முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சினிமா உருவாகும் முறை: Paper to Celluloid

ஒரு திரைப்படம் கதையாகக் காகிதத்திலிருந்து 'செல்லுலாய்ட்' படமாக மாற இடையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான பார்வை. 


கதையை முடிவு செய்தவுடன் நண்பர்களோடு அல்லது தன் குழுவோடு அமர்ந்து விவாதித்து திரைக்கதையையும், வசனத்தையும் ஒரு திரைக்கதை எழுத்தாளரோ/ இயக்குனரோ எழுதிவிடுகிறார். பின்பு நீங்கள் கற்பனை கூட செய்யமுடியாத அளவில் அலைந்து திரிந்து எப்படியோ ஒரு தயாரிப்பாளரையும் (நட்சத்திர அந்தஸ்துள்ள ஹீரோவுக்கான கதையென்றால் குறிப்பிட்ட நடிகரையும்) பிடித்து விடுகிறார் என்று வைத்துக்கொண்டு, அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.


தன் கதை சார்ந்து, ரசனை சார்ந்து படத்திற்குத் தேவையான சக தொழில்நுட்ப வல்லுனர்களையும் தேர்வு செய்கிறார் இயக்குனர். பின்பு 'லொக்கேஷன்' பார்த்தல், 'அரங்கம்' (set) அமைத்தல், உடைகள் தேர்ந்தெடுத்தல், 'சக மற்றும் துணை' நடிகர்கள் தேர்ந்தெடுத்தல், 'Shooting Script' தயாரித்தல், 'Break Down' போடுதல், 'Set Property' எழுதுதல் என நிறைய வேலைகள் இருக்கிறது. இதை எல்லாம் முடித்துவிட்டதாக கருதி நாம் நேரே ஷூட்டிங்கிற்குப் போவோம். 




ஷூட்டிங் என்றால், இயக்குனர் 'Sound, Camera, Action, Cut' சொல்லி நடிகர்களை நடிக்க வைத்து படம் பிடிப்பார் என்பது ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்திருந்தாலே தெரியும். இப்படி படம்பிடிக்கப்பட்ட 'நெகட்டிவ்கள்' (Negative) தான் ஒரு படத்தின் ஆதாரம். அந்த 'நெகட்டிவ்' அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பதைத்தான் இந்தக் கட்டுரை விவரிக்கப் போகிறது.


'லேப்' (Lab)

படம்பிடிப்பதற்கு முன்பு உள்ள 'நெகட்டிவ்களை' 'ரா ஸ்டாக்' (Raw Stock) என்கிறார்கள். படம் பதிவு செய்யப்பட்ட 'நெகட்டிவை' 'எக்ஸ்போஸ்ட்' (Exposed) என்கிறார்கள். இந்த 'எக்ஸ்போஸ்டுகள்' அனைத்தும் படம்பிடிக்கப்பட்ட அன்று மாலையே லேபிற்கு (Lab) கொண்டுசெல்லப்படுகிறது. இது மிக அவசியம், எக்ஸ்போஸ் செய்யப்பட்ட நெகட்டிவை உடனுக்குடன் 'டெவலப்' (Develop) செய்துவிட வேண்டும். லேபில் ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்ட எக்ஸ்போஸ்ட் நெகட்டிவ்களை மறுநாளே டெவலப் செய்துவிடுவார்கள்.




லேபில் அந்த நெகட்டிவுகளின் தன்மையை ஆராய்ந்து, அதாவது சரியாக எக்ஸ்போஸ் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஒளிப்பதிவாளருக்கு தெரிவிப்பார்கள். அதற்கு 'LAD' (Lab Aimed Density) என்கிற அளவை லேபில் பரிசோதிப்பார்கள். ஒளிப்பதிவாளர் விருப்பப்பட்டால் நேரம் கிடைக்கும் போது அவர் லேபிற்கு சென்று அந்த நெகட்டிவ்களை 'அனலைசர்' என்கிற கருவியில் பார்ப்பார். அந்த கருவி நெகட்டிவில் இருக்கும் பிம்பங்களை படமாக திரையில் காட்டும். மேலும் நெகட்டிவில் பதிவாகிருக்கும் பிம்பங்களின் 'RGB' மதிப்புகளைக்காட்டும். இந்த மதிப்புகள் எண்ணில் இருக்கும். இந்த எண்களை 'பிரிண்டர் வேல்யூ' (Printer Value) என்கிறார்கள். இந்த பிரிண்டர் வேல்யூவைக் கொண்டுதான் திரையரங்கில் காட்டப்படும் 'பாஸிட்டிவ் பிரிண்ட்'(Positive Print)-ஐ போடுகிறார்கள். அதனால் இந்த பிரிண்டர் வேல்யூக்கள் சரியாக இருக்கவேண்டியது அவசியம். 


