முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்ததும் கற்றதும்:


கிட்டத்தட்ட, வாழ்வின் பாதி நாட்களை / வருடங்களை கடந்து விட்டேன். கடந்து வந்த வாழ்வை திரும்பிப் பார்க்கையில், ஒன்று புலப்படுகிறது..

‘எதுவும் நிரந்தமில்லை’

வயதுக்கேற்ப சிந்தனைகள் மாறுகின்றன‌. சிந்தனைக்கேற்ப விரும்பங்கள் மாறுகின்றன‌. விருப்பங்களின் பொருட்டு செயல்கள் மாறுகின்றன‌. செயல்களைப்பொறுத்து சிந்தனைகள் மாறுகின்றன‌. 

நிகழ்ந்தன‌, நிகழ்வன‌, நிகழப்போவன‌ என சிந்தனை எப்போதும் கலவையாகவே இருக்கிறது. நிகழ்ந்தவற்றை  அடிப்படையாகக் கொண்டு, நிகழப்போவதை  மனம் திட்டமிடுகிறது, எதிர்ப்பார்க்கிறது. ஆனால், மனதுக்கு மட்டுமே மூன்று காலங்கள் இருக்கிறது, வாழ்விற்கில்லை. வாழ்வு நிகழ்காலத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது ஒரு நதியைப்போல வெறுமனே ஓடிக்கொண்டிருக்கிறது. ‘ஓடிக்கொண்டே’ இருக்கிறது. 

எத்தனை நிகழ்வுகள், எத்தனைக் கவலைகள், எத்தனை மகிழ்ச்சி, எத்தனை ஏமாற்றம், எத்தனைக் கனவுகள்.. எல்லாமே கடந்து சென்று கொண்டேதான் இருக்கின்றன‌.

எதிர்ப்பார்ப்பு நம்மை எதிர்காலத்தில் வாழச்செய்கிறது. ஏமாற்றம் கடந்த‌ காலத்தில் வாழச் செய்கிறது. நிகழ்காலம் கடந்துகொண்டிருப்ப‌தை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம் பெரும்பாலும். எதிர்காலத்தின் கனவும், கடந்த காலத்தின் நினைவும் மனதை அலைக்கழித்துக்கொண்டேயிருக்கும் அதேநேரம், நிகழ்காலம் கரைந்து செல்கிறது கவனிப்பார‌ற்று.

எது சரி..? எது தவறு..? காலத்தே எல்லாம் மாற்றம் கொள்கிறது. என் அனுபவத்தில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் சிந்தனை, விருப்பம், கொள்கை, முடிவு எல்லாம் மாற்றம் அடைகிறது. முற்றிலும் புதியதோர் நிலையை அடைகிறோம். சரி தவறுகள் தலைகீழ் மாற்றத்தை அடைகிறது. கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கான பலனை, பாடத்தை வாழ்வு திரும்பித்தருகிறது. கண்ணுடையோர் அதை கண்ணுறுகிறார்கள். நல்லதோ கெட்டதோ.. முற்பகல் செய்யின் பின்பகல் விளையும் என்ற மூதோர் வார்த்தை உண்மை. 

கனவுகளை அடைய.. தகுதியே, மிக சுலபமான வழி. குறுக்கு வழிகள் பல இருப்பினும் அவை நிலைப்பதில்லை என்பதும் உண்மை. கனவுகளை அடைய.. தகுதியோடு சாமார்த்தியம் வேண்டும். சாமார்த்தியம் பல வகைப்படுகிறது. ஆயினும், அவை அத்தனையும், மனிதர்கள் கையாள்வதையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. 

எதை அடைந்தாலும், எதைச் சேர்த்தாலும், எதைக் கொண்டாலும், எதைக் கடந்தாலும்.. மனிதர்களுக்கு வாழ்வு குறித்தான ஒரு ஏமாற்றம் இருந்துகொண்டே இருக்கிறது. கடந்து வந்த பாதை எத்தனை உயர்வாக இருப்பினும், வெற்றிகள் பல வசமாகி இருப்பினும் ஏதோ ஒரு ஏமாற்றம், ஏதோ ஒரு ஏக்கம் மீதம் இருந்துக்கொண்டே இருக்கிறது அனைவருக்கும். 

