பொதுவாக இசை கேட்பதில் இரண்டு விசயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று எதைக் கேட்கிறோம் என்பது, மற்றொன்று எப்படிக் கேட்கிறோம் என்பது.
எதைக் கேட்கிறோம் என்பது அவரவர் ரசனை சார்ந்தது, மனம் சார்ந்தது. அல்லது அவரவர் அனுபவம், வாசிப்பு, பயணம், அறிமுகப்படுத்திக்கொள்ளல், திறந்த நிலை, கடந்தவந்த வாழ்வைப் பொருத்தது.
எப்படிக் கேட்கிறோம் என்பது முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்தது. ஆமாம்.. தொழில்நுட்பம் சார்ந்ததுதான். கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமான ஸ்டேட்மெண்டாகத் தெரிகிறதா..? விளக்குகிறேன்.
ஒரு நல்ல இசையை முழுமையாக ருசிக்க முதன்மையானது ஒரு நல்ல ‘ஒலிபெருக்கி’ (Speakers). Hi-Fi Music Systems, Home Theatre System, Portable Music system, MP3 Docking Systems, CD/Radio Cassette Players, iPod/Non-iPod Music system என எதுவாகவும் இருக்கட்டும். அதிலிருந்து வெளிப்படும் இசையை தரத்தோடு வழங்கக்கூடியதாக அதன் Speakers இருக்க வேண்டும். Speakers என்று பொதுவாக அழைத்தாலும், அதில் Driver, Tweeter, Satellite, Subwoofer என பல உள்குத்துகள் இருக்கின்றன. முன்னதாக நமக்குத் தெரியவேண்டியதெல்லாம் நல்ல Speakers ஒன்று மிக அவசியம் என்பதுதான். எந்த இசைக் கருவியில் வேண்டுமானாலும் கேட்கலாம், எந்த Speakers-இல் வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற பொத்தாம் பொதுவான மனநிலை வேண்டாம்.
இடம், வசதி இருப்பவர்கள் நல்ல Hi-Fi Music Systems அல்லது Home Theatre System வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதில் கூட, நாம் இசை கேட்கும் அறையின் தன்மையைப்பொருத்து இசையனுபவம் மாறும். அவ்வறையின் எதிரொலிப்பு தன்மை, கொள்ளவு, அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் அடர்த்தி ஆகியவற்றைப் பொருத்தும் இசையின் வெளிப்பாடு மாறும் என்கிறார்கள்.
அதனால் என் அனுபவத்தில் நல்ல இசையை, தரத்தோடு கேட்பதற்கு இருக்கும் மலிவான, சுலபமான வழி Headphone அல்லது Earphone -இல் கேட்பதுதான். நமக்கே நமக்கான ஒரு அந்தரங்கமான இசைச் சூழலை அவை ஏற்படுத்தி விடுகின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘ரோஜா’ படத்தின் பாடல்களைத்தான் முதன் முறையாக ‘Walkman’ இல் கேட்டேன். இசை ஒருபுறமெனில், இரண்டு காதுகளிலும் ஒலித்த இசை, நமக்குள்ளே எங்கிருந்தோ ஒலித்ததைப்போன்ற அவ்வனுபவத்தை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. நம் மனதிலிருந்தா.. மூளையிலிருந்தா.. இதயத்திலிருந்தா என்று பிரித்தரிய முடியா பரவசம் அது. அதுவரை ரேடியோ பெட்டியிலிருந்தும், டேப் ரெக்காடரிலிருந்தும் அல்லது திருவிழாக்களிலும், விசேஷங்களிலும் இரைந்து பாடும் ஒலிபெருக்கிகளிலிருந்துதான் இசை கேட்டிருக்கிறேன். எல்லா இசையும் வெளியே இருந்து வந்தது. இசையோடு சூழலின் ஓசையும் இரைச்சலும் இணைந்திருந்தன. முதன் முறையாக காதை அடைத்துக்கொண்டிருக்கும் சின்ன ஒலிபெருக்கியில் இருந்து வழிந்த இசை மனதிற்குள் கேட்டது. சொல்லவா வேண்டும், ரோஜா படத்தின் இசை எத்தகையது என்று..?! அதன் இசையனுபவம் என்னை இசைப்பிரியனாகவும், ரகுமான் பிரியனாகவும் மற்றியது மட்டுமல்ல என்னை ஒரு வாக்மேன் பித்தனாகவும் மாற்றிற்று.
