முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவீன டிஜிடல் சினிமாக் காமிராக்கள்: ஒரு அறிமுகம்


"புதிய தொழில்நுட்பம் உங்கள் மீது உருண்டோடும் போது, நீங்கள் அந்த உருளையின் (ரோட் ரோலரின்) ஒரு பகுதியாக இல்லாவிட்டால் தரையின் ஒரு பகுதியாகிவிடுவீர்கள்"- ஸ்டூவர்ட் ப்ராண்ட்


“Once a new technology rolls over you, if you're not part of the steamroller, you're part of the road.” - Stewart Brand


திரைப்படத் துறையில் நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே வருகின்றன. குறிப்பாக 'டிஜிட்டல்' திரைப்படம் என்னும் நுட்பத்தின் வளர்ச்சியை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. 'டிஜிட்டல்' திரைப்படம் என்பது ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, வண்ணம் ஒழுங்கமைத்தல் (color correction) மற்றும் திரையிடல் என சினிமாவின் அனைத்துப் பிரிவுகளும் டிஜிடல் மயமாவதையும்தான் மொத்தமாகக் குறிக்கிறது. 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் இத்தனை தூரம் வளர்ந்துவிட்ட பிறகும், நாம் ஏன் அதில் இறங்கிச் செயல்படாமல் அதைப்பற்றி பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறோம் என்பது மிக முக்கியமான கேள்வி.

ஒரு துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அத்துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதாக இருக்கும், இருக்கவேண்டும். அந்த வகையில் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் திரைப்படத்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் விதத்தில் இருக்கிறதா? இருக்கிறது என்றால், நமக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? இந்தத் தயக்கம் நியாயமானதுதானா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

மறுக்க முடியாத உண்மை ஒன்று இருக்கிறது. ஃபிலிம் தரத்தை இதுவரை எந்த டிஜிட்டல் தொழில்நுட்பமும் சந்தேகத்திற்கு இடமின்றி சமன் செய்யவில்லை. ஒரு பேச்சுக்குக் கற்பனை செய்வோமே, டிஜிட்டல் தொழில்நுட்பம் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்து, நாம் இந்தனை காலமாக அதைத்தான் பயன்படுத்தி வந்திருந்தோமென்றும், இப்போது புதிதாக 'ஃபிலிம்' தொழில்நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? நாம் அத்தனை பேரும் 'ஃபிலிமை' தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்போம். ஆகா, இது ஒரு அற்புதம் என்று அதிசயப்பட்டிருப்போம்.

உண்மைதான், ஃபிலிம் அத்தனை சக்தி வாய்ந்ததுதான், 'ஒரு காட்சியைப் பதிவுசெய்யும் நிகழ்வில்' அது பல சாத்தியங்களைத் தர வல்லது. அதை யாரும் மறுத்துவிட முடியாது. என்றாலும் நாம் அதைத்தாண்டிச் செல்லவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். முந்தைய படி எத்தகைய உறுதியானதாகயிருந்தாலும் நாம் அடுத்த படியில் காலெடுத்துவைத்துதான் ஆக வேண்டும். அதுவே வளர்ச்சி.

இத்தகைய பலத்த சிபாரிசு, டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்குத் தேவையா? அது அத்தகைய சிபாரிசு தேடும் நிலையில்தான் இருக்கிறதா என்று என்னைக் கேட்டால்... அப்படி இல்லை என்றுதான் சொல்வேன்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் ஃபிலிம் தரத்தை சில காரணிகளில் வேண்டுமானால் ஈடுசெய்யாமல் இருக்கலாம், ஆனால் பெரும்பான்மையானவற்றில் ஈடு செய்துவிட்டது என்பதும், சில விதங்களில் ஃபிலிமை விட மேம்பட்டது என்பதும் இன்றைய உண்மை. ஃபிலிமில் செய்ய இயலாத பல புதுமைகளைச் செய்யவும் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது டிஜிடல். இவையெல்லாம் மிகக்குறைந்த செலவில் என்பது இன்னும் கூடுதலான குறிப்பிடத்தகுந்த அம்சம்.

இன்றைய நிலவரப்படி காட்சியைப் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தில் பல வகைகள் இருக்கின்றன. ஃபிலிம் (Film), டிஜிட்டல் (Digital) என்ற இரண்டு பொதுப் பிரிவுக்குள் அவற்றை அடக்கிவிட முடிந்தாலும் அதற்குள்ளும் நிறைய உட்பிரிவுகள் இருக்கின்றன.

ஃபிலிம் என்று பொதுவாக அழைத்துவிட்டாலும், 65mm, 35mm, 16mm படச்சுருள்களில் எதைப் பயன்படுத்தினோம் என்பதைப் பொறுத்து நம் காட்சியின் தரம் அமையும். ஒரு விதத்தில் இவை ஒவ்வொன்றுமே மற்றவற்றைவிட பாதியளவு தர வித்தியாசம் கொண்டவை. ஒரு பிம்பம் பதிவுசெய்யப்படும் பரப்பளவு சார்ந்து தரம் வித்தியாசப்படும் என்பது நாம் அறிந்ததுதான். அதாவது 65mm ஃபிலிமை விட 35mm ஃபிலிம் என்பது ஏறத்தாழ பாதி அளவு சிறியது, அதனால் பிம்பம் பதியப்படும் பரப்பளவு குறைகிறது. அதைச்சார்ந்து படத்தின் துல்லியம் (Image resolution) குறைகிறது. இதேதான் 35mm ஃபிலிமுக்கும் 16mm ஃபிலிமுக்குமான வித்தியாசமும்.

என்றாலும் 35mm ஃபிலிமின் தரம் நமக்கு போதுமானது என்பதனால் 65mm ஃபிலிமை நாம் அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. அகண்ட திரையில் பிரம்மாண்ட காட்சிகளைக் காட்டுவதன் மூலம் பார்வையாளனை பிரமிப்பில் ஆழ்த்தி திரையரங்கை நோக்கி இழுத்துவந்துவிட வேண்டும் என்ற முனைப்பினால் இடையே சில காலங்கள் பயன்படுத்தப்பட்டது என்பதோடு சரி. ஆனால் 16mm ஃபிலிமைப் பயன்படுத்துவது, உண்மையில் நம் காட்சித் தரத்தை பாதிக்க கூடியது, அதிலிருந்து பெறப்படும் காட்சியின் துல்லியம் என்பது 35mm ஃபிலிமோடு ஒப்பிட்டால் குறைவுதான்.

