம், ஊரின் பொதுத்துக்கமானது.

ஊர் கூடி துக்கம் அனுசரித்தது. ஊர் கூடி மற்ற காரியங்களைப் பார்த்தது. அவர் அமைதியாகத் தன் மனைவின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அடக்கம் செய்யத் தயாரானார்கள். அப்போது அவர் தன் அருகிலிருந்த ஊர்ப் பெரியவர் ஒருவரிடம் ஏதோ முணுமுணுத்தார். அவர் அதிர்ந்து அவரைப் பார்க்க, அவரோ அமைதியாகத் தான் சொன்னதைச் செயல்படுத்தச் சொன்னார். பெரியவர் அக்காரியத்தை, ஊரிடம் சொன்னபோது ஊரும் திகைத்தது. அவரிடம் பேசிப் பார்த்ததில், முடிவை மாற்ற முடியாதென புரிந்து கொண்டார்கள். வேறு வழியில்லை. அவர் சொன்னதைச் செய்யத் தயாரானார்கள். ஊருக்குப் புரிந்தது அவரின் நியாயம். அவரின் அன்பைக் கண்டோ, கட்டளைக்கோ, ஊர் அவர் சொல்லைச் செயல்படுத்தியது. அவரது மனைவியின் உடலை, ஊர் சுற்றிக் கொண்டு வந்து அவர் வீட்டின் பின்கட்டில் புதைத்தார்கள்.

ஆம்..அவரின் விருப்பம் அதுதான். தன் மனைவியின் உடல் தன்னுடனே இருக்க வேண்டும் என விரும்பினார். வீட்டின் பின்புறம் அவளின் உடலைப் புதைத்து, கல்லறையின் மேல் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது. அதில் ‘சிவலிங்கம்’ வைக்கப்பட்டது. அவரின் வீட்டு அமைப்பு மூன்று பகுதியானது. முன்பகுதி வாழும் வீடு, நடுவில் வாசல், பின்புறம் தோட்டமும் கொண்ட பெரிய வீடு அது. அவர் தன் மனைவியை புதைத்தது வீட்டின் நடுவில், வாசலை அடுத்து.

அன்று முதல் தினமும் அக்கோவிலுக்குப் படைத்து விட்டுதான் உணவருந்தத் துவங்கினார். அவர் குடும்பமும் அதையே பின்பற்றியது. அது சாதாரண நாளோ, பண்டிகை நாளோ அக்குடும்பத்திற்கு அக்கோவிலே படையலிடும் இடம். அங்கே படைத்துவிட்டுத்தான் நல்லது, கெட்டது எல்லாம் செய்தார்கள். அவரின் மரணம் வரை ஒரு நாளும் அவர் அதை மீறியது இல்லை. அப்பழக்கம் அவர் காலத்திற்குப் பிறகும் அவரின் பிள்ளைகளின் காலத்திலும் தொடர்ந்து, இப்போது பேரப்பிள்ளைகளின் காலத்திலும் தொடர்கிறது.

அவர் வாழ்ந்த ஊர் ‘தேவதானம் பேட்டை’ என்கிற சிறு கிராமம். செஞ்சிக்கு அருகில் இருக்கிறது. அவரின் பெயர் ‘சபாபதி பூபதியார்’. அவர் மனைவின் பெயர் ‘தனலட்சுமி அம்மாள்’. அவர்களுக்கு முறையே விஜயம், லட்சுமி, சூடியம்மாள், திருமகள், பூமனந்தாள் என்கிற பெண் பிள்ளைகள். ஒரே மகன் விஜயராகவன். மகன் வழி பேரன்கள் லெனின், மற்றும் ஆம்ஸ்ட்ராங்.

ஆம்.. அவர் என்னுடைய தாத்தா. அப்பாவின் அப்பா. அன்று எங்கள் தாத்தா குற்றவுணர்சியாலோ.. .அன்பாலோ.. துவங்கியதை இன்றும் நாங்கள் தொடர்கிறோம். எங்கள் பிள்ளைகளும் தொடர்வார்கள்.

பாட்டி இறந்து கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கடந்து, தாத்தா இறந்தபோது அவரின் அஸ்தி அதே சமாதியில் புதைக்கப்பட்டது. அவரின் நினைவாக முருகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இன்றும் எங்கள் வீட்டிற்கு வந்தால் அச்சமாதியை பார்க்கலாம். தற்போது எங்கள் தந்தையின் அஸ்தியும் அங்கே வைக்கப்பட்டிருக்கிறது.

இன்றும் எங்கள் குடும்பத்தில் எந்த நல்லது கெட்டதுக்கும் அங்கே படைக்கிறோம். அது பொங்கலோ, தீபாவளியோ அல்லது வேறு எந்த பண்டிகையோ அங்கேதான் படையல். என் தந்தை  தன் சிறு வயதில் தாயை இழந்தவர். அவளது ஒரு புகைப்படம் கூட அவரிடம் இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என் தந்தை. ஆனால் பாட்டிக்கு அந்த இடத்தைத் தந்தார். அன்று "கடவுளா? கணவனா?" என்ற கேள்விக்குக் கணவனே என்று பதிலளித்த எங்கள் பாட்டி, என்றும் எங்களின் கடவுளானாள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,