முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டிஜிட்டல் சினிமாவின் துவக்கம்:


நாம் விரும்புகிறோமோ இல்லையோ.. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, டிஜிட்டல் தொழில்நுட்பம் தன் ஆளுமையை திரைத்துறையின் மீது எவ்வித சந்தேகத்துக்குமிடமின்றி அழுத்தமாக நிறுவி விட்டது. இது சிலருக்கு விசித்திரமாக கூட இருக்கலாம். கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செல்லுலாயிட் படச்சுருள் (Film) மூலமே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு, திரையிடப்பட்டு வந்தன. அந்த நாட்கள், ஒரு கண்கட்டுவித்தையைப் போல திடுமென காணாமல் போய்விட்டன. இன்னும் அதிக நாட்கள் கூட ஆகிவிடவில்லை. செல்லுலாயிடில் படம் பிடித்து, லேபிற்கு அனுப்பி, டெவலப் செய்து, பிரதி எடுத்துப் பார்த்து, டெலிசினி செய்து, படத்தொகுப்பு செய்த காலம் சட்டென பழங்கதையாகிவிட்டது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எல்லாவுட்டுகளும் நம் கண்முன்னே டிஜிட்டல் மயமாகிவிட்டன.

1980 - களில் சோனி நிறுவனம் தன்னுடைய ‘analog - HDVS professional video’ கேமராக்களின் துணையுடன் ‘Electronic Cinematography’ என்னும் கருத்தாக்கத்தை முன்மொழிந்தது. அதன் பலனாக 1987 -இல் ‘Julia and Julia’என்னும் படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டது. அனலாக்கில் இயங்கிய ‘Sony HDVS’ கேமரா இதில் பயன்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சில படங்கள் அப்போது வளர்ந்து வந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை (HDCAM) பயன்படுத்தி எடுக்கப்பட்டன. ஆயினும் அவை எல்லாம் பரிசோதனை முயற்சிகளாக மட்டுமே இருந்தன. வணிகப் படங்களிடையே எந்தவொரு தாக்கத்தையும் அவை ஏற்படுத்தவில்லை.




 பிறகு, இந்த மாபெரும் மாற்றம் நிகழ துவக்கப்புள்ளியை வைத்தவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ‘ஜார்ஜ் லூக்காஸ்’(George Lucas). 1999 -ஆம் ஆண்டு ஜூன் மாதம், தன்னுடைய "Star Wars: Episode II, the Attack of the Clones" என்னும் படத்தை முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுக்கப்போவதாக அவர் அறிவித்த அந்த நாள்தான், இவை எல்லாவற்றிற்குமான துவக்கம். பெரும் முதலீட்டில் முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் அதுவே ஆகும். அப்படத்திற்காக Sony நிறுவனமும் Panavision நிறுவனமும் இணைந்து ஒரு புதிய கேமராவை வடிவமைத்தன. அப்போதுதான் முதல் ‘CineAlta’ வகை கேமரா பிறந்தது. ‘Sony HDW-F900’ என்ற பெயர் கொண்ட அக்கேமரா,  ‘Panavision HD-900F’ எனவும் அழைக்கப்பட்டது. அதாவது ஒரு கேமராவிற்கு இரண்டு பெயர்கள். 2002 - மே மாதத்தில் படம் வெளியாயிற்று. பெரும்பாலான திரையரங்குகளில் செல்லுலாயிட் பிரதியாகவும் சில திரையரங்குகளில் மட்டும் டிஜிட்டலாகவும் திரையிடப்பட்டது. காரணம், அன்று டிஜிட்டல் திரையரங்குகள் அவ்வளவாக நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. ஒரு புதிய தொழில்நுட்பத்தின் வரவை எல்லோரும் ஆச்சரியமாகவும், சந்தேகத்தோடும் பார்த்துக் கொண்டிருந்த அதே வேளையில் ஹாலிவுட்டின் பெரும் இயக்குனர்களான ‘Steven Soderbergh’, ‘Robert Rodriguez’ மற்றும் ‘Michael Mann’ போன்றோர்கள் இத்தொழில்நுட்பத்தை வரவேற்றார்கள். அதன் சாத்தியத்தை புரிந்துக்கொண்டார்கள். தங்கள் படங்களில் பயன்படுத்தவும் துவங்கினார்கள்.