இந்த குறைவான துல்லியம் சில நேரங்களில், சில காட்சியமைப்புக்கு போதுமானதாக இருந்தாலும் பல காட்சிகளுக்கு, கதை சொல்லலுக்குப் போதுமானதாக இருக்காது என்பது உண்மை. உதாரணத்திற்கு குறைந்த வெளிச்சம் கொண்ட காட்சியமைப்பு, காதல் போன்ற மென்மையான உணர்ச்சிகளை காட்சியாக வெளிப்படுத்தும்போதும், துல்லியக்குறைவால் (Low resolution) ஏற்படும் புள்ளிகள் (Grains) பார்வையாளன் காட்சியில் ஒன்றுவதைத் தடுக்கக்கூடும். சிறந்த நடிப்பும், சிறந்த காட்சிப்படுத்துதலும், சிறந்த இசையும் இந்தக் குறையை நிவர்த்தி செய்துவிடலாம் என்றாலும், இந்த 'Low resolution/ Grains' என்பது 16mm ஃபிலிமிலிருக்கும் தவிர்க்க முடியாத குறையாகும். இதையெல்லாம் மீறி நாம் 16mm-இல் படமெடுப்பது என்பது தவிர்க்க முடியாத சமாதானமாகவும் (Compromise) கருதப்படுகிறது.

அதே போல் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் என்பதும் பல பிரிவுகளைக் கொண்டதுதான். 'அனலாக் விடியோவை' (VHS,Beta) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் 'Digi-beta'வில் ஆரம்பித்து 'DV', 'DVC Pro', 'XD', 'HDV', 'HD' என ஒரு நீண்ட தொடர் பயணத்தைக்கொண்டது டிஜிடலின் பாதை. இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை விளக்கவேண்டுமானால் அதற்கென ஒரு தனிக் கட்டுரையே எழுதவேண்டும். ஆனால், இந்திய/ தமிழ்த் திரைப்படத்துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் சில முக்கியமான டிஜிடல் காமிராக்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்தான் இந்தக்கட்டுரைதான் நோக்கம் என்பதால் அதை நோக்கியே சொல்வோம்.

‘ALEXA, RED, CANON 5D, Blackmagic Cinema Camera’ என பலவகையான டிஜிட்டல் கேமராக்கள் புழக்கத்திலிருந்தாலும், ஆதிக்கம் செலுத்துவது என்றுகொண்டால், ‘ARRI’ நிறுவனத்தின் ‘Alexa’ கேமராவும், ‘RED’ நிறுவனத்தின் ‘RedMX’ மற்றும் ‘Red Epic’ கேமராக்களும்தான்.

திரைப்படத் தயாரிப்பில் செலவைக் குறைக்கவேண்டும் என்ற தேவை வரும்போதெல்லாம் யோசிக்கப்படும் பல மாற்றுக் காரணிகளில் ஃபிலிமுக்காக செலவிடப்படும் பகுதியை குறைக்க வேண்டும் என்பதும் ஒன்று. ஃபிலிமுக்கு பதில் 'டிஜிட்டலை' பயன்படுத்தலாம் என்கிற யோசனை பலகாலமாக இருந்து வந்திருக்கிறது. டிஜிட்டல் என்பது வளர்ந்து வரும் தொழில்நுட்பம், மேலும் விலை குறைவானது என்பதனாலும், அதை எப்போதும் பரிசீலனை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் 2005/ 2007 வரைக்கும் கூட டிஜிட்டல் தொழில்நுட்பம் பெரிதாக நம்பிக்கை தரும் வகையில் அல்லது போதுமான தரத்தில் முன்னேறி இருக்கவில்லை.

'Star Wars' போன்ற சில படங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம் (DV/24p) பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவையெல்லாம தேவை கருதியும், பரீட்சார்த்த முறையிலுமே பயன்படுத்தப்பட்டது. பின்பு 'HD' தொழில்நுட்பம் திரைப்படத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' DV/24p (Panasonic AG-DVX100 அல்லது AG-DVX102A) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. ஒளிப்பதிவு செய்தது ஒளிப்பதிவாளர் சித்தார்த் அவர்கள். அந்தக் கேமராவில் நொடிக்கு 24 பிரேம்கள் எடுக்க முடியும் என்ற காரணத்தாலேயே அதைப் பயன்படுத்த முயன்றார்கள்.

இந்தியாவின்/ தமிழின் முதல் 'HD' திரைப்படம் ஒளிப்பதிவாளர் 'பி.சி.ஸ்ரீராம்' இயக்கி, ஒளிப்பதிவு செய்த 'வானம் வசப்படும்’ (2004). அதில் 'Panasonic AJ HDC 27' (720p) பயன்படுத்தப்பட்டது என நினைக்கிறேன். பின்பு இதே கேமராவைப் பயன்படுத்தி 'சேரன்' இயக்கி 'M.S.பிரபு' அவர்கள் ஒளிப்பதிவு செய்த 'தவமாய் தவமிருந்து' திரைப்படம் எடுக்கப்பட்டது.

ஆனாலும் அப்போதைய HD தொழில்நுட்பம் திருப்திகரமாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஃபிலிம் தரத்திற்கு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் அதன் அருகில் வந்துவிடும் தொழில்நுட்பமாக வளர்ந்துவிடக்கூடிய சாத்தியம் கொண்டதாக அது கருதப்பட்டது.

ஒருபுறம் ஃபிலிமுக்கு மாற்றாக டிஜிட்டல் ஆலோசிக்கப்பட்ட அதே நேரத்தில் 'DI' மற்றும் 'டிஜிட்டல் திரையிடல்' (Digital Projection) போன்ற தொழில்நுட்பங்களும் நடைமுறைக்கு வந்தன. இந்தத் தொழில்நுட்பங்களின் சாத்தியங்களைப் பயன்படுத்திகொண்டு திரைப்படத்தயாரிப்பில் செலவை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

RED ONE






இந்தக் காலகட்டத்தில்தான் 'RED ONE' கேமராவைப் பற்றி பேச்சு அடிபட ஆரம்பித்தது. RED ONE கேமராவின் அறிமுகமே ஒரு புதிய புரட்சியாக அப்போது பார்க்கப்பட்டது. 2005ல் அறிவிக்கப்பட்டு வேலை துவக்கப்பட்டாலும், ரெட் ஒன் ஆகஸ்டு 2007-இல் நடைமுறைக்கு வந்தபோது அதன் தொழில்நுட்பம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிறிய வடிவில் இருந்த அக்கேமராவின் தரம் (4K) பிரமிப்பைக் கொடுத்தது. அதுவரை ஃபிலிமையே (Film) மையமாக கொண்டிருந்த திரையுலகம் டிஜிட்டலை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பியது. அதற்கு சில முக்கியமான காரணங்கள் இருந்தன.

