முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

180 Degree Rule: திரைப்பட ஆக்கத்தின் ஆதார விதி


180 Degree Rule: ஒரு அறிமுகம்.

திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளனின் கவனம் சிதரா வண்ணம் கதையோடு ஒன்றியிருக்கச் செய்வதென்பது கடினமான காரியங்களில் ஒன்று. அதற்காக ஒரு படைப்பாளி, பல யுத்திகளைப் பயன்படுத்தி, தான் சொல்லவரும் உணர்ச்சிகளைப் பார்வையாளனுக்கு சிரமமின்றி கொண்டு சேர்க்க முயன்றான்/முயலுகிறான். அப்படி முயற்சிக்கப்பட்டு, பெரும்பயன் தந்த யுத்திகள், பிற்பாடு 'விதிகளாக' (Rules) மாற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. அப்படி திரைப்பட ஆக்கத்தில் பல விதிகள் ஒழுங்கமைக்கப்பட்டு, பயன்பாட்டிலிருக்கிறது.

அவ்வகையில் இந்த '180 Degree Rule' என்பது மிக ஆதாரமான விதிகளில் ஒன்று. திரைப்படம், குறும்படம், ஆவணப்படம், பேட்டிகள் என எதுவாகிருந்தாலும் இந்த விதி பயன்படும். ஆகையால் அதை கொஞ்சம் அறிமுகப்படுத்தி வைத்துக்கொள்வது நலம் (நமக்கும் நம் படைப்புக்கும் ).

180 Degree Rule என்பது..

A,B என இரண்டு நடிகர்களை எடுத்துக்கொள்வோம். 'A'-வும் 'B'-யும் எதிரெதிராக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் படம் பிடிக்க கேமராவை, இருவருக்கும் பக்கவாட்டில் சிறிது தூரம் தள்ளி வைக்கிறோம். இதன் மூலம் A,B நின்றிருக்கும் நிலையையும், அவர்கள் இருக்கும் இடத்தையும் (உணவு விடுதி, பூங்கா, அலுவலகம், கடற்கரை..etc) பார்வையாளனுக்கு தெரிய வைத்துவிட முடியும் அல்லவா?    

கடற்கரையில் நின்றிருக்கும் இருவர்

இது அந்த காட்சியின் 'மாஸ்டர் ஷாட்'(Master shot) எனப்படுகிறது. அதாவது ஒரு காட்சியின், நிகழ்தளம், பங்குபெரும் நடிகர்கள் மற்றும் சூழ்நிலையை விவரிக்கும் ஷாட் அக்காட்சியின் மாஸ்டர் ஷாட்டாகும். பெரும்பாலும் மாஸ்டர் ஷாட் என்பது 'வைட் ஷாட்'(Wide shot)-ஆக இருக்கும்.

இப்போது 'A' கேமராவிற்கு இடது புறமும் 'B' வலதுபுறமும் இருப்பதாகக் கொள்வோம்.


'A'-வையும் 'B'-யையும் இணைக்கும் விதத்தில் ஒரு நேர் கோடு போடுவோம். இதற்கு 'இமாஜினரி லைன் -Imaginary line' (கற்பனைக்கோடு) என்று பெயர். இக்கோட்டைத் தாண்டி கேமராவைக் கொண்டுச் செல்லுவது குழப்பத்தை ஏற்படுத்தும். அது எப்படி என்றுப் பார்ப்போம்.


இந்தக் கோட்டின் இருமுனைகளையும் இணைக்கும் விதத்தில் ஒரு அரை வட்டம் கேமரா இருக்கும் பக்கத்தில் போட்டுக்கொள்வோம்.


இதுவே அவர்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டால், அது 360 டிகிரி அல்லவா. அதில் பாதியான இந்த அரை வட்டம் 180 டிகிரி. புரியும் என்று நினைக்கிறேன்.




இப்போது கேமராவானது இந்த 180 டிகிரி அரை வட்டத்தின் மீதுதான் பயணிக்க வேண்டும். நீங்கள் கேமராவை இடம் மாற்றி வைக்க நினைத்தால், குறிப்பாக நடிகர்களின் 'over-the-shoulder shot' (O.S) எடுக்கும் போது இந்த விதி கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.