Sony HDW-F900

 Steven Soderbergh, தன்னுடைய ‘Full Frontal’(2002) திரைப்படத்தை டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தி எடுத்தார். அதில் ‘Canon XL-1s’ வகை கேமரா பயன்படுத்தப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை அவர் தொடர்ந்து டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்திதான் திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். அவர் படங்களின் ஒளிப்பதிவாளர் ‘Peter Andrews’, இதற்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காமல், டிஜிட்டலை விரும்பி பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான காரணமிருக்கிறது. அது வேறொன்றுமில்லை, ‘Peter Andrews’ என்ற மாற்றுப்பெயரில் ஒளிப்பதிவாளராக செயல்படுவதும் அவரேதான். 

Canon XL-1s
Robert Rodriguez, ஒரு முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்ப ஆதரவாளர். லூக்காஸால் வழி நடத்தப்பட்டவர். லூக்காஸின் தொழில் கூடத்தை பயன்படுத்திக்கொள்ளும் படி அவராலேயே அழைக்கப்பட்டவர். தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்தே வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படங்களை எடுத்து வருபவர்.  ‘Rebel With out a Crew’ என்னும் அவரின் புத்தகம், பல புதிய தலைமுறை படைப்பாளிகளுக்கு உத்வேகத்தை தந்திருக்கிறது. 1990-களில் ‘independent film’ என்னும் புதிய பிரிவின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்திருக்கிறது. மேலும் அவர், இயக்குனர் ‘Quentin Tarantino’ அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பருமாவார். இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றிருக்கிறார்கள். இதில் சுவாரசியமான முரண் என்னவென்றால், க்வென்டின் டரான்டினோ முழுமையாக டிஜிட்டலை எதிர்ப்பவர். இன்றுவரை செல்லுயாயிடில்தான் திரைப்படமெடுப்பேன் என்று அடம்பிடிப்பவர். டிஜிட்டலில் மட்டும்தான் படமெடுக்க முடியும் என்ற நிலை வந்தால், திரைப்படம் எடுப்பதையே நிறுத்திவிடுவேன் என்று அறிக்கை விட்டவர்.  

Michael Mann, தன்னுடைய ‘Collateral’(2004) திரைப்படத்தில் ‘Viper Film Stream High-Definition’ கேமராவைப்பயன்படுத்தினார். அதற்கு முன்பாக ‘Ali’(2001) திரைப்படத்தில் சில காட்சிகளுக்கு டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தி இருந்தபோதும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அவர் டிஜிட்டலில் எடுத்தார். காரணம் அப்படத்தின் கதை முழுவதும் ஓர் இரவில் நடப்பதாக வருகிறது. நகரத்தின் இரவு நேர காட்சிகளை படம் பிடிக்க டிஜிட்டல் பேருதவியாக இருந்ததனால் டிஜிட்டலில் அப்படத்தை எடுத்தார். அன்று முதல் இன்று வரை அவர் டிஜிட்டலைத்தான் பயன்படுத்துகிறார். 