(நாம் புகைப்படம் எடுக்க உபயோகிப்பது நெகட்டிவ், பின்பு அதை லேபில் கொடுத்து பிரிண்ட் போட்டுப் பார்ப்போம் அல்லவா அந்த பிரிண்ட்தான் 'பாஸிட்டிவ் பிரிண்ட்'. அதே போல்தான் திரைப்படத்திற்கும்)


இந்த 'பிரிண்டர் வேல்யூக்கள்' என்பது R,G,B முறையே 1-50,1-50,1-50 என்ற மதிப்புகள் கொண்டது. இதில் நம்முடைய நெகட்டிவின் மதிப்புகள் 25,25,25 என்று வந்தால், அது மிகச்சரியாக எக்ஸ்போஸ் செய்யப்பட்ட நெகட்டிவ். 25-லிருந்து மதிப்புகள் கீழே குறைந்தால் 'Under Expose' செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். 25-லிருந்து மதிப்பு மேலே சென்றால் (30,35,40,50) 'Over Expose' செய்யப்பட்டிருக்கிறது என்று புரிந்துக்கொள்ள வேண்டும். 


இப்படி நெகட்டிவின் பிரிண்டர் வேல்யூவைத் தெரிந்துக்கொள்வது ஒளிப்பதிவாளர் தன் அடுத்தநாள் ஷூட்டிங்கில் தேவையான மாற்றத்தை செய்துகொள்ள உதவும். 


முன்பெல்லாம் அன்று எடுத்ததை அன்றே பிரிண்ட் போட்டுப் பார்ப்பார்கள். அதை 'டெய்லிஸ்' (Dailies) என்பார்கள். அதை மாலையில் அல்லது இரவில் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் திரையிட்டுப் பார்ப்பார்கள். இப்போது அது நடைமுறையில் இல்லை. எடுத்ததை மொத்தமாக ஒவ்வொரு 'ஷெடியுல்' முடிந்தபிறகு 'டெலிசினி' (Telecine) செய்துதான் பார்க்கிறார்கள்.


இப்படி லேபில் வரும் நெகட்டிவ்களை, டெவலப் செய்து, தரம் சோதித்து பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். 


'டெலிசினி' (Telecine):

ஒரு ஷெடியுல் படப்பிடிப்பு முடிந்த உடனேயோ அல்லது மொத்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனோ, டெவலப் செய்யப்பட்டிருக்கும் நெகட்டிவைகளை 'டெலிசினி' செய்யவேண்டும். ஏனெனில் அப்போதுதான் படத்தை 'படத்தொகுப்பு' (Edit) செய்யமுடியும்.


டெலிசினி செய்வதற்கு மொத்த நெகட்டிவ்களையும் 'ரீல்களாக' (Reel) பிரித்து எண் கொடுக்கவேண்டும். நாம் படப்பிடிப்பில் பயன்படுத்தும் நெகட்டிவ்கள் 400 அடி நீளம் கொண்டவைகள், அவற்றை 800 அடி அல்லது 2000அடியாக இணைப்பார்கள். இப்படி இணைக்கப்பட்ட நெகட்டிவ் பெட்டியை 'ரீல்' என்கிறார்கள். இந்த ரீல்களுக்கு 1, 2 என்று எண்ணிக்கையில் எண் தருகிறார்கள். இந்த எண்ணிக்கைதான் இனி அந்த நெகட்டிவ்களுக்கு அடையாளம். 


