முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நன்றி - ‘ஒளி எனும் மொழி’ நூல் வெளியீட்டு விழா

ஒருபுறம் நான் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த 'தொட்டால் தொடரும்' திரைப்படத்தின் வெளியீடு, ஒளிப்பதிவு சார்ந்து அது பெற்றுத்தரும் நற்பெயர், மறுபுறம் 'ஒளி எனும் மொழி' புத்தகத்தின் வெளியீடு, அது சார்ந்து நான் எதிர்பாரா சில எதிர்வினைகள் என இரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்தது என் மனதிற்கு நிறைவைத் தருகிறது.

வருங்காலம் குறித்தான நம்பிக்கை வலுப்படும் இவ்வழகிய தருணத்தில், வாழ்வின் எதிர்கால திட்டமென்று ஒன்றை மனம் வரித்துக்கொண்ட இளம் பருவத்தை நினைவு கூர்கிறேன். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி செல்லவேண்டுமென்ற காலம் வந்த போது உருவான கேள்வி அது. "வாழ்வில் நான் என்னவாக வேண்டும்..?!" பதில்கள் பல தோன்றின. இராணுவ அதிகாரியாக, IPS முடித்த காவல் துறை அதிகாரியாக, ஓவியனாக, ஐந்து நட்சத்திர உணவு விடுதியின் சமையல்காரனாக, புகைப்படக்காரனாக, ஒளிப்பதிவாளனாக என்று பல பரிந்துரைகளை மனம் முன்மொழிந்தது. ஒவ்வொன்றிலுமிருந்த விருப்பம், மன திடம் மற்றும் சாத்தியத்தை பகுத்தாய்ந்து முடிவொன்றை எடுத்த அந்த கணம் இப்போதும் பசுமையாக நினைவிலிருக்கிறது. ஒளிப்பதிவாளனாக மாற வேண்டுமென எடுத்திருந்த முடிவை நடைமுறைப் படுத்த என்ன செய்ய வேண்டுமென்று முதலில் எனக்கு தெரியவில்லை. புத்தக வாசிப்பும், காமிக்ஸ் ரசனையும், ஓவியத்தின் மீதிருந்த ஈர்ப்பும், புகைப்படமெடுப்பதிலிருந்த நுண்ணிய சாகசத்தன்மையும் நான் ஓர் ஒளிப்பதிவாளனாக பரிமாணிக்கவேண்டும் என்ற ஆசையில் நெய் வார்த்தது.

எனக்கு ஒரு பழக்கமிருக்கிறது. 'நம்முடைய ஆசைகளை வென்றெடுக்க வேண்டுமாயின், அதற்கான தகுதியை அடைவதே.. இருப்பதிலேயே மிகச் சுலபமான, குறுக்கு வழி' என்ற புரிதலின் அடிப்படையில் செயல்படுவதுதான் அது. எங்கோ படித்ததின் தாக்கமோ அல்லது யாரோ போதித்ததோ தெரியவில்லை. ஆனால் அதுமட்டும் என் மனதில் நிரந்தரமாக தங்கிவிட்டது. ஒளிப்பதிவாளனாக வேண்டுமென முடிவானபோது அதற்கான படிப்பு என்ன என்ற தேடல் துவங்கியது. எப்படி எனக்கு அது தெரியவந்தது என்று தெரியவில்லை, எங்கோ இருந்த கிராமத்தானான எனக்கு அது தெரியவந்து சென்னைக்கு பஸ் ஏறி, திரைப்படக்கல்லூரில் Dft சேருவதற்கான தகவல்களை சேகரித்துக் கொண்டுபோய் என் தந்தையிடம், விருப்பத்தைச் சொன்னேன். அவருக்கு அது உகந்ததாக இல்லை. பல காரணங்கள் சொல்லி அதை மறுத்தார். அதிலொன்று "சென்னைக்குப் போனால் நீ பொறுக்கியாகி விடுவாய்"! அவர் சொன்னதன் அடிப்படை, இன்று வரை புரியவேயில்லை. ஆயினும் அப்போது அவருக்கான என் பதில் இப்படியாக இருந்தது. "நீங்க என்னை எங்கே அனுப்பினாலும் பொறுக்கியாகத்தான் மாறுவேன்". ”அதுதான் உன் முடிவென்றால் அதை பெங்களூரில் போய் செய்” என்று என்னை சட்டப்படிப்புக்கு பெங்களூருக்கு அனுப்பினார். அல்ல, அல்ல.. அவரே வந்து கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்தார். ஆனால் இன்றுவரை என் வார்த்தையைக் காப்பாற்றத் தகுதி அற்றவனாகவே இருக்கிறேன். பார்க்கலாம், காலம் இன்னும் மிச்சமிருக்கிறது. :)

