முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைவன் கொண்ட பாதை


உலகம் சந்தித்தப் பெரும் அழிவுகளில் ஒன்றான இரண்டாம் உலகப் போருக்கும், பதினேழு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதற்கும் காரணமாகயிருந்த 'அடால்ஃப் ஹிட்லர்' இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு முன்பே கொல்லப்பட்டிருந்தால், ‘அக்கொலை, குற்றம் என கருதப்படுமா? ஹிட்லரைக் கொன்றவன் கொலைகாரனா? அல்லது நாயகனா?’ ஒரு விதத்தில் பெரும் அழிவைத் தடுத்ததாகவும், மறுவிதத்தில் சக மனிதனைக் கொல்வது குற்றம் என்றும் ஆகிறது. இதன்படி கொன்றவன் குற்றவாளியா? நாயகனா? என்றொரு கேள்வியை எப்போதோ ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.

அப்போது தோன்றியிருக்கிறது, அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா என்று. ஹிட்லர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தால் இவ்வுலகம் பெரும் அழிவிலிருந்து தப்பித்திருக்கும் என்ற என் அறியாமையை இப்போது நினைத்து நொந்து கொள்கிறேன். ஹிட்லர் இல்லை என்றால் என்ன? அவரைப்போலவே அல்லது அவரை விட பல மடங்கு பலம் பொருந்திய கனவான்கள் பலர் உண்டு இவ்வுலகில் என்ற உண்மையை கடந்துபோன வருடங்கள் நமக்கு அடையாளம் காட்டியிருக்கின்றன.

நினைத்துப்பார்க்க.. நன்றாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட தலைவர்களை மட்டும் கொல்ல முடிந்திருந்தால் எப்படி இருக்கும்..!? அதுவும் அவர்கள் அத்தகைய அழிவுகளைத் துவங்குவதற்கு முன்பாகவே. இயக்குனர் 'ஸ்டிபன் ஸ்பில்பெர்க்கின்' படமான 'மைனாரிட்டி ரிப்போர்ட்'-இல் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கு ஒரு வழிமுறை பின்பற்றப்படும். கதைக்களம் பிற்காலத்தில் (future) நடப்பதாக சித்தரிக்கப்பட்ட அப்படத்தில் ஒரு குற்றம் நடைபெறுவதற்கு முன்பாகவே அதைப்பற்றி தெரிந்துக்கொண்டு அதைத் தடுப்பார்கள். அதாவது, அக்குற்றம் செய்பவனை குற்றச்செயல் செய்வதற்கு முன்பாகவே கைது செய்து சிறையில் அடைப்பார்கள். குற்றம் செய்யாத போதும் அதற்கான விருப்பமும் நோக்கமும் அதை நிகழ்த்திவிடக்கூடிய சாத்தியமும் அவனுக்கு இருந்ததனால், அவனை குற்றவாளியாகக் கருதி, அதற்கான தண்டனையையும் அவனுக்கு வழங்குவார்கள். பிற்காலத்தில் இப்படிக்கூட குற்றங்களைத் தடுக்கலாம் என்ற கற்பனை கதை அது. ஆனால் அதிலிருக்கும் சாத்தியம் வரும் காலத்தில் உண்மையானால் நன்றாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

'அடால்ஃப் ஹிட்லர்' வரலாற்றில் ஒரு வில்லனாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார். அது, ஒரு விதத்தில் சரிதான். மற்றொரு விதத்தில், அவரது வாழ்க்கையின் நியாயமற்ற குரூரத்தின் வார்ப்பு அவர். ஹிட்லருக்கு இரண்டு வித அடையாளங்களைக் கொடுக்கமுடியும். நாயகன், வில்லன் என இரண்டும் முகங்களுமே அவருக்குப் பொருந்தும்.

