முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'அழகு குட்டி செல்லம்'


கே.என்.சிவராமன்
//
இரண்டரை மணி நேரத்தில் இவ்வளவு கதை சொல்ல முடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது ‘அழகு குட்டி செல்லம்‘. 
வணிக சினிமாவின் எல்லைக்கு உட்பட்டு உருவாகியுள்ள தரமான கமர்ஷியல் படம். ஒவ்வொரு ப்ரேமையும் நெகிழ வைக்கும் ஒரு பக்க கதையாக செதுக்கியிருக்கிறார் எழுதி, இயக்கியிருக்கும் Antony Charles சார்லஸ்.
மருந்துக்கும் எதிர்மறை கதாபாத்திரங்கள் இல்லை.
ஆனால், பரபரவென திரைக்கதை நகர்கிறது.
ஒளிப்பதிவும், எடிட்டிங்கும், இசையும் படத்துக்கு பெரிய பலம்.ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் Vijay Armstrong நிச்சயம் இந்தப் படத்துக்கு பிறகு பேசப்படுவார்.ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளரான, வேத் சங்கர் சுகவனம் -‘மதுபானக் கடை‘யை தொடர்ந்து இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்துமே செவியை வருடுகின்றன. பின்னணி இசையோ மனதை மயக்குகிறது.நா.முத்துகுமாரின் கிரீடத்தில் மேலும் ஓர் இறகு.பத்திரிகையாளராகவும், சின்னத்திரை இயக்குநராகவும் முத்திரை பதித்த ‘நீயா நானா‘ ஆண்டனி திருநெல்வேலி Neeya Naana Anthony Thirunelveli -இந்தப் படத்தின் வழியாக திரைப்பட தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார்.இப்படி வலிமையானவர்களும், திறமையானவர்களும் கைகோர்த்து இப்படத்தை உருவாக்கி இருப்பதாலோ என்னவோ -‘காக்கா முட்டை‘ வரிசையில் இப்படமும் இடம் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையை இன்னொரு படி உயர்த்தியிருக்கிறது.படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே முக்கியமானதுதான். அந்தளவுக்கு டைட் screenplay.நேற்று மாலை படம் பார்த்தது முதல் மனம் பொங்கிக் கொண்டே இருக்கிறது.ஜனவரி ஒன்று அன்று ‘அழகு குட்டி செல்லம்‘ ரிலீசாகிறது.Don't Miss It.
//
- திரு. கே.என்.சிவராமன் 
-----------------------
என் திரை வாழ்வில் மிக முக்கியமானப்படம். மனசுக்கு நெருக்கமான படமும் கூட. காரணம், இப்படத்தின் கதை, இப்படத்தின் இயக்குனர் திரு. சார்லஸ், இதன் தயாரிப்பாளர் திரு.ஆண்டனி, இசையமைப்பாளர் திரு.வேத் சங்கர், படத்தொகுப்பாளர் திரு. ப்ரவீன், வசனகர்த்தா திரு. ஐய்யப்பன் என தகுதி வாய்ந்த சகக்கலைஞர்களோடு இணைந்து பணிபுரிந்தது. 
குழந்தைகளைப்பற்றியப்படம், குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெற்றோர்களுக்கானதும் கூட. குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்கு கதை சொல்லும் படம். பல கிளைக்கதைகளை வைத்துக்கொண்டு மிக சுவாரசியமாக பின்னப்பட்ட இதன் திரைக்கதை என்னை பிரமிக்க வைத்தது. இயக்குனர் சார்லஸ் இக்கதையை முதலில் என்னிடம் சொன்னபோது, இதன் திரைக்கதையில் இருக்கும் அடர்த்தியை கருத்தில் கொண்டு, இதை தயாரிக்க அவ்வளவு சீக்கரமாக யாரும் முன் வரமாட்டார்கள் என்று கருதினேன். காரணம் நீங்கள் அறிந்ததுதான், நமக்குதான் அத்தனை அடர்த்தியான படங்கள் தேவைப்படுவதில்லையே. 