அன்றிலிருந்து எனக்கு ஒரு ஆசை தொற்றிக்கொண்டது. ஒரு நல்ல வாக்மேனை வாங்க வேண்டுமென்பதுதான் அது. ஏதேதோ நிறுவனங்களின் வாக்மேன்களை ஆரம்பத்தில் பயன்படுத்தினாலும் ‘சோனி வாக்மேன்கள்’ தான் சிறந்தவை என்பதை பிற்காலத்தில் தெரிந்துக்கொண்டேன். (வாக்மேன் என்ற சாதனத்தை உலகிற்கு அளித்ததே சோனி நிறுவனம்தான்)
சோனி வாக்மேன்களிலிருந்து வெளிப்பட்ட இசையின் தரம் சிறப்பாக இருக்கும் என்பதுமட்டுமல்லாமல், அதில் பயன்படுத்தும் பேட்டரிகளின் ஆயுள் அதிகம் என்பதும் ஒரு காரணம். மற்ற நிறுவனத்தின் வாக்மேன்களில் ஒரு கேசட்டை கூட முழுமையாக கேட்டு முடிக்க முடியாது, பேட்டரி தீர்ந்துவிட்டது என்று சொல்லும். ஆனால் சோனி வாக்மேன்கள் அப்படியல்ல. பல மணி நேரம் பாடல்களைக் கேட்கலாம். அதனால், தொடர்ந்து என் பொருளாதார வசதிக்கேற்ப சோனி வாக்மேன்களின் வெவ்வேறு மாடல்களை வாங்கிக்கொண்டே இருந்தேன். என் கல்லூரி காலங்களில் பெரும்பாலான பணம், வாக்மேனுக்கும், கேசட் வாங்குவதற்கும் செலவிட்டிருக்கிறேன். ரகுமானின் வந்தேமாதரம் ஆல்பம் வெளி வந்த காலக்கட்டங்களில் சோனி வாக்மேனில் ‘Noise Reduction’ என்றொரு வசதியும் வந்திருந்தது. அந்த வாக்மேனில் கேட்ட வந்தேமாதரம் இசை என்றும் மறக்க முடியாது. அதன் பிறகு பல கருவிகளில் அப்பாடல்களை கேட்டு விட்டேன், அதை ஒத்த ஒரு அனுபவத்தை பெறுவதாக மனசு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது.
சரி..சரி இதெல்லாம் இருக்கட்டும் ஒருபுறம். நான் சொல்லவந்தது என் அனுபவத்தில், இசையை Headphone- லோ அல்லது Earphone-லோ கேட்பது பரம சுகம் என்பதைத்தான்.
இப்படி இசையை Headphone அல்லது Earphone கேட்பதில் நாம் கவனிக்க வேண்டியது மூன்று விஷயங்களை.
1. Portable Music system: எந்த ம்யூசிக் சிஸ்டமை பயன்படுத்துகிறோம்? காரணம், அதில் சேமிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் தகவல்களை அது எப்படி வெளிப்படுத்துகிறது என்பது முக்கியமானது.
இன்றைய சூழ்நிலையில் பல வகையான Portable Music system கிடைக்கிறது என்றாலும், பெரும்பாலானோர் தங்கள் கைபேசியைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதில் நல்ல தரமான நிறுவனங்களின் கைபேசிகளைப் பயன்படுத்தலாம். என்னைப் பொருத்தவரை iPhone மற்றும் iPod.
மற்றவர்களுக்கு கீழே என்னுடைய பரிந்துரைகள்.
iPod
Sony Walkman
Sandisk Sansa Clip/Fuze Series
Microsoft Zune/Zune HD
Creative Zen Series
Cowon J3/C2/iAudio Series
2. Audio file format: எவ்வகையான ‘Audio file format’ -ஐப் பயன்படுத்துகிறோம்? காரணம், ஒவ்வொரு ஃபார்மேட்டும் அதற்கே உரிய தரம் கொண்டவை.
இது, நீங்கள் எவ்வகை ம்யூசிக் சிஸ்டத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருத்தது. ஒவ்வொரு நிறுவனமும் அதற்கென தனிப்பட்ட ஃபார்மேட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். MP3 எல்லாவற்றிலும் இருக்கிறது. 128 kbps கோப்புகள் பொதுவானவை என்றாலும் 48, 56, 64, 96, 192, 256 kbps அளவுகளில் இருக்கின்றன. அதில் தரமானவற்றை பயன்படுத்துங்கள்.
‘Uncompressed audio format’ - WAV, AIFF, AU or raw header-less PCM.
