முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Rigs - இயக்கத்திலிருப்பவற்றைப் படம் பிடிக்கப் பயன்படும் கருவிகள்

திரைப்பட உருவாக்கத்தின் போது பல கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளிப்பதிவைச் சார்ந்த முக்கியமான கருவிகளான கேமரா, விளக்குகள் போன்றவற்றை நாம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக ஒளிப்பதிவில் கேமராவை நகர்த்துவதற்கான அல்லது நகரும் 'subject'-ஐப் படம் பிடிப்பதற்கு என சிலக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளது. அக்கருவிகளை 'Rigs' என்ற பொதுப்பெயரால் அழைக்கிறார்கள். எனினும் ஒவ்வொரு கருவிக்கும் தனித்தனிப் பெயர்கள், அதன் செயல்பாடுகளைக் கொண்டு ‘காரணப்பெயராக’ இருக்கிறது. அதில் சில கருவிகளைப் பற்றி ஒரு அறிமுகம் இங்கே.



Crane - கிரேன்: பொதுவாக நடைமுறையில் 'கிரேன்' என்றால் என்ன? பளு தூக்கி இல்லையா? அதேதான் இங்கேயும்.!

அதேபோன்ற கருவிதான், ஆனால் சில வித்தியாசங்கள் உண்டு. நீண்ட உயரமான 'Arm' என அழைக்கப்படும் பகுதியானது செங்குத்தான ஒரு தூணில் இணைக்கப்பட்டிருக்கும். அதாவது இருப்பக்கங்களாக பிரித்து, ஒருபக்கத்தை கீழே அழுத்தினால், மறுபக்கம் மேலெழும்படியான அமைப்பு அது. நாம் விளையாட்டு திடல்களில் பார்த்திருப்போமே.. 'See-Saw' தத்துவத்தில் அமைந்தது. ஆனால் இரண்டு பக்கமும் சரி சமமாகப் பிரிக்கப்பட்டிருக்காது. ஒரு பக்கம் நீண்டும், அடுத்தப்பக்கம் நீளம் குறைவாகவும் இருக்கும். நீண்டப்பகுதியின் முனையில் கேமரா, ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா இயக்குபவர்/ 'ஃபோக்கஸ் புல்லர்' ஆகியோர் அமர்வதற்கான அமைப்பும், மறுபக்கம் அடுத்தப் பக்கத்தின் பளுவை சமன்செய்ய தேவையான 'பாரம்' (weight) இணைப்பதற்கான அமைப்பும் இருக்கும். இந்த 'weight' என்பது இரும்புக் கட்டிகளாகும். அதாவது ஒருபக்கத்தில் இருக்கும் 'கேமரா, ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா இயக்குபவர்' ஆகியோரின் எடை மறுபக்கத்தில் இரும்பு கட்டிகள் இணைப்பதன் மூலம் சமன் செய்யப்படுகிறது. அதனால் இரண்டுபக்க எடையும் நிகராகி 'Arm' என்று அழைக்கப்படும் அந்த நீண்ட பகுதி சமக்கோட்டில் இருக்கிறது. 





இதனால் இப்போது ஒருபக்கத்தில் சிறு அழுத்தம்கொடுத்தாலும் அடுத்தப்பகுதி மேலெழும்பும். இப்படித்தான் ஒருபக்கத்தை அழுத்துவதன் மூலம் கேமரா இருக்கும் பக்கத்தை மேலெழுப்புகிறார்கள். மேலும் தூணோடு இணைக்கப்பட்ட பகுதி திரும்புவதற்கும் வசதியுடையது,அதனால் தேவைக்கேற்ப கேமராவை மேலே எழுப்பவும் கீழே இறக்கவும் முடிவதோடு, எந்தப்பக்கம் வேண்டுமானாலும் வலது, இடது அல்லது முழுதாக '360டிகிரி' திருப்ப முடிகிறது. அதே போல் அந்தத் தூண் ஒரு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டு, அந்த அடிப்பகுதியில் நகர்த்துவதற்கான சக்கரங்களும் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் 'கிரேனை' நமக்கு தேவையானபடி தேவையான இடத்திற்கு நகர்த்திக்கொள்ளவும் முடிகிறது.