டிஜிட்டல் சினிமா என்ற சொல்லாடல், அத்துறையின் எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கிய நிலையையே குறிக்கிறது. ஆயினும், டிஜிட்டல் இசைப்பதிவு, படத்தொகுப்பு போன்றவை பல வருடங்களுக்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டன. இந்தியாவை பொருத்தமட்டும், படத்தொகுப்பில் ‘Avid’ தொழில்நுட்பம் கமலின் மகாநதி (1994) திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமாயிற்று. இந்தியாவில் ஆவிட்டை பயன்படுத்திய முதல் படமாகவும், உலக அளவில் நான்காவது படமாகவும் அது இருந்தது. இத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள் இன்று பிரபலமாக இருக்கும் ‘QUBE Cinema’ தொழில்நுட்பத்தை வழங்கும் ‘Real Image Media Technologies’ நிறுவனத்தினர். இளையராஜா இசையமைத்து 1986 - இல் வெளியான ‘புன்னகை மன்னன்’ திரைப்படம் மூலம் தமிழில் ‘டிஜிட்டல் ஒலிப்பதிவை’ காலம் துவங்கி விட்டிருந்த போதும், 1992 - இல் வெளியான ‘ரோஜா’ படத்தில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமானை தொடர்ந்து டிஜிட்டல் ஒலிப்பதிவுத்துறை இந்தியாவில் மிக வேகமாக பரவியது. 1995-இல் வெளியான ‘குருதிப்புனல்’ படத்தின் மூலம் ‘Surround Sound' (Dolby) தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகமாயிற்று. அதைத்தொடர்ந்து, 1996 - இல் வெளியான ‘கருப்பு ரோஜா’ திரைப்படம் இந்தியாவின் முதல் ‘dts'படமாகவும் அமைந்தது. 

ஆயினும் டிஜிட்டல் சினிமா புரட்சி என்பது எங்கே துவங்குகிறது என்று பார்த்தால் அது டிஜிட்டல் கேமரா மற்றும் டிஜிட்டல் திரையிடல் ஆகிய பிரிவுகளின் வளர்ச்சியைத்தான் பார்க்கவேண்டியதிருக்கிறது. டிஜிட்டல் சினிமா என்னும் துறை, முக்கியமான மூன்று பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

Production - ஒரு திரைப்படம் எடுக்கப்பட்ட முறையையும், அது பயன்படுத்திய தொழில்நுட்பத்தையும் குறிப்பது. இங்கே டிஜிட்டல் கேமரா, ஹார்டிஸ்க், ஒளி, ஒலி பதிவுகளில் வந்துவிட்ட டிஜிட்டல் தாக்கம் மற்றும் பிற்தயாரிப்பு பணிகளில் இடம் பெறும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களான, CG, DI போன்றவற்றை உள்ளடக்கியது. அதாவது திரைப்படத்தயாரிப்பில் நுழைந்து விட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஆளுமையைக் குறிப்பது.

Distribution - தயாராகிவிட்ட திரைப்படம் திரையரங்கிற்கு எவ்வடிவில் கொண்டுச் செல்லப்படுகிறது என்பதைக் குறிப்பது. ஹார்டிஸ்க், ஒளிநாடாக்கள், சிடிக்கள் மற்றும் செயற்கைகோள் என பல வழிகளில் திரைப்படங்கள் இன்று திரையரங்கை அடைகின்றன.

Projection -  திரையரங்கில் ஒரு திரைப்படம் எப்படி திரையிடப்படுகின்றன என்பதைக் குறிப்பது. இன்று உலகின் பெரும்பாலான திரையரங்குகள் டிஜிட்டல் திரையிடலையே பின்பற்றுகின்றன.

திரைப்படத் தயாரிப்பில் முதன்மையான இடத்தை கேமராக்கள் பிடிக்கின்றன. அவ்விடத்தை டிஜிட்டல் கேமராக்களான ‘Red One, Red MX, Red Epic, Red Scarlet, Alexa Classic, Alexa XT, Black Magic, Canon 5D/7D, Canon c500/c300, Sony F65/F55/F5’ போன்றவை இட்டு நிரப்பி பல காலமாகிவிட்டதையும், இதன் விளைவாக படச்சுருள்களின் இடத்தை டிஜிட்டல் டிஸ்க்குகள் பிடித்துக்கொண்டதையும் நாம் அறிவோம். மேலும் படத்தொகுப்பு, வண்ணம் ஒழுங்கமைத்தல், CG எனப்படும் கணினி வேலைப்பாடுகள் போன்றனவும் கணினியின் துணைகொண்டு நிகழ்த்தப்படுகின்றன.

