அண்மைக்காலமாக என் திரைத்துறை நண்பர்களிடமிருந்து(மூத்த..?!) ஒரு தகவலை அறிய முடிகிறது. பல்லாண்டு காலம் இத்திரைத்துறையில் உதவி இயக்குனராக, இணை இயக்குனராக அனுபவம் பெற்று திரைப்படம் இயக்கத் தயாராகிவிட்ட அவர்கள், தயாரிப்பாளரை அணுகும் போதெல்லாம்.. இத்தகைய கேள்விகளை சந்திப்பதாக சொல்லுகிறார்கள்.
“நீ குறும்படம் எடுத்திருக்கிறாயா? எடுத்தப் படத்தைக் காட்டு. ஒரு குறும்படம் எடுப்பதற்கான அளவிற்கு ஒரு கதை இருந்தால் போதும். சும்மா அது இது வென்று கதை வேண்டாம். காமெடிக்கதை இருந்தால் சொல்லு. சின்ன பட்ஜெட்டில் எடுக்கற மாதிரி கதை வைத்திருக்கிறாயா?.. ஓ, இத்தனை வருடமாக திரைத்துறையில் இருக்கிறாயா?? அப்போ நீ பழைய ஆளு..”
இத்தகைய நிலை எதனால் வந்தது என்பதை நாம் அறிவோம். அண்மைக்காலத்தில் வெற்றியடைந்த ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘நேரம்’, போன்ற படங்களின் வெற்றியும், அதன் பின்னால் இருந்த குழுவின் தகுதியையும் அடிப்படையாகக் கொண்டு இத்தகைய நிலைக்கு/முடிவுக்கு நம் தயாரிப்பாளர்கள் வந்திருக்கிறார்கள் என்பது இலகுவாக ஊகிக்க முடிகிற விஷயம்தான்.
ஒருவகையில் அது சரியே. புதிய இயக்குனர்கள், இளைஞர்கள் வெற்றியை நோக்கி நடைபோடுவதையும், புதிய கதையை, புதிய களனை எடுத்துக் கொண்டு அதை வெற்றிப்படங்களாக்கிக் காட்டியதையும் நாம் மகிழ்ச்சியுடன்/ அதிர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே தயாரிப்பாளர்கள் இத்தகைய கதைகளை, குழுக்களைத் தேடத் துவங்கியிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ளமுடிகிறது.
அதே நேரம்..
இத்தகைய போக்கு சரிதானா? என்பதையும் கொஞ்சம் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில்..
புதிய இயக்குனர்கள், இளைஞர்கள், படித்தவர்கள், குறும்படம் இயக்கியவர்கள் என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களை மதிப்பிடக்கூடாது. மேலே குறிப்பிட்ட வெற்றிப்படங்களின் இயக்குனர்களின் அனுபவமும் பயிற்சியும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். அவ்வியக்குனர்கள் பல குறும்படங்களை எடுத்து அதன் மூலம் திரைக்கலையை, அனுபவப் பூர்வமாக பயின்றவர்கள். பத்திலிருந்து இருபதுக்கும் குறையாத எண்ணிக்கையில் குறும்படம் எடுத்தவர்கள். அப்பயிற்சி கொடுத்த அனுபவமே அவர்கள் ஒரு சிறப்பான திரைப்படத்தை கொடுக்க ஏதுவாயிற்று என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
திரைப்படக்கலை என்பது எவ்வளவுக்கு கற்பனா சக்தியின் வெளிப்பாடு என்று நம்புகிறோமோ அதே அளவு தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு பயிலவேண்டிய ஒரு கலை. இவ்விதி எல்லா கலைகளுக்கும் பொருந்தும். பயிற்சியின் வாயிலாகவே எக்கலையிலும் மேன்மை அடைய முடியும். ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது அதைத்தான் குறிக்கிறது. அவ்வகையில் வெற்றி பெற்ற இயக்குனர்களின் அனுபவத்தையும், உழைப்பையும் கணக்கில் கொள்ளாமல் ஒரு முடிவுக்கு வருவதும் அதன் அடிப்படையில் கலைஞர்களை தேர்ந்தெடுக்க நினைப்பதும் பாதகமான ஒரு சூழ்நிலைக்குத்தான் கொண்டுசேர்க்கும்.
மூத்த.. நீண்ட காலம் அனுபவம் கொண்ட உதவி/இணை இயக்குனர்களை அவர்களுக்குரிய மரியாதையோடு அணுக வேண்டும். அவர்களின் அனுபவம் ஒரு சிறந்த திரைப்படத்தை படைக்க உதவும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த மாதிரியான கதை வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அத்தகையக் கதைகளை கேட்டு வாங்குவதும் அதை தயாரிக்க முயல்வதும் ஒரு தயாரிப்பாளரின் சுய விருப்பம்தான். ஆனால்.. இன்று நிலவும் சூழலின் அடிப்படையில் ஒரு அனுபவம் வாய்ந்த கலைஞனை அவமதிப்பதும், அவன் பெற்ற அறிவை துச்சமென்று புறம் தள்ளுவதும், தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய செயல்.. அவனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்கிவிடக்கூடியது என்பதை நாம் உணரவேண்டும். இது நாள் வரை அவர்கள் கடந்து வந்த வாழ்க்கை முழுவதும் இத்தகைய ஒரு தருணத்திற்காகத்தான்.. ஒரு படத்தை படைத்துவிட வேண்டும் என்பதற்காகத்தான். அத்தருணத்தை அவர்களின் அனுபத்தைக் காரணம் காட்டியே மறுப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. எது தங்களின் பலம் என்று நம்பி, அதில் ஈடுபட்டார்களோ.. அதையே குறை என்று கூறுவதும்.. அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளாததும்.. மிக அதிக துயரத்தைக் கொடுக்க கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதே நேரம்.. அத்தகைய நண்பர்களும் புதிய சூழலுக்கேற்றவாறு, அது ஏற்படுத்திருக்கும் மாற்றத்தின் மேன்மையை உணர்ந்து, உள்வாங்கி, தங்களைத் தயார் படுத்திக் கொள்ளவோ/ மாற்றமடையவோ வேண்டியதிருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். நன்மையோ, தீமையோ மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டே தான் இருக்கின்றன. அத்தகைய மாற்றத்திலிருக்கும் மேன்மையைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதுதான் சரியானதாக இருக்கும். மாற்றத்தை ஏற்க மறுப்பதும் அதை மறுதலிப்பதும் தோல்விக்கே வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக