முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Cinemascope vs Super 35mm



நம்முடைய படங்களெல்லாம் வழக்கமாக சினிமாஸ்கோப்பில் (Cinema scope) எடுக்கப்படுகிறது. அதாவது அகன்ற திரை முழுவதும் படம் வரும்படியாக, பெரிதாக, பிரமாண்டமாக இருக்கிறது. உயரத்தைவிட அகலம் அதிகமாக இருக்கிறது. செவ்வகமாக படம் இருக்கிறது. 


முன்பெல்லாம் படம் சதுரமாக இருக்கும். அதாவது உயரமும் அகலமும் ஏறக்குறைய சமமாக இருக்கும்.  ஒரு 35mm ஃபிலிம் என்பது சதுரமாக இருக்கும். அதில் படத்தைப் பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட அளவு முறை கொண்டுவந்தார்கள். அந்த அளவை 'ஆஸ்பெக்ட் ரேஸியோ'(Aspect Ratio) என அழைத்தனர். 'ஆஸ்பெக்ட் ரேஸியோ' என்பது பதியப்படும் பிம்பத்தின் உயரத்திற்கும் அகலத்திற்குமிடையேன வித்தியாசத்தை விகிதத்தில் குறிப்பது. பல வகையான 'ஆஸ்பெக்ட் ரேஸியோ'க்கள் உள்ளன.




ஒரு ஃபிலிமின் அதிகபடியான இடத்தைப் பயன்படுத்தி பிம்பத்தைப் பதிய 1:1.37 'ஆஸ்பெக்ட் ரேஸியோ'-வைப் பயன்படுத்தினர். இதை 'அகாடமிக் ரேஸியோ' (Academy Ratio) என்றனர். இதில் பிம்பமானது அதன் உயரத்தைவிட அகலம் 1.37 மடங்கு பெரிதாக இருக்கும். இதே முறையில் 1:1.66,1:1.85 என்பதையும் புரிந்துக்கொள்ளுங்கள். நீண்ட காலமாக இந்த 'ஆஸ்பெக்ட் ரேஸியோ'-வில் ஏதோ ஒன்றின் முறையில் படமெடுத்துக்கொண்டிருந்தார்கள். 


இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் பல பிரச்சனைகளை சந்தித்தது. அதில் சினிமாவும் தப்பவில்லை. போருக்கு பின் ஏழ்மை ஒருபுறம், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வந்த தொலைக்காட்சிப்பெட்டியின் வருகை ஒருபுறமென சினிமாவின் பார்வையாளர்கள் குறைந்தனர். மக்களை சினிமா அரங்கிற்கு அழைத்து வர பல முயற்சிகள் நடந்தன. ஒலி அமைப்பில், ஒலிப்பதிவில் பல புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்தார்கள். அப்போதுதான் Surround Sound எல்லாம் கொண்டுவந்தார்கள். அது ஒருபுறம் நடந்துக்கொண்டிருந்தது.


மற்றொரு புறம் பெரிதாகப் படம் காட்டினால் மக்கள் வருவார்கள் என நினைத்தார்கள். அதாவது இதுவரை அவர்கள் பார்த்ததைவிட பெரிதாக இருக்கவேண்டும் என்று யோசித்தார்கள். காட்சி நடக்கும் இடத்தை அதிக பரப்பளவில் பார்க்க முடிந்தால், பார்க்க அனுமதித்தால் பார்வையாளன் கதையோடு ஒன்றிப் போவதற்கான சாத்தியங்கள் அதிகமென நினைத்தார்கள். அதிலிருக்கும் பிரமாண்டம் பார்வையாளனை மயக்கும், அதனால் திரையரங்கிற்கு வருவான் என நம்பினார்கள். பெரிய பிம்பத்தைக் கொண்டு வர பல முயற்சிகள் நடந்தன. ஃபிலிமின் அளவையெல்லாம் அதிகரித்துப் பார்த்தார்கள் 65mm 'நெகட்டிவ்' மூலம் 70mm படம் காட்டினார்கள். 


அதில் முக்கியமானது 'சினிராமா' (Cinerama) என்று அழைக்கப்பட்ட தொழில்நுட்பம், இந்த முறையில் மூன்று கேமராக்களை வரிசையாக ஒன்றின் பக்கத்தில் ஒன்று என வைத்து ஒரு காட்சியை படம் பிடித்தார்கள், அதாவது ஒரு காட்சியின் அகலத்தை அதிகரித்தார்கள். இப்படி மூன்று கேமராவினால் படம் பிடிக்கப்பட்ட காட்சியை அதே வரிசையில் மூன்று 'புரஜக்டர்கள்' (Projecters) கொண்டு  திரையில் காட்டினார்கள். அப்படிக் காட்டப் பட்டப் படங்களில் இருந்த பிரமாண்டம் மக்களைக் கவர்ந்தது. ஆனால் அதில் பல பிரச்சனைகள் இருந்தன. மூன்று கேமராக்களைக் கொண்டு படம்பிடிப்பதும் மூன்று புரஜக்டரைக் கொண்டு திரையிடுவதிலும் இருந்த நடைமுறைச் சிக்கல் ஒருபுறம், இப்படி படம் பிடிக்கப்பட்ட காட்சிகளில் இடையே பிம்பங்கள் இணையும் இடத்தில் இடைவெளி வந்தது.  


இப்போது அந்த முறையில் எடுக்கப்பட்ட படத்தை DVD-யில் பார்த்தீர்கள் என்றால் பிம்பத்தில் இரண்டு வெள்ளைக்கோடுகள் இருப்பதைப் பார்க்கலாம். இதற்கு மாற்று வேண்டும் என்று நினைத்தார்கள்.


சினிராமாவில் எடுக்கப்பட்ட சில படங்கள்:
Cinerama Holiday-1955
Seven Wonders of the World-1956
How The West Was Won -1962
Holiday in Spain-1962
It's a Mad, Mad, Mad, Mad World-1963


அப்போதுதான் இந்த யோசனை தோன்றியது, ஏற்கனவே Henri Chrétien என்பவர் முதலாம் உலகப்போரின் போது கண்டுபிடித்தது. 1927-வாக்கில் அதைப்பயன்படுத்தி 'To Build a Fire' என்ற குறும்படம் எடுத்திருந்தார்கள். பின்பு அதை மறந்தே விட்டார்கள். அந்த தொழில்நுட்பத்தைத்தான் Twentieth Century-Fox  நிறுவனம் 1952-ல் வியாபாரரீதியானப் படங்களுக்குக் கொண்டுவந்தது.


மூன்று கேமராக்களைக்கொண்டு படம் பிடிக்கும் பரப்பளவை 'லென்சில்'(Lens)-ல் சில மாற்றங்கள் செய்து ஒரே கேமராவைக்கொண்டு படம் பிடிப்பது. அதாவது இந்த லென்ஸ் என்னச்செய்யும் என்றால், அகலவாக்கில் பிம்பத்தைச் சுருக்கிக் (horizontally squeezed) கொடுக்கும். இதன் மூலம் அதிக பரப்பளவை படம் பிடிக்கமுடிந்தது. இதை ஒரே நெகட்டிவில் பதிய முடிந்தது. பின்பு திரையரங்கில் படத்தை திரையிடும் போது சுருக்கி இருக்கும் பிம்பத்தை வேறொரு லென்ஸைப் பயன்படுத்தி விரித்துத் திரையிட்டார்கள்.


படம் பிடிக்கப்பயன்படும் லென்ஸ் பிம்பத்தை சுருக்கிக் கொடுக்கும், திரையரங்கில் புரஜட்டரிலிருக்கும் லென்ஸ் பிம்பத்தை விரித்துக் கொடுக்கும். இந்த லென்ஸுகளுக்கு 'அனமார்பிக் லென்ஸ்'(anamorphic lenses) என்றும், இந்த முறையில் காட்டப்படும் படத்திற்கு 'சினிமாஸ்கோப்' என்றும் பெயரிட்டார்கள்.




இந்த 'அனமார்பிக் லென்ஸ்' ஆனது, தான் பார்க்கும் காட்சியை அகலவாக்கில் சுருக்கிக் கொடுக்கும் அளவானது அதன் உயரத்தை விட இரண்டு மடங்கு அதிகமானது. சரியாகச்சொன்னால் 2.35 மடங்கு அதிகம். இதைத்தான் 'ஆஸ்பெக்ட் ரேஸியோ'-வில் 1:2.35 என்கிறோம். அதே 35mm ஃபிலிமில் அகலவாக்கில் சுருக்கப்பட்ட பிம்பம் பதிவு செய்யப்படுகிறது.


The Rope-என்ற 'ஆல்பிரட் ஹிட்ச்காக்' படம்தான் முதல் சினிமாஸ்கோப் படம் (1953).


'சினிமாஸ்கோப்'-பில் என்ன குறை?

