அண்மையில் இரண்டு புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது. 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராசீவ் கொலைப் பின்னணி' என்ற தலைப்புடைய இந்த புத்தகம் 1998 காலகட்டத்தில் 'இராசீவ் சர்மா' என்ற வடநாட்டு பத்திரிக்கையாளரால் எழுதப்பட்டு இப்போது தமிழில் 'ஆனந்தராசு' என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. சவுக்கு இணையத்தளத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் சொல்ல வரும் செய்தி, 'இராசீவ் காந்தியின் கொலை என்பது புலிகளைக் கூலிகளாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய சதி'என்பதாகும்.
பொதுவெளியில் ஏற்கனவே உலவும் கேள்விகள், ஐயங்கள் என்ற வரையரையில் பல செய்திகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராசீவின் கொலைக்குப் பின் நிகழ்ந்த சி.பி.ஐயின் விசாரணையில் தேங்கி நிற்கும் ஐயங்கள், பதில் தேடாத/கிடைக்காத கேள்விகள் என சிலவற்றை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. உலகளாவிய சதி என்பதற்கு இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் சிலவற்றில் இலங்கையின் அப்போதைய பிரதமர் பிரேமதாசா, இஸ்ரேலிய உளவுத்துறையான மொசார்ட், போபர்ஸ் பீரங்கி ஊழல், இந்திய அரசியல்வாதிகள் என நீண்டு சந்திரா சாமி,சுப்பிரமணியசாமி வரை வருகிறது.
என் பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த இந்தக் கொலையின் மூலமாகவே எனக்கு இராசீவ் காந்தியும், புலிகளும் அறிமுகமானார்கள். இராசீவ் காந்தி என்பவர் நமக்கு வாய்த்த ஒரு சிறந்த இளம் தலைவர், இந்தியாவை சிறப்பாக ஆள அவரைவிட்டால் வேறு தலைவர் இல்லை, அப்படிப்பட்ட தலைவரைத்தான் இந்த புலிகள் அநியாயமாக கொன்று விட்டார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. கூடவே இந்த புலிகள் என்பவர்கள் ஒரு தீவிரவாதக்கூட்டம். தன் பெயரில் விடுதலை(புலிகள்) என்று சேர்த்துக்கொண்டு போராட்டக்காரர்களாக தங்களை அறியச் செய்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. நானும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன். என் வயதொத்தவர்களில் பெரும்பான்மையோர்களுக்கு இராசீவ் காந்தி தன் மரணத்தின் மூலமாகதான் அறிமுகமானார், கூடவே புலிகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.
புலிகள்தான் இராசீவை கொன்றார்கள் என்று இந்திய நீதித்துறை சொல்லிக்கொண்டிருப்பதை நம்பிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த புத்தகம் ஏதோ புதிய செய்தியைச் சொல்லும் போல என நினைத்துக்கொண்டு, இந்த புத்தகம் வெளிவந்ததும் தேடிப்பிடித்து வாங்கிப் படித்தேன். ஏனெனில் இதுநாள்வரை நாம் நம்பிக்கொண்டிருப்பதும் நமது நீதித்துறை சொன்னதும் தவறாக இருந்துவிடுமோ என்ற பதட்டத்தை இந்த புத்தகத்தின் அறிமுகங்கள் ஏற்படுத்தி விட்டன. அதனால் முழு இரவும் கண்விழித்துப் புத்தகத்தின் முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரைக்கும் படித்துவிட்டுதான் தூங்கப்போனேன்.
இந்த புத்தகத்தை படித்ததினால் எனக்கு இரண்டு விசயங்களில் தெளிவு ஏற்பட்டது. ஒன்று, என்னால் முழு இரவும் கண்விழித்து புத்தகம் படிக்க முடியும் என்பது, மற்றொன்று இராசீவ் காந்தியின் கொலைவழக்கின் உண்மை தேடுதல் என்பது அது துவங்கிய இடத்திலேயேதான் இருக்கிறது என்பது. உண்மையில் இந்தப் புத்தகம் எந்தவித புதிய செய்தியையும் கொண்டிருக்கவில்லை. பல வருடங்களாக தமிழ்நாட்டில் பல தலைவர்களால் தொடர்ந்து பேசப்பட்டுவரும் செய்திகளையும் கேள்விகளையும்தான் இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. ஆனால் வேறு தளத்திலிருந்து. அதனாலேயே இந்த புத்தகத்தைப்பற்றி எழுதவேண்டியதாகிறது.
