முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை:

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் ஸ்டியோ அருண் கூட பலமுறை கேட்டு விட்டார், ஒளிப்பதிவு குறித்தான பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்துங்கள் என்று. சில காரணங்களால் அதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தோம். ஆனால், இம்மாதம் (Nov) 7 மற்றும் 8 - ஆம் தேதிகளில் அதை நடத்துவதற்கான வாய்ப்பும், நேரமும் கூடி வந்தது. நடத்தி விட்டோம்!

பலர் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தபோதும் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. தீபாவளி ஒருபுறம், மழை மற்றொரு புறம் என தடைகளுக்கும் குறைவில்லை. ஆயினும் நாற்பத்தி நான்கு பேர் கலந்துகொண்டார்கள். கலந்துகொண்டவர்களில், வெவ்வேறு துறை சார்ந்தவர்களும் இருந்தது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. விஷுவல் கம்யுனிகேஷன் படிப்பவர்கள், இன்ஜினியரிங் படிப்பவர்கள், கணினித் துறையில் வேலை செய்பவர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், உதவி இயக்குனர்கள் மட்டுமல்லாது ஆட்டோ ஓட்டுனர், தச்சு வேலை செய்பவர், கல்லூரி ஆசிரியர் என பலரும் ஆர்வமாக கலந்துகொண்டார்கள். அமெரிக்காவில் கணினி வேலை செய்பவரும், பெங்களூரில் இருந்தும், இலங்கையிலிருந்தும் இந்த பயிற்சிக்காகவே சென்னை வந்து கலந்துக்கொண்டவர்களும் உண்டு. முந்தைய தலைமுறை இயக்குனர் ஒருவரும் கலந்துக்கொண்டார். முன்னர் திரைப்படம் எடுக்க முயன்று, பாதியில் நின்று போய், தன் குடும்ப பாரத்தால் இத்துறையை விட்டு விலகிச் சென்றவர். இரண்டு மகள்களுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டு, இப்போது திரைப்படம் எடுக்கலாமென்று யோசிப்பவர். தற்போது திரைத்துறையை அரசாளும் டிஜிட்டல் வளர்ச்சியைப் பற்றி அறிந்துக்கொள்ள ஆர்வமாக கலந்துகொண்டார். இப்பயிற்சி வகுப்பு தன் திரைப்படக் கனவை நனவாக்க எல்லா நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது, மிகவும் பயனுள்ள ஒரு வகுப்பு இது என்று அவர் சொன்னபோது, இப்பயிற்சி வகுப்பை நடத்தியதற்காக நிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்தோம்.

திரைப்பட ஆக்கத்தில் மிக முக்கியமான ஒரு பிரிவு ஒளிப்பதிவுத்துறை. ஒளியில் ஆரம்பித்து கருவிகள் வரை பல விஷயங்கள் கற்றுக்கொள்ள இருக்கின்றன. நுணுக்கங்கள் ஒருபுறம், படைப்பாளுமை மறுபுறம். கற்பனை ஒருபுறம், தொழில்நுட்பங்கள் மறுபுறம். அழகியல் ஒருபுறம், உணர்வுகள் மறுபுறம் என பலவற்றை உள்ளடக்கிய துறை இது. இரண்டு நாட்கள் நடக்கும் பயிற்சிப் பட்டறையில் இவற்றில் எதை சொல்லித்தருவது, எதைத் தவிர்ப்பது..?

அருணும், நானும் இப்பயிற்சிப் பட்டறை நடத்தலாம் என்று யோசித்தபோதே, ஒளிப்பதிவாளர் திரு. ஞானத்தையும் எங்களோடு இணைத்துக்கொள்ள முடிவு செய்தோம். ஞானம் அவர்கள் நீண்ட நாள் நண்பர் எனக்கு. என் உடன் பிறவா சகோதரனைப்போன்றவர். திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். பயிற்சிக் காலத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர். நீண்ட அனுபவமும் வாய்ந்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என எல்லா மொழியிலும் பயிற்சி கொண்டவர். அவரையும் இப்பயிற்சிப் பட்டறையில் இணைத்துக்கொள்ள, அவரை அணுகினோம். ஆர்வமாக ஒத்துக்கொண்டார். நானும் அவரும் இணைந்து இப்பயிற்சி வகுப்பை நடத்துவது என்று முடிவானது.