முதல் காரணம், இச்சிறிய கேமராவில் கிடைத்த 4K விடியோ தரம். அதுநாள் வரை ஒரு விடியோ கேமராவினால் இத்தகைய தரத்தைக் கொடுக்க முடியும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 'HD' தொழில்நுட்பம் என்பது '1920 X 1080' 'பிக்சல் ரேஷியோவை'(Pixel Ratio) நோக்கி இருந்தபோது 'RED ONE' கேமரா '4096 X 2304' பிக்சல் ரேஷியோவைத் (4K Resolution) தந்ததும், அந்தக் கேமராவின் அளவும், அதன் விலையும் நம்பமுடியாததாக இருந்தது. ஒப்பீட்டளவில் அதுநாள் வரை சந்தையில் இருந்த கேமராக்களைவிட ரெட் ஒன்னின் விலை மிகக் குறைவானதாக இருந்ததும், அக்கேமரா மிகுந்த வரவேற்பைப் பெறக் காரணமாகியது. குறைந்த விலையில் தேவையான தரம் என்பதே டிஜிட்டலை (ரெட் ஒன்) நோக்கித் திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்தது. ஒருவேளைரெட் ஒன்அப்போது வெளியாகி இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் வேறொரு கேமராவில் அது சாத்தியமாகி இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றாலும் ரெட் ஒன் அதை காலத்தே சாதித்தது.

அதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் திரைப்படம் என்னும் கருத்தாக்கம் வலுவடைந்தது. ரெட் ஒன் அதன் சமகாலப் போட்டியாளர்களைத் தாண்டி தன் கேமராவைப் பிரபலமாகியது.

'RED ONE' கேமரா மற்ற டிஜிட்டல் கேமராக்களைப்போன்று 'HD' தொழில்நுட்பத்தில் இல்லாமல் 'RAW' format தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. புகைப்படத்துறையில் பயன்பாட்டிலிருந்த 'RAW' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதும், 4K துல்லியத்தைக் கொடுத்ததும் 'RED ONE'-இன் சிறப்பு அம்சங்கள்.

'RED ONE' அதன் அறிமுகப்படுத்தலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறது. 4Kவிலிருந்து 4.5K என (4520 x 2540 pixels) மேம்பட்டதும், பதிவு செய்யும் கோடாக்கை மாற்றியும் (REDCODE 42), குறைந்த வெளிச்சத்தில் படம்பிடிக்கும் தகுதியை அதிகப்படுத்தியும் (Mysterium-X) தன்னை வளர்த்துக்கொண்டே வருகிறது.

தமிழில் 'ரெட் ஒன்' கேமராவைப் பயன்படுத்திப் பல படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 'உன்னைப்போல் ஒருவன்', 'தமிழ்படம்', 'திருதிரு துருதுரு' மற்றும் 'மன்மதன் அம்பு' போன்ற படங்களில் முழுமையாக 'ரெட் ஒன்' பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


தொழில்நுட்ப விவரங்கள்:

SENSOR                                   14 MEGAPIXEL MYSTERIUM-X™

PIXEL ARRAY                         5120 (h) x 2700 (v)

S/N RATIO                               66db

DYNAMIC RANGE                13+ stops

MAX IMAGE AREA              4480 (h) x 2304 (v)

LENS COVERAGE                 24.2mm (h) x 12.5mm (v) x 27.3 mm (d)

DEPTH OF FIELD                  Equivalent to S35mm (Motion) lens
                                                  Equivalent to 16mm (Motion) lens in 2K RAW

ACQUISITION FORMATS      4.5K RAW (2.4:1)
                                                     4K RAW (16:9, HD, 2:1, and Anamorphic 2:1)
                                                     3K RAW (16:9, 2:1, and Anamorphic 2:1)
                                                     2K RAW (16:9, 2:1, and Anamorphic 2:1)

PROJECT FRAME RATES      23.98, 24, 25, 29.97 fps @ 4.5K, 4K
                                                      plus 50, 59.94fps @ 3K, 2K

DELIVERY FORMATS *         4K : DPX, TIFF, OpenEXR (RED RAY via optional encoder)
                                                     2K : DPX, TIFF, OpenEXR (RED RAY via optional encoder)
                                                     1080p RGB or 4:2:2, 720p 4:2:2 : Quicktime, JPEG
                                                     Avid AAF, MXF. 1080p 4.2.0, 720p 4:2:0 : H.264, .MP4

MONITOR OUTPUTS              HD-SDI and HDMI with Frame Guides and Look Around
                                                     720p RGB or 4:2:2
                                                     SMPTE Timecode, HANC Metadata, 24-bit 48Khz Audio

DIGITAL MEDIA                      REDFLASH (CF) Module : (16GB Media)
                                                      RED SSD™ (64GB, 128GB, 256GB Capacity)

REDCODE™                              12-bit RAW : RC28, 36, 42 Quaity Levels
                                                      1-30 fps 4.5K, 4K
                                                      1-60 fps 3K
                                                      1-120 fps 2K

AUDIO                                         4 channel, uncompressed, 24 bit, 48KHz.

MONITORING OPTIONS   RED LCD 5" Flat Panel Display
                                                 RED PRO LCD 7" Flat Panel Display
                                                 BOMB EVF™ High Definition Viewfinder

REMOTE CONTROL          USB-2, GPI Trigger

WEIGHT                                10lbs. Body

CONSTRUCTION                 Aluminum Alloy

TEMPERATURE RANGES  Operating Range: 0˚C to +40˚C (32˚F to 104˚F)
                                                  Storage Range: -20˚C to +50˚C (-4˚F to 122˚F)

* FROM REDCINE-X


ரெட் ஒன் கேமரா அடுத்தக்கட்டத்தை நோக்கியும் நகரத் துவங்கி விட்டது. அதன் போட்டியாளர்களை சமாளிக்க மேலும் புதிய வகை கேமராக்களை, வசதிகளை அளிக்கிறது. அந்த வகையில் அதன் இரண்டு புதிய கேமராக்களான 'EPIC' மற்றும் 'SCARLET' பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக அதன் போட்டியாளர்களில் ஒன்றான 'Arri' நிறுவனத்தின் 'ALEXA' கேமராவைப்பற்றி பார்த்துவிடுவோம்.


'ALEXA'  ஒரு எடை குறைந்த, அளவில் சிறிய, விலையில் குறைந்த 'டிஜிட்டல்' கேமரா. 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தை அடுத்தத் தளத்திற்கு அழைத்துச்செல்லும் சுலபமான 'Workflows'. 35 mm தரத்திற்கு இணையான படம் (Image). திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரப்படங்கள் மற்றும் இசைத் தொகுப்புகள் என எதையும் குறைந்த செலவில் இக்கேமராவைக்கொண்டு எடுக்கலாம் என்பதே இந்தக் காமிராவைப்பற்றிய 'ARRI' நிறுவனத்தின் அறிமுக உரை.

இந்தக் காமிரா 'ARRI' தொழில்நுட்பத்தை மட்டுமல்லாமல் இந்தத்துறையில் இருக்கும் மற்ற பிரபல நிறுவனங்களின் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. உதாரணமாக 'Apple' நிறுவனத்தின் 'Apple QuickTime' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த கேமரா பிம்பங்களை 'SxS memory card'-ல் சேமிக்கிறது. இந்த 'cards'-க்கான இடம் கேமராவிலேயே இருக்கிறது. (Apple ProRes 4444 or Apple ProRes 422 (HQ) encoded images onto on-board SxS memory cards)

'ALEXA' கேமராவின் தரம் '35mm ஃபிலிமின்' தரத்தோடு ஒத்திருக்கும் என சொல்கிறார்கள். காரணம் இந்தக் கேமரா வழக்கமாக 35mm கேமராக்களில் பயன்படுத்தப்படும் லென்சுகளைப் பயன்படுத்த 'PL Mount'- கொண்டுள்ளது. அந்த லென்சுகளைப் பயன்படுத்தும் போது ஒரு ஒளிப்பதிவாளன் காட்சியின் 'Focus'- கட்டுப்படுத்துவதன் மூலம் தனக்கு தேவையான 'Depth of Field'- உருவாக்கமுடியும். இதனால் பார்வையாளனை அவனால் திரைப்பட பாணி கதை சொல்லலில் ஒன்றிணைக்க முடிகிறது.

'Digital' பிம்பத்தின் தரத்தை உயர்த்த இந்த கேமரா '35mm' ஃபிலிமின் அளவில் உள்ள 'CMOS' சென்சரை (sensor) உபயோகப்படுத்துகிறது.  இதன் மூலம் 35mm' ஃபிலிமில் கொண்டுவரமுடிகிற அதே 'Depth of Field'-ஐப் பெறலாம். இந்த கேமரா '800 EI' சென்சிட்டிவ்(sensitive) உடையது, அதாவது '800 ISO' திறன் கொண்ட 'ஃபிலிமை' பயன்படுத்துவதற்கு சமம்.

 13.5 'Stop' வித்தியாசத்தில் பிம்பத்தை பதிவு செய்யக்கூடிய 'latitude' கொண்டது. குறைந்த வெளிச்சத்திலும் காட்சியின் துல்லியத்தைக் கொடுக்கிறது. இயல்பான வண்ண மறு உருவாக்கத்தைத் தருகிறது, வண்ணங்களிலிருக்கும் வித்தியாசத்தை சிறப்பாகப் பதிவு செய்கிறது இதனால் 'compositing' போது சுலபமாக வேலை செய்யமுடிகிறது.

குறைந்த எடை, சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வடிவம் போன்றவை 'ALEXA' கேமராவை 'Handheld shots'-க்கு பயன்படுத்தும்போது எளிதாக இருக்கிறது. அதனுடைய அமைப்புகள் அனைத்தும் சுலபமாக கற்றுக்கொள்ள கூடிய வகையில் இருக்கிறது. நீங்கள் கேமராவில் சில extra கருவிகள் (.ம்: சிறிய விளக்கு, follow focus) பொருத்தினால் அதற்கு தேவையான மின்சாரத்தை பெற கேமராவிலேயே இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முக்கியமான அம்சம், நமக்குத் தேவையான வண்ண மாறுபாட்டில் (color management) காட்சிகளை சேமிக்கமுடியும். அல்லது இயல்பாக காட்சிகளைச் சேமித்துக்கொள்ளும் அதே நேரத்தில், வண்ணமாறுபாட்டோடும் காட்சியைச் சேமிக்கமுடியும். அதாவது இரண்டு வித வண்ணத்தில் காட்சிகளை சேமிக்கமுடியும். இது பின்னால் 'Post Prodution'-னின் போது வண்ண நிர்ணயித்தலில் மிகவும் பயன்படும்.

எந்த பணிச்சூழலிலும், எந்த நேரத்திலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்த கேமரா இயங்கும் என்கிறார்கள். அது இமயமலையோ, விண்வெளி ஓடமோ எங்கே வேண்டுமானாலும் இயக்கலாம். (RED-ONE போன்ற கேமராக்கள் விரைவில் வெப்பம் அடைந்து நின்று விடுவதாகவும், வெப்பம் தணியும் வரை காத்திருக்க வேண்டியதாகயிருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது)

மற்ற எந்த டிஜிட்டல் கேமராவும் செய்யாத வகையில் இந்த கேமரா 'Post Prodution'-இல் உதவுகிறது. உதாரணமாக 'Apple ProRes 4444 or Apple ProRes 422 (HQ) encoded' பிம்பங்களை பதிவுசெய்வதன் மூலம் நாம் இங்கே பயன்படுத்திக்கொண்டிருக்கும் 'editing' கருவிகளையே பயன்படுத்த முடிகிறது. 'Apple’s Final Cut Pro editing software'- பயன்படுத்தி எடிட்டிங் செய்யலாம். இதனால் புதிய கருவிகள் வாங்க வேண்டிய செலவுகள் தவிர்க்கப்படுகிறது.



'Apple ProRes 4444' கோடக்கை (Codec) பயன்படுத்தி 15 நிமிடமும், 'Apple ProRes 422 (HQ)' கோடக்கை பயன்படுத்தினால் 20 நிமிடமும் 32GB Card-ல் பதிவுசெய்ய முடியும். இந்த Card- அப்படியே நேரடியாக 'Apple’s MacBook Pro' போன்ற மடிக்கணினியில் பயன்படுத்த முடியும். உலகமுழுவதும் பயன்பாட்டிலிருக்கும் 'HD' பிம்பங்களை பதிவுசெய்வதனால் 'Direct to Edit' (DTE) தொழில்நுட்பத்தில் நம்மால் நேரடியாக எடிட் செய்ய முடிகிறது. அதாவது படப்பிடிப்பு தளத்திலேயே நம்முடைய காட்சிகளைப் பார்க்கவும், எடிட் செய்யவும் முடியும். இதனால் உங்களின் தவறுகளை உடனுக்குடன் சரி செய்துகொள்ள முடியும்.

'Uncompressed HD or ARRIRAW' கோடக்கைப் பயன்படுத்தி பிம்பத்தை பதிவு செய்தால் 'off-line/on-line workflow' முறையில் வேலை செய்ய வேண்டும்.  'full resolution' பிம்பங்களை 'Editing System'-தில் ஏற்றி வேலை செய்ய அதிகத் திறன்வாய்ந்த கணினி தேவைப்படும். நேரமும் அதிகரிக்கும். அதனால் செலவும் கூடும் என்பதனால் அதைத் தவிர்க்க off-line/ on-line workflow-வை கொண்டுவந்தார்கள். அதாவது 'low resolution' பிம்பங்களை கொண்டு எடிட் செய்வது பின்பு அந்த பிம்பங்களில் பதியப்பட்டிருக்கும் தகவல்களைக் (datas: Timecode) கொண்டு நாம் பயன்படுத்திய காட்சிகளை மட்டும் 'full resolution' பிம்பங்களாக எடுத்துக்கொள்வது. இதனால் தேவையற்ற நேர விரயம், கணினியில் அதிக சேமிப்பு இடம் தேவைப்படுதல் போன்றற்றைத் தவிர்க்க முடியும்.

இந்த கேமரா அதற்கான 'off-line/ on-line பிம்பங்களை தனித்தனியாக கேமராவிலேயே பதிவு செய்து தந்துவிடுகிறது. இதனால் எடிட்டிங்கின் போது இரண்டு விதமாக பிம்பங்களை பிரிக்க வேண்டிய தேவையில்லாமல் போகிறது. நேரமும் செலவும் சேமிக்கப்படுகிறது.

off-line என்பது குறைந்த resolution கொண்ட பிம்பங்கள், அதாவது நாம் படம்பிடித்த 'high resolution' பிம்பங்களை 'compress' செய்து துல்லியக்குறைவான பிபங்களாக சேமிக்கப்படுகிறது. இதனால் கணினியில் இடம் அதிகம் தேவைப்படாது மற்றும் குறைந்த RAM போன்றவை இருந்தாலும் இலகுவாக வேலைச் செய்ய முடியும். எடிட் செய்து முடித்த பிறகு, 'Time-code' or EDL -ஐ கொண்டு நாம் பயன்படுத்திய இறுதிக்காட்சிகளை மட்டும் 'High Resolution'-ல் தனியே பிரித்து ஏற்றிக்கொள்ள முடியும். இந்த முறை 'Online' எனப்படுகிறது.

இந்த கேமரா 16:9 'ஆஸ்பெக்ட் ரேசியோவில்' (Aspect Ratio) '2880 x 1620 pixal' என்ற கணக்கில் பிம்பத்தைச் சேமிக்கிறது. அதாவது 2K Resolution. இது ஒரு திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடப் போதுமான தரமாகும்.

கேமராவின் வேகம் நொடிக்கு குறைந்தது 0.75 frame-ஆகவும், அதிக பட்சமாக நொடிக்கு 60 frame-ஆகவும் இருக்கிறது (0.75 – 60 fps). இதன் Electronic shutter-, 5.0° முதல் 359.0° கோணம் வரை மாற்றியமைக்க முடியும். (shutter-இன் கோணங்களை மாற்றியமைப்பதன் மூலம் சில சுவாரசிமான பிம்பங்களை உருவாக்க முடியும்)





மற்ற 'ARRI' டிஜிட்டல் கேமராக்களில் இருப்பதைப்போலில்லாமல் இதில் 'ARRI Electronic Viewfinder EVF-1' இணைக்கப்பட்டுள்ளது. மற்ற D20, D21 டிஜிட்டல் கேமராக்களில் 'Optical Viewfinder' உள்ளது. இதை ஒரு குறை என நான் நினைக்கிறேன். 'Optical Viewfinder' தான் காட்சியின் தரத்தை கட்டுப்படுத்துவதில் அதிகம் பயன்படும் என்பது என் நடைமுறை அனுபவம். இந்த கேமராவைப் பயன்படுத்திப் பார்த்தால்தான் இதைப்பற்றி மேலும் அறிந்துக்கொள்ள முடியும்.


இப்போதெல்லாம் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாளே அதனுடைய அடுத்த 'version' கருவிகள் வந்து விடுகின்றன. அப்படியிருக்க புதிய கருவிகளின் மீது பணம் செலவுசெய்ய தயக்கம்காட்ட வேண்டியதாக இருக்கிறது. நீங்கள் ஒரு 'mobile phone' வாங்கினீர்கள் என்றால் அடுத்த வாரமே அதைவிட தரம் மிகுந்த, விலை குறைந்த போன்கள் வந்துவிடுவதை அறிவீர்கள். அதேபோல் தான் நவீன தொழில்நுட்பக் கருவிகளிலும் நிகழ்கிறது. இதைச் சமாளிக்க இந்த கேமராவின் பாகங்கள் மாற்றி அமைக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் புதிய கருவி பாகங்கள் வரும்போது அதை மட்டும் வாங்கி மாற்றி அமைத்துக்கொள்ளலாம். முழு கேமராவையும் வாங்க வேண்டியது இல்லை.

இந்த கேமராவில், 
1. 'பிம்பங்களை சேமிக்கும் பகுதி' (Storage Interface Module)
2. 'மின்னணு இயந்திரப்பகுதி' (Electronics Interface Module) மற்றும்
3. 'லென்ஸ் இணைப்பு பகுதி' (Exchangeable Lens Mount -ELM) போன்றவற்றைத் தொடர் வளர்ச்சிக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

இந்தக் கேமரா இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இதனுடைய துணைக்கருவிகள் அனைத்தும் ஏற்கனவே உலகமுழுவதும் பயன்பாட்டில் இருப்பவைதான். அதனால் இந்தக் கேமராவை பயன்படுத்துவது எளிதாகிறது. உலகின் எந்த மூலையிலும் இந்த கேமராவை பயன்படுத்தலாம் என்பது 'ARRI' நிறுவனத்தின் உறுதிமொழி. இதை நாம் நம்பலாம், ஏனெனில் 'ARRI' நிறுவனம் நம்பத் தகுந்த தரமான கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற நற்பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறது.


‘ARRI’ தன்னுடைய ‘ALEXA’ கேமராவை 2010-இல் அறிமுகப்படுத்தியது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமான ‘ALEXA PLUS’- 2011 / 2012-இல் அறிமுகப்படுத்தியது. இக்கேமராக்கள்  ‘SxS Module’-ஐப் பயன்படுத்தி ‘SxS PRO card’-இல் பிம்பங்களை பதிவுசெய்கிறது. இவ்வகைக் கேமராக்களை ‘ALEXA Classic Cameras’ என்று அந்நிறுவனம் தற்போது அழைக்கிறது. காரணம் ‘ALEXA XT Cameras’ என்னும் புதியவகை கேமராக்களை அந்நிறுவனம் 2013-இல் அறிமுகப்படுத்தியிருப்பதே ஆகும்.

'ALEXA Classic Cameras' பிரிவில் ALEXA, ALEXA Plus, ALEXA Plus 4:3, ALEXA M, ALEXA Studio, ALEXA HD மற்றும் ALEXA HD Plus ஆகிய ஏழு வகையான கேமராக்கள் உள்ளன.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘ALEXA XT Cameras’ பிரிவில்  ALEXA XT, ALEXA XT M, ALEXA XT Plus and ALEXA XT Studio ஆகிய நான்கு வகையான கேமராக்கள் உள்ளன.

‘ALEXA XT’ என்பதை ‘Xtended Technology’ என்பதன் சுருக்கம் என்று ARRI சொல்கிறது. இக்கேமராக்களின் சிறப்புத் தகுதிகளாக ‘XR Module (Xtended Recording), Internal ND Filtration, 4:3 Super 35 Sensor, Built-in CDL server மற்றும் LDS PL mount போன்றன வரையறுக்கப்பட்டிருக்கின்றன.