இந்த புத்தகத்தின் மூல ஆசிரியர் 'இராசீவ் சர்மா' அநேகமாக சி.பி.ஐயில் சம்பளம் வாங்குவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரின் பார்வை முழுவதும் சி.பி.ஐக்கு ஆதரவாகவே இருக்கிறது. பல அரசாங்கக் கோப்புகளை, ஆவணங்களைத் தன் கருத்துக்கு ஆதரவாகக் காட்டுகிறார். சி.பி.ஐ யின் அப்போதைய இயக்குனரே இதற்கு முன்னுரையும் எழுதி இருக்கிறார். மேலும் ஈழம் சார்ந்து இந்திய நாட்டின் மற்ற மாநிலத்தாருக்கு என்ன கருத்து இருக்குமோ அந்த விதத்திலேயே அவரின் எழுத்தும் இருக்கிறது. ஈழத்திற்கு நன்மை செய்யப்போன இராசீவ் காந்தியை ஈழமக்களும், அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தீவிரவாதப் புலிகளும் தவறாக புரிந்துக்கொண்டு எதிர்த்தார்கள் என்பது போலவும், பின்பு சர்வதேச சதிக்கு உட்பட்டு பணம் பெற்றுக்கொண்டு, ஒரு கூலிக் கொலைகாரக்கூட்டமாக புலிகள் இந்தக் கொலையை செய்தனர் என்றும் சொல்கிறார். அரிய செய்தி, படித்துப் பயன்பெறுங்கள்.
இந்தப் புத்தகம் இப்போது தமிழில் வெளியிடப்பட்டிருப்பதற்கு அதன் பதிப்பகத்தார் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? இராசீவ் கொலைவழக்கில் சிறை தண்டனைப்பெற்று இருபது ஆண்டுகளாகியும் வெளியே வரமுடியாது தவிக்கும் அந்த அப்பாவி ஏழு தமிழர்களை வெளிக்கொணற இந்தப் புத்தகம் பயன்படும் என்பதே. அது எப்படி என்பது 'சவுக்குக்கே' தெரிந்த பதில். உண்மையில் இந்தப் புத்தகம் அவர்கள் குற்றவாளிகள் என்பதைத்தான் உறுதி செய்கிறது. சி.பி.ஐ வெளியுலகத்திற்கு சொல்ல விரும்பிய கதைகள்தான் இந்தப் புத்தகம் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன.
அடுத்தப்புத்தகம் களம் வெளியீடான 'விடுதலைக்கு விலங்கு' (இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தி கொலை வழக்கு: வெளிவராத உண்மைகளும், துயரங்களும்). இராசீவ் காந்தியின் படுகொலைக்கு காரணமானவர்கள், துணைப்புரிந்தவர்கள் என்று இந்திய நீதித்துறையால் குற்றம் சாட்டி சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களில் ஒருவரான 'இராபர்ட் பயசின்' சுயசரிதைக் குறிப்புகளைக்கொண்டு தொகுக்கப்பட்டது. வழக்கறிஞர் தடா சந்திரசேகர் பதிவுசெய்த தகவல்களை வழக்கறிஞர் மணி.செந்தில் தொகுத்திருக்கிறார்.
இப்புத்தகம் சிபிஐ புலனாய்வுக் குழுவின் அராஜகமான, மனிதத் தன்மையற்ற விசாரணை முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஈழத்தில் பிறந்ததும், இந்தியாவுக்குப் பிழைப்புத் தேடி வந்ததும் மட்டுமே, தான் குற்றவாளியாக்கப்பட்டதற்கு போதுமான காரணமாக அமைந்தது என்று இராபர்ட் பயசு சொல்கிறார். ஈழத்தில் இந்திய அமைதிப்படை அவர்களுக்கு (ஈழ தமிழ் மக்கள்) உதவ முயன்றபோது, இராபர்ட் பயசின் பிறந்து மூன்றே நாட்களான இளம் பிள்ளையை கொன்றது. இதற்குப் பழிவாங்கத்தான் இவர் இராசீவ் காந்தியை கொல்ல உதவினார் என்கிறது சி.பி.ஐ.
