முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Cinematography Workshop in Bengaluru

நண்பர்கள் கவனத்திற்கு..

'ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை' (Cinematography Workshop)

சென்னையில் கடந்த மாதம் 'ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை' (Cinematography Workshop) நடந்ததை அறிந்திருப்பீர்கள். அதே போன்றதொரு ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறையை இம்மாதம்(Dec) 26/27 இரண்டு நாட்கள் 'பெங்களூரில்' (Bengaluru) நடத்த கேட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவு குறித்தான இப்பயிற்சி பட்டறை, ஒருநாள் தியரி வகுப்பாகவும், மறுநாள் பிராக்டிக்கல் வகுப்பாகவும் இருக்கும். நானும், ஒளிப்பதிவாளர் திரு.ஞானமும் இவ்வகுப்பை நடத்துகிறோம்.

கடந்த முறை, பல நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் போய் விட்டது. இம்முறை நடக்கவிருக்கும் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறையைப்பற்றிய மேலும் விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன். விருப்பம் கொண்ட நண்பர்கள் கலந்துக்கொள்ளலாம். கட்டணம் உண்டு.

முந்தைய பட்டறையை குறித்து திரு.அருண் அவர்கள் எழுதிய பதிவை இங்கே இணைத்திருக்கிறேன்.
-----------------------


தமிழ் ஸ்டுடியோவின் இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை - நன்றி...

நண்பர்களே கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும், தமிழ் ஸ்டுடியோவின் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடந்து முடிந்தது. ஒளிப்பதிவாளர்கள் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங், ஞானம் சுப்பிரமணியன் இருவரும் மிக சிறப்பாக பயிற்சியளித்தார்கள். தமிழ் சினிமா சரியாக கவனிக்காமல் விட்டுவிட்ட இரண்டு பொக்கிஷங்கள் இவர்கள். குறிப்பாக ஒளிப்பதிவு பற்றி கற்றுக்கொடுக்கும் தளத்தில் இருவரும் புதிய பரிமாணத்தை தோற்றுவித்துள்ளார்கள். இந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறைக்காக இருவரும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடுமையாக இரவும் பகலும் உழைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும், என்னை அழைத்து இப்படி செய்யலாமா, இன்ன மாதிரி புதிய கருவிகளை பயன்படுத்தி சொல்லிக்கொடுப்போமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நானே ஒரு சமயத்தில் அட இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்றே கேட்டுவிட்டேன். ஆனால் எவ்விதத்திலும் தொய்வில்லாமல், தாங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தில் அத்தனை சிரத்தையாக வேலை செய்து, ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை அத்தனை சிறப்பாக முடித்துக்கொடுத்துள்ளார்கள்.

இரண்டு மாதங்களாக கடுமையாக உழைத்து அவர்கள் வழிநடத்திய இந்த பயிற்சிப் பட்டறையின் வெற்றியை கலந்துக்கொண்ட நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வார்த்தைகளில் காண முடிகிறது. சுமார் நாற்பத்தி நான்கு நண்பர்கள் கலந்துக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஒளிப்பதிவு பற்றி பல்வேறு புரிதலை, தேடலை வைத்திருந்தார்கள். அத்தனை நண்பர்களையும் சேர்ந்தாற்போல மனநிறைவுக் கொள்ள செய்வது அத்தனை சுலபமான செயல் அல்ல. ஆனால் ஆர்ம்ஸ்ட்ராங், ஞானம் இருவரும் அதனை சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். முதல் நாள் ஒளிப்பதிவு பற்றிய தேற்றங்களையும், இரண்டாவது நாள், ரெட் கேமரா, லைட்டிங் ஆகியவற்றை வைத்து செய்முறை பயிற்சியாகவும் நடத்தினார்கள். இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையில் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும் என்று நினைக்கும் நண்பர்கள் அடுத்த பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கே உண்மை புரியும். அல்லது புகைப்படங்களை பாருங்கள். ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு எப்படி லைட்டிங் செய்ய வேண்டும், அதன் கோணத்தை எப்படி இறுதி செய்வது, அதற்கான ஷாட் அமைப்பது எப்படி, கேமராவில் அதனை படம் பிடிக்கும் முன்னர் எப்படியான உத்திகளை கடைபிடிக்க வேண்டும் என்று வகுப்பெடுக்கும்போது, நானும் மெய்மரந்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். என்னுடைய இயக்கம் சார்ந்த பட்டப்படிப்பை லண்டனில் பயின்றபோது முதல் வருடம் முழுக்க ஒளிப்பதிவு பற்றிய வகுப்புதான். அப்போது கூட சில நாட்கள் தொய்வடைந்திருக்கிறேன். ஆனால் இந்த இரண்டு நாட்களும் மீண்டும் என்னை புதுப்பித்துக்கொள்ள முடிந்தது.