இரண்டு பேரும், இருவருக்குமான பாடங்களை பிரித்துக் கொண்டோம். இரண்டு மாதங்களாக முற்தயாரிப்புப் பணி நடந்தது. எதை எப்படி சொல்லித்தருவது..? எதை விடுவது..? பாடங்களை, அங்கே பலகையில் எழுதி சொல்லித்தரலாமா? அச்சிட்டு தரலாமா? அல்லது காட்சி வடிவமாக தயாரிக்கலாமா? என பல யோசனைகள். பலவாறு யோசித்து, இறுதியில் அச்சிடுவது தவிர்த்து எல்லாவற்றையும் செய்யலாம் என்று முடிவு செய்தோம். கலந்துக்கொண்டவர்கள், அவர்களே எழுத்திக்கொள்ளத் தேவையானவற்றைக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்தோம்.

பல வருடங்களுக்கு முன்பு, தேர்வுக்கு தயாரானதைப் போன்ற ஒரு சூழல் எங்களுக்கு. படித்ததை, அனுபவத்தில் அறிந்துக்கொண்டதை ஒரு பாடத்திட்டம் போல மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. எதைச் சொல்வது..?, அதை எப்படிச் சொல்வது..?, எவ்வளவு சொல்வது…? தற்போது அது பயன்படுமா..? போன்ற பல கேள்விகளை எழுப்பி, அதற்கு ஏற்றாற்போல் பாடங்களைத் தயாரித்தோம்.

காட்சி ஊடகம் என்பதனால், பல காணொளிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். ஒவ்வொரு பாடத்தைப்பற்றியும் விளக்கங்களும், உதாரணங்களும் கொண்ட காணொளிகளை சேகரித்துக்கொண்டோம். பாடங்களை, Slide Show (PPT) -ஆகவும் தயாரித்துக் கொண்டோம்.

முதல் நாள், புகைப்படத்துறையில் ஆரம்பித்து ஒளிப்பதிவுத்துறை வரை பரவிக்கிடக்கும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினோம். புகைப்படக்கருவி எப்படி இயங்குகிறது, அதன் அடிப்படைத் தத்துவம் என்ன? அது எப்படி ஒளிப்பதிவுத் துறைக்கு அடிப்படையாக இருக்கிறது என்று துவங்கி, இன்றைய நவீன டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக் கொடுத்தோம். மேலும் தமிழ் மற்றும் இந்திய திரைத்துறையில் பயன்பாட்டிலிருக்கும் கேமராக்கள் யாவை, அவற்றிற்கிடையே இருக்கும் வித்தியாசங்கள், எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப்பற்றியும் பேசினோம்.

பின்பு, ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்திலிருக்கும் சில ஆதார விதிகளையும், பல்வேறு ஒளியமைப்பு விதிகளையும் தியரி வகுப்பாக அறிமுகப்படுத்தினோம். கலந்துக்கொண்டவர்கள் மிக ஆர்வமாக பல கேள்விகளை கேட்டது மகிழ்ச்சியைத் தந்தது. கேள்விகளும் அதற்கான பதில்களும் என்று அன்றைய நாள் மிக சுவாரசியமாகக் கழிந்தது.

