முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'புத்தனும் காந்தியும் யுத்தக்களத்தில் நின்றார்கள்' -மே 18. தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்!


மே 18. தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்!

இன்று கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் ஈழம் சார்ந்து எழுதிய பாடல்கள் அடங்கிய 'என் தம்பி வருவான்' என்ற இசைக் குறுந்தகடு (CD) வெளியீட்டு விழா தி.நகர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது.

பெரியவர்கள் திரு.பழநெடுமாறன், திரு.பெ.மணியரசன், திரு.தியாகு, திரு.தா.பாண்டியன் மற்றும் திரைப்பட இயக்குனர் திரு.புகழேந்தி போன்றவர்கள் பங்கேற்றார்கள்.

இந்தக் குறுந்தகட்டில் ஆறு பாடல்கள் இருக்கின்றன. கூட்டத்தில் பெரியவர்கள் மேடைக்கு வந்த பிறகு எல்லோரும் சேர்ந்து அந்த பாடல்களைக் கேட்டோம். கூட்டமாக சேர்ந்து கேட்கும்போது அதன் தாக்கம் அதிகமாகிறது. அதுவும் இந்தப் பாடல்கள் ஈழத்தின் வீரம், வீழ்ச்சி, எழுச்சியைப் பாடுபொருளாகக் கொண்டது. மிக அமைதியாகக் கேட்டோம். அற்புதமான ஒரு அமைதி அங்கே நிலவியது. துக்க நாளை முழுமையானதாக உணரமுடிந்தது.

அனைத்துப் பாடல்களுமே கேட்கப்படவேண்டியவை என்றாலும், அதில் சில வரிகள் என்னைக் கவர்ந்தன. அதில் 'புத்தனும் காந்தியும் யுத்தக்களத்தில் நின்றார்கள்' என்று தொடங்கும் பாடலில் புத்தமதம் வழி வந்த இலங்கையும் காந்திய வழி வந்த இந்தியாவும் ஒன்று கூடி போர் தொடுத்ததை, அப்பாவி மக்களை அழித்ததை மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். அதில் புத்தன் கையில் கனரக ஆயுதமும், காந்தியின் கையில் கோட்சேவின் துப்பாக்கியும் என்ற வரி எனக்குள் ஏற்படுத்திய துக்கமும் அதிர்ச்சியும் என்னும் இருக்கிறது. நல்ல இசைத் தொகுப்பு.

இசை: பிரபாகரன்,
பாடியவர்: மகாலிங்கம்.

மேலும் இலங்கையின் இனப்படுகொலையைப்பற்றி ஐ,நா. குழுவின் அறிக்கையிலிருந்து சிலவற்றை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

"சிறீலங்கா குறித்த ஐக்கிய நாடுகள் விசாணைக் குழு" தனது அறிக்கையை ஐ,நா தலைமைச் செயலாளர் பான்-கீ-மூனிடம் கடந்த ஏப்ரல் 12,2011 அன்று அளித்தது. மாருஸ்கி தாருஸ்மான் ((Maruzki Darusman- இந்தோனேசியா),  யாஸ்மின் சூகா அம்மையார் (Yasmin Sooka- தென் ஆப்பிரிக்கா), ஸ்டீவன் ரத்னர் (Steven Ratner- அமெரிக்க ஐக்கிய நாடுகள்) ஆகிய மூவர் கொண்ட குழுவை இப்பணிக்காக ஐ.நா. தலைமைச் செயலாளர் அமர்த்தினார். இக்குழுவினர் ஆறு மாதங்களில் விரைவான, விரிவான விசாரணை நடத்தி அளித்த அறிக்கை ஐ.நா அவையால் 2011 ஏப்ரல் 25-அன்று வெளியிடப்பட்டது.

