ஒளிப்பதிவில் மிக ஆதாரமானது ஒளியமைப்பு. ஒரு காட்சியின் தன்மையை, அது நிகழ்கின்ற தளத்தின் இயல்பை, காலத்தை, உணர்ச்சியை பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பதில் ஒளியமைப்பு மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு காட்சியை செல்லுலாயிடில்(இப்போது டிஜிட்டலில்) பதிய, அல்லது திரைப்படக்காட்சியாக மாற்ற.. அக்காட்சியைப் பல ஷாட்டுகளாக (shots) பிரித்துப் பதிவு செய்து, அப்படித் தனித்தனியான ஷாட்டுகளாக இருப்பவற்றை படத்தொகுப்பின் போது ஒன்றிணைத்து ஒரு காட்சியாக மாற்றுகிறோம் என்பதை நாம் அறிவோம். மேலும் அக்காட்சிக்கான வசனம், பின்னணி இசை, சப்தங்கள் போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் அக்காட்சியின் நம்பகத்தன்மை அல்லது அக்காட்சியின் உயிரோட்டம் நிலை நிறுத்தப்படுகிறது / வரையறுக்கப்படுகிறது. அதே நேரம் மிக முக்கியமான ஒன்றை நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறுகிறோம் அல்லது அது நம் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறது. அது.. அக்காட்சி ஒளியூட்டப்பட்டிருக்கும் விதம்தான்.
பொதுவாக, ஒரு காட்சியில் நடிக்கும் நடிகனின் நடிப்பு, அவன் பேசும் வசனம், அதன் பின்னணி இசை, சிறப்பு சப்தங்கள், ஒளிப்பதிவு போன்றவை பார்வையாளனின் கவனத்தை தனியாக ஈர்க்கக் கூடாது என்பார்கள். அக்காட்சி ஒட்டுமொத்தமாக பார்வையாளனை வந்தடைய வேண்டுமே ஒழிய தனியாக எதுவும் துருத்திக்கொண்டு தெரியக் கூடாது. அப்படித் தெரியும் எதுவும் அப்படைப்போடு இயைந்து போக வில்லை, ஆகவே அது குறைகள் கொண்ட படைப்பு என்பது சரிதான். ஒரு படைப்பு பார்வையாளனைத் தன்னோடு கரைத்துக்கொள்ள வேண்டும். அல்லது பார்வையாளன் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையற்று அப்படைப்போடு ஒன்றிப்போக வேண்டும். அப்படி பார்வையாளன் அப்படைப்போடு ஒன்றிப்போக அக்காட்சியின் ஒளியமைப்பும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இயல்பான நடிப்பு, இயல்பான வசனம், இயல்பான இசை என்பது போல இயல்பான ஒளியமைப்பு இன்றியமையாததாகிறது. குறிப்பாக கலையம்சம் கொண்ட படைப்புகளில் இது மிகக் கவனமாக பின்பற்றப்படுகிறது. நம்முடைய மசாலாப்படங்களில் பெரும்பாலும் இவை பின்பற்றப்படுவதில்லையாயினும், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், தங்களால் இயன்ற இடங்களிலெல்லாம் இயல்பான, நேர்த்தியான அல்லது நம்பகத்தன்மை வாய்ந்த ஒளியமைப்பை ஏற்படுத்த முயல்கிறார்கள். காரணம் அதுவே அக்காட்சியின் நம்பதன்மையை அதிகரிக்கச் செய்கிறது என்பதனால். நம்மில் சிலர் அதை கவனித்திருக்கலாம். குறிப்பாக சிறந்த ஒளிப்பதிவாளர்களின் ஒளிப்பதிவில் அதை கவனிக்க முடியும். இப்படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவதே இதன் அடிப்படையில்தான். நம்மை அறியாமல் நாம் அதை உணர்கிறோம். அக்காட்சியின் அழகு மட்டுமல்ல அக்காட்சியின் நம்பகத்தன்மையும் அக்காட்சியில் பின்பற்றப்பட்ட ஒளியமைப்பைச் சார்ந்தே நிகழ்கிறது. இதன் அடிப்படையிலேயே நாம் குறிப்பிட்ட சில ஒளிப்பதிவாளர்களின் பணி சிறப்பாக இருப்பதாக வரையறுக்கிறோம். இதன் மூலம் நான் மீண்டும் சொல்ல வருவது யாதெனில்.. ஒளிப்பதிவில் ஒளியமைப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத்தான். மற்ற துறையின் மீது கவனம் கொள்வதைப்போலவே ஒளியமைப்பின் மீதும் கவனம் கொள்ளுங்கள் என்பதைத்தான்.
