முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் ஈ - தனித்து நிற்கும் ஈ..!



ராஜ்மௌலி என்கிற சிறந்த இயக்குனரைப்பற்றி அறிந்திருந்தும், இப்படத்தின் தமிழ்த் தலைப்பு என்னைக் கவரவில்லை என்பதோடு, அதன் வடிவமைப்பும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கவில்லை. ஒரு நல்ல இயக்குனரின் தோல்விப் படமாக இது இருந்துவிடக்கூடும் என்று நினைத்திருந்தேன். அதனாலேயே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமற்று இருந்தேன். வெள்ளிக்கிழமை படம் வெளியானதிலிருந்து இப்படத்தைப்பற்றி வந்த எல்லா கருத்துகளும் ஒன்றை மட்டுமே வழி மொழிந்தன. படம் நன்றாக இருக்கிறது என்பதுதான் அது. இருப்பினும் அடுத்த வாரம் படத்தைப் பார்த்துக்கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தேன் நேற்று இரவு வரை. நேற்று இரவு இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போதுதான் தெரிந்தது, இப்படம் தவறவிடக்கூடாத படம் என்பது. பெரும்பாலானோர் இதே கருத்தைச் சொல்லி இருந்ததனால், இன்றே படம் பார்த்துவிட்டேன். 

ஒரு இளம் காதல் இணை. வில்லன் காதலனைக் கொன்றுவிட்டு காதலியை அடைய நினைக்கிறான். இறந்து போன காதலன் பழி வாங்குகிறான். அச்சச்சோ.. கதையைச் சொல்லிவிட்டேனோ?!

போப்பா..! இதுதான் கதையா? இதுதான் எங்களுக்குத் தெரியுமே. எத்தனை படத்தில் பார்த்திருக்கிறோம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் நண்பர்களே படம் இதுவல்ல, இறந்துபோன காதலன் பழிவாங்க பெற்றுவரும் உருவம்தான் படம். மறுபிறப்பு எடுத்து வந்த கதாநாயர்களை, மனிதனாக, ஆவியாக என.. எத்தனையோ பார்த்திருக்கிறோம்.

சிங்கமாக, யானையாக, அவ்வளவு ஏன்..!? ஒரு சிறு குரங்காகவாவது மறுபிறப்பு எடுத்திருந்தால் மனிதனை பழிவாங்குவது சுலபம். ஆனால் இப்படத்தில் கதாநாயகன் ஒரு ‘ஈ’-ஆக மறுபிறப்பு எடுக்கிறான். பலமற்ற எளிய ஈயாக பிறந்துவிட்ட அவனால் என்ன செய்துவிட முடியும்? தன் இருப்பே பெரும் போராட்டம். எக்கணத்திலும் தான் கொல்லப்பட்டு விடலாம் இம்மனிதர்களால் என்னும் நிலையில் முன் ஜென்மத்துத் துயரத்திற்கு பழி வாங்குவது என்பது எப்படி சாத்தியம்? இயலுமா? அதற்காக.. அதற்காக.. அப்படியே விட்டுவிட முடியுமா? ஒரு எளிய, சிறிய உயிருக்குள்ளாக உறைந்துக்கிடக்கும் காதல் அதை அனுமதிக்கவில்லை. தன் உடல் கொண்டு, தன் பலம் அறிந்து அதன் சாத்தியங்களைப் பயன்படுத்தி பழிவாங்கத் துணிகிறது.. அங்கே, காதல் கொண்ட மனங்கள் அனைத்தும் அந்த எளிய உயிரின் பக்கத்தில் நிற்கின்றன.

அழகான இளம் காதலன் ஒருவன், ஒரு ஈயாக மறுபிறப்பு எடுத்துவரும் போதும் நாம் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதற்கு காரணம் ராஜ்மௌலி என்கிற ஒரு சிறந்த படைப்பாளி. தன் காட்சி அமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தினால் அதைச் சாத்தியமாக்குகிறார். ஒரு படைப்பாளி, தான் சொல்ல வருவதை பார்வையாளன் மனமொத்து, கேள்விகளற்று ஏற்றுக்கொள்ளும்படி சொல்ல வேண்டும். அப்போதே அது முழுமையான படைப்பாகிறது. அதன் பொருட்டே அவன் படைப்பாளியாக அங்கீகரிக்கப்படுகிறான். அதே படைப்பு மனித உணர்வுகளைப் பேசும்போது சிறந்த படைப்பாகிறது. அதைப் படைத்தவன் சிறந்த படைப்பாளியாகிறான்.

