முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘படச்சுருள்’ - தமிழ் ஸ்டியோவின் அச்சு இதழ்


தமிழ்ச் சூழலில், துறைச்சார்ந்த கருத்துகளை, பார்வைகளை, விவாதத்தை, விமர்சனத்தை முன்னெடுக்கிற இதழ்கள் குறைவு. பல பத்திரிக்கைகள் தமிழில் வெளிவருகின்றன. பெரும்பாலும் அவை பல துறைகளைப்பற்றி பேசக்கூடியவைகளாகத்தானிருக்கின்றன. குறிப்பிட்ட, ஒரு துறைச்சார்ந்து பேசக்கூடிய, இயங்கக்கூடியத் பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. ஆயினும், அவை சிறுபத்திரிக்கைகள் என்ற அளவில்தான் இருக்கின்றன. குறிப்பாக திரைப்படம் சார்ந்து பேசக்கூடிய சிறுபத்திரிக்கைகள் சில இருக்கின்றன. வணிக இதழ்கள் விவாதிக்கும் சினிமா என்பது நடிகை நடிகர்களே  பிரதானமாக கொண்டது என்பதை நாம் அறிவோம். திரைப்படம், அது பேசும் கருத்து, படைப்பாற்றல், அழகியல், அரசியல், தொழில்நுட்பம் பற்றி குறிப்பிடும் படியான சில சிறுபத்திரிக்கைகள் தான் பேசுகின்றன. அவ்வகையில், தமிழ் ஸ்டியோவிலிருந்து இன்று (21/06/15) ‘படச்சுருள்’ என்னும் இதழ் துவங்கப்பட்டுள்ளது. 

துவக்க விழாவில் இயக்குனர்கள் திரு.ஞானராஜசேகரன், திரு.பாலாஜி சக்திவேல், ஒளிப்பதிவாளர் திரு.ரவிவர்மன், ஓவியர் திரு.மருது மற்றும் காவல்துறை அதிகாரி திருமதி.திலகவதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றார்கள். அதில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேசுபோது, “ஒரு நல்ல படத்தை கொடுத்த படைப்பாளியை, கொண்டாடி, கொண்டாடி கீழே இழுத்துவிடாதீர்கள், அளவுக்கு அதிகமான புகழாரம் அவனின் படைப்பாளுமையை பாதிக்கும், இதை நான், மற்றவரை முன்னிறுத்தி சொல்லவில்லை. என்னளவிலேயே சொல்லுகிறேன்” என்ற பொருள் படும்படி பேசினார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசும்போது, “ தொழில்நுட்பம் எல்லாவற்றையும் மாற்றிப்போடுகிறது, எல்லாம் கடந்துதான் போகும்” என்றார். தன் ஒளிப்பதிவைபற்றி பேசும்போது, ஒளிக்கு ஒரு மொழி இருக்கிறது, அதை புரிந்துக்கொண்டு பயன்படுத்த முயற்சிக்கிறேன். அவ்வளவுதான். என்றார். திரு. ஞானராஜசேகரன் பேசும் போது, “ தமிழனிடம் ஒரு குணம் இருக்கிறது, ஒரு படத்தை பார்த்துவிட்டு வருபவனிடம், படம் எப்படி என்று கேட்டால், நன்றாக இருக்கிறது அல்லது இல்லை என்று சொல்லுவதற்கு பதிலாக “இது ஐம்பது நாள் ஓடும், அல்லது ஓடாது” என்றுதான் பதில் சொல்லுகிறான். ஒரு திரைப்படம் ஓடுவதும் ஓடாததும் அப்படத்தை எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் அப்படத்தோடு சம்பந்தப்பட்ட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் கவலை. ஒரு ரசிகன் ஏன் ஒரு திரைப்படத்தை அப்படி அணுகிறான்? என்ற கேள்வியை எழுப்பினார். மேலும், குப்பைப்படங்களைப்பற்றி மிக நன்றாக தெரிந்து வைத்திருக்கிறான், ஒரு நல்ல படத்தைப்பற்றி எதுவுமே தெரிந்து வைத்திருப்பதில்லை. ஆனால் தமிழனிடம் ஒரு நல்ல குணமிருக்கிறது, தனக்கு பிடிக்காத படத்தை தோல்வி அடைய செய்கிறான். அது எத்தகைய பெரிய நடிகரின் படமாகிருந்தாலும் சரி. அதே நேரம் தனக்கு பிடிக்காத படம் மற்றவர்களுக்கும் பிடிக்க கூடாது என்பதிலும் பிடிவாதமாக இருக்கிறான். பிடித்ததை கொண்டாடும் அவன் தனக்கு பிடிக்காததை மறுதலித்து கடந்து போய் விடுவது மட்டுமில்லை, மற்றவர்களும் அதை ஏற்கவேண்டும் என்று விரும்புகிறான். தனக்கு பிடிக்காத படங்களை தவீர்க்கும் அதேநேரம், ஒருவேளை அது மற்றவர்களுக்கு பிடிக்க வாய்ப்பு இருப்பதை புரிந்துக்கொண்டு அமைதி காக்க பழகிக்கொள்ள வேண்டும், அது திரையரங்கிற்குள்ளே ஆனாலும் சரி வெளியே ஆனாலும் சரி, என்றார். ஓவியர் மருது அவர்கள் பேசும்போது, நம் திரைப்படங்கள் கூத்துக்கலையின் பாதிப்பில் உருவானவை. அதன் தாக்கமே அதிகமிருக்கிறது. அதன் பொருட்டே இங்கே பேச்சே, உரையாடலே பிரதானமாகிருக்கிறது. ஆனால் திரைப்படமென்பது காட்சி பூர்வமானது. ஒரு பிம்பம் சொல்லும், கடத்தும் புரிதல் முக்கியமானது. மொழி கடந்து, ஒலி கடந்து ஒரு திரைப்படம் உங்களை வசிகரிக்கும். உலகின் சிறந்த படங்கள், அத்தகைய அனுபவங்களை உங்களுக்குத் தருமென்றார். மேலும் அவரின் உரையில் ஓவியம், காமிக்ஸ், அனிமேஷன், ஸ்டோரிபோர்டு போன்றவற்றைப்பற்றியும் அதன் வழி சொல்லப்படும் கதையும், அவை மேலை நாடுகளில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைபற்றியும் குறிப்பிட்டார். படச்சுருள் இதழைப்பற்றி குறிப்பிடும் போது, ஒவ்வொரு இதழும் சிறப்பிதழாக வெளிவருவது நல்லது என்றும், அதை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். காரணம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு இவ்விதழ்கள் அத்துறைச்சார்ந்த ஆவணமாக மாறக்கூடுமென்றார். 