ஐ.நா குழுவின் இந்த அறிக்கையை ஏற்கவே முடியாது என்று அறிவித்த சிங்களக் குடியரசுத் தலைவர் இராசபட்சே சிங்களர்களை ஐ.நா அவமதித்து விட்டதாகக் கூக்குரல் எழுப்பினார். ஐ.நா குழு பரிந்துரைத்தது போல உலகச் சட்டங்களின் கீழ் இலங்கை அரசு குறித்த விசாரணை நடக்குமானால் அதனை எதிர்த்து சீன, ரசிய உதவியை நாடப்போவதாக அச்சுறுத்தினார். சிங்கள மானத்தைப் பாதுகாக்க மின்சார நாற்காலியில் அமர்ந்து உயிர்விடவும், தாம் தயார் என கொக்கரித்தார். நாஜி இட்லரைப் போலவே பன்னாட்டுத் தொழிலாளர் நாளான மே 1-ஐ சிங்கள இனவெறிப் பேரணி நடத்தும் நாளாக அறிவித்திருகிறார். மிகப்பெரும் அச்சுறுத்தலில் மீண்டும் ஈழத் தமிழர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.


போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்:

நான்காம் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட இன அழிவு குறித்து உலகத் தமிழர்கள் எடுத்துக் காட்டிய சில அடிப்படை உண்மைகளை ஐ.நா விசாரணைக் குழு இவ்வறிக்கையில் உறுதி செய்துள்ளது.

1). இலங்கை அரசு நடத்திய விரிந்த அளவிலான தொடர் குண்டு வீச்சுகள் மூலம் பெருந்தொகை பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2). மருத்துவமனைகள்  மற்றும் மனித நேய நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சுகளுக்கு இரையாயின.
3). பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய உதவிகள் கிடைக்காமல் இலங்கை அரசு தடுத்துள்ளது.
4).போரில் உயிர் பிழைத்த மக்கள்,  குறிப்பாக, உள்நாட்டில் இடம் பெயர வைக்கப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற சந்தேகத் திற்குரியவர்கள் ஆகியோர் தொடர்ந்து மனித உரிமை மீறலுக்கு ஆளாகியுள்ளனர்.
5).போர்க்களத்திற்கு அப்பால் இருந்து - போரை எதிர்த்த ஊடகத் துறையினர் மற்றும் பிற திறனாய்வாளர்கள் மனித உரிமை மீறலுக்கு உள்ளாக்கப் பட்டனர்.

என்ற முடிவுக்கு ஐ,நா விசாரணைக் குழுவினர் வந்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதும் இவ்விசாரணைக் குழுவினர் சில குற்றச்சாட்டுகளை வைத்தனர். சிறுவர்களைப் போராளிகளாக சேர்த்தது, மக்கள் வாழிடங்களுக்கருகில் போர்க்கருவிகளைச் சேமித்து வைத்தது, மனிதக் கேடயமாக மக்களைப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவை.

ஆயினும் இலங்கை அரசுதான் பெருமளவில் உலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்திருக்கிறது என இக்குழு அறிவித்தது.

பன்னாட்டுச் சட்டங்கள் வரையறுத்துள்ள போர்க் குற்றங்கள் (WAR CRIMES), மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes against Humanity) ஆகியவற்றில் சிறீலங்கா அரசும் அதன் படையணிகளும் ஈடுபட் டுள்ளன என அறிவித்தது.

தாங்கள் இவ்வாறான முடிவிற்கு வந்ததற்கு உரிய காரணங்கள் இருப்பதை விசாரணைக் குழுவினர் தெளிவு படுத்தினர்.

“போரின் கடைசிக் கட்டங்களில் இலங்கை இராணுவம் உலகச்சட்டங்கள் அனைத்தையும் அப்பட்டமாக மீறியுள்ளதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. 2008 -க்கும் 2009 மே 19-க்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை இராணுவம் வன்னிப் பெருநிலத்தில் பெருமளவிலும் விரிந்த பரப்பிலும் கொடும் ஆயுதங்கள் கொண்டு தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களின் சாவுக்கு இது காரணமாக அமைந்தது. இலங்கைப் படையினர் நடத்திய இத்தாக்குதலானது வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இன வதை (PERSECUTION) நடவடிக்கையாகும்”.