பின்னர், விநியோகம். அதாவது, திரையரங்கிற்கு, ஒரு திரைப்படத்தின் பிரதி எப்படி வருகிறது, எந்த வடிவத்தில் வருகிறது என்பது. அதைப் பார்க்கும் முன்பாக, திரையரங்கில் திரையிடப் பயன்படும் டிஜிட்டல் புரஜெக்டர்களைப் பற்றி சற்றே பார்த்துவிடலாம். 


அக்டோபர் 23, 1998 ஆம் ஆண்டு, ‘Texas Instruments’ நிறுவனம் தன்னுடைய ‘DLP CINEMA Projector Technology’-ஐப் பயன்படுத்தி முதன்முறையாக டிஜிட்டல் திரையிடலை வட அமெரிக்காவின் ஐந்து திரையரங்குகளில் திரையிட்டு காட்டினார்கள். அதைத்தொடர்ந்து அதே நிறுவனத்தினரால் ஜூன் 18, 1999-இல் இரண்டாவது தடவையாக டிஜிட்டல் திரையிடல் நான்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டப்பட்டது. இவ்விரண்டு திரையிடல்களும் டிஜிட்டல் திரையிடலின் மீது நம்பிக்கையைக் கொண்டுவந்தன. அதைத்தொடர்ந்து 2000-ஆம் ஆண்டு ‘Society of Motion Picture and Television Engineers’ என்னும் அமைப்பு டிஜிட்டல் சினிமாவிற்காக தர நிர்ணயித்தைக் (standards) கொண்டு வர முடிவு செய்தது. 

பிப்ரவரி 2000-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் டிஜிட்டல் திரையிடல் நடைமுறைக்கு வந்தது. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ‘Toy Story II’ திரைப்படத்தின் மூலம்தான் அது நிகழ்ந்தது. அவ்வாண்டின் இறுதிக்குள்ளாக வட அமெரிக்காவில் பதினைந்து டிஜிட்டல் திரையரங்குகளும், மேற்கு ஐரோப்பாவில் பதினொன்றும், ஆசியாவில் நான்கும், தென் அமெரிக்காவில் ஒன்றும் என டிஜிட்டல் திரையரங்குகள் பரவத் துவங்கியிருந்தன.

2002, மார்ச்சில் ‘Disney, Fox, MGM, Paramount, Sony Pictures Entertainment, Universal மற்றும் Warner Bros. Studios’ போன்ற பெரும் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து ‘ Digital Cinema Initiatives’(DCI) என்னும் அமைப்பை ஏற்படுத்தி டிஜிட்டல் சினிமாவின் தொழில்நுட்ப வரையறைகளை நிர்ணயிக்கத் துவங்கின. டிஜிட்டல் சினிமாவின் தொழில்நுட்பப் பயன்பாடு, நம்பகத்தன்மை மற்றும் தரம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்கள் (studios), விநியோகிஸ்தர்கள் (distributors) மற்றும் திரையீட்டாளர்கள் (exhibitors) ஆகியோர்களுக்கு இடையேயான பொதுவான தொழில்நுட்ப விதிகளையும், நடைமுறையும் வகுப்பது இதன் நோக்கம். இதன் படி, நிர்ணயிக்கப்பட்ட தரவிதிகளுக்கு உட்பட்டு டிஜிட்டல் சினிமாவின் செயல்பாடுகள் அமைய ஏதுவான சூழலை உண்டாக்குவது. அதாவது கேமரா தயாரிப்பவர்கள், திரைப்படமெடுப்பவர்கள், புரஜெக்டர்கள் தயாரிப்பவர்கள், பிற்தயாரிப்பு பணியிலிருப்பவர்கள், திரையிடலுக்கு தேவையான டிஜிட்டல் பிரதிகளை தயாரித்து தருபவர்கள், திரையிடுபவர்கள் என பலரும் ஒழுங்கமைக்கப்பட்ட, நேர்த்தி செய்யப்பட்ட ஒரு நடைமுறையை பின்பற்றி, செயலாற்ற வழிவகை செய்யப்பட்டது.   