தேசத்தின் கடைக்கோடியிலிருந்து எழுந்து வந்த ஒரு சராசரிக்கும் கீழான மனிதன், அத்தேசத்தையே ஆண்டான். வறுமையிலும் புறக்கணிப்பிலும் வளர்ந்தவன் தேசத்தின் தலைவனானான். முதலாம் உலகப்போரில் அவன் தேசம் கண்ட இழப்பும், துயரமுமே ஹிட்லரை ஒரு தலைவனாக்கியது. அதுவே ஒரு பெரும் தேசத்தைக் கட்டமைக்க அவரைத் தூண்டியது. தன் தேசத்தின் முந்தையப் பெருமைகளெல்லாம் தன் காலத்தில் சிறுமைப் படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதும் அவை பழம் பெருமைகளாக மட்டுமே ஆகிவிடக்கூடாது என்பதுவுமே அவரை ஆட்சிக்கட்டிலை நோக்கி நகர்த்தியது.

இன்றளவும் பெருமைப்படக்கூடிய பல சாதனைகளை அவர் தன் ஆட்சியில் செய்திருக்கிறார். ஹிட்லரின் வாழ்கை நாம் படிக்க வேண்டிய ஒன்று. அதில் நல்லதும் கெட்டதுமாக பல செய்திகள் நமக்கிருக்கின்றன. அவரது அரசியல் பிரவேசத்தின் ஆரம்ப காலங்களில் சிறையிலிருந்தபோது, எழுதிய 'எனது போராட்டம்' (Mein Kamp/My Struggle) என்ற நூல் உலகப் புகழ்பெற்றது.

தன் தேசத்தின் பெருமைகளை உலகம் உணர வேண்டும் என்ற அவரது பேராசையும், அதற்குத் தடையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் அனைவரும் களையப்படவேண்டும் என்ற அவரின் வெறியுமே அவரது அடையாளத்தை மாற்றியமைத்தன. வாழ்க்கையின் புரிந்து கொள்ள முடியாத குரூர பக்கங்கள் சில, ஹிட்லரின் வாழ்க்கையில் எழுதப்பட்டிருக்கிறது.

ஒரு தலைவன் தன் தேசத்தை எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும். அதே தலைவன் தன் தேசத்தை எத்தகைய பாதாளத்திலும் தள்ளிவிட முடியும். இரண்டுக்கும் ஹிட்லர் உதாரணமாகிறார். ஜெர்மனியை உலகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட வேண்டுமென்ற அவரின் முயற்சியே, அதை பாதாளத்தில் தள்ளியது. அது, மிகக் குறுகிய காலத்திலேயே நடந்துவிட்ட ஒரு பெரும் சரித்திரம். முதலாம் உலகப்போருக்குப் பின்னால் ஹிட்லரின் எழுச்சியும், அவரின் வீழ்ச்சியும், அவர் துவங்கிய இரண்டாம் உலகப்போரும் இவ்வுலகம் என்றும் மறந்துவிடக்கூடாத/முடியாத வரலாறு.

தன் தலைவன் தேசத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்லும் போது உடனிருந்து பேரானந்தப்படும் மக்கள், அவன் பாதை மாறி தேசத்தை அழிவுப் பாதையில் நகர்த்தும் போது தடுக்கவேண்டும். முடியாதபோது அவனை அரியணையிலிருந்து அகற்ற வேண்டும். அகற்றப்படுவது அவனது பதவியாக மட்டுமில்லாமல் சில சமயங்களில் அது அவனின் உயிராகவும் இருந்துவிடுவதுண்டு என்பதற்கு வரலாற்றில் பல முன் மாதிரிகள் உண்டு.

இரண்டாம் உலகப்போர் பெரும் அழிவுகளைச் சந்தித்து அதன் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ஹிட்லர் அழிக்கப்படுவது அப்போது உலகத்தின் பெரும்பான்மையோரின் விருப்பமாகயிருந்தது. அவ்விருப்பம் ஜெர்மனியர்களுக்கும் இருந்ததுதான் ஆச்சரியம். ஆம், சில ஜெர்மானிய அரசாங்க, இராணுவ அதிகாரிகள் ஹிட்லர் கொல்லப்படவேண்டும் என்று விரும்பினார்கள். அதன் மூலமாக, போரை நிறுத்தி, நெருங்கி வரும் நேச நாட்டுப்படையிடமிருந்து ஜெர்மனியைக் காக்க முடியும் என்று நம்பினார்கள்.