”போரில்லா பகுதி (No Fire Zone) என்று மூன்று அடுத்தடுத்த பகுதிகளை வரையறுத்து அப்பகுதிக்குள் மக்கள் வந்து விட்டால் அவர்கள் மீது இராணுவத் தாக்குதல் நிகழாது என்று இலங்கை அரசு அறிவித்தது. அதை நம்பி தமிழ் மக்கள் அப்பகுதிக்குள் குவிந்தனர். ஆயினும் அப்பகுதியிலும் இடைவிடாத எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று அரசு அறிவித்த பிறகும் இவ்வாறான தாக்குதல்கள் நடந்தன. ஐ.நா முகாம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு வழங்கல் தடம், நிவாரணப் பொருள்களை தாங்கி வந்த சர்வதேச செஞ்சிலுவை கப்பல் நிறுத்தப்பட்ட இடம் ஆகியவையும் படையினரின் குண்டு வீச்சுக்கு இரையாயின. அவ்விடங்களில் அமைந்திருப்பவை மனிதநேய செயல்பாட்டு நிறுவனங்கள் என்பதை இலங்கை அரசின் உளவு நிறுவனங்கள் தெரிந்தே வைத்திருந்தன. இவை தாக்கப்பட்டால் போரில் சிக்கிய மக்களுக்கு அடிப்படைப் பொருட்கள் கிடைக்காமல் அல்லல்படுவார்கள் என்று தெரிந்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் ஐ.நா மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இவ்விடங்கள் பற்றி அறிக்கை வெளியிட்டு எச்சரித்த பின்னும் இக்கொடுமை நிகழ்த்தப் பட்டது.

போர் முனையில் இருந்த மருத்துவமனைகள் திட்டமிட்டு குண்டுவீசி தாக்கப் பட்டன. வன்னியில் அனைத்து மருத்துவமனைகளும் தகர்க்கபட்டன. இவை மருத்துமனைகள் என்பதை அரசு தெளிவாக தெரிந்து வைத்திருந்தது. ஆயினும் மீண்டும் மீண்டும் இம்மருத்துவமனைகள் இலங்கை இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலுக்கு இரையாயின. போர் முனையில் சிக்கிய மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் செல்வதை இராணுவம் திட்டமிட்டு தடுத்தது. 2009 சனவரிக்கும், மே மாதத்திற்கும் இடையில் பல பத்தாயிரம் மக்கள் கொல்லப் பட்டனர். அவர்களில் பலபேர் கடைசி சில நாட்கள் நடந்த அழிப்பில் அடையாளம் தெரியாமல் மரணம் அடைந்தனர்”. என்று வன்னிப் பெருநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்பை ஐ.நா குழு சுட்டிக் காட்டுகிறது.

”போரில் உயிர் தப்பியவர்கள் போர்ப் பகுதியிலிருந்து வெளியே வந்த பின்னும் பட்டினியிலும் துயரத்திலும் சிக்க வைக்கப்பட்டார்கள். உள்நாட்டு ஏதிலிகள் (அகதிகள்) வேலிக்குள் மூடிய முகாம்களில் முடக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளைக் கண்டறிவதற்காக என்று செய்யப்பட்ட சோதனைகள் வெளிப்படையாகவோ வெளிநாட்டு கண்காணிப்பின் கீழோ நடத்தப்படவில்லை. விடுதலைப் புலிகள் என்று கருதப்பட்டவர்கள் தனித்து வைக்கப்பட்டு விசாரணை ஏதுமின்றி கொல்லப்பட்டார்கள். அவர்களுள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டிருக்கக் கூடும். போர்ப் பகுதிக்கு வெளியே இருந்துக் கொண்டு போருக்கு எதிராக கருத்துத் தெரிவித்த ஊடகத் துறையினர் மற்றும் பிறர் கடுமையாக அச்சுறுத்தபட்டார்கள். வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களும், ஒட்டு குழுக்களால் அச்சுறுத்தப் பட்டவர்களும் பலர்” என ஐ.நா விசாரணைக்குழு அறிக்கை சிங்களக் காடையர்களின் கொடுங்கோன்மையைப் பட்டியலிடுகிறது.