Codex

‘XR Module’

‘XR Module’ (Xtended Recording) என்பது ‘ARRI RAW Footage’- நேரடியாக கேமராவிலேயே பதிவு செய்ய ஏதுவாகும் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. முன்பு ‘ALEXA PLUS’ கேமராக்களில் ‘ARRI RAW Footage’ பதிவு செய்ய ‘Codex Recorder'-ஐப் பயன்படுத்த வேண்டியதிருந்தது. தற்போது  ‘Codex Recorder’ சிறிதாக்கப்பட்டு ‘Hard Disc' வடிவில் கேமராவிலேயே இணைக்கப்பட்டுள்ளதால் தரமான RAW Footage- பெறுவது சுலபமாகிறது. மேலும் கேமராவின் எடை அதிகரிப்பதையும் இது தடுக்கிறது.




‘Internal ND Filtration’ என்பது, கேமராவிற்கும் லென்சிற்கும் இடையே ND ஃபில்டர்களைப் பொருத்துவதைக் குறிக்கிறது. லென்ஸ் மவுண்டில் ND ஃபில்டர்களைப் பொருத்த முடியும். இவை லென்சின் பின்புறம், சென்சருக்கு முன்பாக அமைந்திருக்கிறது. பொதுவாக ஃபில்டர்களை லென்சின் முன்புறம்தான் பொருத்துவார்கள். அப்படிப் பொருத்தப்படும் ஃபில்டர்களிலிருந்து பிரதிபலிக்கும் தேவையற்ற ஒளியைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியம். தற்போது லென்சிற்கு உட்புறம் பொருத்துவதால் இந்த தேவையற்ற பிரதிபலிப்புகள் தடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் தெரியும் இதன் தேவை என்ன என்பதைப்பற்றி. ஆகையால், இது ஒரு முக்கியமான தகுதி மேம்பாடு என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

‘4:3 Super 35 sensor’ என்பதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக HD கேமராக்களைப்போல 16:9 வகை சென்சாராக இல்லாமல், ஒரு முழுமையான 35mm ஃபிலிமைப்போல 4:3 சென்சாராக வைத்திருப்பது பிம்பத்தின் தரத்தை அதிகரிக்க பயன்படும். மேலும் சில பயன்களும் உண்டு.

‘Color Decision List’ என்பதின் சுருக்கம் இந்த CDL. பிற்தயாரிப்பில் உந்த நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ‘LDS PL mount’ என்பது ‘Lens Data System’ அமைப்பு கொண்ட மவுண்டைக்குறிப்பது. லென்சிலிருந்து தகவல்களை கேமராவுக்கு அனுப்பும் தகுதி கொண்ட லென்சுகளை குறிக்கிறது. லென்சில் வைக்கப்படும் எக்ஸ்போஸர், ஃபோகஸ், எந்த Focal Length lens பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்களைக் கேமராவிற்கு அனுப்பி சேமிக்கவல்லது.

Alexa XT

Alexa XT M

Alexa XT Plus

Alexa XT Studio

‘XR Module’- (Xtended Recording) மாற்றி விட்டு  ‘SxS Module’ வகையைக்கூட பயன்படுத்தும் வகையில்  ‘ALEXA XT’ கேமராக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

 ‘SxS Module’ மற்றும் ‘XR Module’





டிஜிட்டல் திரைப்படத்தயாரிப்பைத் தரத்தோடு செய்ய முடியும் என்ற எண்ணம் 'ரெட் ஒன்' (RED ONE) வருவதற்கு முன்பாக வெறும் நம்பிக்கையாக மட்டும்தான் இருந்தது. 'சோனி', 'பேனாசோனிக்' போன்ற நிறுவனங்கள் 'HD' தொழில்நுட்பத்தை முயன்றுகொண்டிருந்த காலகட்டத்தில் 'ரெட் ஒன்' அறிமுகப்படுத்தப்பட்டது (2007). தொடர்ந்து களத்திலிறங்கிய 'SONY', 'ARRI', 'Panavision' போன்ற நிறுவனங்களும் இப்போது பல டிஜிட்டல் கேமராக்களை அறிமுகப்படுத்திவிட்டன.


SONY F35

ARRI Alexa 

ARRI D-21

PANAVISION GENESIS

இந்நிலையில் 'ரெட் ஒன்' அது அறிமுகமானபோது ஏற்படுத்திய அதே போன்றதொரு ஆச்சரியத்தோடு அதன் இரண்டு புதிய கேமராக்களை அறிமுகப்படுத்துகிறது.

Red One 'EPIC':

'ரெட் ஒன்' கேமராவில் மூன்றில் ஒருபங்கு அளவு கொண்ட, வடிவில் சிறிய கேமரா இது. ஆனால் அதை விட அதிக தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டது.



*5K ரெசுலூஷன்.(5120 x 2700 PIXELS)

*120fps - நொடிக்கு 120 ஃபிரேம்ஸ் வரை படம் பிடிக்கலாம் (5K). 225fps வரை 2K-இல் படம்பிடிக்கலாம் (UP TO 225FPS @ 2K).

* ஒவ்வொரு ஃபிரேமும் 14MP கொண்டது.



*புகைப்படம் எடுக்கவும் பயன்படுத்தமுடியும்.

*13 stops 'native dynamic range' கொண்டது.

*3D படப்பிடிப்புக்கும் பயன்படுத்தலாம்.

*'Multi-camera synchronization'

*MYSTERIUM-X® - என்பது அதன் புதிய 'CCD'. ஒளியைப் பதிவுசெய்யப் பயன்படும் சென்சார்.

*இதன் format ஆன 'R3D'- பின்வரும் எல்லா எடிட்டிங் மென்பொருளையும் பயன்படுத்தி எடிட் செய்யலாம். Final Cut Pro, Avid DS, Adobe Premiere and After Effects, Sony Vegas, Assimilate Scratch, Filmlight Baselight, Quantel Pablo, Da Vinci, Nuke, REDCINE-X, ROCKETCINE-X, DVS Clipster, Nucoda, Mystika, Storm.



* லென்ஸ் மௌண்ட், பேட்டரி, சேமிக்கும் சிப், ஹார்ட்டிஸ்க் என எல்லாம் பாகங்களையும் தேவைக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள முடியும்.

*எலட்டரானிக் ரெட் லென்ஸையோ அல்லது 'கெனான்' அல்லது 'நிக்கான்' லென்ஸையோப் பயன்படுத்தி 'Auto Focus' 'Auto Exposure' வைக்கலாம்.

*HDRx™ தொழில்நுட்பத்தில் 18 stops ஒளி வித்தியாசம் கொண்ட காட்சிகளை படம்பிடிக்கமுடியும்.

HDRx™ தொழில்நுட்பம் என்பது 'High-dynamic-range imaging' என்பதின் சுருக்கம். அதாவது ஒரு வெளிப்புறப் படக்காட்சியை பதிவுசெய்ய முயற்சிக்கும் போது, அங்கே பல அளவுகளில் ஒளி மாறுபட்டிருந்தால் அதன் எல்லா ஒளி அளவுகளையும் நாம் பதிவுசெய்ய முடியாது. ஏனெனில் அதிக ஒளியை சரியாக பதிவுசெய்ய நாம் முயன்றால் குறைந்த ஒளிப்பகுதி பதிவாகாது, குறைந்த ஒளியை பதிவுசெய்ய முயன்றால் அதிக ஒளிப்பகுதி 'Bleach' ஆகிவிடும்.