அன்று ஒரு முடிவு செய்தேன், இனி எக்கனவையும், அதை அடைவதற்கான தகுதி உடையவனாக என்னை மாற்றிக்கொள்ளும் வரை வெளியே சொல்லக்கூடாது என்று. பெங்களூர் சட்டப் படிப்பு படிக்கிறேன் பேர் வழி என்ற போர்வையில், ஓர் ஒளிப்பதிவாளனாக மாற என்னவெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அதையே அதிகமாகச் செய்தேன். சொல்லப்போனால் சட்டம் படித்ததை விட இதுவே அதிகம். அதைப்பற்றி இங்கே எழுதினால் சுயபுராணமாகிவிடும் அபாயமிருப்பதனால் அதைத்தாண்டி வருவோம். எதிர்காலக் கனவு வேறாகினும் சட்டப்படிப்பை பாதியில் விட ஒருபோதும் நான் விரும்பவில்லை. ஐந்து வருட படிப்பு முடிந்து கடைசி தேர்வு எழுதிய கையோடு சென்னை கிளம்பி வந்துவிட்டேன். வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. அந்த ஐந்து வருட இடைவெளியில் நான், மல்டி மீடியா படிப்பும் முடித்திருந்தேன். அதன் தகுதியில் கிராபிக் டிசைனராக பகுதி நேர வேலைக்கு போய்க் கொண்டிருந்தேன். (உண்மையில் சட்டப் படிப்புதான் பகுதி நேரமாகிருந்தது). அதே நேரம் விகடன் துவங்கிய மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பத்திரிக்கைப் புகைப்படக்காரனாக ஒரு ஆண்டு பயிற்சி பெற்றிருந்தேன். அது கொடுத்த நம்பிக்கையில் சென்னைப் பயணம் உற்சாகமானதாக இருந்தது. ஆனால் திரைத்துறை பிரவேசம் எல்லோரையும் போல எனக்கும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஏமாற்றம், துயரம், பசி, போட்டி, பொறாமை, ஏக்கம், கழிவிரக்கம் என எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்த பின்பே அது வசப்பட்டது. ஆட்டோகிராப், கனவு மெய்படவேண்டும், விஷ்வ துளசி, அய்யர் IPS, பொம்மலாட்டம், வரலாறு, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் உதவி/இணை ஒளிப்பதிவாளனாக பணிபுரிந்தேன். புகைப்படம், மாத்தியோசி போன்ற படங்களின் மூலம் ஒளிப்பதிவாளனாக பரிமாணித்தேன். இதனிடையே ஏழு வருடங்கள் கரைந்து போயிருந்தன. நான் திரைத்துறைக்கு வந்தது பிடிக்காததாலோ, அல்லது என் பெங்களூர் வாழ்க்கையும் அங்கே நான் பார்த்தவேலையும், அதன் வழி வந்த வருமானத்தையும், அதன் தகுதியில் துவங்கப்பட்ட என திருமண முயற்சியை தடுக்கும்விதமாக வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் பெங்களூரின் அனைத்து சவுகரியங்களையும் அங்கேயே விட்டு விட்டு நான் சென்னைக்கு இரயில் ஏறியதனாலோ என்னவோ தெரியவில்லை, என் தந்தை இரண்டு வருடங்கள் என்னிடம் பேசாமலிருந்தார். பின்பு பாண்டிச்சேரியில் ஒரு படப்பிடிப்பிலிருந்தபோது பார்த்துவிட்டு, அங்கே எனக்கிருந்த அங்கீகாரத்தின் அடிப்படையிலோ அல்லது நான் கொடுத்த வாக்கை (பொறுக்கியாவேன்) நானே மீறி இருந்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சியிலோ என்னிடம் பேசத் துவங்கினார். சில வருடங்களில் இறந்தும்போனார். எனக்கு ஒரு அண்ணன் உண்டு. பொதுவாக எங்கள் குடும்பத்தில் சொல்வார்கள். என் அண்ணன் அப்பா பிள்ளை, நான் தாய் பிள்ளை என்று. அது அப்படியே ஆயிற்று. இன்று வரை என் தாயே என் துணை, தோழி, நட்பு எல்லாம்..

