முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

SONY CineAlta Cameras: ஒரு அறிமுகம்

டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சியை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். RED ONE கேமராவின் அறிமுகத்தால் சூடுபிடித்த இத்துறை, கேனானின் EOS 5D, 7D, C300, C500 போன்ற விலை குறைந்த கேமராக்களினால் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் நடைபோட்டதையும், மறுபுறம் ARRI போன்ற பெரும் நிறுவனங்களின் டிஜிட்டல் கேமராக்களினால் ( D20, D21, Alexa, Alexa XT) அதன் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். மேலும் RED நிறுவனம் அதனுடைய அடுத்தக் கட்டமாக RED EPIC(5K), RED Scarlet(4K) போன்ற கேமராக்களை அறிமுகப்படுத்தியதையும், தற்போது RED DRAGON(6K) என்ற மேம்படுத்தப்பட்ட சென்சாரையும் சந்தைக்கு கொண்டு வந்து டிஜிட்டல் சினிமாவின் ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் இத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் நன்கறிந்ததே. அதே நேரம் மேலும் பல நிறுவனங்கள் இத்துறையில் கால் பதிக்க முயன்று வருகின்றன என்பதையும் நாம் அறிவோம். இதில் SONY,PANASONIC போன்ற நிறுவனங்கள் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றன. அந்நிறுவனங்களின் பல கேமராக்கள் சந்தைக்கு வந்துவிட்டன. இதில் SONY நிறுவனத்தின் டிஜிட்டல் சினிமா கேமராக்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்தான் இக்கட்டுரை.

டிஜிட்டல் வீடியோ துறையில் சோனி மிக முக்கியமான ஒரு நிறுவனம். சொல்லப்போனால் அத்துறையில் அது ஒரு ஜாம்பாவான். CANON,PANASONIC,FUJI,JVC போன்ற நிறுவனங்கள் அத்துறையில் வல்லுனர்களாக இருந்தபோதும், சோனியின் ஆதிக்கம் குறிப்பிடத்தகுந்தது. அதன் கேமராக்கள், ஒளி நாடாக்கள்(Tapes),பதிவு செய்யும் கருவிகள் (Recorders) போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருந்தன, இருக்கின்றன. டிஜிட்டல் விடியோவின் அடுத்த கட்டமாக HD தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த போது 1980-இல் சோனி நிறுவனம் தன்னுடைய ‘Sony HDVS’(1981) தொழில்நுட்பத்தை முன்மொழிந்தது. ஆயினும் அத்தொழில்நுட்பம் 2000 ஆம் ஆண்டு வாக்கில் தான் சந்தைக்கு வந்து பிரபலம் அடைந்தது. அதே காலகட்டத்தில் PANASONIC தன்னுடைய 24p வகை கேமராக்களை அறிமுகப்படுத்தியதாலும், டிஜிட்டல் சினிமா என்ற கருத்தாக்கம், உயிர் கொடுக்கப்பட்டு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஜூன் 1999 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ‘ஜார்ஜ் லூக்காஸ்’ தன்னுடைய படமான ‘Star Wars’இன் அடுத்த பாகம் ( Star Wars Episode II: Attack of the Clones) முழுக்க முழுக்க டிஜிட்டல் திரைப்படமாக இருக்கும் என அறிவித்தார். அதுவே உலகின் முதல் 100% டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முழு நீளத்திரைப்படமாகும். அப்படத்திற்காக Sony நிறுவனமும் Panavision நிறுவனமும் இணைந்து புதிய கேமராவை வடிவமைத்தன. அப்போதுதான் முதல் ‘CineAlta’ வகை கேமரா பிறந்தது. ‘Sony HDW-F900’ என்ற பெயர் கொண்ட அக்கேமரா  ‘Panavision HD-900F’ எனவும் அழைக்கப்பட்டது. அதாவது ஒரு கேமராவிற்கு இரண்டு பெயர்கள். பின்பு ஸ்டார் வார்ஸின் மூன்றாம் பாகத்திற்கு (Star Wars Episode III: Revenge of the Sith)சோனி தன்னுடைய மேம்படுத்தப்பட்ட கேமரா ஒன்றை ‘Sony HDC-F950’என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் டிஜிட்டல் சினிமா என்னும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மேம்படத்துவங்கியது. பேனாசோனிக் தன்னுடைய ‘VariCam’ வகை கேமராக்களை கொண்டுவந்தது. 2004-இல் பேனாவிஷன் தன்னுடைய ‘Genesis HD’ கேமராவைக் கொண்டு வந்தது. அதுவே முதல் 35mm சென்சார் வகை கேமராவாகும். டிஜிட்டல் விடியோ (HD) வகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரைப்படங்களை தயாரிக்கும் முறை பிரபலம் அடைந்தது. ஆயினும் டிஜிட்டல் வீடியோ தொழில்நுட்பத்தின் தரம் கேள்விக்குள்ளாகியிருந்து வந்த காலம் அது.

Sony HDW-F900 / Panavision HD-900F

Panavision Genesis

அதே காலகட்டத்தில் தான் ‘Red Digital Cinema Camera Company’ என்னும் நிறுவனம் தன்னுடைய ‘RED ONE’ கேமராவை பற்றி அறிவிப்பு செய்தது. 2006 ஆம் ஆண்டு NAB நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்ட அக்கேமரா 2007-இல் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. ரெட் ஒன்னின் அறிமுகமும் அது நிகழ்த்திக் காட்டிய மாற்றத்தையும் நாம் முன்பே பார்த்திருக்கிறோம். டிஜிட்டல் சினிமா என்னும் தொழில்நுட்பம் பெரும் பாய்ச்சலில் தன் அடுத்தக் கட்டத்தை நோக்கி ஓடத்துவங்கியதும் அப்போதிருந்துதான். மேலும் கேனான், ஆரி போன்ற நிறுவனங்களின் கேமராக்கள் இத்துறையில் நுழைந்து அதகளப்படுத்த துவங்கியன. உலகம், டிஜிட்டல் சினிமா என்னும் தொழில்நுட்பத்தை நம்பத் துவங்கியது, ஏற்கத் துவங்கியது. அதுவரை கோலோச்சிய செல்லுலாயிட் படச்சுருள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய ஆளுமையையும், இடத்தையும் இழக்கத் துவங்கியது.

இது ஒருபுறமென்றால் சோனியின் இடம் இன்னும் பரிதாபமானது. முதல் 'HD' தொழில்நுட்பத்தை (HDV-1981இல்) பரிந்துரைத்ததும், முதல் டிஜிட்டல் சினிமா கேமராவை (Sony HDW-F900-1999இல்) அறிமுகப்படுத்தியதும் சோனி நிறுவனமாகவே இருந்த போதும், டிஜிட்டல் சினிமாவில் அதற்கென்று ஒரு இடம் இல்லாமலேயே போனது. ரெட், கேனான், ஆரி ஆகியவற்றின் போட்டியில் சோனியை மறந்துவிட்டார்கள். அல்லது அதனால் முண்டி அடித்து முன்னுக்கு வர முடியாமல் போயிற்று. ஆயினும், டிஜிட்டல் வீடியோ உலகில் இன்னமும் சோனி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பதை மறந்து விடக்கூடாது. கேனான் எப்படி தனக்கான இடத்தை புகைப்படத்துறையில் வைத்திருக்கிறதோ அதுப்போல விடியோவில் சோனிக்கென்று ஒரு தனித்துவமான இடமுண்டு.

HDV

2008 ஆம் ஆண்டு சோனி தன்னுடைய டிஜிட்டல் சினிமாவிற்கான கேமரா 'F35'-ஐ அறிமுகப்படுத்தியது. 2010-இல் ‘SRW9000PL’(using a CCD HD sensor of 6.2 million pixels) வகை கேமராவை அறிமுகப்படுத்தியது. இவ்விரண்டு கேமராக்களும் ‘PL mounts’-ஐக் கொண்டிருந்தன. அதே ஆண்டு NAB Show-இல் அறிமுகப்படுத்தப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு பிறகு சோனி தன்னுடைய அடுத்த மாடல் ‘PMW-F3’-ஐ சந்தைக்கு கொண்டு வந்தது. இக்கேமரா ‘FZ mount’-ஐ பயன்படுத்தியது. இதன் மூலம் எவ்வகை லென்சுகளையும் PL adaptor-இன் உதவியோடு பயன்படுத்த முடியும் என்ற வசதி இருந்தது. ஆயினும் வெறும் ‘PL mounts' போதாது. 35mm சென்சார் என்ற முக்கிய அம்சம் சோனியிடம் அப்போது இல்லாமல் இருந்தது.