இந்த குறைபாட்டைப் போக்க 'Still Photography'இல் 'HDR' தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தார்கள். இதன் மூலம் பல மாறுபட்ட அளவுகள் கொண்ட ஒளிகளை தனித்தனி படங்களாக எடுத்துக்கொண்டு, பிறகு கணினியை பயன்படுத்தியோ அல்லது அந்த கேமராவில் இருக்கும் வசதியைப் பயன்படுத்தியோ ஒரே புகைப்படமாக மாற்ற முடியும். இதன் மூலம் பல அளவுகளில் ஒளியமைப்பு கொண்ட காட்சியைச் சிறப்பாக பதிவு செய்யமுடியும். இந்த தொழில்நுட்பத்தைத்தான் 'எபிக்' பயன்படுத்துகிறது.

RED MX
RED EPIC

RED SCARLET-X

டிஜிட்டல் கேமராக்களில், RED நிறுவனத்தின் இந்த EPIC வகை கேமராக்களுக்கு மேலே சொல்லப்பட்ட ‘ALEXA XT’ கேமராக்கள் சரியான சவாலாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இரண்டு நிறுவனங்களும் அவற்றிற்கே உரிய பயனீட்டாளர்களை வைத்திருந்தாலும்.. Epic கேமராவின் 5K Footage-களுக்கு ஒரு தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. ‘ALEXA’-வைப் பயன்படுத்தும் போது ‘Codex’- பயன்படுத்த வேண்டுமே என்பது சிறு இடையூராக இருந்தது வந்தது இதுவரை. காரணம் Codex இணைப்பதால் அதிகரிக்கும் கேமராவின் எடை. தற்போது அந்தப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ARRI நிறுவனம். இனி Epic vs Alexa போட்டியில் Alexa முந்துவதில் எவ்வித இடையூறும் இருக்கப்போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இங்கே தமிழ்நாட்டில்/ இந்தியாவில் மிக அதிக துல்லியம் (5K footage) எல்லாம் தேவைக்கு அதிகமானது. ஏனெனில் இந்தியாவில் எல்லா திரையரங்குகளும் 2K-வில் தான் இயங்குகின்றன. மேலும், 5K Footage எல்லாம் 'VFX' வேலை அதிகமுள்ள படங்களுக்குத்தான் தேவைப்படும். ஆகையால்  இன்னும் சில வருடங்களுக்கு நமக்கு 2K- துல்லியமே போதுமானது. மேலும் அதனால் அதிகரிக்கும் 'Hard Disc'-களின் எண்ணிக்கை ஒரு குறையாகவே இங்கே பார்க்கப்படுகிறது.

இவ்வாறாக, அலெக்ஸாவுக்குப் போட்டியாக ரெட் ஒன் தொடர்ந்து அது தன் திறனை மேம்படுத்திக்கொண்டிருந்த அதே வேளையில்தான் யாரும் எதிர்ப்பாராத திசையிலிருந்து ஒரு வில்லன் அதற்கு முளைத்தான்.

அந்த வில்லனுக்கு 'Canon EOS 5D Mark II' என்று பெயர். ஆமாம் 5D ரெட் ஒன்னுக்கு வில்லனாக அமைந்தது இத்துறையில் நிகழ்ந்த இன்ப ஆச்சியங்களில் ஒன்று. உண்மையில் 5D ஒன்றும் ரெட் ஒன்னின் தரத்திற்கு இணையானது அல்ல, என்றாலும் 5D மிகுந்த வரவேற்பைப் பெற்றது. காரணம் அதன் விலை மற்றும் உருவமைப்பு. விலை மிக மிகக் குறைவு (ரூ.ஒன்றறை லட்சம்) உருவமும் மிகச் சிறியது. ரெட் ஒன்னை விடச் சிறியது.



5D-இன் வளர்ச்சியும் அதற்கு பதிலடியாய் ரெட் ஒன் தன் நிறுவனத்தின் சார்பில் ‘Epic’ மற்றும் ‘Scarlet’ கேமராக்களை கொண்டுவந்ததும், இப்போட்டியை சமாளிக்க ‘ARRI’ தன் ‘Alexa’-வை களத்தில் இறக்கியதும் நாம் அறிந்ததுதான். அதேச் சமயம் Sony, Panavision, Thomson Grass Valley, Panasonic போன்ற மற்ற கேமரா நிறுவனங்களும் தன் புதிய கேமராக்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன என்பது உண்மையானாலும், போட்டி என்பது இம்மூன்று கேமராக்களிடையேதான் நிகழ்ந்தது. இந்தியாவில்/ தமிழ்நாட்டில் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் இம்மூன்று கேமராக்கள் மட்டுதான் சம பலம் வாய்ந்தவைகளாகக் களத்தில் இருக்கின்றன.

Canon நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்தது, Red One வட அமெரிக்க நிறுவனம், ARRI-யோ ஜெர்மன் நாட்டுத் தயாரிப்பு. இதுவும் இம்மூன்று நிறுவனங்களுக்கிடையே போட்டி உருவாக காரணமாயிற்று. தனக்கான வாடிக்கையாளர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க மூன்று நிறுவனங்களுமே பெரும் முயற்சிகளை மேற்கொண்டன.

அதுநாள் வரை கேனான் நிறுவனம், புகைப்படத்துறையில்தான் செல்வாக்குப் பெற்றிருந்தது. திடீரென்று திரைத்துறைக்குள்ளும் நிகழ்ந்த அதன் பிரவேசம் யாருக்கு அதிர்ச்சி கொடுத்ததோ இல்லையோ, ரெட் ஒன்னுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனாலயே அதனுடைய நேரடி எதிரியாக கேனானைக் கொள்ள வேண்டியதாயிற்று. அதேவேளை ரெட் ஒன்னின் சந்தையைத்தான் கேனான் பிடிக்க வேண்டியதாகவும் இருந்தது.

இந்நிலையில்தான் கேனான் தன் ‘EOS C300’ கேமராவை 3, நவம்பர் 2011-இல் அறிவித்தது. அதே நாளில் ரெட் ஒன் நிறுவனமும் தன் புதிய கேமரா ‘Scarlet-X’ அறிவித்தது. இதன் மூலம் இவ்விரண்டு நிறுவனங்களின் போட்டி சூடுபிடித்திருக்கிறது.

இம்முறை ரெட் ஒன் பல சவால்களை கேனானுக்கு முன் வைத்திருக்கிறது. ‘Scarlet-X’ கேமரா 5K தரம் கொண்ட 'Still Image'-களைக் எடுக்கும் தரம் கொண்டது. 4K தரத்தில் விடியோவைப் பதிவுசெய்யும். ஆனால் கேனான் ‘EOS C300’ அப்படி அல்ல 4K தரத்திற்கு ஈடானது என்று சொல்லப்பட்டாலும் அது வெறும் 1080p விடியோவைத்தான் கொடுக்கும்.