அதாவது 'A'-வின் 'over-the-shoulder' ஷாட்(O.S) எடுக்கும்போது, 'A' கேமராவின் இடதுபக்கமும் 'B' வலது பக்கமும் இருக்கும் படி கேமராவை வைக்க வேண்டும். அதனால் கேமரா 'A' நடிகரின் வலது தோள்பட்டைக்கு நேராக வைக்க வேண்டும். அதைத் தவிர்த்து இடது பக்க தோள்பட்டைக்கு நேராக வைத்தால் 'A' நடிகர் இப்போது கேமராவின் வலது புறம் வந்து விடுவார். இதை தவிர்க்கவேண்டும். அதே முறையைத்தான் 'B' நடிகரின் 'O.S' ஷாட்டின் போதும் பயன்படுத்த வேண்டும்.


'A'-வின் OS shot
'B'-வயின் OS shot
'இமாஜினரி லைனை' கேமரா கடந்துவிட்டது - தவறு


 'Look' கொடுத்தல் :

இப்போது 'B' நடிகர் 'A'நடிகரைப் பார்ப்பதாக குளோசப் ஷாட் எடுத்தால், 'B' நடிகர் கேமராவின் இடது புறத்தில் பார்க்க வேண்டும். ஏனெனில் 'A' நடிகர் இடதுப் புறத்தில் அல்லவா இருந்தார். (இங்கேதான் 'Look' கொடுத்தல் வருகிறது)

அதேப்போல் 'A' நடிகர் 'B' நடிகரைப் பார்ப்பதாக குளோசப் ஷாட் எடுத்தால், 'A' நடிகர் கேமராவின் வலது புறத்தில் பார்க்க வேண்டும்.

இதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால். ஒரு காட்சியில், நடிகர்களை முதன் முறையாகக் காட்டும்போது அவர்கள் எந்த பக்கத்தில் (இடது அல்லது வலது) இருந்தார்களோ அதே பக்கத்தில் அவர்களைத் தொடர்ந்து காட்டுவது தான். ஏன் என்றால் அப்போதுதான் பார்வையாளனால் எந்த நடிகன் எங்கே இருந்தான் என்பதை நினைவில் கொள்ள முடியும்.  





அது மட்டுமல்லாமல், அப்போதுதான் எதிரெதிராக நின்றிருக்கும் (உட்கார்ந்திருக்கும்) இரு நடிகர்களும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல் இருக்கும். இல்லை என்றால் இருவரும் ஒரு திசையில் பார்ப்பதைப் போல் ஆகிவிடும்.

முதலில் காட்டிய மாஸ்டர் ஷாட்டின் எதிர்பக்கத்தைக் காட்ட விரும்பினால், அந்தப் பக்கத்தின் மாஸ்டர் ஷாட் ஒன்று காட்டிவிட்டு, பின் அதன் தொடர் ஷாட்டுகளாக 'OS' ஷாட்டோ அல்லது குளோசப் ஷாட்டோ காட்டலாம். இப்போது Aவும், Bயும் கேமராவிற்கு இடது வலம் மாறி இருப்பார்கள்.
மாஸ்டர் ஷாட்டில் நடிகர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று காட்டி விடுவதனால், அதன் அடிப்படையில் OS-யிலும் குளோசப்பிலும் பார்வைக் கோணம் மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதேதான் இரண்டுக்கு மேற்பட்ட நடிகர்கள் காட்சியில் இருக்கும் போதும். மாஸ்டர் ஷாட்டில் அவர்கள் கேமராவிற்கு எந்தப் பக்கத்திலிருந்தார்களோ அங்கேயே எல்லா ஷாட்டுகளிலும் அவர்கள் காட்டுவது. மாற்ற நினைத்தால் மற்றொரு மாஸ்டர் ஷாட் காட்ட வேண்டும். அவ்வளவுதான்.

180 டிகிரிக்குள்ளாக கேமராவின் இயக்கம் இருப்பதை கட்டுப்படுத்துவதனால் இந்த விதியை '180 Degree Rule' என்று அழைக்கிறோம்.