கிரேனின் இருக்கிறேன்
இந்த கிரேன்கள் தோராயமான கணக்குபடி 12, 24, 40 அடிகளில் (ft) இருக்கிறது. தனித்தனி பாகங்களாக இருக்கும். தேவைப்படும்போது இணைத்து முழுவடிவத்தைக் கொண்டுவருவார்கள்.


இப்படியான ஒரு அமைப்பைக்கொண்டு என்ன வகையான ஷாட்ஸ் (SHOTS) எடுப்பார்கள் என்று நான் சொல்லத்தான் வேண்டுமா? உங்களுக்கே தெரியும்தானே?


Trally - டிராலி: பொதுப்பெயராகப் பார்த்தால் பொருள்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு பயன்படும் சாதனத்தைக் குறிப்பது. தொழிற்சாலையில் பொருட்களை இடமாற்றுவதற்கு பயன்படுத்தப்படுவதும், மருத்தவமனைகளில் நோயாளிகளை இடமாற்றுவதற்கு பயன்படுவதும் இந்த டிராலிகள்தான். 


இங்கேயும் அதேதான். கேமராவை இடமாற்றுவதற்கு. அதுவும் கேமரா இயங்கிக் கொண்டிருக்கும் போதே சீராக இடம் மாற்றி, நகரும் 'subject'-ஐ படம்பிடிப்பதற்குப் பயன்படுகிறது.


டிராலியில் இருக்கிறேன்
இந்த டிராலியானது ஒரு சதுரமான அடித்தளத்தில் (Base) 'கேமரா, ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா இயக்குபவர்' அமர்வதற்கான சிறு தூண் போன்ற அமைப்பு கொண்டது. அந்த அடித்தளமானது சக்கரங்களைக்கொண்டது. இச்சக்கரங்கள் இரண்டு வகையில் இருக்கும். ஒன்று வழக்கமான 'காற்று நிரப்பப்பட்ட' ஒரு அடி உயரம்கொண்ட சக்கரங்கள். மற்றது இரயிலின் சக்கரங்களைப்போன்ற அமைப்பு கொண்டது. இச்சக்கரங்கள் இரயிலைப்போலவே ஓடுவதற்காக சிறப்பு 'தண்டவாளம்' இருக்கிறது. அதாவது இரண்டு இணையான ஓடுபாதை அமைப்பு அது.


இரயிலைப்போல, டிராலிக்கு தண்டவாளம் எதற்கு என்றால், அப்போதுதான் கேமராவை நகர்த்தும் போது சீராக, ஆட்டம் இல்லாமல் இருக்கும். கேமரா ஆட்டமில்லாமல் (Shake) படம்பிடிப்பது அவசியம் இல்லையா? அதனால் தான் இப்படி ஒரு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.




ஐந்து அடிகளை கொண்ட தண்டவாளங்களாக பல பகுதிகள் தனித்தனியாக இருக்கும். இதை தேவைக்கு ஏற்ப ஒன்றிணைத்து நீளமாக்க முடியும். அதேபோல் வட்டவடிவ தண்டவாளங்களும் உண்டு. இதன்மூலம் 'Subject'ஐச் சுற்றி 'Round Trally' ஷாட்ஸ் எடுக்கமுடிகிறது.


இந்த டிராலியில் சிறிய கிரேனை (12ft) இணைத்தும் பயன்படுத்தமுடியும். இப்போது டிராலி, கிரேனுக்கான நடுத்தூணாக செயல்படும்.


டிராலியில் கிரேன்


Jimmy-jib - ஜிம்மி ஜிப்: இது கிரேனின் நவீனவடிவம். அதே போல அமைப்புக் கொண்டதுதான். ஆனால் இதில் ஆட்கள் யாரும் அமரவேண்டியது இல்லை. கேமராவை இயக்க தானியங்கிக் கருவிகள் உண்டு. அக்கருவிகளை, கீழே இருந்துகொண்டே நாம் கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாட்டு அமைப்பு இருக்கிறது.