ஹிட்லரைக் கொல்ல பல முயற்சிகள் அப்போது ஜெர்மனியில் ஜெர்மனியர்களாலயே நடத்தப்பட்டது. வெளியே தெரிய வந்தது இருபது சம்பவங்கள் மட்டும்தான். அதில் ஒன்றைத்தான் 'வால்கிரி'(Valkyrie) என்றப் படம் விவரிக்கிறது.




சூலை 20, 1944-இல் ஹிட்லரைக் கொல்ல நடந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் கதை. ஹிட்லர் அகற்றப்படவேண்டும், போரை நிறுத்த வேண்டும், அதே சமயத்தில் தேசம் அடிமைப்படவோ சரணடைவோக் கூடாது என்ற நிலையில் சில இராணுவ மற்றும் அரசியல்வாதிகள் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார்கள்.

நம் நாட்டில் உள்நாட்டு குழப்பம் வரும் போது பயன்படுத்தப்படும் 'அவசரகாலச்சட்டம்' (எமர்ஜன்சி) போன்று ஒரு சட்ட முறை அங்கே இருந்தது. அச்சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட முடியும் என்றும், பிறகு நேசநாட்டு படையோடு சமாதானம் பேசிக் கொள்ளலாம் என்றும் ஆலோசிக்கிறார்கள். அச்சட்டத்தின் பெயர்தான் 'வால்கிரி'.

'வால்கிரி'-ஐ நடைமுறைப் படுத்த முதலில் ஹிட்லர் கொல்லப்படவேண்டும். மேலும் அவரின் விசுவாச அதிகாரிகளும் கொல்லப்படவேண்டும். மற்றவர்களைச் சிறை பிடித்துவிடலாம் என்பது திட்டம். நாட்டின் பல பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர 'சிறப்புப் படையை' பயன்படுத்த நினைக்கிறார்கள். இச்சிறப்புப் படை என்பது ஹிட்லரே உருவாக்கியது. இப்படை ஹிட்லருக்கு மட்டுமே அடிபணியும். அவர் இல்லாமல் போனால் மட்டுமே அதைப் பயன்படுத்தமுடியும் என்ற நிலையில் ஹிட்லரைக் கொல்ல ஒரு திட்டம் உருவாக்கப்படுகிறது.

'Claus von Stauffenberg' என்னும் இராணுவ அதிகாரி, ஹிட்லர் மற்றும் உயரதிகாரிகள் கூடியிருக்கும் பதுங்கு தளத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு பொறுப்பெடுத்துக்கொள்கிறார். இதன் மூலம் அங்கே கூடி இருப்பவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள், மேலும் அப்பதுங்கு தளத்திலிருந்து வெளிவரும் அனைத்து தகவல் தொடர்பையும் துண்டித்து விடுவதன் மூலம் இச்செய்தி வெளியே பரவுவதற்கு முன்பாக நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்றும் முடிவு செய்கிறார்கள்.

அதன்படி குறிப்பிட்ட நாளில் வெடிகுண்டு வைக்கப்படுகிறது. குண்டு வெடிக்கிறது. ஹிட்லர் இறந்தாரா இல்லையா, நாடு கைப்பற்றப்பட்டதா என்பவற்றைத்தான் இப்படம், மிகவும் விறுவிறுப்பாக விவரிக்கிறது.

ஹிட்லரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இன்னொரு முக்கியமான திரைப்படம் ஒன்றுண்டு. அவரது கடைசி பத்து நாட்களை விவரிக்கும் 'டவுன் ஃபால்' (Downfall) என்னும் அத்திரைப்படம், முழுக்க முழுக்க 'Wolf's Lair' என்னும் ஹிட்லரின் பதுங்குத்தளத்திலேயே நடக்கிறது. இதில் ஹிட்லரின் தோல்வி நேர குணநலன்களையும், அவரது மரணத்தையும், அவரது காதலி 'ஈவா பிரான்' மற்றும் 'கோயபல்ஸ்' போன்ற விசுவாசமிக்க அதிகாரிகளின் நிலை, அவர்கள் ஹிட்லரின் மீது கொண்ட மதிப்பு போன்றவற்றை விவரிக்கிறது. ஹிட்லரின் காரியதரிசியாக இருந்த 'Traudl Junge' என்னும் பெண்மணியின் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட 'Inside Hitler's Bunker' மற்றும் 'Inside the Third Reich' (Albert Speer) என்னும் புத்தகங்களின் திரைவடிவமது.