நடுநிலையற்ற இலங்கை நீதித் துறை:

படை நடவடிக்கை ஒரு நாட்டில் நடைபெறும் போது அதில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சட்டங்கள் மீறப் பட்டால் அதற்கு ஆட்சியாளர்களும் படைத்தளபதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்ற சட்டக் கடமையை எடுத்துக் காட்டும் ஐ.நா குழு இது குறித்து இலங்கையில் நடை பெற்ற அரசுசார் முயற்சிகளைத் திறனாய்வு செய்கிறது.

போர் முடிந்த பிறகு உலகின் பல பகுதிகளில் எழுந்த கண்டனங்களை எதிர்கொள்வதற்காக இராசபட்சே அரசு ‘பெற்ற படிப்பினைகள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம்’ (Lessons Learnt and Reconciliation Commission ) அமைத்தது. 2002-ல் நார்வே மேற்பார்வையில் நடந்த போர் நிறுத்தம் தொடங்கி 2009 மே முடிய நடைபெற்றவை குறித்து மீளாய்வு செய்து தவறுகளைத் திருத்திக்கொண்டு இன இணக்கத்தை ஏற்படுத்துவது இவ்வாணையத்தின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஆணையம் “சர்வதேச சட்டத்தரத்தில் விசாரணை நடத்தவில்லை. இவ்வாணையத்தின் விசாரணை சுதந்திரமாகவோ நடுநிலையோடோ நடத்தப் படவில்லை” என ஐ.நா விசாரணைக் குழு தனது அறிக்கையில் திறனாய்வு செய்கிறது.

நடைபெற்ற சட்ட மீறல்கள் மீது விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதற்கு இலங்கை நீதிமன்றத்தாலும் முடியாது என்பதையும் ஐ.நா குழு கூறுகிறது.

“இலங்கை நீதித்துறையின் கடந்த கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அதன் கட்டமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்தபோது, தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் நீதித்துறையின் வழியாக இப்போரில் பாதிக்கப்பட்டமக்கள் நியாயம் பெறமுடியாது. அந்நாட்டு நீதித் துறையின் மீது விசாரணைக் குழுவிற்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை”. என இராசபட்சேயின் முகத்தில அறைந்தாற்போல் ஐ.நா குழு தனது அறிக்கையில் தெளிவுபடுத்துகிறது. கடந்த 30 ஆண்டுகளில் அந்நாட்டில் நிறுவப்பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்களும், சிறீலங்கா மனித உரிமை ஆணையமும் சட்டப் பொறுப்போடு நடந்துக் கொண்ட வரலாறு இல்லை என்று ஐ.நா குழு எடுத்துக் கூறுகிறது.

கடமை தவறிய ஐ.நா.மன்றம்:

பான் - கீ-மூன் நியமித்த இந்த விசாரணை ஆணையம் ஐ.நா தனது கடமையிலிருந்து தவறியதையும் சுட்டிக்காட்டுகிறது. “போரின் கடைசி காலக் கட்டங்களில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஐ.நா வின் அரசியல் உறுப்புகளும் நிறுவனங்களும் ஈடுபடத் தவறின.” என்று விமர்சிக்கிறது.

அதுமட்டுமின்றி ஐ.நா மனித உரிமை மன்றம்  இப்பிரச்சினை குறித்து செய்த தவற்றையும் விசாரணைக்குழு சுட்டிகாட்டுகிறது.

“2009 மே 27-ஆம் நாள் ஐ.நா மனித உரிமை மன்றம் தனது சிறப்புக்கூட்டத்தில் சிறீலங்கா நிலைமை குறித்து இயற்றிய தீர்மானத்தை (கி/பிஸிசி/8-11/லி.மி-ஸிமீஸ்.2) எங்களது இந்த அறிக்கையின் வெளிச்சத்தில் மீளாய்வு செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்துகிறது.

ஐ.நா. வரலாற்றில் மே 2009ல் இலங்கை குறித்து இயற்றப்பட்ட தீர்மானம் இரத்தவாடை வீசும் தீர்மானம் ஆகும். அத்தீர்மானம் கீழ்வருமாறு இராசபட்சே அரசை பாராட்டியது.