‘நான் ஈ’ நமக்கெல்லாம் நன்கு பழக்கமான எளிய ‘காதல் உணர்வை’ அடிப்படையாகக் கொண்டது, மற்ற இந்திய படங்களைப் போலவே. ஆனாலும் புதியது போல நம்மை வசீகரிக்கிறது. மிக எளிய உயிரினமாக பிறந்துவிட்ட ‘ஈ’ கொண்டிருக்கும் காதல் நம்முடைய ‘லாஜிக்கல்’ சிந்தனைகளையும் மீறி ஏற்றுக்கொள்ள முடிகிறது. நான் படம் முழுவதும் அந்த ஈ-ஐ கதாநாயகனாகவேதான் பார்த்தேன். ஆறு, ஏழு சீன்களிலும் ஒரு பாடலிலும் வந்துபோன அந்த இளம் காதலன்தான் படம் முழுவதும் எனக்குத் தெரிந்தான். இதற்கு பின்னாலிருக்கும் காதல் உணர்வே அந்த அற்புதத்தை நிகழ்த்துகிறது.

ஆங்கில படமான ‘Wall-E’ பார்த்திருக்கிறீர்களா?  எளிய ரோபோ ஒன்று காதல் வயப்படுவதும் அதன் பொருட்டு அது படும் இன்னல்களும்தான் கதை. மிகச் சிறந்த படங்களில் ஒன்று. உலகில் இதுவரை வந்த காதல் படங்களில் சிறந்தவை என எந்த அடிப்படையில் நீங்கள் வரையறுத்தாலும் 'Wall-E'ஐ நீங்கள் தவற விட முடியாது. அப்படியான ஒரு காதல் காவியம் அது.  அப்படம் உங்களுக்கு பிடிக்கும் என்றால், அதை உணர்வுப் பூர்வமாக ஏற்றுக்கொள்ள உங்கள் லாஜிக்கல் திங்கிங் இடமளிக்குமென்றால் ‘நான் ஈ’யும் உங்களை வசீகரிக்கும்.


நான்கு அல்லது ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்கள், ஒரு நல்ல நடிகன், சிறப்பான தொழில்நுட்பம், அதை சாத்தியமாக்கும் தொழில்நுட்பப் படை இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு சிறந்த படைப்பாளி ஒரு நிறைவான படத்தை எடுத்துவிட முடியும் என்பதற்கு இப்படம் சாட்சி.

பெரிய நடிகன், பெரிய நடிகை, பெரிய வில்லன், பெரிய காமெடியன் என பெரும் கூட்டமொன்றைச் சேர்க்க விரும்பவதும், அதன் பொருட்டு கால விரயத்தையும், பொருள் விரயத்தையும் செய்வது நம் இந்திய சினிமாவின் வழக்கம். அதை எல்லாம் ராஜ்மௌலி இயல்பாக தவிர்த்திருக்கிறார் அல்லது தாண்டி வந்திருக்கிறார். ஒரு சிறப்பான படைப்பாளி மட்டும் இருந்துவிட்டால், அற்புத படைப்புகளை கொடுத்துவிட முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இந்திய சினிமாவிலேயே உண்டு. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ராஜ்மௌலி.

சிவாஜி படத்தில் ரஜினி சொல்லும் வசனமான ‘பன்னிங்கதான் கூட்டமாக வரும்..சிங்கம் சிங்கிளாத்தான் வரும்..!’ என்ற வசனம் இப்படத்தில் ஒரு காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. ஈயாக வந்திருக்கும் நாயகனின் சார்பாக சொல்லப்படும் அந்த வசனம்.. மிகப் பொருத்தமானதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. சிறு மாற்றத்தோடு அதை நாமும் அங்கீகரிக்கலாம்,

‘சிங்கம் மட்டுமில்ல கண்ணா.. ஈ-யும் தனியாத்தான் வரும்.. உன்ன கலங்கவும் அடிக்கும்..!’.


கருத்துகள்

  1. good review as i expected.... a duty of a good viewer is to bring success to a good film by watching them. moreover these kind of healthy reviews wud be the pillar of that film's success ......

    பதிலளிநீக்கு
  2. காதலைத் தாண்டி காதலின் வலியையும் உணர்வையும் பதிய வச்சது, ஈ பழிவாங்குறது புதுவிதமான களமா தமிழ் ரசிகனுக்கு இருக்கு. உங்க விமர்சனம் இன்னும் உடனே போய் பாருடானு சொல்ல வைக்குது.

    ஒளிப்பதிவு பத்தி ஒரு தகவல் குடுங்க அண்ணா... எதிர்பார்க்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. thank u for the good and genuine review. i thank u on behalf of our team.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...