ஏப்ரல், 2004-இல் ‘American Society of Cinematographers’-இன் உதவியோடு 2K மற்றும் 4K தரத்திலான பிம்பங்களை DCI பரிசோதித்துப்பார்த்தது. இதன் அடிப்படையில்  ‘JPEG2000’ என்னும்  ‘compression’-ஐ அடிப்படைத் தரமாக நிர்ணயித்தது. 

ஜூலை, 2005 ஆம் ஆண்டு ‘DCI Specification’ என்னும் விவரக்குறிப்பை வெளியிடப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டே இன்றைய டிஜிட்டல் சினிமா உலகம் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், இந்த தர நிர்ணயக் குறிப்புகள், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டு பின்பற்றப்படுகின்றது.

3D Camera Rig
ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்டல் திரையரங்குகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றது. 2006 ஆம் ஆண்டுவாக்கில் டிஜிட்டல் சினிமா அதன் அடுத்தக் கட்டத்தை எட்டியது. ஆம்.. டிஜிட்டல் 3D என்னும் வளர்ச்சிதான் அது.  மார்ச் 2007-இல் வெளியான Disney's Meet the Robinsons என்னும் திரைப்படம்  ‘Real D Cinema's stereoscopic 3D technology’-ஐப் பயன்படுத்தி 600 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 2009-இல் வெளியான ஒரு படத்தின் மூலம் 3D திரைப்படங்கள் அசுர வளர்ச்சியைக் கண்டன. அப்படத்திற்குப் பிறகு ஏறக்குறைய, எல்லா ஹாலிவுட் இயக்குனர்களும் 3D-இல் படமெடுக்க துவங்கினார்கள்.  ‘Stereoscopic 3D Technology’ என்னும் அத்தொழில்நுட்பம் இன்று உலகமுழுவதும் பரவலாக பயன்பாட்டில் இருப்பதை நாம் அறிவோம். அந்தப்படம் ‘அவதார்’.

ஆகஸ்ட் 2006-இல் வெளியான ‘Moonnamathoral’ என்னும் மலையாளப்படம்தான் இந்தியாவின் முதல் டிஜிட்டல் சினிமா. Emil and Eric Digital Films என்னும் திருச்சூரைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த இப்படம் முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. செயற்கைக்கோள் மூலமாக திரையிடப்பட்ட திரைப்படம் இது. 

தமிழில், 2002 - இல் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘முத்தம்’ திரைப்படம் ‘Digital Betacam’- ஐ பயன்படுத்தி எடுக்கப்பட்டது. 2004-இல் திரு. பி.சி.ஸ்ரீராம் இயக்கிய ‘வானம் வசப்படும்’ என்னும் தமிழ்த் திரைப்படம் டிஜிட்டல் கேமராவைப் ('Panasonic AJ HDC 27') பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்த போதும் அதன் திரையிடல், படச்சுருளின் மூலமாகத்தான் நிகழ்ந்தது. 2005-இல் வெளியான கமலஹாசனின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’திரைப்படமும் அப்படியே! 2009-ஆம் ஆண்டு வெளியான, ஜே.எஸ்.நந்தினி இயக்கிய ‘திரு திரு, துறு துறு’திரைப்படம்தான் முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, டிஜிட்டல் முறையிலேயே திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படமாகும்.

2009 - இல் வெளியான ‘Slumdog Millionaire’ திரைப்படம்தான் டிஜிட்டல் சினிமாவிற்கான அகிலம் தழுவிய ஒரு அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்தது. ஆம்.. அத்திரைப்படம்தான் முதல் ‘Academy Award for Best Cinematography’ விருதை வாங்கியது. அதன் மூலம் டிஜிட்டல் ஒளிப்பதிவும், டிஜிட்டல் சினிமாவும் தகுதி வாய்ந்த தொழில்நுட்பங்களாக அங்கீகரிக்கப்பட்டன. 