“ஜனநாயக சோசலிசக் குடியரசான இலங்கையின் இறையாண்மை, எல்லை, சுதந்திரம் ஆகியவற்றோடு நாட்டு மக்களைப் பாதுகாத்து பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதன் தனி உரிமையை மதிக்கிறோம் என்பதை உறுதிபடுத்துகிறோம். அதே வேளையில் பொதுமக்கள் மீது  பல தாக்குதல்களை நடத்தி அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிக்கிறோம்”. இலங்கை முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை இந்தியா, சீனா, ரசியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. (ஐ.நா மனித உரிமை மன்றத் தீர்மானம் குறித்த விரிவான திறனாய்விற்குக் காண்க: ’கியூபாவும் ஆல்பாவும் ஈழத் தமிழர்களை கைவிட்டதேன்’-ரான் ரெட்னூர் - தமிழில் அமரந்த்தா - தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்-, திசம்பர், 2009)

ஐ.நா குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள்: 

பரிந்துரை 1: புலன் விசாரணைகள்

அ. ஐ.நா. குழு நம்பகமானவை என்று கண்டறிந்துள்ள குற்றச் சாற்றுகளின் பின்னணியில், இலங்கை அரசு அதனுடைய பன்னாட்டு கடமைப் பொறுப்புகளுக்கு ஏற்ப, உள்நாட்டில் பயனுள்ள பொறுப்புடைமை (Accountability) நடைமுறையைத் தொடங்கும் நோக்கில், ஆயுத மோதலில் ஈடுபட்ட இருதரப்புகளும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தை மீறியது தொடர்பான இந்தக் குற்றச் சாற்றுகள் மற்றும் பிற குற்றச் சாற்றுகள் தொடர்பான உண்மையான புலன் விசாரணைகளை உடனே தொடங்கவேண்டும்.

ஆ. ஐ.நா. பொதுச் செயலாளர் உடனடியாக சுதந்திரமான பன்னாட்டு அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும்பின்வருவன அதன் செயல்பாடுகளாக இருக்க வேண்டும்.

(1) குற்றம் சாற்றப்படுகிற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உண்மையான புலன் விசாரணைகளை மேற்கொள்வது உள்பட, இலங்கை அரசு உள்நாட்டுப் பொறுப்புடைமை நடைமுறையை எந்த அளவுக்கு பயனுள்ளதாக மேற்கொண்டு வருகிறது என்பதை கண்காணித்து மதிப்பிட வேண்டும். அது கண்டறிந்தவை குறித்து குறிப்பிட்ட கால இடை வெளியில் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அறிவிக்க வேண்டும்.

(2) உண்மையான, பயனுள்ள உள்நாட்டு புலன் விசாரணைகளை உறுதி செய்வதைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாற்றப்படுகிற மனித உரிமை மீறல்கள் குறித்து தனியாக சுதந்திரமாக புலன் விசாரணைகளை நடத்த வேண்டும்.

(3) ஐ.நா. அமைப்பும், பிற அமைப்புகளும், ஐ.நா. குழுவும் திரட்டிய தகவல்கள் உள்பட இறுதிக் கட்ட போர் தொடர்பான பொறுப்புடைமை சம்பந்தமாக அதற்கு வழங்கப்பட்ட தகவல்களை எதிர் காலப் பயன் பாட்டுக்காக சேகரித்து, பாதுகாத்து வைக்க வேண்டும்.


பரிந்துரை 2: பொறுப்புடைமையை மேம்படுத்து வதற்குத் தேவையான பிற உடனடி நடவடிக்கைகள்.

மனித உரிமை மீறல்களுக்கு உள்ளான, தொடர்ந்து உள்ளாக்கப்படுகிறவர்களின் உடனடி நிலைமைக்குத் தீர்வு காணும் நோக்கிலும், பொறுப் புடைமை தொடர்பான இலங்கை அரசின் உறுதிப் பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் பின் வரும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

அ. வன்னிப் பகுதியில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் அனைவரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் இலங்கை அரசு பின்வரும் குறுகிய கால நடவடிக் கைகளை செயல்படுத்த வேண்டும்:

(1) அரசு, அதன் அமைப்புகள், அனைத்து துணைப் போர்ப்படைகள் மற்றும் அரசுக்காக செயல் படும் ரகசியக் குழுக்கள் அல்லது அரசினால் சகித்துக் கொள்ளப்படும் ரகசியக் குழுக்கள் ஆகியவற்றின் அனைத்து வன்முறைச் செயல்களுக்கும் முடிவு கட்ட வேண்டும்.