‘Lossless compressed audio format’ - ALAC, FLAC, MPEG-4 SLS, MPEG-4 ALS, MPEG-4 DST, WMA
‘Lossy compressed audio format’ - Opus, MP3, Vorbis, Musepack, AAC, ATRAC
என பலவகையான ஃபார்மேட்டுகள் உண்டு. அக்கோப்பின் ‘size’-ஐ குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட வகைப்பாடுகள் இவை. அப்படி அதன் அளவை குறைக்க முயற்சிக்கும்போது அதன் தரமும் குறைந்து விடுகிறது. அதனால்தான் ஒரு ஆடியோ சீடியில் 12-15 பாடல்களையே வைக்க முடிகிறது. ஆனால், ஒரு MP3 சீடியில் 150 பாடல்கள் வரை வைக்க முடிகிறது. ஆடியோ சீடியை விட பல மடங்கு MP3 சீடியின் தரம் குறைந்தது என்பதை நினைவில் வையுங்கள்.
என்னைப்பொருத்தவரை, iPhone அல்லது iPod என்பதனால், ஆப்பிள் நிறுவனத்தின் ‘AAC’ வகை கோப்புகளை பயன்படுத்துகிறேன். தரமான இசைக்கு இவை உத்தரவாதம்.
3. Headphone / Earphone: எந்த Headphone அல்லது Earphone -இல் பாடல் கேட்கிறீர்கள் என்பது. காரணம், வெளிப்படும் இசை தரமாக இருக்க தகுதியான ஸ்பீக்கர்ஸ் வேண்டும். நல்ல வெளிச்சம் தரக்கூடிய பல்புகளைப்போலத்தான். அதே மின்சாரம் தான் என்றாலும், தரமான பல்புகளிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தின் வித்தியாசத்தை நாம் உணர்ந்திருக்கிறோம் அல்லவா..!? அதேதான்.
Headphone-ஐப் பயன்படுத்தலாமா Earphone -ஐ பயன்படுத்தலாமா என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். Headphone என்பது தலைமேல் மாட்டிக்கொள்வது. இதிலிருக்கும் சிக்கல், தொடர்ந்து அவை அழுத்திக்கொண்டிருப்பதால், நீண்ட நேரம் பாடல் கேட்கும்போது, தலை மற்றும் காது மடல்கள் வலிக்கலாம் மற்றும் வேர்த்துவிடலாம்.
Earphone, காதில் மட்டும் பொருத்திக்கொள்வது. In-ear, On-ear Headphones என அதில் இரண்டு வகை இருக்கிறது. உங்கள் பொருளாதார வசதியைப்பொறுத்து உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், தரமான நிறுவனங்களின் பொருட்களை வாங்குங்கள். இணையத்தில் தேடுங்கள் பல நிறுவனங்கள் உண்டு. ‘Audiophile’ என்றொரு வகை உண்டு. இசையை அதன் முழு தரத்தோடுதான் கேட்போம் என்கிற இசை வெறியர்களுக்கானது(!). மிக மிகத் தரமான இசையைத் தரவல்லது அது. விலை அதிகம். முடிந்தவர்கள் அவ்வகை Headphone / Earphone -களைப் பயன்படுத்தலாம். Headphone என்றாலும் குறைந்தது நீங்கள் 5000 ரூபாயாவது செலவு செய்யவேண்டும். Sennheiser-இல் பல வகைகள் இருக்கின்றன. நீங்கள் கேட்கும் இசையின் வகைமையைப்பொருத்தும் Headphone-கள் வேறுபடுகின்றன.
நான், Apple EarPods மற்றும் Sennheiser Headphone -ஐயும் பயன்படுத்துகிறேன். Sony நிறுவனத்தின் Headphone / Earphone -களை பலவருடங்களாகப் பயன்படுத்தி வந்தேன். பிறகு Sennheiser அதை விட தரமாக இருப்பதை கண்டு கொண்டு, அவற்றை பயன்படுத்தத் துவங்கினேன். இப்போது ஆப்பிள். Apple EarPods என்பது Earphone வகையைச் சார்ந்தது. என் அனுபவத்தில் அந்த விலைக்கு (ரூ.2090) மிக தரமான Earphone அது. மற்றவர்களுக்கு கீழே உள்ள நிறுவனங்களை பரிந்துரைக்கிறேன்.
Sennheiser
Bose
JBL
Beats
Audio Technica
Plantronics
Sony
ஆகவே நண்பர்களே இசை கேட்போம். அதை முறையாய்க் கேட்போம். தரமாய்க் கேட்போம். இசையால் வாழ்வோம்.
காமிக்ஸ் பற்றி படிக்க வந்து இசைக்குள் நுழைந்துவிட்டேன். Earphone அல்லது headphone மூலம் தொடர்ந்து பல வருடங்கள் இசை கேட்டுவந்தால் ஒரு கால கட்டத்தில் காதுகள் அதன் கேட்கும் திறமையை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது.
பதிலளிநீக்கு