இரண்டாம் நாள், Practical வகுப்பாக நடத்த முடிவு செய்திருந்தோம். அதன் படி.. RED EPIC Camera, Alura Zoom, Ultra Prime Lens  போன்றவற்றையும், சில விளக்குகள் (Lights) மற்றும் அதற்குத் தேவையான துணை உபகரணங்களையும் வரவழைத்திருந்தோம். முதல் நாளே ஒளியமைப்பு முறைகளைப்பற்றி பேசியிருந்ததனால், இப்போது அதை எப்படி நடைமுறையில் செயல்படுத்துவது என்று செய்முறை விளக்கமாக அமைத்துக்கொண்டோம். ஒளியமைப்பு செய்யும் போது கவனிக்க வேண்டியவை, ஒளியமைப்பில் இருக்கும் சிக்கல்கள் அவற்றிற்கான தீர்வு, வெவ்வேறு ஒளியமைப்பு முறைகள் என பலவற்றை பேசினோம். செய்துப்பார்த்தோம். அவற்றை கேமராவில் பதிவு செய்து கொண்டோம்.
பின்பு, அவற்றை எப்படி படத்தொகுப்புக்கு எடுத்துச் செல்வது. படத்தொகுப்பு செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை என்ன? படத்தொகுப்பு முடிந்த பிறகு, DI -க்கு எப்படி எடுத்துச் செல்வது, அதற்கு செய்ய வேண்டியவை என்னென்ன போன்றவற்றைப்பற்றிப் பார்த்தோம். இவற்றை செயல்முறை விளக்கமாகக் காட்ட, எங்கள் ‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் திரு. பிரவீன் வந்திருந்தார். கேமராவிலிருந்து காட்சித்துண்டுகளை எப்படி படத்தொகுப்பு மென்பொருளுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வது என்பதைப்பற்றியும், படத்தொகுப்பு செய்யப்பட்ட இறுதி வடிவத்தை எப்படி DI மென்பொருளுக்கு அனுப்புவது என்பதைப்பற்றியும் செயல்முறை விளக்கம் கொடுத்தார்.

தொடர்ந்து ‘B2H’ என்ற DI நிறுவனத்தின் Colorist  திரு. ஷ்யாம் அவர்கள், எப்படி வண்ண நிர்ணயித்தலை செய்வது என்று செய்துகாட்டினார். தமிழ், மலையாளம் என பலப்படங்களில் பணி புரிந்தவர் ஷ்யாம். அண்மையில் வெளியாகி வெற்றி நடை போட்ட ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தின் Colorist அவர்தான்.

இரண்டு நாட்கள். கிட்டதட்ட 20 மணி நேரம். ஒளிப்பதிவு குறித்து பலவற்றை பார்த்தோம். பேசினோம். பகிர்ந்துக்கொண்டோம்.

ஆயினும், இந்த இரண்டு நாட்கள் போதவில்லை என்பதுதான் எங்கள் எல்லோருடைய கருத்தும். கலந்துக்கொண்டவர்கள் பலரும், மீண்டும் இப்படியான ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்துங்கள், நாட்களை அதிகப்படுத்துங்கள். நாங்கள் கலந்துக்கொள்கிறோம் என்றார்கள்.

உண்மைதான். இப்பயிற்சிப் பட்டறையை ஒரு பாடத்திட்டம் போல இல்லாமல், ஒளிப்பதிவு துறைச்சார்ந்த பலவற்றை பகிர்ந்துகொள்ளும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியைப்போல அமைத்துக்கொண்டோம். பலவற்றை அறிமுகப்படுத்தினோம். தெரிந்துக்கொள்ள, கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதைப் புரியவைத்தோம். ஒரு வழிகாட்டியாக இருக்க முயன்றோம். இவ்விரண்டு நாட்களில் பேசிவற்றைப்பற்றி தனித்தனி வகுப்புகளாக எடுக்கலாம். அத்தனை உள்ளடக்கம் கொண்டவை.

ஆர்வம் கொண்டவர்கள் தெரிவியுங்கள். அவற்றைப்பற்றி தனித்தனியாக ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தலாம் என்று கேட்டுக்கொண்டோம். பலரும் தங்கள் கருத்துக்களை எழுதி கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் ஆர்வத்தை பார்க்கும்போது எங்களுக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஒருசேர ஏற்படுகிறது.