(2) இறந்தவர்களின் எஞ்சிய உடல் பகுதிகளை அவர்களது குடும்பத்தினர் மீட்டு எடுத்துச் செல்ல வழி வகுக்கவேண்டும். இறந்தவர்களுக்கான சடங்கு களைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

(3) குடும்பத்தினர் கேட்கும் போது இறந்தவர்கள், காணாமல் போனவர்களின் இறப்புச் சான்றிதழ்களை விரைவாகவும், மதிப்புடனும் கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும். இவர்கள் தொடர்பாக மேலும் புலன் விசாரணைகளை நடத்தக் கோருதல் மற்றும் பிற கோரிக்கைகளுக்கான உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.

(4) உயிர் பிழைத்தவர்கள் அனைவருக்கும் அவர்களது கலாச்சார சிறப்பியல்புகளுக்கும், மரபுவழி நடைமுறைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் உளவியல்-சமூக ஆதரவை அளிக்க வேண்டும்.

(5) இடம் பெயர்ந்த அனைவரையும் விடுவிக்க வேண்டும். அவர்களது விருப்பப்படி அவர்கள் தங் களது முன்னாள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு அல்லது மறு குடியமர்த்தப்படுவதற்கு உதவி செய்ய வேண்டும்.

(6) உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் இயலபு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு இடைக்கால இடர் நீக்க உதவிகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும்.

ஆ. கட்டாயப்படுத்தி காணாமல் அடிக்கப்பட்ட வர்கள் எனக் கூறப்படுவோர் குறித்து இலங்கை அரசு புலன் விசாரணை நடத்தி, அவர்களது கதி என்ன, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக - கட்டாயப்படுத்தி காணா மல் அடிக்கப்பட்டவர்கள் தொடர்பான பணிக் குழுவை இலங்கை அரசு இலங்கைக்கு வரவழைக்க வேண்டும்.

இ. நாட்டின் அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசு நெருக்கடி நிலை விதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இலங்கையின் பன்னாட்டு கடமைப் பொறுப்புகளுக்கு முரணாக இருக்கிற, பயங்கரவாதச் செயல் தடுப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளையும் திருத்தி அமைக்க வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்பாகவும் மற்றவர்கள் தொடர்பாகவும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

(1) இப்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள அனைவரது பெயர்களையும், அவர்கள் எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் வெளியிட வேண்டும். அவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கான சட்ட அடிப்படையை அறிவிக்க வேண்டும்.

(2) சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் குறிப்பிட்ட கால இடை வெளியில் குடும்பத்தினரையும் வழக்குரைஞரையும் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

(3) சிறை வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக சிறை வைக்கப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் வழக்காட அனுமதிக்க வேண்டும்.

(4) கடுமையான குற்றங்கள் இழைத்திருக் கிறார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பவர் களுக்கு எதிராக குற்றச்சாற்று பதிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இனியும் தடையில்லாமல், அவர்கள் சமுதாயத்து டன் ஒருங்கிணைவதற்கு அனுமதிக்க வேண்டும்.

ஈ. அரசு வன்முறைக்கும் நடமாடும் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிற அல்லது அந்தச் சூழலை ஏற்படுத்துகிற மற்ற நடைமுறைகளுக்கும் இலங்கை அரசு முடிவு கட்ட வேண்டும்.