இந்த 'ஜிம்மி ஜிப்'-ஐ நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கமுடியும். ஏதேனும் நடன நிகழ்ச்சியோ, பாட்டு நிகழ்ச்சியோ அல்லது விருது வழங்கும் நிகழ்ச்சியின்போதோ நீங்கள் பார்த்திருக்கமுடியும். ஒரு நீண்ட 'Arm'-இல் கேமரா இணைக்கப்பட்டு பார்வையாளர்களின் தலைக்குமேல் செல்லுமே.. அப்போது பார்வையாளர்கள் அதை நோக்கி கைகளை ஆட்டி ஆர்ப்பரிப்பார்களே..! அதுதான் 'ஜிம்மி ஜிப்'.









இக்கருவி 'கிரேனுக்கு' மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒளிப்பதிவாளர் மற்றும் கேமரா இயக்குபவர்/'ஃபோக்கஸ் புல்லர்' போன்றவர்கள் அமர வேண்டியது இல்லை என்பதனால் பாரம் குறைவாக இருக்கும். மேலும் இக்கருவியை எங்கே வேண்டுமானாலும் சுலபமாக பயன்படுத்த முடியும். தனித்தனியாக பாகங்களாக பிரித்து எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


ஹைட்ராலிக் கிரேன்


தானியங்கி அமைப்பில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், மிகச் சீராக இயக்க முடியும். மேலும் கிரேனால் எடுக்க முடியாத சில ஷாட்டுகளை இதில் எடுக்க முடியும். (உ.தா) தலைக்குமேல் சுற்றுவது, மேலிருந்து கீழே இறங்கி 'subject'-ஐ சுற்றுவது போன்றவை. மேலும் பயன்படுத்தும்போது அதன் சிறப்பு அம்சங்களை அறிந்துக்கொள்ள முடியும்.


Vacuum Base - வேகுவம் பேஸ்: இக்கருவியைக் கொண்டு ஓடும் வாகனங்களில் கேமராவை இணைக்கமுடியும். திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.. கதாபாத்திரங்கள் கார் போன்ற வாகனங்களில் செல்லும்போது அவர்கள் அருகிலிருந்து படம் பிடிக்கப்பட்டிருப்பார்கள். வாகனங்களுக்கு உள்ளே கேமராவை வைத்து படம் பிடித்து விடலாம். ஆனால் வெளியே இருந்து படம் பிடிப்பது எப்படி? காருக்கு வெளியே கேமராவை காரோடு பொருத்த இக்கருவி உதவுகிறது. 




வேகுவம் பேஸ் என்பது வேறொன்றுமில்லை. வழக்கமான தத்துவம் தான். காற்றை அடிப்படியாக கொண்டு ஒட்டிக்கொள்ளும் தன்மைக் கொண்ட சில பொருள்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எப்படி இயங்குகிறது? அந்த ரப்பரால் ஆன பகுதியிலிருக்கும் காற்றை வெளியேற்றி அதை சுவரோடு ஒட்டும்போது சுவற்றுக்கும் ரப்பருக்கும் இடையே காற்றில்லா வெற்றிடம் உருவாகி வெளியே இருக்கும் காற்றழுத்தத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்கிறது. 


வேகுவம் பேஸ் கருவியில் கேமராவை இணைக்கத் தேவையான பகுதி உள்ளது. மேலும், இக்கருவியைக் காரோடு இணைக்க ரப்பரால் ஆன அமைப்புகள் இருக்கிறது. இந்த ரப்பர்கள் காரின் சீரான வெளிப்புறங்களில் ஒட்டவைக்க ஏதுவாகிறது. ‘காற்றுத் தத்துவத்தில்’ இயங்குவதனால் தான் இதை 'வேகுவம் பேஸ்' என்கிறோம்.


கார் மட்டுமல்ல எந்த வாகனத்திலும் இக்கருவியை பொறுத்த முடியும். இக்கருவியை வாகனங்களின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பொறுத்தமுடியும். அதில் கேமராவைப் பொறுத்தி, நமக்கு தேவையான ஷாட்ஸை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.