இப்படி ரீல் பிரித்து எண் கொடுப்பது 'படத்தொகுப்பாளரின்' வேலை. அவர் தன் உதவியாளர்களின் மூலம் இதைச்செய்கிறார். மேலும், இப்படி எண் கொடுக்கப்பட்ட ரீல்களில் முன்னும் பின்னும் 'ஓட்டைகள்'(Punch) செய்து அடையாளம் இட்டு அந்த ரீலின் மொத்த அடி (ft) கணக்கை குறித்துக்கொள்கிறார்கள். இதை வரிசைப்படி அனைத்து ரீல்களுக்கும் தொடர்ச்சி கொடுத்து குறித்துக்கொள்கிறார்கள். இந்த வேலையை 'நெகட்டிவ் பன்சிங்' (Negative Punching) என்கிறார்கள்.


இப்படி 'நெகட்டிவ் பன்சிங்' செய்யப்பட்ட ரீல்களை 'டெலிசினி'க்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த ரீல்களை 'டெலிசினி' கருவியைக்கொண்டு வீடியோவாக மாற்றுகிறார்கள்.(டெலிசினியைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை இருக்கிறது அதைப் படித்துவிட்டு மேலே தொடரவும்)


படத்தொகுப்பு (Editing):

டெலிசினி செய்யப்பட்ட 'வீடியோ டேப்' (Video Tape) மற்றும் 'Data' அடங்கிய CD படத்தொகுப்பாளருக்கு வருகிறது. மேலும் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்கள் நடிக்கும் போது பேசிய ஒலிநாடாவையும் (Pilot Track) அவரிடம் கொடுக்கிறார்கள். அதை அவர் 'ஆவிட்'(Avid) அல்லது 'FCP' போன்ற படத்தொகுப்பு செய்ய உபயோகப்படும் மென்பொருளில் ஏற்றி படத்தொகுப்பு செய்கிறார். மொத்தப் படத்திற்கான படத்தொகுப்பு முடிந்தபிறகு 'EDL' எடுக்கப்படுகிறது. இந்த 'EDL' கொண்டு 'நெகட்டிவ் கட்டிங்' (Negative Cutting) செய்யலாம் அல்லது 'D.I' கணினிக்கு இந்த 'EDL' அப்படியே கொடுத்துவிடலாம். இந்த இரண்டு முறைகளில் படத்திற்கு தேவையான 'பிச்சர் நெகட்டிவ்'(Picture Negative) தயார் செய்யப்படுகிறது. 

(இதைப்பற்றி விரிவாக 'டெலிசினி' மற்றும் 'எடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை' கட்டுரைகளில் காண்க) 


பின்பு ரீல் கணக்கில் பிரிக்கப்பட்டு 'டப்பிங்' அனுப்புகிறார்கள். 


டப்பிங் (Dubbing):

இப்படி படத்தொகுப்பு முடிந்தவுடன், அந்த காட்சிகளுக்கு 'டப்பிங்' பேசப்படுகிறது. திரைப்படம் எடுக்கும் போது அங்கே படபிடிப்புத்தளத்தில் நடிகர்கள் நடிக்குபோது பேசிய வசனங்கள் பதிவு செய்யப்பட்டு, படத்தொகுப்பு செய்யும்போது உபயோகப்படுத்தப்படுகிறது. அந்த ஒலிநாடாவை 'Pilot Track' என்கிறார்கள். இப்போது 'டப்பிங்'-இல் அந்த 'பைலட் டிராக்கு' களுக்கு தகுந்தமாதிரி, ஏறக்குறைய அதை ஒட்டி அல்லது சில சமயங்களில் வசனங்களை மாற்றியோ 'டப்பிங்' குரல்கள் எடுக்கப்படுகின்றன. அதாவது அங்கே படபிடிப்புத் தளத்தில் இரைச்சலோடும் தெளிவில்லாமலும் இருந்த வசனங்கள் இங்கே ஒலிப்பதிவுக் கூடத்தின் அமைதியில் தெளிவாக பதிவு செய்யப்படுகிறது. இந்த வசனங்களையே நாம் திரையரங்குகளில் கேட்கிறோம். இப்படி முழுப் படத்திற்கும், அனைத்து வசனங்களும் பதிவு செய்யப்படுகிறது.