பரிந்துரை 3: நீண்ட கால பொறுப்புடைமை நடவடிக்கைகள்

வெற்றி வாதமும், உரிமை மறுப்பு வாதமும் நிலவும் இப்போதைய சூழல் கடந்த காலம் குறித்த நேர்மையான ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை. அரசியல் செயல்பாடுகளுக்கான கதவுகள் முழுமையாகத் திறக்கப்படும் நிலையில் போரின் போது நடந்த செயல்களுக்கு முழுப் பொறுப்புடைமையை நோக்கி முன்னேறுவதற்கு உதவும் வகையில் நீண்ட கால அடிப்படையில் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அ. இருதரப்புகளிலும் தேசிய இனத் தீவிரவாதம் உள்ளிட்ட மோதல்களுக்கான வேர்க் காரணங்கள், போர் நடத்தப்பட்ட முறை, எந்தெந்த வகையில் உரிமை மீறல்கள் நிகழ்ந்தன; சம்பந்தப்பட்ட நிறுவனப் பொறுப்புகள் முதலியவற்றை விமர்சன நோக்கில் ஆய்வு செய்வதற்கு, படிப்பினைகளை கற்றுக் கொள்வதற்கும் இணக்கத்துக்குமான ஆணையத்தின் (எல்எல்.ஆர்சி.) பணிகளை கருத்தில் எடுத்துக் கொள்ளும் அதே வேளையில், அதற்கு அப்பாற்பட்டு வலுவான சமூக அமைப்புகளின் பங்கேற்புடன் ஒரு தனியான நடைமுறையை இலங்கை தொடங்க வேண்டும்.

ஆ. போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவில் அப்பாவி மக்கள் பலியானதில் தனக்குள்ள பங்கையும் பொறுப்பையும் முறையாக வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட வேண்டும்.

இ. போரின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப் பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகின்ற பகுதியினருக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் இழப்பீடுகளுக்கான திட்டத்தை இலங்கை அரசு தொடங்க வேண்டும்.


பரிந்துரை 4: ஐ.நா செய்ய வேண்டியவை :

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பிறகும் வன்னிப் பகுதியில் அப்பாவி மக்களின் நிலைமை தொடர்பாக ஐ.நா. எடுத்த நடவடிக்கைகளை பரிசீலித்து பின்வரும் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன.

அ. இந்த அறிக்கையின் பின்னணியில் இலங்கை தொடர்பாக கடந்த 2009 மே மாத சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை (ஏ/எச்ஆர்சி/எஸ்.11/1ரெவ்.2) மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஆ. இலங்கையில் போரின் போதும் அதற்குப் பிறகும், மனித நேயத்துக்கும் பாதுகாப்புக்குமான ஐ.நா. கட்டளைகளை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.நா. அமைப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் விரிவான மறு ஆய்வு நடத்த வேண்டும்.


இரண்டு குறைபாடுகள்:

ஆயினும் ஐ.நா விசாரனைக் குழுவின் இவ்வறிக்கையில் முக்கிய இரண்டு குறைபாடுகள் உள்ளன.
1.). இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை (GENOCIDE) என்ற உண்மையை நேரடியாகத்  தெளிவுப்படுத்தாதது.
2.)இந்த இனப்படுகொலைப் போரில் நேரடியாக இந்தியாவும் மறைமுகமாக சீனாவும் வேறு சில நாடுகளும் பங்கேற்றதைத் தெளிவாகக் குறிப்பிடாமை.


நன்றி: திரு.கி.வெங்கட்ராமன் அவர்கள்.

கருத்துகள்

  1. //இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை (GENOCIDE) என்ற உண்மையை நேரடியாகத் தெளிவுப்படுத்தாதது//
    அதெப்படி பாஸ் சொல்லுவாங்க? ஐ.நா.வும் சேர்ந்து தானே வேடிக்கை பார்த்தது?

    //ஐ.நா குழு பரிந்துரைத்தது போல உலகச் சட்டங்களின் கீழ் இலங்கை அரசு குறித்த விசாரணை நடக்குமானால் அதனை எதிர்த்து சீன-, ரசிய உதவியை நாடப்போவதாக அச்சுறுத்தி னார்.//
    உதவி கேட்காமலே இந்தியா ராஜபக்சவின் உதவிக்கு வரும் இல்லையா?

    //விடுதலைப் புலிகள் என்று கருதப்பட்டவர் கள் தனித்து வைக்கப்பட்டு விசாரணை ஏதுமின்றி கொல்லப்பட்டார்கள். அவர்களுள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட் பட்டிருக்கக் கூடும்//
    புலிகள் மட்டுமல்ல!

    நல்ல பகிர்வு பாஸ்! நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,