'மாத்தியோசி'
வறண்ட பிரதேசத்தில் தனித்துக்கிடக்கும் ஒரு கிராமத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப் பற்றிய படம். அந்த இளைஞர்கள் சில காரணங்களால் சென்னைக்கு அடைக்கலம் தேடி ஓடி வருகிறார்கள். வறுமையில் கிடக்கும் ஒரு கிராமம் மற்றும் செழுமையில் திளைக்கும் சென்னையின் புறநகரப்பகுதிகள்தான் இதன் களங்கள்.
சுட்டெரிக்கும் வெய்யிலையும் புழுதியையும் வறட்சியையும் வறுமையின் குறியீடாக பயன்படுத்தினோம். இந்த நான்கு நண்பர்களின் சூழ்நிலைகள் எப்போதும் கொளுத்தும் வெய்யிலில் இருப்பதாக அமைத்துக்கொண்டோம். கிராமத்தில் வரும் வில்லன்கள் எல்லாரும் நிழலில் (இருண்ட மனம் கொண்டவர்கள்) இருக்கும்படி பார்த்துக்கொண்டோம்.
படத்தின் முதல் பகுதி முழுவதும் கரடுமுரடான நிலப்பகுதியில் நிகழ்கிறது. அதற்கு ஏற்றவாறு 'பிம்பங்களை' ஒளிப்பதிவு செய்தோம். ஒளியமைப்புக்கு இயற்கை ஒளிகளைப் பயன்படுத்தினோம். பெரும்பாலும் சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டது. சூரிய ஒளியை 'High Light'-ஆகப் பயன்படுத்தினோம். பல இடங்களில் 'Fill Light' பயன்படுத்தப்படவில்லை. அழகியலுக்கு முன்னுரிமை தராமல் ஒருவித 'Rough Image'கொண்டுவர முயன்றோம். பெரும்பாலானக் காட்சிகள் பகலில் நடக்கின்றன.
இரண்டாம் பகுதியில், சென்னையை அதிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயன்றோம். சென்னையின் பல காட்சிகள் இரவில் நடக்கின்றன. இங்கு ஒளியமைப்பு என்பது தெருவிளக்கு, குளிர்காய ஏற்றப்பட்ட நெருப்பு, சன்னல் வழியாக கசியும் ஒளிகள் என அந்தந்த சூழ்நிலையைப் பொருத்து அதன் இயல்பிலேயே பயன்படுத்தினோம். ஒளியமைப்பின் ஆதார தொழில்நுட்பங்களைப் பின்புலமாக மட்டுமே கொண்டோம். ஒளிமயமான, பரபரப்பான சென்னையை இந்தப்படம் காட்டவில்லை. புறநகரப் பகுதிகளிலேயே பெரும்பாலான காட்சிகள் நடக்கிறது. அதனால் பளப்பளப்பான சென்னை இந்தப்படத்தில் இருக்காது.
மொத்ததில் இந்த படம் 'ஃபேண்டஸி' வகைப்படம் அல்ல. எதார்த்த சூழ்நிலைகளில் நிகழும் வன்முறைகளையும், அதன் விளைவுகளையும் காட்ட முயன்ற ஒரு 'அடிதடி' படம். அதை மனதில் கொண்டே இந்தப்படத்தின் ஒளிப்பதிவைச் செய்தேன்.
கிராமப்பகுதி முழுவதும் 'Wide Angle' லென்சுகளைப் பயன்படுத்தினோம். நிலப்பகுதியும் ஒரு கதாப்பாத்திரம் என்பதினால் எல்லா பிரேம்களிலும் அவை இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். குளோசப் காட்சிகள் கூட வைட் ஆங்கிள் லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம். சென்னையில் இதற்கு எதிர்மாறாக, லென்சுகளைப் பயன்படுத்தினோம். 'Wide Shots'கூட 'Tele' லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம்.
முதல் பகுதியில் 'சூரிய உதயம்' மற்றும் 'சூரிய அஸ்தமனம்' ஆகியவை கால மாற்றத்தின் குறியீடாக பயன்படுத்தப்பட்டன. சென்னையில் 'பிறை நிலா' முதல் 'முழு நிலா' வரை அதற்காக பயன்படுத்தப்பட்டன. படம் சுட்டெரிக்கும் வெய்யிலில் துவங்கி மழையில் முடிகிறது.
இங்கே உங்களுக்குக் காணக்கிடைக்கும் புகைப்படங்கள், மாத்தியோசி திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து எடுக்கப்பட்டவை.
படத்தை பார்க்காமல் தவறவிட்ட நண்பர்களுக்காக...
test
பதிலளிநீக்கு