இதில் என்ன கொடுமை என்றால், இந்தியப்படை கொன்றது இராபர்ட் பயசின் மகனை மட்டுமல்ல. அவரைப் போன்ற அப்பாவி தகப்பன்கள் அப்போது அங்கே ஈழத்தில் பலருண்டு. அவர்களுக்கெல்லாம் வராத கோபம் இந்த இராபர்ட் பயசுக்கு மட்டும் ஏன்? அதனால் தான் இந்திய அரசாங்கம் இவரை உள்ளே தூக்கி போட்டது. இன்று வரை வெளியே விடவும் இல்லை. சபாஷ்.! சரியான தண்டனை!
விசாரணை என்ற பெயரில் செய்த சித்திரவதைகளையும், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அவர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டதையும். சி.பி.ஐயின் கண்ணியத்தையும் இராபர்ட் பயசு இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார். என்ன ஒன்று, படிக்கிற நமக்குத்தான் கண்ணீர் வழிந்தோடுகிறது.
அவர், அவரின் மனைவி, தங்கை மற்றும் உறவினர்கள் பட்ட துயரத்தை மிகுந்த வேதனையோடு குறிப்பிடுகிறார். வாழ்க்கையின் பெரும்பகுதியையும் முழுமையான இளமையும் சிறைக்குள்ளே கழித்துவிட்ட இந்த ஈழத்து தமிழனின் விடுதலை என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. தன்னை விடுவிக்க தமிழக சகோதரர்கள் முயலவேண்டும் என்பதே அவர் இந்த புத்தகத்தின் மூலம் விடுக்கும் செய்தி.
தொடர்ந்து இந்த இரண்டு புத்தகங்களைப் படித்ததும், என்னைப்போன்ற ஒரு அப்பாவித் தமிழனுக்கு ஒரு சந்தேகம் வரும். உண்மையில் இந்த புலிகள் யார்?
உலகம் சொல்கிறது, அவர்கள் தீவிரவாதிகள். அதனால்தானே பல நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், என் தமிழும், தமிழ் தேசமும் சொல்கிறது அவர்கள் போராளிகள் என்று. இதில் எதை நம்புவது?
பதில் தேட புலிகளின் மொத்த வரலாற்றையும் படிக்க வேண்டும். நமக்கு ஏதுங்க அவ்வளவு நேரமும் பொறுமையும்? அப்போதுதான் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது.
'மாவீரர்' என்ற இப்புத்தகம் தோழமை வெளியீடாக வந்திருக்கிறது. அந்தத் தீவிரவாதப் புலிக் கூட்டத்தை உருவாக்கியவரும் அதன் தலைவருமான 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' அவர்களின் மாவீரர் நாள் உரைகள் மற்றும் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு அது.
ஒருமனிதனைப் பற்றி மற்றவர்கள் சொல்வதைவிட, அவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் சரியாகச் சொல்லிவிடும் என்பார்கள். அந்த வகையில் பிரபாகரனின் நேர்காணல்களில் அவரைப் புரிந்துக்கொள்ள முடியும். தலைவன் எவ்வழியோ அவ்வழிதானே அவன் உருவாக்கிய கூட்டமும்? ஆதலால் பிரபாகரனை புரிந்து கொள்வது புலிகளைத் தெரிந்துக்கொள்வதாகும் என்ற அடிப்படையில் அந்தப் புத்தகத்தை படிக்கத்துவங்கினேன்.
கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவான, ஆழமான, தீர்க்கமான பதிலையும். தொலைநோக்குப் பார்வை கொண்டும் வரலாற்றுப் புரிதலோடும் இருக்கின்றன அவரது பதில்கள். அறிவின் விசாலத்தைப் பறைசாற்றுகின்றன அவரது பதில்கள். இந்த தொகுப்பில் இருக்கும் நேர்காணல்கள், ஒன்றை நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு தீவிரவாதக் கூட்டத்தின் தலைவனுக்கும், தேசிய இனத்தின் சுய விடுதலைக்குப் போராடும் தலைவனுக்குமான வித்தியாசமே அது.