ஒளியமைப்பைப் புரிந்துக்கொள்ள சிறந்த வழி ஒன்று உண்டு.
ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்டவர்கள், புகைப்படத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள், இயக்குனர்கள் மட்டுமல்லாது கலையின் மீது ஆர்வம் கொண்ட அனைவருமே கவனிக்க வேண்டிய அல்லது கொஞ்சமேனும் நம் புரிதலை விரிவாக்கிக் கொள்ள வேண்டிய துறை ஒன்று உண்டென்றால்.. அது ஓவியத்துறை தான். அது நாம் ஒரு தேர்ந்த ரசிகனாக மாற, ஒரு படைப்பை உய்த்துணர வழிவகுக்கும்.
ஓவியம்.. கலைகளின் முன்னோடி! பேசத்துவங்கிய(?!) மனிதன் எழுதுவதற்கு முன்பே வரையத் துவங்கிவிட்டான். குகை ஓவியங்களில் துவங்கிய அப்பயணம் நீண்டு கொண்டே போகிறது. மனித நாகரிகத்தில் (civilization) ஓவியத்தின் சுவடு இல்லா நாகரிகமே இல்லை எனலாம். சொல்லப்போனால் அந்நாகரிகத்தின் மேன்மையை உணர்த்தும் சாட்சிகளில் ஒன்றாக ஓவியமும் இருக்கிறது.
ஒரு ஓவியம் விவரிக்கும் காட்சி என்ன? அது சொல்லும் செய்தி என்ன? அது உண்டாக்கும் எண்ணவோட்டமென்ன? அது துளிர்க்கச்செய்யும் மனவெழுச்சி என்ன? என்பதோடு அது வரையப்பட்டிருக்கும் நேர்த்தி, வண்ணக்கலவை, ஒளியை கையாண்டிருக்கும் விதம் (Techniques) போன்றவையும் அவ்வோவியத்தின் தரத்தை நிர்ணயிக்கின்றன. ஒரு ஓவியத்திற்கு சிறப்பை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக செயல்படுகிறது அவ்வோவியத்தில் வெளிப்பட்டிருக்கும் ஒளிச் சிதறல்கள்!
நான் இன்று ஒளிப்பதிவாளனாக இருப்பதற்கும் ஓவியத்திற்கும் சம்பந்தமுண்டு. சிறுவயதில் படித்த காமிக்ஸ் புத்தகங்களின் வழி வந்த காட்சிகளின் மீதான எனது ஈர்ப்பு பின்பு, ஓவியத்தின் மீதும் திரும்பியது. சிறுவயதில் ‘ந’போட்டு பின்பு அதை காகமாக மாற்றிக் காட்ட அம்மா என்னை பழக்கி விட்ட நாட்கள் இன்னும் நினைவிலாடுகின்றன. பின்பு நினைவு தெரிந்து குருவி, புறா, நாய், யானை, பாப்பா, மலைகளுக்கிடையே ஓடும் நதி எனும் இயற்கைக் காட்சிகள் எல்லாம் வரைந்து முடித்து, காமிக்ஸ் நாயகர்களான ஜேம்ஸ்பாண்டு, லக்கி லுக் போன்றவர்களை வரைந்து பார்க்க முயன்றிருக்கிறேன். எப்படியாவது ஒரு காமிக்ஸ் எழுத்தாளன் அல்லது காமிக்ஸ் ஓவியன் ஆகிவிடுவது நோக்கமாக அப்போது எனக்கு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது நினைவிலில்லை. கண்ட தாள்களிலும் வரைந்து கொண்டிருந்தேன். ‘கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான்’என்பார்கள், அது போல கண்ட தாளில் கிறுக்கி ஓவியன் ஆக முயன்றுகொண்டிருந்தேன். பின்பு புகைப்படத்துறையின் மீது ஆர்வம் வந்து, அது பின்னர் என்னை ஒளிப்பதிவாளனாக மாற்றி வைத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளனாக முயன்ற அல்லது பயிற்சி எடுத்துக்கொண்ட காலங்களில் ஓவியத்தின் வழி ஒளியமைப்பை கற்பது பற்றியும், ஒரு ஓவியத்தில் பின்பற்றப்பட்டிருக்கும் ஒளிச் சிதறல்களைக் கவனிப்பதன் மூலமும், ஒளியமைப்பைக் கற்றுக்கொள்ளலாம் என்று மூத்தோர்கள் சொல்லித்தந்தார்கள். அதன் பிறகு உலகின் சிறந்த ஓவியங்களை (ஓவியர்களின் பெயர்கள் தெரியாதபோதும்) கவனிக்கத்துவங்கினேன். ஒவ்வொரு ஓவியமும் அதன் காலம், வரலாறு, நாகரிகம் போன்றவற்றை பிரதிபலித்தாலும் அதன் படைப்பாக்கத்தின் கூறுகளால் மேலும் நம்மை வசீகரிக்கின்றன. அதில் கையாளப்பட்டிருக்கும் வண்ணங்கள், ஒளி, இருள், முப்பரிமாணம், நுணுக்கமான விவரிப்புகள் போன்றவை பிரமிப்பைத் தரவல்லவை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இணையத்தில் ஓவியங்களை தேடி எடுத்து வைத்துக்கொண்டு அவற்றை கவனித்துக்கொண்டிருப்பேன். லியனார்டோ டா வின்சி, வான்கோ, மைக்கேலாஞ்சலோ, தாமஸ் மோர், பாப்லோ பிக்காஸோ, டாலி (ஸல்வதோர் தலி) போன்ற சில ஓவியர்களின் பெயர்களை எல்லோரையும் போல நானும் தெரிந்து வைத்திருக்கிறேன், அவ்வளவுதான். இசையைக் கேட்பதைப்போலவே ஓவியங்களை பார்ப்பதும் எனக்குப் பிடித்த பொழுது போக்குகளில் ஒன்று. அவ்வப்போது எதையாவது வரைந்து பார்ப்பதும் உண்டு. பெரும்பாலும் பென்சில் ஓவியங்கள். முகங்களை மட்டுமே வரையப் பிடிக்கும் எனக்கு. முறையான பயிற்சி எதுவும் இதுவரை எடுத்துக்கொண்டதில்லை. நேரம் கிடைக்கும்போது பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது நடந்தபாடுதான் இல்லை. அவ்வெண்ணத்தை அண்மையில் படித்த ஒரு புத்தகம் அதிகப்படுத்தி விட்டது.
பி.ஏ.கிருஷ்ணன் எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "மேற்கத்திய ஓவியங்கள் - குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை" என்ற நூல் தான் அது.