'அனமார்பிக் லென்ஸினுள்' வழக்கமான லென்ஸை விட அதிக அளவு கண்ணாடி துண்டுகளும், லென்ஸும் தேவைப்படுகிறது (extra opticals). ஒளியானது எந்த பொருளின் வழியாக ஊடுருவினாலும் அந்தப் பொருளால் கொஞ்சம் உறிஞ்சப்படுகிறது, மேலும் அந்த பொருளின் வண்ணமும் ஒளியோடு சேரும். இது இயற்பியல் விதி. அது கண்ணாடிக்கும் லென்சுக்கும் பொருந்தும். அதனால் லென்ஸின் முன்புறமாகச் செல்லும் ஒளியானது, அதிக படியான லென்ஸுகளால் உறிஞ்சப்பட்டு அளவு குறைந்தும் லென்ஸைப் பொருத்து வண்ணம் மாறியும் பின்புறம் வெளியேறும். 


இந்த பிரச்சனையைச் சமாளிக்க தரமான லென்ஸுகளையும் முடிந்த அளவிற்கு குறைவான எண்ணிக்கையில் லென்ஸுகளையும் பயன்படுத்துகிறார்கள். தரமாகத் தயாரிக்கப்பட்ட லென்ஸானது தன்னுள் ஊடுருவிச்செல்லும் ஒளியைக் குறைவாக உறிஞ்சி, வண்ணத்தை மாற்றாமல் வெளியனுப்புகிறது. அதாவது உட்செல்லும் ஒளியின் அளவிற்கும் வெளியேறும் ஒளியின் அளவிற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை விகிதத்தில் குறித்தால் 1:1 என்பது, உள்ளே செல்லும் அதே அளவு ஒளி வெளியேறுகிறது என்று பொருள். இதைப் பொறுத்து அந்த லென்ஸின் குறைந்த 'அப்பார்ச்சர்' (Aperture) அமையும். 


குறைந்த அப்பார்ச்சர் என்பது அதிகயளவு ஒளியை உள்விடும் அளவாகும். 1:1 என்றால் அதன் குறைந்த அப்பார்ச்சர் 1f என்று இருக்கும். அதாவது 1f, 1.3f, 2f, 2.8f, 4f, 5.6f,...etc என்பது அந்த லென்ஸின் அப்பார்ச்சர் அளவுகள்.


ஆனால், அனமார்பிக் லென்ஸில் வெளியேறும் ஒளியானது குறைந்துதான் வரும் வெளிவரும். அதனால் இந்த வகை லென்ஸின் குறைந்த அளவு அப்பார்ச்சர் என்பது குறைந்தது 2.8f-ஆக இருக்கும்.  


லென்ஸின் 'ஃபோக்கல் லெந்த்'(Focal lenth)-தை வைத்து இந்த குறைந்த அளவு அப்பார்ச்சர் மாறும். அதிக 'ஃபோக்கல் லெந்த்' லென்ஸுகளில் 4f அல்லது 5.6f  வாக இருக்கும். அதாவது உட்செல்லும் ஒளியைவிட வெளியேறும் ஒளியானது கிட்டத்தட்ட 10 மடங்கு குறைவு.


தரமான லென்ஸ் என்றால் விலை கூடுமில்லையா? தரம், தரம் சார்ந்த விலை என்றால் அதில் வியாபாரம் வந்துவிடும். அப்படித்தான் பல நிறுவனங்கள் பல தரங்களில் லென்ஸுகளைத் தயாரிக்கின்றன. 


Hawk, Cineo Vision, Elite, Arri, Kowa lens என பல பெயர்களை கேட்டிருப்பீர்கள். இவையெல்லாம் விலைக்கேற்ற தரமுடைய லென்ஸுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள். உங்கள் படம் பெரிய பட்ஜெட் படமென்றால் தரமான லென்ஸைப் பயன்படுத்தலாம். குறைந்த பட்ஜெட் என்றால் குறைந்த தரமுடைய லென்ஸுகள்தான் கிடைக்கும், அதற்குள்ளாகத்தான் நீங்கள் உங்கள் திறமையைக் காண்பிக்க வேண்டும்.


குறைகள்:

- ஒளியை அதிகமாக உறிஞ்சும் லென்ஸ் அமைப்புகள்.
-பிம்பத்தைச் சுருக்கித்தருவதால் ஏற்படும் தேவையற்ற பிம்பக் குறைபாடுகள்.
-'ஃபோக்கல் லெந்த்தில்' ஏற்படும் மாற்றங்கள்.
-குறைந்த தூர 'ஃபோகஸ்'(Minimum Focus) என்பது அதிகமாக இருப்பது. குறைந்ததே 3 அடியாக இருக்கும்.
-'Depth of Field' குறைந்து காணப்படுவது.
-சுருக்கப்பட்ட பிம்பத்தில் CG செய்வது சிரமத்தைக்கொடுக்கிறது. தேவையற்ற நேரவிரையம் ஆகிறது.  .
-anamorphic lenses விலை அதிகம்.