2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 90% க்கும் அதிகமான திரையரங்குகள் டிஜிட்டல் திரையிடலுக்கு மாறிவிட்டன. 2015-க்கு உள்ளாக உலகமுழுவதும் உள்ள திரையரங்குகள் முழுமையாக டிஜிட்டல் திரையிடலுக்கு மாறிவிடும் என கருதப்படுகிறது. 

சரி, இந்த டிஜிட்டல் சினிமா, எப்படி திரையிடப்படுகிறது?

திரையரங்கில் ஒரு திரைப்படத்தை டிஜிட்டலாக திரையிட இரண்டு ஆதாரமான கருவிகள் வேண்டும். ஒன்று டிஜிட்டல் புரொஜெக்டர் (digital projector) மற்றொன்று சர்வர் என்று அழைக்கப்படும் கணினி (computer known as a ‘server’).

திரைப்படங்கள், திரையரங்கிற்கு டிஜிட்டல் கோப்புகளாக வழங்கப்படுகின்றன. இதை ‘Digital Cinema Package(DCP)’ என்று அழைக்கிறார்கள். பொதுவாக ஒரு திரைப்படம் 90GB முதல் 300GB அளவில் இருக்கும். இது ஒரு  Blu-ray disc-இல் இருப்பதைவிட இரண்டிலிருந்து ஆறு மடங்கு அதிக தகவல்களாகும். இவற்றை ‘hard-drive’ அல்லது ‘satellite’ அல்லது ‘fibre-optic broadband’ மூலமாக திரையரங்கிற்கு கொண்டு சேர்க்கிறார்கள். இன்றைய தேதியில் ‘hard-drive’ மூலமாக கொண்டுச் சேர்ப்பதைத்தான் பொதுவான நடைமுறையாக உலகம் முழுவதும் பின்பற்றுகிறார்கள்.

திரையரங்கை வந்தடைந்த ‘DCP’ கோப்புகள், USB port துணைகொண்டு சர்வர் என்னும் கணினிக்கு மாற்றப்படுகிறது. இதற்கு ‘ingesting’ என்று பெயர். பொதுவாக, இவை மறைகுறியாக்கப்பட்ட(encrypted) கோப்புகளாக இருக்கும். இக்கோப்புகளை பயன்படுத்த தேவையான மறைவிலக்க விசைகள் (decryption keys) தனியாக கொடுக்கப்படும். சில பாதுகாப்பு அம்சங்களுக்காகவே இப்படியான என்கிரிப்ஷன் வழிமுறைகள் உதவுகின்றன. இதில், அத்திரைப்படத்தை, ஒரு திரையரங்கில் திரையிட எத்தனை நாட்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும், அத்திரையரங்கில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் புரொஜெக்டர் மற்றும் சர்வர் போன்றவற்றின் தகவலும் அடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட திரையரங்கிற்கென வாங்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் பிரதி மற்றொரு திரையரங்கில் திரையிடப்படுவதை தடுக்க முடிகிறது. 

நான்கு நிறுவனங்களின் டிஜிட்டல் புரஜெக்டர்களைத்தான் ‘DCI’, தன் தர விதிகளின் அடிப்படையில் டிஜிட்டல் சினிமாவிற்கான திரையிடலுக்கு அனுமதித்திருக்கிறது.  Sony, Barco, Christie மற்றும் NEC ஆகிய நிறுவனங்கள்தான் அவை. சோனி தனக்கென தனியாக ‘SXRD technology’ என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மற்ற மூன்று நிறுவனங்களும் ‘Texas Instruments (TI)’ நிறுவனத்தின் ‘Digital Light Processing’ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன. 