அவரைப் புரிந்துக்கொள்ள இங்கே சில..
இப்போராட்டத்திற்கான பின்னணி பற்றிய கேள்விக்கு.. "தமிழ் இனத்தின் இன அடையாளத்தை அழிப்பதற்கான நோக்கம் கொண்ட சிங்கள அரசின் திட்டம், தமிழ்ச் சமுகத்தின் அடையாளங்களான மொழி, பண்பாடு, பொருளியல், வாழ்க்கை, பாரம்பரிய வாழ்விடம் ஆகியவற்றை அழிப்பதே" என்று கூறுகிறார்.
அவரின் அரசியல் கோட்பாடு என்ன என்ற கேள்விக்கு.. "புரட்சிகர சோசலிசமே எனது அரசியல் கோட்பாடு. சோசலிசம் என்பதாக நான் விளக்கிக் கொள்வது, வர்க்க வேறுபாடற்ற, மனிதனை மனிதன் சுரண்டாத, மானுட விடுதலையும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்ட ஒரு சுதந்திரமான, பகுத்தறிவு பெற்ற சமூகமே" என்றும்,
மற்றொரு கேள்விக்கு.. "தீவிர அரசியலில், பேசுவதால் மட்டும் வளரமுடியாது. செயல்பாடுகள் வளர்ந்த பின்னர்தான் பேச முடியும். எங்களைக் கவனித்தீர்களென்றால், களத்தில் எங்கள் செயல்பாடுகள் வளர்ந்த பின்னர்தான் நாங்கள் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்தோம். எங்கள் கொள்கைகளை விளக்கினோம். அதன் பின்னர்தான் எங்கள் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாயின. வார்த்தைகள் அவற்றின் அர்த்தங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்" என்றும் பதிலளிக்கிறார்.
1986ல் அவர் இந்தியாவிலிருந்தபோது தமிழ்நாடு அரசு போராளிகளிடமிருந்து ஆயுதங்களையும், தகவல் தொடர்புக் கருவிகளையும் கைப்பற்றியது. அதை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி தகவல் தொடர்புக் கருவிகளை திரும்பப் பெறுகிறார். அதைச்சார்ந்தக் கேள்விக்கு.. "..இதேபோன்ற காந்திய வழியலான போராட்டத்தைக் கையிலெடுப்பேன். எனது மக்களுக்காக உயிரைத் தர ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன். ஆனால், என்னை ஏற்றுக்கொண்ட இந்த நாடு (இந்தியா) நான் பட்டினியில் கிடந்து சாவதை அனுமதிக்காது என்பதும் தெரியும்" என பதிலளித்திருக்கிறார். பாவம், அவர் எவ்வளவு அப்பாவியாக இருந்திருக்கிறார். பல தடவை இந்தியா எங்களுக்கு நட்பு நாடு, அதன் ஆதரவும் அனுதாபமும் அவசியமாகிறது என்று கூறி இருக்கிறார்.
"இந்த விடுதலைப் போரை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல நாங்கள் விரும்பவில்லை. எங்கள் ஈகத்தின் பயனை அடுத்த தலைமுறை சுவைக்க வேண்டும்.."
"ஒரு போரில் வெற்றி பெற, உறுதிமிக்கவராக, நம்பிக்கையுடையவராக இரக்கமற்றவராக இருத்தல் வேண்டும். போரை ஒருவர் வெறுக்கவும் தவிர்க்கவும் வேண்டும். ஆனால், அது உங்கள் மீது திணிக்கப்பட்டுவிட்டால் நீங்கள் எவ்வித விட்டுகொடுத்தலுமின்றி இருக்க வேண்டும்"
"இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி" என்று சொன்ன அதேத் தலைவன் தான்..
மற்றொரு பதிலில் "நாங்கள் அரசியல் அப்பாவிகள் அல்ல என்பதையும், அரசியல் பின்னணி தெரியாமல் செயல் பட்டவர்கள் அல்ல என்பதையும் உணர முடியும்" என்று பதிலளிக்கிறார்.
ஒரு நீண்ட நெடிய சுதந்திரப் போரை பல்லாயிரக்கணக்கான மக்களின் துணையோடு நடத்துபவர். பெரும் மக்கள் கூட்டம் ஒன்று அவரைத் தலைவனாகக் கொண்டு சுதந்திரத்தை நோக்கிப் போராடுகிறது. எண்ணிலடங்கா இளைஞர்கள் அவர் மேல் கொண்ட நம்பிக்கையில் அவரோடு இணைந்தனர்.
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்குக்கெல்லாம் வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருப்பவர். என்றும் தமிழ் இனம் அவரை மையமாகக் கொண்டே இயங்கும்.
அப்படிப்பட்டவரைத்தான் 'கூலிக் கொலைகாரக் கூட்டத்தின் தலைவன்' என்று கூலிக்கு ஆள் சேர்க்கும் கூட்டமொன்று வசைபாட முயற்சிக்கிறது. இந்த அயோக்கியத்தனத்திற்கு பின்னாலிருக்கும் கயமையை கண்டிக்கும் அதே நேரம் இவர்களின் அறியாமையை நினைத்து நகைக்காமல் இருக்க முடியவில்லை.
புலிகளை பற்றி மேலதிக தகவல்கள் தருவதாய் வெளியான பெரும்பாலான புத்தகங்கள் அவ்வெளியீட்டாளர்களை இனம் காணத்தான் பெரிதும் உதவியிருக்கின்றன. இதுவும் விதிவிலக்கல்ல.
பதிலளிநீக்கு25 ஆண்டுகால போராட்டத்தில் எங்கேயும் தவறு ஏற்படவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அத்தவறுகள் காரணமாக போரட்டத்தின் அடிப்படை காரணத்தை கொச்சைப்படுத்துவதை ஏற்கவியலாது.
அவரவர் பார்வை.. அவரவர் நியாயமென பேசுவதை புரிந்துக் கொள்ளமுடிகிறது. ஆனால் அதை வரலாற்று ஆவணமாக்கும்போது கூட அவரது வாதத்தை மட்டும் பதிவு செய்வது அறம் ஆகாது.
கடைசி வரியில் சொல்லியிருக்கும் நகைப்பு தேவையேயில்லை. ஏனெனில் இது எல்லா புலன்களுக்கும் நன்கு தெரிந்தே செய்யப்படுகிறது. அறியாமை இல்லை.. அயோக்கியத்தனம்
மிக அருமையான பதிவு. சவுக்கு இந்த நிமிடம் கூட தனது தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. அவருடைய முட்டாள் தனத்தை அவருக்கு புரியவைக்கும் எங்கள் முயற்சிகள் இன்னும் தொடர்ந்துகொண்டுள்ளன.
பதிலளிநீக்குமுதல் முறையாக, ஐ நா, போர்க்குற்ற விசாரணை குழு இனப்படுகொலை நடத்திய ருவாண்டா முன்னாள் அமைச்சருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதோ இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வெளிச்சம். கொடுங்கோலன் இராசபக்செவுக்கும் இந்த நிலை வர தொடர்ந்து பாடுபடுவோம்.
பதிலளிநீக்கு//இந்த அயோக்கத்தனத்திற்கு பின்னாலிருக்கும் கயமையை கண்டிக்கும் அதேநேரம் இவர்களின் அறியாமையை நினைத்து நகைக்காமல் இருக்க முடியவில்லை.//
பதிலளிநீக்குவிஜய்,
“சவுக்கு” குழுமத்தினரை நினைத்து உண்மையில் சிரிப்பு தான் வந்தது. பாவம். எதோ அவர்களுக்கும் ஒரு விளம்பரம் தேவைப் பட்டது போல. இப்படியானதொரு ”கீழ்த்தரமான” கருத்துக்கள் அடங்கிய புத்தகம் வெளியிட்டு அதைத் தேட வேண்டிய அவசியம் என்னவென்றுதான் எனக்கும் தெரியவில்லை.