'எஃபக்ட்ஸ்' (Effects)

டப்பிங் முடிந்தவுடன், மொத்த ரீல்களையும் 'எஃபக்ட்ஸ்'(Effects)-க்கு அனுப்புகிறார்கள். 'எஃபக்ட்ஸ்' என்பது வேறு ஒன்றும் இல்லை, படத்தில் வசனம் தவிர்த்து நாம் பயன்படுத்தும் மற்ற சத்தங்கள், கார் சத்தம், நடப்பது, குரைப்பது, ஓடுவது, தட்டுவது, அடிப்பது, சுடுவது போன்ற சத்தங்களும்,  டிஸ்யும், டும்மு, சரக், புராக் என்று வரும் சத்தங்களையும் காட்சிக்கேற்ப பதிவுசெய்வதுதான் 'எஃபக்ட்ஸ்' எனப்படுகிறது.


'ஃபைனல் டிரிமிங்' (Final Trimming or Final Editing)

படத்தொகுப்பு முடிந்தபோது மொத்தப்படத்தின் நீளமும், கடைசியாக திரைக்குவரும் அளவில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. சில சமயங்களில் அதிகமான 'சீன்கள்' இருக்கும். அதனால் படத்தின் நீளம் அதிகமாக இருக்கும், அதாவது படம் ஓடும் நேரம் அதிகமாக இருக்கும். டப்பிங் முடிந்தபிறகு படத்தொகுப்பாளர் மொத்தப்படத்தின் நீளத்தை நிர்ணயிப்பார். இந்த வேலை பெரும்பான்மையான படங்களுக்கு டப்பிங்குக்கு முன்பே முடிந்துவிடும். சில படங்களில் டப்பிங் வசனங்களையும், எஃபக்ட்ஸையும் பார்த்தபிறகு முடிவு செய்கிறார்கள். இந்தக் கடைசி கத்தரித்தலைத்தான் 'பைனல் டிரிமிங்' என்கிறார்கள். 


'ரஃப் மிக்ஸ்' (Rough Mix)

'டப்பிங்'-கில் பேசிய வசனம் மற்றும் எஃபக்ட்ஸ் ஒலியையும் இணைத்து 'ஃபைனல் டிரிமிங்'-க்காக கொடுப்பது ரஃப் மிக்ஸ் எனப்படுகிறது. 


பின்னணி இசை (RR - Rerecording)

ஒருபுறம் 'எஃபக்ட்ஸ்' நடந்துக் கொண்டிருக்கும்போதே பின்னணி இசைக்கோர்ப்பு வேலையும் நடந்துக்கொண்டிருக்கும். 


 'ஃபைனல் மிக்ஸ்'(Final Mix)

பின்னணி இசைக்கோர்ப்பு முடிந்தவுடன், அந்த ஒலியோடு 'டப்பிங்' மற்றும் 'எஃபக்ஸ்' ஒலிகளியும் ஒன்றிணைத்து நாம் திரையரங்கில் கேட்கும்போது தெளிவாக கேட்கும் படி ஒலி திருத்தம் (Sound Processing) செய்வார்கள். அதாவது வசனம், எஃபக்ட்ஸ், இசை எல்லாம் ஒரே அளவில் ஒலித்தால் இரைச்சலாக அல்லவா இருக்கும். அதனால் காட்சிக்கு தகுந்த படி இந்த மூன்று ஒலிகளின் அளவைக் கூட்டியும் குறைத்தும் சரியான படி நாம் திரையரங்கில் ஒலியைக் கேட்க வழி வகை செய்கிறார்கள். இந்த வேலைத்தான் 'ஃபைனல் மிக்ஸ்' என்கிறோம்.  


D.T.S / Dolby:

இப்போதைய படங்கள் பெரும்பாலும் D.T.S / Dolby ஒலிகளில்தான் வருகின்றன. படத்தில் D.T.S / Dolby உபயோகிக்கப்பட்டால், 'ஃபைனல் மிக்ஸ்' என்பது இந்த வசதியோடுதான் செய்யப்படுகிறது. இதற்கென்று தனியாக ஒலி அமைப்புக்கூடங்கள் உண்டு. இந்த D.T.S / Dolby 'Track'-ஐ தனியாக 'CD'யில் கொடுக்கிறார்கள். இதை D.T.S / Dolby வசதிகொண்ட திரையரங்கில் அதற்கென இருக்கும் கருவிகள் மூலம் கேட்டு மகிழ்கிறோம்.