ஹிட்லரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதும், இரண்டாம் உலக யுத்தம் எப்போது முடிவுக்கு வந்தது என்பதும், ஜெர்மனியும், பெர்லினும் என்ன நிலைமைக்கு ஆளாகின என்பதும் நாம் அறிந்திருக்கக்கூடிய வரலாறு.

ஒரு தலைவன் கொண்ட லட்சியங்களும் பாதைகளுமே அவனது தேசத்தை வழி நடத்துபவை. ஒரு தலைவனின் தோற்றமும், மறைவும் ஒரு தேசத்தை பாதிக்கும். அவன், நல்லவனோ கெட்டவனோ அது அவனது தேசத்தின் வளர்ச்சியோடு சம்பந்தப்படுகிறது. ஜெர்மனியின் எழுச்சியும், வீழ்ச்சியும் 'ஹிட்லரின்' வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டிருந்தது என்பது வரலாறு குறித்து வைத்திருக்கும் செய்தி.

ஒரு சிறந்த தலைவனை அடையாளம் காண்பதும், அவனைத் தலைமைக்குக் கொண்டுவருவதும், தன் தேசத்தின் மீது பற்றுக்கொண்ட ஒவ்வொரு குடிமகன்களின் பொறுப்பாகும். அப்படியான காலங்களில், அவர்கள் சரியாக சிந்தித்து, செயல்பட்டு காலம் தவறிவிடாமல் கடமையாற்றவேண்டும்.

Valkyrie

Downfall

கருத்துகள்

  1. It was very nice to go through your texts. I have to say this,that sometimes, you brought the past reality in front of my eyes through your words...! Kudos...Vijay...! Will come again here after watching those two movies.

    Sorry to text in English as I am facing some sorta difficulty to text in Tamil.

    பதிலளிநீக்கு
  2. இதுவரை ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி என்ற அளவிற்கு மட்டும்தான் தெரியும்.ஹிட்லரை பற்றி அறியாத செய்திகளை பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. சார் விட்டால் கொடியவன் ஹிட்லருக்கு கோவில் கட்டிடுவீங்க போலவே,அதுவும் அவனை நல்லவன்னு சொல்ல நீங்க சொல்லும் காரணம் இருக்கே?ரோடு போட்டானாம்,கட்டிடம் கட்டுனானாம்,தொழிற்சாலை கட்டினானாம்,முழு ஐரோப்பாவையே ஜெர்மனிக்கு கீழே கொண்டுவரநினைத்தானாம்.வைர ஊசின்னா கண்ணை குத்திக்கலாம்னு சொல்றா மாதிரி இருக்கு,இது ஒரு பொறுப்பற்ற பதிவு.

    பதிலளிநீக்கு
  4. கொஞ்சம் தாமதமான கமெண்டு தான். ஆனாலும் சொல்லியே ஆகணும் :)

    //'அடால்ஃப் ஹிட்லர்' இரண்டாம் உலகப்போர் துவங்குவதிற்கு முன்பே கொல்லப்பட்டிருந்தால், அந்த கொலை குற்றமாகுமா? ஹிட்லரை கொன்றவன் கொலைகாரனா?

    stephen king - உடைய 'The dead zone' என்கிற நாவல் இது போன்றதொரு கருத்தையே பேசுகிறது. அந்தக் கதையின் நாயகனுக்கு ஒரு விபத்தின் மூலம், நடக்கப் போவதைக் கணிக்கும் ஒரு திறன் கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்தி, ஒரு எதிர்காலச் சர்வாதிகாரியைக் கொல்ல, அவன் எடுக்கும் முயற்சியே கதை.

    நல்லதொரு விமர்சனம்!

    பதிலளிநீக்கு
  5. நன்றி kummiyadi..//் கொடியவன் ஹிட்லருக்கு//
    எல்லா மனிதர்களுக்கும் மற்றொரு பக்கமுண்டு நண்பரே..

    முகமூட..//கொஞ்சம் தாமதமான கமெண்டு தான். //
    தாமதமெல்லாம் ஒன்றுமில்லை..வருகைக்கு கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...