Steady Cam - ஸ்டெடி கேம்: இக்கருவியின் மூலம் கேமராவை அதன் இயக்குபவரின் உடலோடு இணைத்து விட முடியும். அதனால் நடக்கும்/ஓடும் கதாபாத்திரத்தை இக்கேமரா பொருத்தப்பட்ட நபரும் நடந்து அல்லது ஓடி படம் பிடிக்க முடியும். 


கேமராவை உடலோடு இணைத்துக்கொண்டு நடக்கும்போது ஆடும் (shake) அல்லவா? அதைத் தவிர்ப்பதற்குதான் இந்த 'Steady Cam' பயன்படுகிறது. இதில் Stabilizing கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது வாகனங்களில் இருப்பதைப்போன்ற அதிர்வை தாங்கும் கருவிகளைக் கொண்டது.




இந்த கருவி மூன்று பகுதியைக் கொண்டது. ஒன்று ஒளிப்பதிவாளர் அல்லது கேமரா இயக்குபவரின் (இதை இயக்க தனியாக Steady Cam Operator உண்டு) உடலோடு இணைக்கப்படும் பகுதி. இரண்டு கேமரா,பேட்டரி மற்றும் 'மானிட்டர்' போன்ற கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் பகுதி. மூன்றாவது இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் 'Arm' பகுதி. இந்த 'Arm' பகுதியில்தான் அதிர்வை தாங்கும் கருவிகள் இருக்கும்.


Steady Cam Operator-உடன் நான்,கையில் மினி மானிட்டர்


சரி.. இயக்கத்திலிருக்கும் 'Subject'-ஐ படம்பிடிக்கத்தான் 'டிராலி' இருக்கிறதே.. பிறகு இது எதற்கு?


டிராலி போன்றவை சமதளத்தில் நகரும் 'Subject'-ஐ அல்லது அதை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கும் இடங்களில் படம்பிடிக்க முடியும். ஆனால் சமதளமாக இல்லாமல், அதை ஏற்படுத்தவும் முடியாத சூழ்நிலைகளில்?




விளையாட்டுத் திடல், சாலை மற்றும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் கதாபாத்திரம் போன்ற சூழ்நிலைகளில் இந்த 'Steady Cam' மிகவும் பயன்படும்.


கேமரா லென்ஸில் 'Focus Motor' பொருத்தப்பட்டிருக்கும், இதை இயக்க தனியாக (wire or cordless) ஒரு கருவி இருக்கிறது. இதை 'ஃபோக்கஸ் புல்லர்' இயக்குவார். அதேபோல் கேமராவில் பதிவாகும் பிம்பத்தைப் பார்க்க ஒரு சிறிய மானிட்டர் wire or cordless மூலம் இணைக்கப்படும். இதை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் பயன்படுத்துவார்கள்.





இந்த 'SteadiCam'-ஐ இணைத்துக்கொண்ட நபர் வாகனங்களில் அமர்ந்துகொண்டு கதாபாத்திரத்தைத் தொடரலாம், அவரோடு ஓடலாம், நடக்கலாம். இப்போதெல்லாம் தனியாக இரண்டு சக்கரங்கள் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட சிறிய வண்டியை 'SteadiCam' ஆபரேட்டர்கள் பயன்படுத்துகிறார்கள். இது இன்னும் இங்கே வரவில்லை. விரைவில் வரக்கூடும். 

கருத்துகள்

  1. நன்றி பாஸ்! உங்க கிளாஸ் நல்லா இருக்கு..உங்ககிட்ட நேர்லதான் நிறைய கேட்டுத் தெரிய வேண்டும்...! தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜீ..உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. ஒ! rig ன்னா அதான் மீனிங் அ?

    அப்போ time freeze rig ன்னா இயங்குற object அ நிறுத்தி/வேகம் குறைத்து எடுக்கிறதா?

    ஹி ஹி! எல்லாம் boys படம் வந்தபோது, 'அலை அலை' பாடல்ல பார்த்தது, கேள்விப்பட்டது! :)

    பதிலளிநீக்கு
  4. ரொம்பத் தெளிவா சின்னப்புள்ளைக்கும் புரியும் வகையில் விளக்குறீங்க. அருமை!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,