‘மூன்று பரிமாணங்களில் பார்த்ததை அல்லது பரிமாணங்களைக் கடந்து நினைத்ததை, உணர்ந்ததை இரு பரிமாணங்களில் மரம், துணி, காகிதம், சுவர் போன்ற பரப்புகளில் வரைவதையே ஓவியம் என்கிறோம். வரைந்தது அதைப் பார்ப்பவர்களை எங்கு இட்டுச் செல்லுகிறது என்பதே ஓவியம் காலத்தை வென்றதா இல்லையா என்பதை வரையறுக்கிறது. காலத்தின் கரங்களிலிருந்து மீட்கப்பட்ட எண்ணற்ற ஓவியங்கள் இன்று காட்சியகங்களில் நமக்குக் காணக்கிடைக்கின்றன. இவ்வோவியங்களைக் கடந்து நாள்தோறும் பார்வையாளர்கள் பலர் செல்கிறார்கள். ஆனால் காட்சியகங்களில் வைக்கப்பட்ட எல்லா ஓவியங்களும் காலத்தை வென்றதாக அடையாளப்படுத்த முடியாது. அழியாமல் இருப்பது என்பது ஒரு நிகழ்வுதான். ஆனால் அழியாமல் இருப்பதே வெற்றி எனக் கொள்ள முடியாது. மிகச் சில ஓவியங்களே திரும்பத் திரும்பத் தலைமுறை தலைமுறையாகக் கவனிக்கப்படுகின்றன, பொருள்கோள் (interpretation) செய்யப்படுகின்றன. இந்த மிகச் சில ஓவியங்களில் சிலவற்றைப் பற்றியே இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். இவற்றை வரைந்த ஓவியர்களைப் பற்றியும் அவர்கள் காலத்தைப் பற்றியும் கோடிகாட்ட விழைந்திருக்கிறேன்’ என்று இதன் முன்னுரையில் கிருஷ்ணன் எழுதி இருப்பதே இப்புத்தகத்தைப் பற்றி புரிந்துக்கொள்ள போதுமானது.
287 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் 159 வண்ணப்படங்கள் இருக்கின்றன. அத்தனையும் வழுவழுப்பான தாளில் நேர்த்தியாக அச்சிடப்பட்டவை. ஒவ்வொன்றும் காலத்தை கடந்து நிற்பவை. தேடினால் இணையத்தில் கிடைக்கும் என்றாலும், இப்படி ஒரு தொகுப்பு என்பது பொக்கிஷம்! இந்த வண்ணப்படங்களுக்காக மட்டுமே இப்புத்தகத்தை வாங்கலாம். மேலும் கிருஷ்ணனின் எழுத்தில் எளிமையும், தெளிவும், கூடவே தகவல்களும் நிறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு ஓவியத்தின் வரலாறு, பின்புலம், அவ்வோவியத்தின் தரம், அதில் விரவி கிடக்கும் படைப்பாற்றல் பற்றிய விரிவான விளக்கம் என மிக சுவாரசிமான புத்தகம் இது.
உதாரணத்திற்கு, டச்சு ஓவியன் யோஹானஸ் வெர்மீர் வரைந்த ‘பணிப்பெண்’என்றொரு ஓவியம் பற்றிய விளக்கத்தை பின்வருமாறு இப்படி எழுதுகிறார்.
“ஓவியத்தை பார்த்தால் உடனே என்ன தோன்றுகிறது? பெண் ஒருத்தி ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றுகிறாள். மிக அழகாக, நேரில் பார்ப்பதுபோல வரையப்பட்டிருக்கிறது.
இவ்வளவுதானா?
மறுபடியும் பாருங்கள்.
ஒளி ஜன்னலிருந்து பாய்கிறது. ஒரு கன்னம் பளபளக்கிறது. மற்றொரு கன்னம் நிழலில் மறைந்திருக்கிறது. வலக்கை நிழலில். இடக்கை வெளிச்சத்தில். ஒளியின் துகள்கள் படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. பாத்திரங்களின் விளிம்புகள், மேஜையின் மீது இருக்கும் நீல ஜாடி, பெண் கையில் இருக்கும் பாத்திரம், பால் விடப்படும் பாத்திரம், கூடையில் இருக்கும் ரொட்டி, நீலத்துணி, அவள் அணிந்திருக்கும் மஞ்சள் மேலாடை, இவை எல்லாம் ஒளித்துகள்களால் உயிர் பெறுகின்றன. நிழலில் இறங்கும் சிவப்புக் கீழாடை ஒளியின் மாயம் என்ன என்பதைச் சொல்கிறது.
கண்ணாடி ஜன்னலைக் கவனியுங்கள்.