வீடுகள், கல்விக்கூடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் புரொஜெக்டர்களைப் போலத்தான் இந்த ‘D-Cinema projectors’-கள் என்றாலும், அடிப்படைப்படையாக இரண்டு முக்கிய காரணிகளில் இவை மற்ற சாதாரண புரொஜெக்டர்களிலிருந்து வேறுபடுகின்றன. முதலில் இந்த புரொஜெக்டர்கள் ‘DCI specification’ வழங்கும் தர விதிகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டும். இரண்டாவதாக, அதில் ‘anti-piracy devices’ என்னும் கட்டுப்பாட்டு அமைப்பு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் ஒரு திரைப்படத்தின் ‘காப்புரிமை’(copyright) பாதுகாக்கப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்த, ஒரு டிஜிட்டல் புரொஜெக்டர் திரையரங்கிற்கு விற்பனை செய்யப்படுவதற்கு முன்பாக DCI-ஐ இடம் அனுமதி வாங்க வேண்டும். அவர்கள்  CTP (Compliance Test Plan) என்னும் முறையில் இதனை பரிசோதித்து அனுமதி தருகிறார்கள். அதன் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட கோப்புகளும் (encrypted), அதை திரையிட தேவையான  ‘decryption keys’(KDM'S)-களும் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த KDM இல்லை என்றால் எந்தத் திரைப்படத்தையும் திரையிட முடியாது. 

டிஜிட்டல் திரையிடல் மூலமாக பெறப்படும் முக்கியமான பயன்கள் இரண்டு. ஒன்று தரமான, துல்லியமான ஒளி, ஒலிகளைப் பெறுதல். அதாவது பல காட்சிகளுக்கு பிறகும் முதல் நாள் திரையிடலைப்போலவே, தரமான பிம்பத்தையும்(Image), ஒலியையும் (Sound) பெறுவது. இரண்டாவது ஒரு திரையிடலுக்குத் தேவையான பிரதியை (Print) தயாரிப்பதற்கான செலவைக் குறைப்பது. அதாவது, செல்லுலாயிடு படச்சுருளில் தயாரிக்கப்படும் பிரதியை விட டிஜிட்டல் பிரதி செலவு குறைந்ததாகும். 

இந்தியாவில் ‘Real Image Media Technologies’ மற்றும் ‘UFO Moviez India Limited’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் டிஜிட்டல் திரையிடலுக்கான தொழில்நுட்பத்தை வழங்குகின்றன. இதில்  ‘UFO’ செயற்கைகோள்களின் வாயிலாக திரையரங்கிற்கான பிரதிகளை வழங்குகிறது. மேலும் ‘world’s largest satellite-based Digital cinema network’ என்ற பெயரும் அதற்கு இருக்கிறது. ஆயினும் தமிழ்நாட்டில் பெரும்பாலும், டிஸ்க் (DVD) மூலமாகத்தான் விநியோகிக்கப்படுகிறது என்று அறியமுடிகிறது. உலகமுழுவதும் 4000 திரையரங்குகளுக்கு தன் சேவையை அது வழங்குகிறது. மற்றொரு புறம் ‘Real Image Media Technologies’ தன்னுடைய டிஜிட்டல் திரையிட சேவைக்கு ‘Qube Cinema’ என்று பெயரிட்டிருக்கிறது. Hard Disc - மூலமாக திரைப்படங்களை அது விநியோகிக்கிறது. இந்தியா முழுவதும் 2000 திரையரங்குகளில் தன் சேவையை அது வழங்குகிறது. மேலும், புகழ்பெற்ற ‘Prasad Film Laboratories’ நிறுவனமும் ‘Prasad Xtreme Digital Cinema Network(PXD) என்னும் பெயரில் தற்போது டிஜிட்டல் பிரதியை தயாரித்து வழங்கும் தொழில்நுட்பத்தை துவங்கியிருக்கிறது.  

டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சியால், இன்று பல புதிய தொழில்நுட்ப சாத்தியங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. Computer Graphics, 3D Modeling, Chroma Keying, Compositing, Motion Capture, Animatronics, Digital intermediate, Stereoscopic 3D, Auro-3D, Dolby Atmos என அதன் கிளைகள் நீண்டுக் கொண்டே போகிறது. டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சிப்பாதையில், வருங்காலம் எண்ணற்ற சாத்தியங்களை உள்ளடக்கிருக்கிறது என்பதை வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பறை சாற்றுகின்றன. காலத்தின் போக்கில் இவை அனைத்தும் நம்மை வந்தடையத்தான் போகின்றன. ஆகையால், அவற்றைப்பற்றிய புரிதலை நாம் வளர்ந்துக்கொள்வது வளர்ச்சிப்பாதைக்கு வலுசேர்ப்பதாக அமையும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 

டிஜிட்டல் சினிமாத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் பெயர்கள் இவை. 

List of digital cinema companies
-------------------------------------
Barco — digital projector manufacturer
Blackmagic Design — digital cinema camera and distribution equipment manufacturer
Christie — digital projector manufacturer
Cinedigm — Digital Cinema Software, Distribution
Deluxe Digital Studios — distributor and theater system integrator
Dolby Laboratories — theater system integrator
Doremi Labs — Digital server and theater management system manufacturer
GDC Tech — Digital server and theater management system manufacturer
IMAX — digital projector manufacturer
Kinoton — manufacturer of digital projection solutions
Kodak — theater system integrator
NEC — digital projector manufacturer
MasterImage 3D — 3D cinema and mobile display technology
Panavision 3D — 3D cinema display technology
Qube Cinema — Digital Cinema mastering, distribution and server products manufacturer
RealD Cinema — 3D cinema display technology
Rohde & Schwarz DVS GmbH; — Mastering, Broadcasting Manufacturer
RED Digital Cinema Camera Company — digital cinema camera manufacturer
Silicon Imaging — digital cinema camera manufacturer
Sony — manufacturer of 4K digital projector, cinema camera manufacturer and digital cinema servers and theater system integrator
Technicolor — distributor and theater system integrator
Texas Instruments — developers of DLP Cinema projector technology
UFO Moviez — world's largest satellite based Digital Cinema
dcinex — theater system integrator & digital server manufacturer
Digital Projection; partnered with Texas instruments was the first company to use DLP chip projectors

குறிப்பு:  ‘நிழல்’ இதழில் வெளியானக் கட்டுரை

கருத்துகள்

  1. டிஜிட்டலின் வரலாற்றையும், பல தொழில்நுட்ப தகவல்களையும் அருமையாக விளக்கும் பதிவு.

    ஒரு புதிய தொழில்நுட்பம் முதலில் எதிர்ப்பை சந்திப்பதும் பின்னர் வரவேற்கப்படுவதும் இயல்பு ! அந்த தொழில்நுட்பம் எந்த துறையை சார்ந்ததோ, அந்த துறையின் நிபுணர்களின் ஒரு பிரிவினராலேயே அது எதிர்க்கப்படும் !

    காரணம் அந்த புதிய நுட்பத்துக்கு முந்திய மாதிரியை பயன்படுத்தி வெற்றிக்கண்டவர்களுக்கு எங்கே புதிய தொழில்நுட்பத்தை சரியாக கையாள முடியாமல் போய்விடுமோ என்ற உளவியல்ரீதியிலான பயம் ஏற்படுவதே காரணம் !

    இங்கே எனக்கு கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் ஞாபகம் வருகிறது...அறுபது வருடங்களுக்கு முன்னால் கெளபாய் நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கி, என்பதை கடந்த இன்றும் ஆஸ்க்காருக்கு தகுதியான படங்களை அவரால் இயக்கமுடிகிறதென்றால்... எந்த தொழில்நுட்ப மாற்றத்துக்கும் தன்னை அவர் தகுதியாக்கி கொள்வதும் ஒரு காரணம் அல்லவா ?

    எனது புதிய பதிவு : " த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/03/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  2. Thanks for your information.......Enjoy watching Tamil TV shows online Abroad with best visuals and audio.

    பதிலளிநீக்கு
  3. Awesome History of digital technology ............Packages from ChannelLive are a mix of Genres like Drama, Music, Comedy, News, Short films, Education and everything you need at the most affordable price.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...