சவுண்டு நெகட்டிவ் (Sound Negative):

'ஃபைனல் மிக்ஸ்' செய்யப்பட்ட ஒலியை 'Mono Track'ஆக சவுண்டு நெகட்டிவில் பதிகிறார்கள். இந்த சவுண்டு நெகட்டிவ் என்பது 'Black and White' படமெடுக்கப்பயன்படும் நெகட்டிவ். அதில்தான் சவுண்டை பதிகிறார்கள். பின்பு அந்த நெகட்டிவை 'டெவலப்' செய்து திரைப்படத்திற்கான 'சவுண்டு நெகட்டிவ்' தயார்செய்கிறார்கள். D.T.S / Dolby ஒலிக்கான குறியீடையும் (Code) இதில் பதிகிறார்கள். திரையரங்கில் இந்த குறியீடை அடையாளமாகக் கொண்டுதான் அந்தக்காட்சிக்கான D.T.S / Dolby ஒலியை 'CD'-யில் இருந்து எடுத்துக்கொள்ள முடிகிறது. 


'ஆப்டிகல் வேலைகள்' (Optical works)

திரைப்படத்தில் 'fade-in','fade-out','dissolves' போன்றவை உபயோகித்திருந்தால் அதை 'ஆப்டிகல் ஒர்க்ஸ்' என்ற தனித்துவமான வேலையைப் பயன்படுத்தி செய்கிறார்கள். அந்த 'ஆப்டிகல் ஒர்க்ஸ்'-ஐயும் நெகட்டிவாக பதிவுசெய்து அதை படத்தின் நெகட்டிவோடு இணைத்துவிடுகிறார்கள். இப்போதெல்லாம் 'D.I' செய்யும் படங்களில் இந்த 'ஆப்டிகல் ஒர்க்ஸ்'-ஐ 'D.I' கணினியிலேயே செய்துவிட முடிகிறது.


கணினி வரைகலை -C.G (Computer Graphics)

படத்திற்கு தேவையான 'C.G' வேலைகள் இருந்தால் அதையும் செய்து நெகட்டிவாக மாற்றி படத்தின் பிக்சர் நெகட்டிவோடு இணைத்துவிடுகிறார்கள்.


'பிக்சர் நெகட்டிவ்' (Picture Negative)

'நெகட்டிவ் கட்டிங்' மூலம் ஒன்றிணைக்கப்பட்ட நெகட்டிவ், 'ஆப்டிகள் ஒர்க்ஸ்' மூலம் பெறப்பட்ட நெகட்டிவ், 'C.G' மூலம் பெறப்பட்ட நெகட்டிவ் இவை அனைத்தையும் ஒன்றிணைத்து படத்தொகுப்பு செய்யப்பட்ட விதத்தில் ஒரு திரைப்படத்திற்கான 'பிக்சர் நெகட்டிவை' உருவாக்குகிறார்கள்.


'நெகட்டிவ் பேரலலிங்' (Negative Paralleling)

'பிக்சர் நெகட்டிவ்' மற்றும் 'சவுண்டு நெகட்டிவ்' ஆகிய இரண்டையும் சரி சமமாக, இணையாக இருக்கும்படி அமைக்கவேண்டும், அதாவது அந்த அந்த காட்சிக்கான ஒலி அதற்கு நேராக இருக்கவேண்டும் அல்லவா? அப்போதுதானே அந்த காட்சிக்கான ஒலி வரும், தனித்தனியாக இருக்கும் இரண்டும் நெகட்டிவுகளையும் 'Parallel' (இணையாக)-ஆக இருக்கும்படி சீரமைப்பதே 'நெகட்டிவ் பேரலலிங்' என்கிறார்கள். இந்தச் செய்வது படத்தொகுப்பாளரின் வேலை.