நட்பு, காதல், பாசம் ஆகியவை எத்தனை தூரத்தை, எத்தனை ஏமாற்றத்தை, எத்தனை வருத்தத்தை, எத்தனை வலியைக் கடந்தும் அப்படியே இருக்கின்றன‌. ஒரு சொல், ஒரு நிகழ்வு, ஒரு பார்வை, ஒரு புன்னகை, ஒரு பிறப்பு, ஒரு மரணம் அதை எளிதாக மீட்டெடுத்துவிடுகிறது. கடந்த கால நட்பு, கடந்த கால காதல், கடந்த கால பாசம் என்று எதுவுமில்லை.

காலம், நம்மை முன் நகர்த்தவே செய்கிறது. கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் நன்மையே செய்திருக்கின்றன‌. இயற்கை நம்மை மேம்படுத்தவே முயற்சிக்கிறது எப்போதும். வளர்ச்சி என்பது, உடல், பொருள், மனம் மூன்றின் கலவை. மனம் என்பதை ஆன்மா என்று புரிந்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட எல்லோரும் பொருள் ஈட்டுவதைப்பற்றி அறிந்திருக்கிறோம். பலர் உடலைப்பற்றியும் அதை பராமரிப்பதைப்பற்றியும் கவனம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிக சொற்பமானவர்கள் மட்டுமே மனதைப் பற்றியதான விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வின் எல்லா கண‌ங்களும், எல்லா செயல்களும், எல்லா நிகழ்வுகளும் இம்மூன்றையும் பாதிக்கின்றன‌. காலத்தே பொருளும், உடலும் மாற்றம் கொள்கிற அதே அளவில் மனம் மாற்றம் அடைவதில்லை. மனம் எப்போதும் பின் தங்கியே இருக்க விரும்புகிறது. நிகழ்ந்தவற்றையே பற்றிக்கிடக்க விரும்புகிறது. கனவு காணும் மனம், அதற்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பதில்லை பெரும்பாலும். மனதிற்கு, தெரியா எதிர்காலத்தை விட தெரிந்த கடந்த காலம் வசதியாக இருக்கிறது. அதன் பொருட்டே.. எப்போதும், அது மகிழ்ச்சியோ, துயரமோ கடந்தகாலத்திலேயே உழன்றுகொண்டிருக்கிறது. பல சரடுகளாய் பின்னிப்பிணைந்து கிடக்கும் மனதை ஒற்றைச் சரடாய் மாற்றுவதே சுக வாழ்விற்கான ரகசியம். சாதனை, வெற்றி, அமைதி, மகிழ்ச்சி இவை அனைத்தும் ஒற்றை சரடு மனதின் மகத்துவம். 

கடவுள் இருப்பு, உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால், கடவுளின் இருப்பு அவசியமாகிறது. இருந்தால் நல்லது.

முகம், அகத்தின் கண்ணாடி என்பதை மறுப்பதற்கில்லை. எத்தனை அரிதாரம் பூசினாலும் அது பல்லிளிக்கவே செய்கிறது. முகம் காட்டிக்கொடுக்காத மனிதனை நான் சந்தித்ததே இல்லை.

பணம், அவசியமானது. 

மரணம், எத்தனை நிஜம்! சுகமா என்று தெரியவில்லை.


வாழ்வென்பது ஒரு பயணம்.. சுற்றுலாப்பயணம். அவ்வளவுதான்.

கருத்துகள்

  1. Unmai..... evvalavu nitharsanamana vaarthaigal.... sutrula payanathil sernthu payinippom.....

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு . வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  3. I am just 23.. And I feel ur thoughts right now. But I am not confirmed so I confused. From this ur experience I confirmed thoughts and I agreed with u... Life is like a river forever

    பதிலளிநீக்கு
  4. Very True Description and i liked quoting the life as "Journey" ...

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு, நிகழ்காலத்தில் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோமோ, அதுவே எதிர்காலத்திர்த்திக்கான பலன். கடந்த காலத்தை சுவையானதாக மாற்ற, நிகழ் காலத்தை பயனுள்ளதாக செலவிட வேண்டும். என்பதை இந்த கட்டுரை அற்புதமாக எடுத்துரைத்துள்ளது. காலத்திற்கு ஏற்ப, தேவைகள் எதுவாயினும் அதற்கான உழைப்பு, உண்மையாக இருக்க வேண்டும் என்பதை உணரச்செய்கிறது... நன்றி சார்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...