"முதலில், இந்தக் கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்கட்டும் சார், அதுவே இப்படத்தின் வெற்றிக்கான அடையாளம், இந்தப்படத்தை எடுத்துட்டமுன்னா அது கண்டிப்பா வெற்றிப்படமாகத்தான் இருக்கும்" என்றுதான் இயக்குனரிடம் சொன்னேன். அக்கதையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இதை புரிந்துக்கொள்ளக்கூடிய ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது அரிது என்ற அர்த்தத்தில் அப்படி சொன்னேன். பிறகு இதை மறந்துவிட்டு, இயக்குனர் சார்லஸும் நானும் வேறொரு கதையைத்தான் படமாக்க முயன்றுக்கொண்டிருந்தோம்.
ஆனால், ஆச்சரியத்தை பாருங்கள்..!
அதுநாள் வரை திரைப்படத்தயாரிப்பில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத திரு. ஆண்டனி அவர்கள் இக்கதையை கேட்ட மாத்திரத்தில் தயாரிக்க முடிவெடுத்தார். டீக்கடையில் பேச்சுவாக்கில் இக்கதையை சார்லஸ், ஆண்டனி அவர்களிடம் சொன்னபோது, அக்கதையின் பால் ஈர்க்கப்பட்டு படமெடுக்க முடிவெடுத்தார். அன்றையிலிருந்து பதினைந்தாவது நாளில் படபிடிப்புக்கு சென்றுவிட்டோம். ஒரு படைப்பு அதற்கு தேவையானதை அதுவே தேடிக்கொண்டது. ஒரு தயாரிப்பாளரையே அது உறுவாக்கி விட்டது.  smile emoticon
இப்படம் எனக்கு பிடித்திருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், இப்படத்தில் நிறைந்திருக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். பெரும்பாலும் எல்லா நாட்களிலும் படபிடிப்பு தளத்தில் குழந்தை ஒன்று இருக்கும். எப்போதும் சிறுவர்கள் இருப்பார்கள். இக்கதையில் நடித்திருக்கும் சிறுவர்கள் கென், யாழினி, சானக்கியா, நேகா, ராஜேஷ், நிலாக்குட்டி, அம்மு குட்டி என எல்லோரும் எனக்கு செல்லங்கள். அவர்கள் எப்போது என்னை அவர்களில் ஒருவனாகத்தான் நினைப்பார்கள். வேலையில் இருக்கும் பளு, அயர்ச்சி, கடுமைத்தனம் எதுவும் தெரியாது. நாள் முழுவதும் விளையாடி, மகிழ்ந்து செய்தப்படம் இது. எங்கள் படபிடிப்புத்தளமே ஒரு பள்ளிக்கூட சுற்றுலாப் போலத்தான் இருக்கும்.
மகிழ்ச்சியாக படத்தை எடுத்து முடித்துவிட்டோம், என்றாலும் எனக்கு ஒரு பயம் இருந்துக்கொண்டேதான் இருந்தது. இக்கதையின் அடர்த்தி, கதை(கள்) திரையில் வந்துவிடுமா? அதை சரியாக சொல்லிவிட்டோமா? என்றொரு அச்சம் இருந்துக்கொண்டே இருந்தது. பொதுவாக திரைப்பட உருவாக்கத்தில் ஒரு சிக்கல் இருக்கும். அதாவது, அதன் தொழில்நுட்ப கலைஞர்கள் பல தளங்களில் அப்படத்தின் நிலையை பார்ப்போம். பேப்பரில் எழுதப்பட்ட கதையாக, எடுக்கப்பட்ட பிம்பங்களாக, கோர்க்கப்பட்ட காட்சிகளாக.. அதன் தயாரிப்பு பணிகளில் பல கட்டங்களில், ஒரு திரைப்படத்தை பகுதி பகுதியாக பார்ப்போம். பல நூறு தடவை பார்க்கவேண்டியதிருக்கும். திரைப்படம் ஒரு கலைதான் என்றாலும், அது தயாரிக்கப்படும் போது, பெரும் தொழில்நுட்ப செயல்பாடுகள் கொண்டது என்பதனால்.. பெரும்பாலும் அதை தொழில்நுட்ப பார்வையோடு அணுகுவோம். அங்கேதான் அச்சிக்கல் உண்டாகிறது. பல தடவை பார்க்கப்படுவதனால், ஒரு கட்டத்தில் அதன் கலைத்தன்மை பிடிபடாமல் போய்விடும். நல்லா இருக்கா இல்லை என்ற புரிதலுக்கே வரமுடியாது. அதனால் தான் பெரும்பாலான கலைஞர்களால் தங்கள் திரைப்படம் சரியாக வரவில்லை என்பதை ஊகிக்க முடியாமல் போய், முதல் நாள், முதல் காட்சியில் பார்வையாளன் பார்த்து சொல்லும் வரை அது தெரியாமல் இருக்கிறது. 