இதோ இப்போது இரண்டு படங்கள் தயாராகிவிட்டன. 'தொட்டால் தொடரும்' கடந்த வெள்ளி அன்று வெளியாயிற்று. வரும் மாதத்தில் 'அழகு குட்டி செல்லம்' வெளியாகவிருக்கிறது. இடையே இந்த புத்தகம். இது நானே எதிர்பாராதது. நான்கைந்து வருடங்களாக என் வலைப்பூவில் எழுதிய ஒளிப்பதிவு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. இப்படியாக ஒரு புத்தகம் எழுதுவது என் நோக்கமல்ல. கற்றுக்கொள்ளும் ஆவலில், கற்றதை நினைவு கூர்ந்து ஒரு டைரி எழுதி வைப்பதைப்போல ஒரு முயற்சியாகவும், சக தொழில்நுட்பாளர்களுக்கு பயன்படும் விதமாகவும் எழுதிய கட்டுரைகள் அவை. விலையில்லா வலைப்பூ வசதியே இதை இணையத்தில் எழுதத் தூண்டியது. இன்று அது தமிழ் ஸ்டுயோ அருணின் முயற்சியில், விருப்பத்திலன் பேரில் புத்தகமாகியிருக்கிறது. அவருக்கு நன்றி சொல்லும் அதே வேளையில் மேலும் சிலருக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். சென்னைக்கு இரயிலேறி வந்தவனுக்கு திரைக்கலையின், திரைத்துறையின் ஆரம்பகால பாடங்களைக் கற்றுக்கொடுத்து, ஒளிப்பதிவுச்சார்ந்து எனக்கெழுந்த அத்தனை சந்தேகங்களையும் தீர்த்துவைத்தது மட்டுமில்லாமல், அவரின் dft புத்தகங்களைக் கொடுத்து படிக்கவைத்த என் ஆருயிர்த் தோழன் 'ஞானம்', இணையத்தில் என் கட்டுரைகளைப் படித்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இதனை புத்தக வடிவமாக்கிவிட வேண்டும் என்று மூன்று வருடங்களுக்கு முன்பே முயற்சி எடுத்த நண்பர் திரு. ஜகன் அவர்கள், பரவலாக எழுதப்பட்ட கட்டுரைகளை ஒரு புத்தகமாக தொகுத்தது மட்டுமில்லாமல் பிழைத் திருத்தம் செய்து, நடையிலிருந்த சுணக்கங்களை நீக்கி வாசிக்க இலகுவாக்கிய என் அன்பு நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் (ஆதி தாமிரா) போன்ற என் சகாக்களுக்கும் நன்றி சொல்ல பிரியப்படுகிறேன்.

நேற்று மேடையிலிருந்த ஆளுமைகள் அத்துணை பேரும் தனித்தனியாக என்னை முழுமையாகக் கவர்ந்தவர்கள். என் மதிப்புக்கும், நேசத்திற்கும் உரியவர்கள். பழக்கத்தின் அடிப்படையில் உண்டான மதிப்பில்லை அது. அவர்களின் செயல்பாடுகளின் வழி வந்த நேசம். ஒளிப்பதிவாளர் திரு.B.கண்ணன், இயக்குனர் திரு.சார்லஸ், இயக்குனர் திரு.ராம், இயக்குனர் திரு.பாலாஜி சக்திவேல், இயக்குனர் திரு. சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் திரு. விஜய் மில்டன், எழுத்தாளர் திரு. கௌதம சித்தார்த்தன், இயக்குனர் திரு. ரஞ்சித், இயக்குனர் நீயா நானா ஆண்டனி, தயாரிப்பாளர் திரு. துவார் சந்திரச்சேகர் (நேற்று அவரால் வரமுடியவில்லை) ஆகியவர்களைப்பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீங்களே அறிவீர்கள்.. அந்த பொதுக்காரணங்களே நான் அவர்களின் மீது கொண்டிருக்கும் மதிப்பை நீங்கள் உணர்ந்துகொள்ள போதுமானதாகயிருக்கும் என்று நினைக்கிறேன். மேலும், இப்புத்தகத்திற்கு அணிந்துரை ஒன்று வேண்டும் என்ற தேவை ஏற்பட்ட உடனே எனக்கு நினைவில் வந்தவர் இயக்குனர் திரு.மிஷ்கின் அவர்கள் தான். காரணம் அவரின் படைப்புகளை அவர் அணுகும் விதத்தினால் மட்டுமல்ல. கடந்த வருடம் என் நண்பர் ஒளிப்பதிவாளர் திரு. பாலாஜி ரங்கா அவர்களுடன் சென்று மிஷ்கின் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்த அனுபவத்தின் வழியாகவும், அவர் இப்புத்தகத்திற்கு அணிந்துரை தந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். இயக்குனர் மிஷ்கினாக நாம் அறிந்திருப்பதைப்போலவே தனிப்பட்ட மனிதராகவும் அவர் தனித்துவமானவர் என்று நம்புகிறேன். மேலும் கருவிகளைப் பற்றிய இந்தப்புத்தகத்திற்கு படைப்பாளுமை உள்ள இயக்குனர்களிலிருந்து ஒருவர் அணிந்துரை கொடுப்பது சிறப்பாக இருக்கும் என்றும் கருதினேன். படைப்பாளுமை உள்ள பல இயக்குனர்களை தமிழ்த்திரை உலகம் பெற்றிருந்தபோதும், மிஷ்கின் அவர்களிடம் கேட்பது என் விருப்பமாக இருந்தது. அருண் அவர்கள் மூலமாக கேட்டபோது பெரிய மறுப்பேதும் சொல்லாமல் அவர் சம்மதித்ததும், என்னை சந்தித்துப் பேசியதும், அணிந்துரை கொடுத்ததும் அவரின் பெரும்தன்மைக்கு மற்றுமொரு சான்று. அவரையும் உள்ளடக்கியே இந்த நன்றியின் பகிர்தலை செய்ய நினைக்கிறேன்.