2011-இல் சோனி தன்னுடைய அடுத்த கேமராவை அறிமுகப்படுத்தியது. F65 என்று பெயரிடப்பட்ட அக்கேமரா அடுத்த தலைமுறை CineAlta வகை கேமராவாக அறிமுகப்படுத்தப்பட்டது. ‘CineAlta camera’ என்பது சோனி நிறுவனம் தன்னுடைய டிஜிட்டல் சினிமா கேமராக்களுக்கு கொடுத்திருக்கும் Brand Name. இக்கேமரா 8K sensor மற்றும் SR Memory வகை தொழில்நுட்பத்தை கொண்டிருந்தது. மேலும் ‘8K 16-bit RAW’ பிம்பத்தை பதிவு செய்யும் தகுதியை கொண்டிருந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் மேலும் பல மேம்பாட்டினை அக்கேமராவில் சோனி செய்திருக்கிறது. ஆயினும் கேமராவின் பெரிய வடிவம், அதிக எடை போன்ற சில சிக்கல்கள் இக்கேமராவிற்கு உண்டு. அதனால் பயன்பாட்டில் சில அசவுகரியங்களை கொண்டுள்ளது என நம்பப்படுகிறது குறிப்பாக Hand Held Shot, Steadycam Shot போன்றவற்றிற்கு ஏற்ற வகையில் இல்லை என்பது ஒரு குறையாகக் கருதப்படுகிறது.

அதே ஆண்டு (2011) ‘NXCAM Super35 NEX-FS100’ என்ற கேமராவை சோனி நிறுவனம் கொண்டுவந்தது. 3.4 Megapixel Super 35mm single CMOS சென்சார் வகை கேமரா இது. இதன் மூலம் 35mm வகை கேமராக்களில் ஒன்றாக இது அமைந்தது. அடுத்த ஆண்டு இக்கேமராவை மேலும் மேம்படுத்தி 8.3 Megapixels effective in HD, ISO 320 - 20,000,speeds to 240 fps in HD and 960 fps with reduced resolution ஆகிய வசதிகளை கொடுத்தது.


அதன் பிறகு இரண்டு வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மேலும் இரண்டு புதிய வகை கேமராக்களை சோனி நிறுவனம் கொண்டுவந்தது. இக்கேமராக்கள் தற்போது சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ரெட் நிறுவனத்தின் RED Epic, ஆரி நிறுவனத்தின் ARRI Alexa போன்ற கேமராக்களுக்கு சரியான போட்டியாகயிருக்கும் என கருதப்படுகிறது. இக்கேமராக்கள் எபிக் மற்றும் அலெக்ஸா கேமராக்களின் வடிவமைப்பு, எடை, விலை மற்றும் இதர தொழில்நுட்பங்களோடு ஒத்துப்போவதால், இக்கேமராக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2013-இல் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விரண்டு கேமராக்கள் PMW-F55 மற்றும் PMW-F5 என பெயரிடப்பட்டிருக்கிறது. இக்கேமராக்கள் 4K Resolution தரம் கொண்டவை.

PMW-F55

PMW-F5 


டிஜிட்டல் சினிமா துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்காக இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி செய்து, ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், வண்ண மேம்பாட்டாளர்கள், பிற்தயாரிப்பு கூட வல்லுனர்கள் என இத்துறைச் சார்ந்த பல வல்லுனர்களிடம் கருத்து கேட்டு, அவர்களின் ஆலோசனைபடி இக்கேமராக்களை வடிவமைத்திருப்பதாக சோனி சொல்கிறது. ஆகையால் இக்கேமராக்கள் சோனியை டிஜிட்டல் சினிமா துறையின் போட்டியாளர்களில் ஒன்றாக உருவாக்கியிருக்கிறது என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது.

இக்கேமராக்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியான கட்டுரைகளில் விரிவாகப் எழுத முயற்சிக்கிறேன்.



கருத்துகள்

  1. தங்களின் இந்த பக்கத்தை இரண்டு ஆண்டுகளாக படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் நண்பர்களிடமும் இதை பகிர்ந்து இருக்கிறேன். தங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் என்னவென்றால் POST PRODUCTION பற்றி சிறிது தெளிவாக எழுத வேண்டுகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...