ஒருவகையில் இன்றைய மாலை (21/06/15) நிறைவாகயிருந்தது. 

தமிழ் ஸ்டியோ அருணின் இம்முயற்சியும் சிறக்க வாழ்த்துகிறேன். திரைப்படம் சார்ந்த ஒரு இதழ். தமிழில் குறிப்பிடும் படியாக ஏற்கனவே சில இதழ்கள் இருப்பினும், ‘படச்சுருளின்’ தேவையும் அதற்கான இடமும் இருக்கத்தான் செய்கிறது. திரைப்பட இயக்கமாக செயல்படும் தமிழ் ஸ்டியோவிற்கு ஒரு அச்சு இதழ் அவசியம் தான். மேலும் படச்சுருளின் ஒவ்வொரு இதழும், சிறப்பிதழாக வெளி வர இருப்பதும் நல்ல முயற்சியே. இம்மாத இதழ் ‘ திரைப்பட தணிக்கைச் சிறப்பிதழாக’ வெளி வந்திருக்கிறது. சிறப்பான பல கட்டுரைகள் இடம் பெற்றிருக்கிறது. இதுவரை, என் பங்களிப்பு எதுவும் இல்லாதபோதும், அதன் ஆசிரியர் குழுவில் என் பெயரையும் இணைத்துக்கொள்ள அருண் விருப்பம் தெரிவித்தார். அவரின் விருப்பத்திற்காகவும், வரும் மாதங்களில் கட்டுரை தொடர் ஒன்றை நான் எழுதப்போகிறேன் என்ற காரணத்திற்காகவும் என் பெயரும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருக்கிறது. அருணுக்கு நன்றி. கொடுத்திருக்கும் பதவிக்கு எதாவது செய்யவேண்டும்.. 


நண்பர்களுக்கு இவ்விதழை பரிந்துரைக்கிறேன். திரைப்படம் சார்ந்து இயங்கும் அல்லது ஆர்வம் கொண்டவர்கள் அனைவருக்கும் இவ்விதழ் பயன்படும்.  

தனி இதழ் - ரூ. 20/-
வருட சந்தா - ரூ. 250/-
ஆயுள் சந்தா - ரூ.15,000/-
புரவலர் சந்தா - ரூ. 25,000/-
சந்தாவை இணையத்தின் மூலமும் செலுத்தலாம்: செலுத்துவதற்கான இணைய முகவரி:
http://cms.vidhaiorganicstore.com/onlines…/product_info.php…

படச்சுருள்
1, ஸ்ருதி அபார்ட்மெண்ட், காந்தி நகர்,
முதல் குறுக்குத் தெரு, அடையார்,
சென்னை - 600 020
தொடர்புக்கு: 98406 98236


கருத்துகள்

  1. வணக்கம்

    தங்களின் வலைதளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,