எந்த விழாவிற்குப் போனாலும் மேடையில் நன்றி சொல்லப்படுவதை பார்க்கும்போதெல்லாம்என்னடா இது.. இந்த நன்றியை தனிப்பட்ட முறையில் சொல்லிவிடக்கூடாதா?! அதை ஏன் மேடையில் சொல்லி விளம்பரம் செய்து கொள்கிறார்கள்என்றொரு கேள்வி எனக்கு இருந்து வந்திருக்கிறது இத்தனை காலமும். ஆனால், நமக்கென அது வாய்க்கும்போதுதான் அதன் தேவையும், முக்கியத்துவமும் புலனாகிறது. நன்றியோ, மன்னிப்போ அதை பொதுவெளியில் செய்யும் போது அதன் அடர்த்தி அதிகரிப்பதையும், அதன் உள்ளார்ந்த நோக்கம் முழுமையாக பூர்த்தியடைவதையும் நேற்றுதான் முழுமையாக உணர்ந்தேன். காரணம், என் வாழ்வில் என்னை மையப்படுத்திய முதல் மேடை அதுதான். அது தந்த பூரிப்பில், குதூகலித்த மனம் அதற்கு காரணமானவர்களை நன்றியோடு நினைத்துக்கொள்கிறது. அதன் வெளிப்பாடே நேற்றைய மேடைப்பேச்சும், இந்தக் கட்டுரையும். மேலும் நேற்று விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்த அத்துணை நண்பர்களையும் என்றென்றும் நினைவில் கொள்வேன். காரணம் நேற்றைய விழா எனக்குள் உண்டாக்கிய எதிர்கால நம்பிக்கை அளப்பரியது. அனைவருக்கும் நன்றி.


நேற்றைய மேடை, நான் கனவு கண்ட மேடையல்ல. அது என் பயணத்தின் முடிவுமல்ல. என் கனவும், பயணமும் வேறொரு மேடையை நோக்கியதாகும். ஒருவேளை அதன் முடிவு, மேடை என்ற ஒன்றின் அவசியமில்லா தன்மையை, எனக்கு போதிக்கலாம். மேடை என்பதே ஒருவித மாயத்தோற்றம்தான், அது ஒரு இலக்கு, அல்லது ஒரு திசையை நோக்கிய பயணத்தை நெறிப்படுத்த உண்டாக்கிய அடையாளக்குறியீடு என்ற புரிதலையும் அது வழங்கலாம். எனினும்.. நேற்றைய மேடை, என் வாழ்வில் நான் திட்டமிடாதது. தன் வழியே வந்தது. அது எவ்விதத்திலும் என்னை பாதித்துவிடக்கூடாது என்று மனதார விரும்புகிறேன். என் சிந்தனையை, பயணத்தை அது திசை திருப்பிவிடக்கூடாது என்றும் விரும்புகிறேன். ஆயினும் பயணத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக, கிரியா ஊக்கியாக கருதிக்கொள்வதிலிருக்கும் மன முதிர்ச்சிக்காக அதை முழுமையாக ஏற்கிறேன். அதற்குக் காரணமான அத்துணை உள்ளங்களையும் என்றென்றும் நன்றியோடு நினைவில் கொள்வேன்.    




































கருத்துகள்

  1. ஒளி எனும் மொழி நூல் - தங்களின் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள். தங்களின் வாழ்வின் இலட்சியங்கள் அனைத்தும் விரைவில் பூர்த்தியடையட்டும்.
    உங்களுடைய சில கட்டுரைகளை படித்து இருக்கிறேன். ஒளி எப்படி எல்லாம் அதன் பாய்ச்சலில் புகைப்படத்தை அழகாக்குகிறது என ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். ஓவியத்தில் எனக்கு ஆர்வம். அது வரைய ஒளி எப்படி யெல்லாம் விழுந்தால்... என எனக்கு உங்கள் கட்டுரை படிக்க ஆசையாக இருந்தது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு ஏற்ப முயன்று வெற்றி அடைந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். நன்றி சகோ.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...