'வண்ணம் சீர்செய்தல்'-'கிரேடிங்'(Grading or Trimming)

'நெகட்டிவ் பேரலிங்' முடிந்தபிறகு 'பிக்சர் நெகட்டிவையும்' 'சவுண்டு நெகட்டிவையும்' லேபில் கொடுத்துவிடுவார்கள். 'பாஸிட்டிவ் பிரிண்டு' போடுவதிற்கு முன்பாக 'பிக்சர் நெகட்டிவில்' இருக்கும் 'RGB' மதிப்புகளை நாம் சீரமைக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு 'ஷாட்டுக்கு'-மான வண்ணத்தை நிர்ணயிக்கவேண்டும். மேலும் இந்த 'RGB' மதிப்புகளைக் கொண்டே பிரிண்ட் போடமுடியும். இதைச்செய்ய 'அனலைசர்'(Analyser) என்னும் கருவி பயன்படுகிறது. 'D.I' செய்யும் படங்கள் கணினியில் 'கிரேடிங்' செய்யப்படுகிறது.


'பாஸிட்டிவ் பிரிண்டு' (Positive Print)

இந்த இரண்டு நெகட்டிவ்களையும் கொண்டு நாம் திரையரங்கில் பார்க்கும் படியாக 'பாஸிட்டிவ் பிரிண்டு' தயார்செய்யவேண்டும். இந்த 'பாஸிட்டிவ் பிரிண்டில் காட்சி மற்றும் ஒலி இரண்டும் இணைந்தே இருக்கும். 


'பிக்சர் நெகட்டிவ்' மற்றும் 'சவுண்டு நெகட்டிவ்' இரண்டையும் பிரிண்டு போடும் கருவியில் இணையாக இணைத்து 'பாஸிட்டிவ் ஸ்டாக்கில்' (Positive Stock) ஒளி மூலம் பதிகிறார்கள், பின்பு அதை 'டெவலப்' செய்து 'பாஸிட்டிவ் பிரிண்டை' உருவாக்குகிறார்கள். ஒளி மற்றும் ஒலி இணைந்திருப்பதினால் இதை 'மேரிட் பிரிண்ட்' என்றும் சொல்வார்கள். இதை அப்படியே திரையரங்கில் திரையிடலாம்.


இத்தனைக் கட்டங்களைத் தாண்டித்தான் காகித்தில் இருக்கும் ஒரு கதை திரைப்படமாக உருமாறி திரையரங்கை வந்தடைகிறது. இதற்குப் பின்னால் பல நூறுபேருடைய பல மணிநேர உழைப்பு இருக்கிறது, பல கலைஞர்களின் திறமையும், கற்பனையும், படைப்புத்திறனும் இருக்கிறது. இது எல்லாத் திரைப்படங்களுக்கும் பொருந்தும், நல்ல படம், கெட்டபடம், ஓடுகிற படம், ஓடாதபடம், வெளிவந்தபடம், வெளிவராதபடம் என எல்லா படங்களுமே இப்படித்தான் உருவாகிறது.


இதைத்தான் நாம் ஒரு நொடியில் விமர்சனம் செய்துவிட்டு வந்துவிடுகிறோம்.!









கருத்துகள்

  1. தங்கள் தளத்தில் நூறாவது பாலோயராக இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  2. அன்பான விஜய் ஆம்ஸ்ட்ராங்,

    நல்ல தொடர். அற்புதமாக,எளிமையாக விவரித்துச் செல்கிறீர்கள். ஆர்வத்துடன் வாசிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். மீண்டுமொரு முறை தொகுத்து வாசித்து விட்டு சந்தேகமிருப்பின் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அடேங்கப்பா! இவ்ளோ வேலைகளா, படிக்கவே பிரமிப்பாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் எவ்வளவோ கஷ்டப்பட்டு எடுக்க மிகச்சுலபமா விமர்சனம் பண்றோம்.என்ன பண்றது கதைல கோட்டை விட்டா எல்லாமே போயிடுதே..

    பதிலளிநீக்கு
  5. Sir,

    வண்ணம் சீர்செய்தல்'-'கிரேடிங்'(Grading or Timming)

    இந்த வேலையை "கலர் கரெக்சன்" என்றும் சொல்லுவார்களா?

    பதிலளிநீக்கு
  6. நன்றி philosophy prabhakaran..

    நன்றி சுரேஷ் கண்ணன் சார்..எப்போது வேண்டுமாலும் கேளுங்கள்..நீங்கள் என் தளத்தைப்படிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. நன்றி..நண்பர்களே..
    -சைவகொத்துப்பரோட்டா
    -ஜீ

    பதிலளிநீக்கு
  8. Sakthivel:
    சரிதான்..color correction என்றும் சொல்லுவார்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,