Super 35mm(S35):
35mm-மில் படமெடுக்கும் போது 'பிரிண்டில்' ஒலிப்பதிவிற்கு ஏற்றாற்போல் 'நெகட்டிவில்'  இடம் விடப்பட்டிருக்கும். S35-மில் அந்த ஒலிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் சேர்த்து 'நெகட்டிவில்' பிம்பத்தை பதிவுசெய்வார்கள். இதைத்தான் Super 35 என்கிறோம். நம்முடைய அகண்ட திரை (Wide Screen) என்பது 1:2.35 ஆஸ்பெக்ட் ரேஸியோ என்பதினால், அதே 35mm நெகட்டிவில் 1:2.35 ஆஸ்பெக்ட் ரேஸியோ பிம்பத்தை சுருக்காமல் அப்படியே பதிவு செய்கிறார்கள். இதற்கு வழக்கமான 35mm லென்ஸையே(spherical lenses) பயன்படுத்துகிறார்கள். இப்படி எடுக்கப்படும் பிம்பத்தைப் பின்பு DI முறையைப் பயன்படுத்தி பிரிண்ட் எடுத்துக் கொள்கிறார்கள்.




Super 35mm-மில் என்ன வசதிகள்?
- ஒளியை குறைவாக உறிஞ்சும் லென்ஸ் அமைப்புகள். அதனால் குறைந்த வெளிச்சத்தில் படமெடுக்கமுடியும்.
-பிம்பத்தில் இருக்கும் தெளிவு.
-குறைந்த தூர 'ஃபோகஸ்'(Minimum Focus) குறைவாக இருப்பது. 1inch-லிருந்து இருக்கும். அதனால் லென்ஸுக்கு அருகில் நடிகர்களை நிறுத்தமுடியும்.
-'Depth of Field' அதிகம், அதனால் ஒரு காட்சியில் முன்பின் நிற்கும் நடிகர்கள் 'focus'ல் இருப்பார்கள் (Foreground and Background in Focus).
-CG வேலைகள் S35mm-மில் எடுக்கப்பட்ட பிம்பத்தில் சுலபமாகிறது.
-லென்ஸ் தயாரிப்பில் குறைந்த செலவு.  





கருத்துகள்

  1. இந்த வலைதளம் மிகவும் சிறப்பாக உள்ளது. முகப்பின் லே-அவுட்டை கொஞ்சம் விரிவுபடுத்தினால் நிறைய இடம் கிடைக்கும். சில விளக்கப் படங்கள் மறைந்துவிடுவதால் படிக்கமுடியவில்லை.

    ஒளிப்பதிவின் தொழில்நுட்பவளர்ச்சியை அனைவரும் தெரிந்துகொள்ளும் அளவுக்கு சுருக்கமாகவும், விஷயம் உள்ளதாகவும் எழுதிஇருப்பதால் உபயோகமானதாக இருக்கிறது. அதுவே இத்தளத்தின் வெற்றியாகும். தொடரட்டும் தங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  2. நமக்கு பிடித்த விஷயத்தை எளிய நடையில் நமக்கு நன்கு தெரிந்த மொழியில் படிப்பதில் உள்ள சுகம் - அருமை!

    பதிலளிநீக்கு
  3. வேல்முருகன்..முகப்பை மட்டுமல்ல..layout-யே மாற்றிவிட்டேன்..நன்றி

    பதிலளிநீக்கு
  4. சில நாட்களுக்கு முன்னால் கலைஇயக்குனர் சந்தானத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது நல்ல ஒளிப்பதிவாளர் பற்றி பேச்ச்சு வந்தது. அவர் உஙகளைப் பற்றிசொன்னார்.இன்று தற்செயலாக உங்கள் பதிவைப்பார்த்தேன். (ஜாக்கி சேகருக்கு நன்றி).மிக அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்-ஜெகன்

    பதிலளிநீக்கு
  5. அருமையான விளக்கம்.தெளிவான கட்டுரை நண்பரே...நன்றாக இருக்கின்றது பதிவு..வாழ்க வளமுடன்,வேலன்.

    பதிலளிநீக்கு
  6. மிக மீண்ட நாட்களுக்கு பின் நான் இணையத்தில் கண்டு படித்து கற்று அறிந்த இணைய தளம் உங்களுடையது நண்பரே. என்னுடைய இயக்குனர் முயற்சிகளுக்கு உங்கள் இணையவெளி வழிகாட்டி வழி துணையாக இருக்கும் என்று உணருகின்றேன் நண்பரே. உங்கள் முயற்சிகளுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...