ஓர் இடத்தில் கண்ணாடி உடைந்து வெளிச்சம் பீறிட்டு வருகிறது. அதன் தாக்கம் சுவரில் தெரிகிறது. ஆணி, அதன் நிழல், மாட்டப்பட்டிருக்கும் கூடை, பளபளக்கும் பித்தளைக் கூடை, இவை எல்லாம் வெளிச்சமும் இருளும் விளையாடும் விளையாட்டுகளை நமக்குக் காட்டுகின்றன.
இன்னும் கவனியுங்கள்.
உடையை வைத்துப் பார்த்தால் வீட்டு வேலை பார்க்கும் பெண்போல இருக்கிறாள். நீலத்துணியை அழுக்குப்படக் கூடாது என்பதற்காகத் தூக்கிச் செருகிக்கொண்டிருக்கிறாள். வாட்டசாட்டமாக இருக்கிறாள். செய்யும் வேலையைச் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற உறுதி முகத்தில் தெரிகிறது. சுவரில் வெள்ளையடித்து நாளாகியிருக்க வேண்டும். சிவப்புக் கீழாடைக்கு வலப்புறத்தில் தரையில் கால்களுக்குச் சூடளிக்கும் சாதனம் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னால் சுவர் தரையைச் சந்திக்கும் ஓரங்களுக்கு மேல் நீலச் சதுரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைக் கூர்ந்து பார்த்தால் க்யூபிட் (மேற்கத்தியக் காதல் தேவதை) தனது அம்புகளை விடுவது தெரிகிறது.
இந்த ஓவியத்தின் பரிமாணம் 45.5x41 சென்டி மீட்டர்கள். இந்த ஓவியம் ஆம்ஸ்டர்டாம் ரெய்க்ஸ் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.”
இப்படி ஒரு ஓவியத்தைப்பற்றி தகவல்களும், அதில் பின்பற்றப்பட்டிருக்கும் தொழில்நுட்பம், அவ்வோவியத்தை எப்படி ரசிப்பது, எதை எல்லாம கவனிக்க வேண்டும் என்பவற்றையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறார் அல்லது சொல்லித்தருகிறார். நிபுணர்களுக்கு எப்படியோ நமக்குத் தெரியாது.. ஓவியத்தைப்பற்றிய ஆர்வம் மட்டும் கொண்டவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும். ஒரு ஓவியத்தை எப்படி அணுகுவது என்ற அடிப்படையை தெரிந்துக்கொள்கிறோம். அதன் அடிப்படையில் மற்ற ஓவியங்களைக் காணும் போது புதியதொரு தரிசனத்தைப் பெறுகிறோம். போலவே பல காலகட்டங்களைச்சார்ந்த ஓவியங்கள் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
மொத்தத்தில் ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்ல. புகைப்படத்துறை, ஒளிப்பதிவு, இயக்கம், என எல்லா கலைசார் மக்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பது என் பரிந்துரை.
Girl with a Pearl Earring |
புத்தகத்தில் இடப்பெற்றிருக்கும் ஓவியங்களில் சில இங்கே. இவற்றைபற்றிய விளக்கங்கள் புத்தகத்தில் உண்டு.
புத்தகம் கிடைக்குமிடம்:
சென்னை, கே.கே நகர். டிஸ்கவரி புத்தக நிலையம்
044 - 65157525
விலை: 850 /-
ஓரளவுக்கு பார்த்தவுடன் வரைந்துவிடும் எனக்கு, பிறந்தநாள் பரிசாக இதே போல் விளக்கங்களுடன் கூடிய Rembrandt அவர்களின் ஓவியப்புத்தகம் ஒன்றை பரிசளித்தார் என் கணவர்! அத்தோடு வரைவதற்கே விடை கொடுத்துவிட்டேன். என்ன ஒரு நுணுக்கமான ஓவியங்கள். ஒவ்வொன்றும் கவிதை. தளம் மிகவும் அழகாக இருக்கிறது இந்த ஓவியங்களோடான ஒத்த ரசனை!!
பதிலளிநீக்குபுத்தகம் வாங்கத்தூண்டுகிறது பதிவு!!
Mythily kasthuri rengan// நன்றி மேடம்.
பதிலளிநீக்கு