ஒரு ஓவியன் தான் தீட்டிய ஓவியத்தை தள்ளி நின்று பார்த்து, சீரமைப்பது போல தன் படைப்பை, வெளியே இருந்து பார்த்து அதன் நிறை குறைகளை சரி செய்ய ஒரு கலைஞன் தகுதி வாய்ந்தவனாக இருக்க வேண்டும். அது மிக சில படைப்பாளிகளால் தான் முடிகிறது. குறிப்பாக இத்தகுதி இயக்குனர்களுக்கு அவசியம். அதனால் தான் படபிடிப்பை விட, அதிக கவனமும், உழைப்பும் அப்படத்தின் பிற்தயாரிப்பு(Post Production) நிலையில் தேவைப்படும் என்று சொல்லுவார்கள்.
அதனால் தான்.. எடுக்கப்பட்ட திரைப்படத்தை, அப்படத்தோடு சம்பந்தப்படாதவர் யாரேனும் பார்த்தால் அவரின் அபிப்பிராயத்தை அறிய ஆவலாக இருப்போம். என்ன சொல்லுவாரோ.. படம் பிடித்திருக்குமா? பிடித்திருக்காதா..? சொல்லப்பட்ட கதை திரையில் இருக்கா? அது அதன் தரத்தோடு வெளிப்பட்டிருக்கா? புரிந்ததா..? என பல கேள்விகள் தோன்றும். வெளியாள் யாரேனும் படத்தை பார்த்துவிட்டு சொல்லும் கருத்து எங்களுக்கு அவ்வளவு முக்கியமானது.
அவ்வகையில்.. நேற்று படத்தில் பணிபுரிந்தவர்களின் குடும்பங்களுக்கான காட்சி திரையிட்டோம். என் வீட்டிலிருந்து அம்மா, மாமா, மாமி என எல்லோரும் வந்திருந்தார்கள். இருநூறு சொச்சம் பேர் படம் பார்த்தோம். படம் பார்த்துவிட்டு வரும்போது அம்மாவிடம் படம் எப்படி என்று கேட்டேன். ‘நல்லாயிருக்கு டா.. நல்ல படம்’ என்றார்கள். அதேதான் என் மாமா, மாமியின் அபிப்பிராயமும். என்றாலும் வீட்டுக்கு வந்து அம்மாவிடம்.. அன்பாக “உண்மையை சொல்லுமா.. படம் உனக்கு பிடித்ததா..?” என்றேன். அப்போதும் அவர்கள். பிடித்தது என்றே சொன்னார்கள். பிறகு மிரட்டி கூட கேட்டுப்பார்த்து விட்டேன்.. அப்போதும் பிடித்தது என்றுதான் சொன்னார்கள்.. smile emoticonமகிழ்ச்சிதான். 
பிறகுதான்.. திரு. கே.என்.சிவராமன் அவர்களின் இந்தத் பதிவைப்பார்த்தேன். அத்தனை மகிழ்ச்சி. படத்தோடு சம்பந்தப்படாதவர். பத்திரிக்கையாளர் ஒருவரின் இந்தக்கருத்து.. உண்மையில் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. படத்தைக் குறித்தான நம்பிக்கை அதிகரிக்கிறது. நன்றி சார்.

படத்தைப்பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது. அதன் ஒளிப்பதிவு பற்றியும், பயன்படுத்திய கேமரா, கருவிகள் மற்றும் ஒளியமைப்பு முறைகளைப்பற்றியும் பேசுவோம். அதை பிரிதொரு கட்டுரையில் எழுதுகிறேன். அதற்கு முன்பாக, படம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியாகிறது. நீங்களும் தவறாமல் பார்த்துவிடுங்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...