Lens Mount-ஐப் பொருத்தமட்டில் ‘EF’ மற்றும் ‘PL’ ஆகிய இரண்டு Mount-லும் ‘Scarlet-X’ கிடைக்கிறது. புகைப்படத்துறையிலிருந்து திரைத்துறைக்குள் கேனான் நுழைந்ததுப் போல், ரெட் ஒன் திரைத்துறையிலிருந்து புகைப்படத்துறைக்குள் நுழைந்திருக்கிறது. ‘Scarlet-X’ கேமராவைப் பயன்படுத்தி 5K REDCODE RAW-வில் புகைப்படங்களை எடுக்க முடியும் என்ற வசதியை அளித்ததன் மூலம் ரெட் ஒன், கேனான் மீதான பழிக்குப்பழி எனும் நிலையை எடுத்திருக்கிறது, நீ என் சந்தையை பிடித்தால் நான் உன் சந்தையைப் பிடிப்பேன் என்பதாக!



DSLR (Digital single lens reflector) என்றால் என்ன என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால், DSMC என்றால் என்ன என்று தெரியுமா

இப்போது புதியதாக உயிர்த்தெழுந்திருக்கும் தொழில்நுட்பத்தின் செல்லப் பெயர் அது. DSMC என்பது Digital Still & Motion Camera என்பதின் சுருக்கம். அதாவது ஒரே கேமராவில் டிஜிட்டல் புகைப்படம் மற்றும் திரைப்படத்திற்கு தகுதியான விடியோ எடுக்கும் தொழில்நுட்பத்தைக் குறிப்பது.


‘Scarlet-X’ ஒரு DSMC வகைக் கேமரா. இக்கேமராவைப் பயன்படுத்தி தொழில்முறை புகைப்படக்காரர்கள் (Professional photographers) புகைப்படங்களை மிகுந்த தரத்தோடு எடுக்க முடியும். கேனானின் பேட்டைக்குள் ரெட் ஒன் நுழையும் முயற்சி இது. இதற்குத் தேவையான துணை பாகங்களாக ரெட் ஒன்னின் முந்தையக் கேமராவான Epic-இன் பாகங்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் பலம்.

காலம் அதன்போக்கில் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. மாற்றம் நிகழ்வதை நாம் உணர்வதற்குள்ளாக பெரும் மாற்றங்களைக் கடந்து வந்து விடுகிறோம். வாழ்வின் சுவாரசியங்களில் / விநோதங்களில் ஒன்று இது. தனிப்பட்ட வாழ்தலில் எப்படியோ, ஆனால் தொழிலில் இம்மாற்றங்களை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டியதும்.. அதில் தேர்ச்சியடைவதும்.. தொழில்நுட்பதின் வளர்ச்சியோடு நம் பாதையை அமைத்துக் கொள்வதும் தவிர்க்க முடியாததாகிறது. இல்லையேல் நம் பயணம் தடைபட்டுவிடும். வெற்றி என்பது தொடர்ந்து நடைபோடுவதன் மூலமாக கிட்டுவது.. கற்பனை செய்வதன் மூலமாக மட்டுமில்லை.

எல்லாம் சரிதான்.. ஆனால், சிறப்பான தொழில்நுட்பக் கருவிகளும், அதுகுறித்த தேர்ந்த அறிவும் மட்டுமே நல்ல படைப்புகளைத் தந்துவிடமுடியுமா? அவ்வப்போது இந்தக் கேள்விகள் எழுப்பப்படத்தான் செய்கின்றன. தொழில்நுட்ப அறிவுக்கும், படைப்புத்திறனுக்குமான வித்தியாசத்தை உணர, 'ஐன்ஸ்டினின்' இந்த வார்த்தைகளை நாம் எப்போதும் நினைவில் கொள்வது நல்லது.

"I am enough of an artist to draw freely upon my imagination. Imagination is more important than knowledge. Knowledge is limited. Imagination encircles the world." -Albert Einstein


ஆனால், சாத்தியங்களைப் பொறுத்தே ஒரு படைப்பாளியின் கற்பனையும், படைப்புத்திறனும், எல்லைகளை உடைக்கும் தகுதியை, வளர்ச்சியை அடைகிறது. அப்படியான சாத்தியங்களை அவனுக்கு அவனது தொழில்நுட்ப அறிவே தருகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.


கருத்துகள்

  1. Wow!!!

    Miga miga arumayana padhivu...cameravil ithanai vagaigala!!! Ungaladhu vilakkam miga arumai...

    (Typed from mobile)

    பதிலளிநீக்கு
  2. Wow!!!
    Nice info about varieties of cameras and I appreciate you for your good work and sharing with us.

    Thank you so much sir.

    பதிலளிநீக்கு
  3. மிக எழிமையாகவும், அருமையாகவும் இந்த கட்டுரையை படைத்ததற்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்........

    பதிலளிநீக்கு
  4. மிக எழிமையாகவும், அருமையாகவும் இந்த கட்டுரையை படைத்ததற்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்........

    பதிலளிநீக்கு
  5. most important and interesting article on camera and its evaluation.
    reading these things in tamil is amazing
    thanks for your time and effort. keep rocking

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் அண்ணா.

    திரைப்படம் எடுக்கும் முயற்சியில் கேனன் 5டி வாங்கலாமென்று இருக்கிறேன். வழங்குமாறு கீட்டுக் கொள்கிறேன். இரண்டரை லட்சம் அளவில் கேனானை விட அதிக ரெசுலெசன் (4480x 2304 அல்லது 5K )கொண்ட ரெட் ஒன் அல்லது ஆரி அலெக்சிய கேமரவாங்கிவிடமுடியுமா? உங்களுடைய கட்டுரைகளில் கேமராக்களின் விலைகளையும் குறிப்பிட்டால் மிக உதவிக்கரமாக இருக்கும்.

    -தமிழ் முதல்வன் என்ற அழகிய கண்ணன்

    94875 01775

    [email protected]

    பதிலளிநீக்கு
  7. Dear Vijay,

    Thanks you very much for your valid information.

    Regards,
    Jayamurugan
    [email protected]
    9788666663
    8148148227

    பதிலளிநீக்கு
  8. "The Art and Technology club together to form a innovative path" Every cameraman , cinematographers want to know the depth of technology...very nice informative article i never seen before.. keep writing let us know the path of technology in cinema.


    -Kirubananth

    பதிலளிநீக்கு
  9. shall we take a good film in RED EPIC now ? Or is there a better camera than that...taking into consideration of all the maximum impoprtant elements ?

    பதிலளிநீக்கு
  10. GREAT ARTICLE HIGHLY INFORMATIVE PLS CONTINUE UR CONTRIBUTION TQ SO MUCH

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,