---------


இதைப் புரிந்துக்கொள்ளுங்கள். 'Crossing the Line' என்றொரு விதி இருக்கிறது, அதை வேறொரு கட்டுரையில் பார்ப்போம். இங்கேச் சொன்னால் குழம்பி விடும்.


You TubeVideo: Moviemaking Techniques180 Degree Rule




கருத்துகள்

  1. வாவ் ஒளிப்பதிவைப்பற்றி அருமயான பதிவு

    பதிலளிநீக்கு
  2. எளிமையாக புரியும் வகையில் எழுதியுள்ளீர்கள்..!! தொடருங்கள் தோழர் ..!!

    இப்போது இருக்கும் ஜிம்மிஜிப் வகை கேமராக்களில் கேமரா சுற்றுவதை பார்த்தால் பார்ப்பவர்களுக்கு தலை சுற்றுகிறது. இந்த ரூல்ஸ் எல்லாம் கடைபிடிக்கிறார்களா என்று தோன்றுகிறது.(நகைச்சுவைக்காக...)

    பதிலளிநீக்கு
  3. 180 டிகிரி ரூலை மிக எளிதாக விளக்கி உள்ளீர்கள்.விஸ்காம் ஸ்டூடண்ட் அனைவருக்கும் இதை பாடமாக வைத்து விடுவேன் நான் கல்லூரி முதல்வராக இருந்தால்.
    வேதனையோடு சொல்கிறேன்.கோவையில் உள்ள விஸ்காம் பாடம் உள்ள கல்லுரிகளில் நல்ல ஆசிரியர்கள் இல்லை.விசய ஞானம் உள்ளவர்களை விரட்டிவிடுவதில் சூரர்கள் இவர்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு. மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள், உங்களின் தொடர்ந்த தொழில்நுட்ப பதிவுகளுக்கு காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  5. விமர்சனம் செய்யும் அளவிற்கு தொழில் நுட்ப அறிவு இல்லை.ஆனாலும் புதிய தளம்.தொடர்ந்து எழுதுங்கள்.அறிந்து கொள்ள ஆர்வமாகவே உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள விஜய் ஆம்ஸ்ட்ராங்க்,நீங்கள் எழுதுவதை எல்லாம் ஆர்வமாக தொடர்ந்து வாசிக்கி்றேன். ஒளி்ப்பதிவு என்பது பச்சைப் பசேல் என்கிற பின்னணியில் ரம்மியமாக இருந்தாலே சிறந்த ஒளிப்பதிவு என்பதாக பொதுவான பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. காட்சிகள் மற்றும் பாத்திரங்களின் மனநிலைக்கு இணங்கத்தக்கதாக ஒளிப்பதிவும் காமிராக் கோணங்களும் இயங்க வேண்டியதின் அவசியம் பலருக்குத் தெரிவதில்லை. பொதுவாக ஒளிப்பதிவாளரின் நுட்பமான உழைப்பு பரவலாக கவனிக்கப்படுவதில்லை.

    சரி. இந்தப் பதிவில் நீங்கள் விளக்கியிருக்கும் பாத்திரங்களின் eye line match அடிப்படை பற்றி ஒரு பார்வையாளனாக எனக்கும் நிறைய கேள்விகள் இருந்தன. உங்கள் பதிவு அதை ஒரளவிற்கு அதை தீர்த்து வைத்திருக்கிறது. பட உதாரணங்களுடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நன்றி சுரேஷ் கண்ணன் சார்..

    //ஒளி்ப்பதிவு என்பது பச்சைப் பசேல் என்கிற பின்னணியில் ரம்மியமாக இருந்தாலே சிறந்த ஒளிப்பதிவு என்பதாக பொதுவான பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. காட்சிகள் மற்றும் பாத்திரங்களின் மனநிலைக்கு இணங்கத்தக்கதாக ஒளிப்பதிவும் காமிராக் கோணங்களும் இயங்க வேண்டியதின் அவசியம் பலருக்குத் தெரிவதில்லை. பொதுவாக ஒளிப்பதிவாளரின் நுட்பமான உழைப்பு பரவலாக கவனிக்கப்படுவதில்லை.
    //

    நீங்கள் சொல்லுவது உண்மைதான். ஒருபடத்தைப் பார்த்த மாத்திரத்தில் இது இவர் ஒளிப்பதிவு செய்தது என்றுச் சொல்லிவிட முடியாத படி ஒளிப்பதிவு இருக்கவேண்டும். அவருக்கென்று ஒரு 'ஸ்டைலை' வைத்துக் கொள்ளக்கூடாது. ஒவ்வொரு கதையின் தன்மைப்படி - அதன் போக்கிற்கு ஏற்றவிதத்தில் ஒளியமைப்பும் 'ஷாட் வடிவமைப்பும்' இருக்க வேண்டும். இது இயக்குனர்களுக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  8. Hi Vijay , As a photographer . . .i can learn angle of 180 degree. . . Thanks nanbha

    பதிலளிநீக்கு
  9. பச்சப்புள்ளைகளுக்கு விளக்குற மாதிரி திரும்பத்திரும்பச் சொல்லி விளக்கியிருக்கீங்க.. ரொம்பத் தெளிவா இருக்கு. :-))

    பதிலளிநீக்கு
  10. நீண்ட நாட்கலாக இருந்த குழப்பத்தை தெளிவு படுத்தி விட்டீர்கள். நான் உதவி இயக்குனாராக பணிபுரிந்த இரண்டு படங்களுக்கும் இயக்குனர் ஒருவர்தான். படப்பிடிப்பு நாட்களில் RIGHT LOOK, LEFT LOOK மிக பெரிய குழப்பமாக இருந்தது. இயக்குனர் வலது பக்கம் பார்க்க சொல்வார், ஒளிப்பதிவாலர் இடது பக்கம் பார்க்க சொல்வார்.
    முதல் படம் என்பதால் அது எப்படி இது எப்படி என ஆர்வக்கோலாராக மற்ற உதவி இயக்குனர்களை நிறய கேள்வி கேட்ப்பேன், அவர்கள் தரும் பதில் அப்போதைக்கு சரியென்று பட்டாலும் ஏதொ ஒரு குழப்பம் ஆழ்மனதிர்க்குள் இருக்கும், அவை அனைத்தும் இன்று நீங்கி விட்டது. மிகவும் தெளிவாக நான் இன்னொருவருக்கு சொல்லிக்கொடுக்கும் வகையில் புரிந்துவிட்டது மிகவும் நன்றி.
    (இப்போதுதான் தெரிந்துக்கொண்டேன் நான் பணிபுரிந்த இயக்குனர்தான் குழப்பிவிட்டார், ஒளிப்படிவாளர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்)

    பதிலளிநீக்கு
  11. உங்களது கடின உழைப்புக்கு வெகுமதி இல்லை

    பதிலளிநீக்கு
  12. எளிமையாக புரியும் வகையில் எழுதியுள்ளீர்கள்..!! அருமயான பதிவு

    பதிலளிநீக்கு
  13. நேற்று தான் 180 ரூலை மீறிய இயக்குனர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  14. மிகவும் பயனுள்ள முக்கிய குறிப்பு. மிக்க நன்றி! என் போன்ற வளரும் கலைஞர்களுக்கு உங்கள் கட்டுரைகள் பெரிய தெளிவை தருகின்றன. / தமிழ் சத்யா

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு,சந்தேகமே வராதபடி ஒரு பதிவு?நன்றி.
    -அருண்-

    பதிலளிநீக்கு
  16. நன்றி PRAsad,blockboy,Richard Editor,Asokaa Photo,a k ,சங்கர் நாராயண் @ Cable Sankar, lingu ,sathya, அருண்

    பதிலளிநீக்கு
  17. புகைப்படம் எடுக்க தெரியும். விதிகள் தெரியாது. இன்று ஒரு புதிய விதியை படித்தேன். தொடர்ந்து இது போல் நிறைய விதிகளையும் புகைப்பட மற்றும் திரைப்பட கலையையும் கற்று தாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,