ஆர்ம்ஸ்ட்ராங், ஞானம் இருவரையும் தமிழ்நாட்டில் உள்ள, அல்லது தமிழர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் அழைத்து ஒளிப்பதிவு தொடர்பான பயிற்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். கற்றுக்கொடுப்பது எல்லாருக்கும் வாய்க்கும் கலை அல்ல. அது ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் மாபெரும் கலை. நாம் கற்ற பாடம், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போது மட்டுமே முழுமையடையும் என்கிறே ஆர்ம்ஸ்ட்ராங்கின் வார்த்தைகள் அத்தனை நிதர்சனமானது. தமிழ்நாட்டில் உள்ள திரைப்படக் கலையை கற்றுக்கொடுக்கும் கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் எல்லாரும் இவர்கள் இருவரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த அடுத்தக் கட்ட முழுமையான மாணவர்களை உருவாக்க பேருதவி புரியும் என்று நினைக்கிறேன்.

இரண்டு மாதம் கடுமையான உழைப்பு, நிறைவான பயிற்சி என இத்தனை மெனக்கெடல் இருந்தாலும், இரண்டு கலைஞர்களும், இந்த பயிற்சியை தமிழ் ஸ்டுடியோவின் படச்சுருள் மாத இதழுக்காக நிதி திரட்டவே நடத்திக் கொடுத்தார்கள். ஒரு ரூபாய் கூட இருவரும் கேட்கவில்லை. கொடுக்கப்படவும் இல்லை. பயிற்சியின் மூலமாக இரண்டு மாதம் படச்சுருள் இதழை கொண்டு வருவதற்கான நிதி கிடைத்துள்ளது. இன்னும் செலவை குறைத்திருந்தால், இன்னொரு மாதத்திற்கான நிதி கிடைத்திருக்கும். ஆனால் எந்த விசயத்திலும், எள்ளளவும் சமரசம் இல்லாமல்தான் ஒவ்வொரு பயிற்சியையும் நடத்திக்கொண்டிருக்கிறோம். முதலில் இயக்குனர் மிஷ்கின் நடத்திய பயிற்சிப் பட்டறை, இப்போது ஒளிப்பதிவு சார்ந்த பயிற்சிப் பட்டறை என இரண்டிலும் கலந்துக்கொண்ட அத்தனை நண்பர்களும் நிறைவாகவே உணர்ந்தனர். ஒருவர் கூட எதிர்மறையான கருத்தை தெரிவிக்கவில்லை. குறுகிய கால பயிற்சி நடத்த வேண்டாம் என்பதே என்னுடை எண்ணமாக இருந்தது. ஆனால் இந்த இரண்டுப் பயிற்சிப் பட்டறைகளும் அதனை தகர்த்துவிட்டது. இத்தனை நேர்த்தியாக நடத்த  முடியும் என்றால் நிச்சயம் அடுத்தடுத்து பயிற்சிப் பட்டறை நடக்கும்.

தமிழ்நாட்டில் இதற்கு முன்னதாக வேறெங்கும் இப்படியான செய் நேர்த்தியான ஒரு ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை நடந்ததில்லை என்றே கூறலாம். அத்தனை அருமையாக செய்முறை விளக்கங்களுக்கான அத்தனை உபகரணங்களையும் வரவழைத்து, இத்தனைக்கும் கடுமையான மழை நேரத்திலும் சிறிய சமரசம் கூட செய்துக் கொள்ளாமல் அதனை திறம்பட செய்து முடித்தார்கள். கடுமையான மழையிலும் பயிற்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த லைட்டிங் தொழில்நுட்பக் கலைஞர்கள், ரெட் கேமரா கலைஞர்கள் என அனைவருக்கும் தமிழ் ஸ்டுடியோவின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெறுமனே ஒளிப்பதிவு பயிற்சி என்று மட்டுமல்லாமல், ஒளிப்பதிவு செய்து முடித்த காட்சியை எப்படி DI செய்வது, அதனை எப்படி படத்தொகுப்பு செய்வது என்பன போன்ற வேறு சில வகுப்பும் நடந்தது. DI கலைஞர் ஷ்யாம், படத்தொகுப்பாளர் பிரசன்னா ஆகிய இருவருக்கும் தமிழ் ஸ்டுடியோவின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் இருவரும் கூட ஒரு ரூபாய் கூட பணம் கேட்கவில்லை, கொடுக்கப்படவும் இல்லை.

இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒளிப்பதிவாளர்கள் ஆர்ம்ஸ்ட்ராங், ஞானம் சுப்பிரமணியன் இருவருக்கும் தமிழ் ஸ்டுடியோ சார்பாக, கலந்துக்கொண்ட நண்பர்கள் சார்பாக, படச்சுருள் வாசகர்கள் சார்பாக பெரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் உழைப்பிற்கும் கற்றுக்கொடுத்த நேர்த்திக்கும், படச்சுருள் இதழுக்காக நிதித்திரட்ட ஒரு ரூபாய் கூட பெறாத நேர்மைக்கும் எனது வந்தனங்கள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,