ஒளியமைப்பு, படைப்பாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி தனித்தனியாக பயிற்சி பட்டறைகள் நடத்தக் கேட்டிருக்கிறார்கள். விரைவில் அவற்றை நடத்த முயற்சிக்கிறோம். திரைத்துறை சார்ந்து ஆர்வம் கொண்ட நண்பர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் இப்படியான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இங்கே மிக அரிது. நான் திரைத்துறைக்கு வந்த காலக்கட்டத்தில், கொடாக் (Kodak) போன்ற நிறுவனங்கள் தங்கள் படச்சுருள்களை அறிமுகப்படுத்தும் போதுதெல்லாம் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவார்கள். இந்தியாவில் அவர்கள் அதிகம் நடத்தியதில்லை. அதன் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, இங்கே அப்படியான பயிற்சி வகுப்புகளை நடத்துங்கள் என்று பல தடவை கேட்டிருக்கிறேன். இங்கே அதற்கு வரவேற்பு இல்லை, அதனால் நடத்த வாய்ப்பு இல்லை என்பார்கள். ஆனால், இன்று அப்படி இல்லை. பலர் ஆர்வமாக கலந்துகொள்கிறார்கள். முறையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் பலரிடமிருப்பதைக் காண முடிகிறது. தொடர்ந்து இப்படியான பயிற்சிப் பட்டறைகளை நடத்த முயற்சிப்போம். கற்றதை, பெற்றதைப் பகிர்ந்து கொள்வோம்.

கலந்து கொண்ட நண்பர்களுக்கும், திரு. பிரவீன், திரு. ஷ்யாம், திரு. ஞானம், திரு.அருண் மற்றும் தமிழ் ஸ்டுடியோ மாணவர்கள் அனைவருக்கும் நன்றி. ‘காவிய லட்சுமி யூனிட்’ -இல் இருந்து கேமரா மற்றும் விளக்குகளை கொடுத்திருந்தார்கள். அதன் நிறுவனர் திரு. பாஸ்கர் அவர்களுக்கும் நன்றி.கருத்துகள்

 1. ஒளிப்பதிவாளருக்கு வணக்கம்.

  மதுரையில் இருந்து பேராசிரியர் பி.ஜி.கதிரவன்.

  அதிகாலை 1.33 மணிக்கு நீங்கள் பதிவிட்டிருந்த பயிற்சி பட்டறை பற்றிய நிகழ்ச்சித் தொகுப்பு பார்த்தேன். நல்ல வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே என மிக வருந்தினேன். இது குறித்த அறிவிப்பை முன்னமே தங்களின் வலைப்பூவில் வெளியிட்டிருந்தீர்களா? நான் கவனிக்கவே இல்லையே..! இவ்வளவுக்கும் தங்களின் பதிவுகள் அனைத்தும் என் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஏற்பாட்டில் நானும் இணைந்திருக்கிறேன். போகட்டும். அடுத்த வாய்ப்பு வராமலா போகும்?

  ஒரு உதவி. இருநாள் நிகழ்வுகளையும் நீங்கள் நிச்சயமாக ஒளிப்பதிவு செய்திருப்பீர்கள். அந்த ஒளிப்பதிவுகள் எனக்குக் கிடைக்குமா? கட்டண அடிப்படை எனினும் சம்மதமே..!

  பதிலளிநீக்கு
 2. நன்றி கதிரவன் சார்..

  மன்னிக்கவும். இப்பயிற்சிப் பட்டறையைப்பற்றி என் வலைப்பூவில் அறிவிக்கவில்லை. மறந்துவிட்டேன். முகநூலில் அறிவித்திருந்தோம். ஒளிப்பதிவு செய்தவை கிடைக்குமா என்பதை அருண் அவர்களிடம் கேட்டுச்சொல்லுகிறேன்.

  கண்டிப்பாக அடுத்த பயிற்சி முகாம் நடத்தும்போது இங்கே பதிவிடுகிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. Super initiative. Your blog itself says the need of this course/ seminar and your proficiency.
  Congrats, Anna.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன