முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டிஜிடல் கேமரா: அதன் ஆதார தொழில்நுட்பம்



ஃபிலிம் கேமராக்கள், முழுவதுமாக வேதியியல், எந்திரவியல் அடிப்படையில் இயங்குபவை என்பதை நாம் அறிவோம். ஆனால், டிஜிடல் கேமராக்கள் முழுவதுமாக மின்னணுவியல் அடிப்படையில் இயங்குபவையாகும். முக்கிய வேறுபாடாக, ஃபிலிம், அதற்கான அறை, மற்றும் அதை இயக்கும் எந்திர நுட்பங்கள் இல்லை என்பதாலேயே கேமரா, உருவில் ஒப்பீட்டளவில் மிகவும் சிறியதாகிவிடுகிறது, எடை குறைவானதாகி விடுகிறது. பதிலாக, ஒவ்வொரு டிஜிடல் கேமராவுமே பிம்பங்களை டிஜிடல் வடிவில் பதிவு செய்ய, ஏறத்தாழ ஒரு சிறு கணினியையே தன்னகத்தே கொண்டுள்ளது எனலாம்.
கணினி, பைனரி எனப்படும் கணினியின் புரிதல் மொழியென்றெல்லாம் நாம் நுட்பமாக, ஆழமாகச் செல்லப்போவதில்லை. ஆயினும் கேமராவின் சில முக்கியப் பாகங்களைத் தெரிந்துகொள்வது டிஜிடல் கேமராவைப் புரிந்துகொள்ள, அதனோடு பணிபுரிய ஒரு வழியேற்படுத்தும். லென்ஸுகளைப் பொருத்துமிடம், வியூ ஃபைண்டர்கள் என ஃபிலிம் கேமராவைப்போலவே இதிலும் சில பொதுவான அம்சங்கள் இருப்பினும், பிரதான வேறுபாடு என்பது, ஃபிலிமுக்குப் பதிலாக பிம்பங்களை உணரவும், பதியவும் செய்யக்கூடிய பாகங்களாகும். 
அதற்கும் முன்பாக, ஏற்கனவே 'டிஜிட்டல் சினிமா' எனும் பகுதியின் துவக்கத்தில் நாம் கண்ட, HD தொழில்நுட்பத்தில் பயன்பாட்டிலிருக்கும் சில தொழில்நுட்பப் பெயர்களை நினைவூட்டிக்கொள்வது அவசியமாகிறது.
பிக்சல்ஸ் (Pixels) & ரெஸல்யூஷன் (Resolution)

தொலைக்காட்சி பெட்டியின் திரையை கூர்ந்து நோக்கினால் தெரியும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு பிக்சலாகும். அந்த ஒவ்வொரு புள்ளியிலும் இடைவிடாது நிகழ்ந்துகொண்டிருக்கும் வண்ண/ வெளிச்ச மாறுதலே ஒன்றிணைந்து ஒரு முழு அசைபடமாக நமக்குத் தோன்றுகிறது. 

கிடைமட்டமாக (Horizontal) அதாவது அகலத்திலும் (Width) மற்றும் செங்குத்தாக (Vertical) அதாவது உயரத்திலும் (Height) நுணுக்கமாக அடுக்கப்பட்டிருக்கும் அத்தகைய 'பிக்சல்களை' நாம் எண்ணிக்கையில் குறிக்கிறோம். 720 x 576 என்பதில் அகலத்தில் 720 பிக்சல்களும் உயரத்தில் 576 பிக்சல்களும் உள்ளது என்று பொருள்படுகிறது.

இந்த பிக்சல்ஸ் (Pixels)-களின் எண்ணிக்கையைக் கொண்டு அப்பிம்பத்தின் அடர்த்தியை குறிப்பதே ரெஸல்யூஷன் (Resolution) எனப்படுகிறது. பிக்சல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதன் அடர்த்தி அதிகரித்து அதனால் அப்பிம்பத்தின் துல்லியம் (Informations: Color, Brightness, Sharpness.. etc) அதிகரிக்கும். 

ஹை-டெஃபினிஷன் (HD- High Definition):

720 x 576 பிக்சல்களைக் கொண்ட SD பிம்பங்களின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாகத் தொடர்வது 'டிஜிட்டல்’ தொலைக்காட்சி பிம்பங்கள் (DTV/ DVD). அவை 1280 x 720 பிக்சல்கள் கொண்டதாக இருக்கும்.  அதனையும் அடுத்த இவ்வகை 'HD’ படங்கள் 1920 x 1080i பிக்சல் கொண்டதாக இருக்கின்றன. இவை அதிக 'ரெசலூஷன்' (Resolution) கொண்ட படங்கள் என்பதனால் படங்கள் மிகத் தெளிவாக, செறிவாக இருக்கும். இந்தப் பிக்சல் அளவுகளில் படத்தைத் தரக்கூடிய தொலைக்காட்சியோ, பிற உபகரணங்களோ ’ஹை-டெஃபனிஷன்’ காட்சி உபகரணங்கள் என அழைக்கப்படுகின்றன. 

ஆனால், இத்தகைய தொலைக்காட்சிக்குத் தேவையான ரெஸலூஷனை விடவும், மிக அதிகமான 'Resolution'-களில் சினிமாவுக்காக காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது 2048x1536 (2K), 4096x3072 (4K) போன்ற 'ரெஸலூஷன்'களில் படம் பிடிக்கப்பட்டு திரையிடப்படும் போதுதான் அவை பெரிய திரைக்கு அவசியமான துல்லியத்தோடு அமைகின்றன.

இத்தகைய செறிவுமிக்க ஒளிப்பதிவைச் சாத்தியமாக்கும் ஒரு டிஜிடல் காமிராவில்,
1. இமேஜ் சென்சார் (Image Sensor)
2. ரெக்கார்டிங் கருவிகள் (Recording Devices)
ஆகிய இரண்டும் பகுதிகளும் அதன் முக்கியமான பாகங்களாக அமைகின்றன.

இமேஜ் சென்சர்கள் (Imagers or Image Sensors)

சென்சர்களை, இயல் மாற்றத்தை உணரும் கருவிகள், அதாவது உணர்கருவிகள் என தமிழில் மொழிபெயர்க்கலாம். ஒளியை, கதிர்களை, ஓசையை உணரும் தன்மை கொண்டவை இவை. இந்த அடிப்படையில், ஒளியைத் தருவதன் மூலமாகவோ, தடுப்பதன் மூலமாகவோ ஒரு சென்சரை உணரச்செய்து, அதன் மூலமாக பல காரியங்களை நாம் செய்து கொள்ளமுடியும். சில பெரிய உணவகங்களில், அலுவலகங்களில் கதவுகள் நாம் அருகில் சென்றால் திறந்துகொள்வதையும், விலகிச்சென்றால் மூடிக்கொள்வதையும் பார்த்திருக்கிறோம். அவையெல்லாம் சென்சர்களின் கைவண்ணமே!
கேமராக்களில் பிம்பங்களைப் பதிவு செய்யும் சென்சர்கள் இமேஜ் சென்சர்கள் அல்லது இமேஜர்கள் (Image Sensors or Imagers) எனப்படுகின்றன. இமேஜ் சென்சர்களின் வரலாறு 1970களிலேயே துவங்கிவிட்டாலும், 1990க்குப் பிறகே, வெகுஜன பயன்பாட்டுக்கு, அதாவது நமக்குத் தேவையான தரத்தில் பிம்பங்களை உணரும் சென்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டபின்பே புகைப்படத்துறை, விடியோத்துறை வாயிலாக பயன்பாட்டுக்கு வந்தன. டிஜிடல் கேமராக்களுள் இருக்கும் ஒளியை உணரும் தன்மைகொண்ட சென்சர்கள் பிரதானமாக இரு வகைப்படுகின்றன. CCD, CMOS என்பனவே அவை.
ஃபிலிம் காமிராவில், லென்ஸ் வழியாக உட்புகும் ஒளியானது எப்படி ஃபிலிமில் விழுகிறதோ, போலவே டிஜிடல் காமிராவில் லென்ஸின் வழியாக உட்புகும் ஒளியானது ஒரு சென்சரில் விழுகிறது.
விழும் ஒளிக்கேற்ப வேதிப்பொருட்களால் ஆன ஃபிலிம் லேயர்களில் வேதிவினை நிகழ்ந்து ஒரு பிம்பம் பதிவாகிறதென அறிவோம். ஆனால், இங்கே சென்சர் எப்படி ஒளியைப் புரிந்துகொள்கிறது? எப்படிப் பதிவு செய்கிறது?

CCD (Charge Coupled Device) சென்சர்கள்:

முன்பாக ஒரு பிம்பம், பிக்சல்களால் (Pixel) எப்படி உருவாக்கப்படுகிறது என்று கண்டோம் அல்லவா? அது போலவே, ஒரு CCD சென்சரும், பிக்சல்களைப் போன்றே நீள, அகல வாக்கில் ஒளியை உணரும் மிகச்சிறிய துகள்களைப் போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. அதென்ன ‘பிக்சல்களைப் போன்றே..’? அப்படியானால் அவை என்ன? ஒரு பிம்பம் டிஜிடலாக பதியப்படுவது, ஒளிபரப்பப்படுவது, தொலைக்காட்சித் திரைகள் மற்றும் பிற ஊடகங்களால் உணர்ந்துகொள்ளப்படுவது என எல்லாமே மிக நுண்ணிய, தனித்துவமான பிக்சல்கள் மூலமாகத்தான். 
ஒரு சென்சரிலும் பிக்சல்களைப் போன்றே மிக நுண்ணிய, தனித்துவமான பகுதிகள் உள்ளன. ஆனால் இவை பிக்சல்கள் அல்ல, இவை ஃபோட்டோசைட்ஸ் எனப்படுகின்றன (Photosite). ஏறத்தாழ, இந்த ஒவ்வொரு போட்டோசைட்டிலிருந்தும் பெறப்படுகிற தகவலானது, பிம்பத்தின் ஒவ்வொரு பிக்சலுக்கும் உரியதாகும். உண்மையில் இந்த போட்டோசைட்கள் தனித்தனியான பாகங்கள் அல்ல. மாறாக சிலிகன் (Silicon) தகட்டால் செய்யப்பட்டு பல மின்வாய்களால் (எலக்ட்ரோடு- Electrodes) நுண்மையாக பிரிக்கப்பட்டுள்ள பகுதிகளேயாகும். சிலிகன் ஒரு மிகச்சிறந்த குறைமின்கடத்தியாகவும் (Semiconductor), ஒளித்துகள்களால் தன் இயல்பை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டதாகவும் உள்ள ஒரு அரிய கனிமமாகும். அதன் இத்தன்மையே ஒழுங்கு செய்யப்பட்டு, சென்சர்கள் செயல்பட காரணமாகிறது.
  
CCD சென்சர் மற்றும் அதன் ஆதாரப்பணி

ஒரு CCD சென்சரில், சிலிகன் தகட்டின் மேற்பரப்பானது காப்பிடப்பட்டு (Insulating) குறுக்கும் நெடுக்குமாக பல நுண்ணிய மின்வாய்களால் சிற்சிறு ஃபோட்டோசைட்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஃபோட்டோசைட்டின் மீதும் லென்ஸிலிருந்து வரும் ஒளி விழும்போது, அந்த ஒளியின் அடர்த்திக்கேற்ப மின்தூண்டல் (Electrical Charge) ஏற்பட்டு அவை முறையே மின்தகவல்களைச் சேகரிக்கும் அமைப்புகள் (Registers) மூலமாக மின்பெருக்கிகளை (Amplifier) அடைந்து, பின்பு மின்னணு ஊடகங்களில் சேமிக்கப்படுகின்றன. 

ஒரு CCD சென்சரின் மேற்பரப்பு (1000 மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது)
இதுவே அடிப்படை. இந்த அடிப்படையை புரிந்துகொண்டவர்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் எழுந்திருக்கலாம். சிலிகன் ஃபோட்டோசைட்ஸ், ஒளியையும், இருளையும்தானே புரிந்துகொள்ளும், ஆயின், வண்ணப் பதிவு எவ்வாறு சாத்தியமாகிறது? ஒவ்வொரு துறையிலுமே, பொறியியல் (Engineering) அதன் சாதனைகளை நிகழ்த்தத் தவறுவதேயில்லை. சமீப காலத்திய மின்னணு ஊடகவியல் துறையில் இந்த இமேஜ் சென்சர்களும் (Imagers or Image Sensors), அதன் வண்ணப் பதிவும் ஒரு அரிய கண்டுபிடிப்பாக (Engineering Wonders) போற்றப்படுகிறது.
முதலில் இந்த வண்ணப்பதிவுக்குத் தீர்வாக மூன்று CCD சென்சர்கள் (Tri-Sensor System) அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு பிம்பத்தின் வண்ணமானது, அடிப்படை RGB (Red+Green+Blue) வண்ணங்களின் கலவை என்பதை அறிவீர்கள்தானே! மூன்று CCD சென்சர்களில், ஒவ்வொரு சென்சரும் இந்த மூன்று வண்ணங்களில் ஒன்றை, அதற்குரிய ஃபில்டரின் உதவியோடு பதிவு செய்கிறது. பின்பு இம்மூன்று பிம்பங்களும் ஒன்றோடொன்று கலக்கும் போது சரியான வண்ணத்தில் நமது பிம்பம் கிடைக்கிறது.

தொடர்ந்து ’பாயர் கலர் ஃபில்டர்’ (Bayer Color Filter) முறை பயன்பாட்டுக்கு வந்தது. இந்த முறையில் மூன்று CCDக்கள் இல்லாமல், ஒரே CCDயிலேயே நமக்குத் தேவையான வண்ணத்தைப் பெறமுடிகிறது.

இம்முறையில் சென்சரின் மீது, நுண்மையான பாயர் கலர் ஃபில்டர் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று வண்ணங்களை வடிகட்டும் திறன் வாய்ந்த ஃபில்டர் முழு சென்சர் பரப்புக்கும் விரிந்திருக்கும். ஒவ்வொரு ஃபோட்டோசைட்டும், இந்த வண்ண ஃபில்டரின் குறைந்தபட்ச மூன்று வண்ணங்களை வடிகட்டும் பகுதிகளுக்கு நேராக இருக்கும். ஒரு ஃபோட்டோசைட்டின் அளவு என்பது ஏறத்தாழ 10 மைக்ரான்களாகும் (Microns). ஒரு மைக்ரான் என்பது, 1 மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஃபோட்டோசைட்டின் மீதும், ஒளியை துல்லியப்படுத்தித்தர நுண்ணிய லென்ஸுகள் உள்ளன என்பதையும் சிந்தியுங்கள். ஆயின், அத்தகைய நுண்ணிய ஃபோட்டோசைட்டுகளுக்கும், லென்ஸுகளுக்கும் இடையே நிறுவப்பட்டுள்ள பாயர் கலர் ஃபில்டர் எத்தகைய நுண்மையான ஊடகம் என்பதை உணரலாம்.
இந்த இரண்டு வகையான வண்ண வழிமுறைகளைப் பின்பற்றும் காமிராக்களுமே தற்போது பயன்பாட்டிலிருக்கின்றன. ஒவ்வொன்றும் அதனதன் சிறப்புகளையும், குறைபாடுகளையும் கொண்டவையாகும். இத்தகைய நுண்மையான பாகமாக விளங்கும் CCD சென்சர்கள் சோனி (Sony), பேனாவிஷன் (Panavision) போன்ற மிகச்சில நிறுவனங்களாலேயே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

CMOS (Complementary Metal Oxide Semiconductor) சென்சர்கள்:

CMOS சென்சர்கள் ஏறத்தாழ அடிப்படையில் CCD சென்சர்களை ஒத்ததுதான் எனினும், இதில் பிம்பங்கள் உணரப்படும் செயல்முறை முற்றிலும் வேறாகும். இதிலும் சிலிகன் அடித்தளம், ஃபோட்டோசைட்ஸ், கலர் ஃபில்டர்ஸ், நுண்ணிய லென்ஸுகள் ஆகியன உண்டு. ஆனால், CCDயைப் போல் ஒவ்வொரு ஃபோட்டோசைட்டின் தகவல்களும் கோர்வையாக, மின்வாய்கள் (Electrode) மூலமாக சேகரிக்கப்படாமல், ஒவ்வொரு ஃபோட்டோசைட்டின் தகவல்களுமே, தனித்தனியாக பதியப்படுகின்றன. ஆக, ஒவ்வொரு ஃபோட்டோசைட்டுமே அதற்கான மின்வாய்களையும் (Diodes), மின்பெருக்கிகளையும் (Amplifier) நுண்ணிய அளவுகளில் தன்னகத்தே கொண்டுள்ளன. 


தயாரிப்பிலிருக்கும் எளிமை காரணமாக CMOS சென்சர்கள் குறைந்த விலையில் கிடைகின்றன. மேலும், CCDயோடு ஒப்பிடுகையில் இவற்றின் மின் தேவை மிகக் குறைவு. இவ்வாறான சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் மிக அதிக துல்லியத்தோடு (Resolution) படமெடுக்கும் திறன் CCDயோடு ஒப்பிடுகையில் இவற்றுக்குக் குறைவே. இருப்பினும் விலை, தயாரிப்பில் எளிமை காரணமாக CMOS சென்சர்கள் சந்தையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடத்தைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மிக அதிக ரெஸல்யூஷனில், தரமிக்க படங்கள் எடுக்கும் தேவை இருக்கும் இடங்களிலேயே CCDக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

டிஜிடல் சேமிப்புக் கருவிகள்

சென்சர்களிலிருந்து கிடைக்கும் பிம்பத்தின் டிஜிடல் தகவல்களைப் பெற்றுப் பாதுகாக்கும் கருவிகளே, டிஜிடல் சேமிப்புக்கருவிகள் எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் கேமராக்களோடு பொருத்தும்படியும், தேவைப்படும் போது எடுத்துக் கணினியோடு இணைக்கும்படியாகவும் வடிவமைக்கப்படுகின்றன. அதனால், பிம்பங்கள் பதிவு செய்யப்பட்டபின்னர், அவற்றைக் கணினிக்கு மாற்றித்தர எளிமையாகிறது. 
1990களின் இறுதியிலும் 2000த்தின் துவக்கத்திலும் நுகர்வோர் பயன்பாட்டுக்கு வந்த ஏராளமான டிஜிடல் விடியோக் கேமிராக்கள், ஒளிநாடாவில் (Tapes) பிம்பங்களைப் பதிவு செய்தன. பிற டிஜிடல் கண்டுபிடிப்புகளைப் போலல்லாது, ஒலி மற்றும் ஒளிநாடாக்களுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அனலாக் ஒலிப்பதிவுக்கும், அனலாக் ஒளிப்பதிவுக்கும் பயன்பட்ட அதே மின்காந்த நாடாக்கள்தான் (Magnetic Tapes) டிஜிடல் ஒளிப்பதிவுக்கும் பயன்படுத்தப்பட்டன. ஃபெர்ரிக் ஆக்ஸைடு (Ferric Oxide) போன்ற வேதிப்பொருள் பூசப்பட்ட மெல்லிய பிளாஸ்டிக் இழைகள்தான் இந்த நாடாக்கள். இந்த நாடாக்கள், அதன் மீது ஏற்படுத்தப்படும், மின் காந்தப் புலத்தால் பாதிக்கப்பட்டு மாற்றமடைகின்றன. ஒலி, மற்றும் ஒளி அலைகள் மின்காந்தப்புலமாக மாற்றப்பட்டு நாடாக்களில் பிம்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அதிலும் ஏராளமான வகைகள் இருந்தன. Digital8, MiniDV, MicroMV, D-VHS, Beta, Digi-Beta போன்ற பல பெயர்கள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். இவையெல்லாம், தற்போதைய டிஜிடல் சேமிப்பு ஊடகங்களான HDD (ஹார்ட் டிஸ்க்- Hard Disc Drive), Flash Memory Cards வரவுக்குப் பின்னர், மதிப்பிழந்து போய்விட்டன என்பது நாம் அறிந்த செய்தியே!



மெமரி கார்டுகள் மற்றும் ஹார்ட் டிஸ்க் (Flash Memory Cards  and Hard Disc Drives)

தற்போது அனைத்து விதமான டிஜிடல் புகைப்பட கேமராக்கள் மற்றும் சினிமா கேமராக்களிலும் பிம்பங்களைச் சேமிக்க, மெமரி கார்டுகள் மற்றும் ஹார்ட் டிஸ்குகளே பெரும்பாலும் பயன்படுகின்றன. இவை வேறெந்த ஊடகங்களையும் விட வேகமாக பணியாற்றும் சக்திகொண்டதாகவும், மிக அதிக நினைவுத்திறன் கொண்டவையாகவும் இருக்கின்றன.


SxS CARD - சோனியின் தயாரிப்பான இவ்வகை கார்டுகள் Sony மற்றும் Alexa கேமராக்களில் பயன்படுத்தப்படுகிறது.


P2 CARD - Panasonic தயாரிப்பான இக்கார்டுகள் அந்நிறுவனத்தின் கேமராக்களில் பயன்படுத்தப்படுகிறது.

 REDMAG 1.8" SSD - RED நிறுவனத்தின் தயாரிப்பான இது அந்நிறுவனத்தின் கேமராக்களில் பயன்படுத்தப்படுகிறது

 RED CF CARD 16GB

மெமரி கார்டுகள் என்பன, டிஜிடல் தகவல்களைச் சேமிக்கவும், தேவைப்பட்டால் அழித்துவிட்டு மீண்டும் புதிய தகவல்களை சேமிக்கவும் பயன்படும் கையடக்கமான பிளாஸ்டிக் அட்டைகளாகும். உண்மையில் இவற்றுள் டிஜிடல் தகவல்களை கணினி மொழியில் சேமித்துவைக்கக்கூடிய மெமெரி சிப்கள் (Memory Chips), ஒன்றோ, அதற்கு மேற்பட்டவையோ அடங்கியிருக்கின்றன. அவற்றுக்குத் தகவல்களைத் தரவும், பெறவுமான டிரான்சிஸ்டர்களைக் (Transister) கொண்ட அமைப்பும் அதனுள் உள்ளது. இந்த டிரான்சிஸ்டர்கள் மின் தகவல்களை, மின்னணுத் தகவல்களாக (Electrical power to Electronic signals) மாற்றவல்லன. இந்த ஆதார நுட்பங்களாலேயே ஒரு மெமரி கார்டு செயல்படுகிறது. இவை நிலையான தன்மை கொண்டவை. தகவல்களைச் சேமித்துவைத்துக்கொள்ள இவற்றுக்கு மின்னூட்டம் தேவையில்லை. 

தயாரிப்பில் தொடர்ந்து மேன்மையுற்று வரும் இந்த சாதனம், தொடர்ந்து விலை குறைவாகவும், அதிக சக்தி (நினைவாற்றல்) கொண்டதாகவும் வளர்ந்துகொண்டு வருகிறது. இவையே இன்றைய புகைப்படக் கேமரா, விடியோக் கேமரா, அலைபேசிக் கருவிகளின் நினைவகங்கள், கையடக்க USB டிரைவ்கள் போன்ற நுகர்வோர் கருவிகள் அனைத்திலும் டிஜிடல் தகவல்களை சேமிக்கும் ஊடகமாக இருக்கின்றன. இவற்றை எளிதில் அக்கருவிகளிலிருந்து எடுத்து கணினியில் பொருத்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.


ஒரு வெளிப்புற ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் (An External Hard disc drive)
ஆனால், ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் எனப்படும் கருவி, அளவிலும், நினைவாற்றலிலும் மெமரி கார்டைவிட பெரியது. சாதாரணமாக ஒரு கணினியின் உட்புறத்தில் நிரந்தரமாக பொருத்தப்பட்டு கணினியின் ஆதார நினைவகமாக செயல்படுவது இவ்வகையிலான ஹார்ட் டிஸ்குகளே! தேவைப்படும் போது கணினியுடன் இணைத்து தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படும் வகையில் வெளிப்புற ஹார்ட் டிஸ்குகளும் (External Hard disc drive) பயன்பாட்டிலிருக்கின்றன. ஒரு கேமராவிலிருக்கும் மெமரி கார்டுகள் விடியோத் தகவல்களால் விரைவில் நிரம்பிவிடும் போது அவற்றை ஒரு ஹார்ட் டிஸ்கில் சேமித்துவிட்டு மீண்டும் அவற்றை கேமராவில் பொருத்திக்கொள்ள முடியும். ஒரு ஹார்ட் டிஸ்கில் நேரடியாகவே பிம்பங்களைப் பதிவு செய்யும் வகையான கேமராக்களும் உள்ளன. ஒரு ஹார்ட் டிஸ்கின் செயல்பாடு ஒரு மெமரி கார்டைப்போன்றதல்ல, சொல்லப்போனால் ஹார்ட் டிஸ்குகள் மின்காந்த வேறுபாட்டைப் பதிவு செய்யும், முந்தைய தலைமுறை ஒளிநாடாக்களின் அடிப்படைத் தத்துவத்தில்தான் இயங்குகின்றன.

ஒரு ஹார்ட் டிஸ்க் ட்ரைவின் உட்பகுதி
நீங்கள் ஒரு டிவிடித் தகட்டை நன்கறிவீர்கள். அவற்றைப்போலவே, இக்கருவியில் அலுமினியம், அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட உறுதியான ஒன்றுக்கு மேற்பட்ட வட்டுகள் உட்புறத்தில், ஒரே அச்சில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை ப்ளேட்டர்கள் (Platters) எனப்படுகின்றன. பார்க்க ஒரு டிவிடி தகட்டைப்போலிருந்தாலும், டிவிடி தகட்டின் செயல்பாடும், இந்த ப்ளேட்டர்களின் செயல்பாடும் முற்றிலும் வேறுபாடானதாகும். ஒன்றை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு, டிவிடித் தகடு இம்மூன்றுமே டிஜிடல் சேமிப்பு ஊடகங்கள்தாம், எனினும் மூன்றின் அடிப்படைச் செயல்பாடுகளும், தொழில்நுட்பமும் முற்றிலும் வேறானவை. ப்ளேட்டர்கள், ஒளிநாடாக்களைப் போல மிக மெல்லிய மின்காந்தப் புலத்தை உணரும் வேதிப்பூச்சினை உடையதாகும். இந்த ஒவ்வொரு பிளேட்டர்களின் இடையேயும் அகலவாக்கில் நகரும் அமைப்பில் (Actuator arm) பொருத்தப்பட்டுள்ள, தகவல்களைப் ப்ளேட்டரில் பதிவு செய்யும் கருவி (Read/Write Head) அமைந்துள்ளது. இவற்றுக்குத் தகவல்களைத் தரும் கட்டுப்பாட்டு அமைப்பும் (Control Unit) உள்ளமைந்துள்ளது. சுமார், 8,000 RPM வேகத்தில் சுழலும் அச்சில் ப்ளேட்டர்கள் சுழல்கையில், பதிவு செய்யும் கருவி, ப்ளேட்டர்களின் அனைத்துப் பகுதிகளையும் அணுகி அங்கு தகவல்களைப் பதியவும், அவற்றிலிருக்கும் தகவல்களை உணர்ந்துகொள்ளவும், தேவைப்பட்டால் அவற்றை அழித்துவிட்டு புதிய தகவல்களைப் பதியவும் செய்கிறது. 





Red Hard Drive Recorder - RED கேமராவில் பயன்படுத்தப்படுகிறது.




Codex compact Onboard S recorder - Alexa கேமராவில் பயன்படுத்தப்படுகிறது



தற்போது இந்த Codex Hard Drive -ஐ தூக்கி விட்டு சிறிய Drive-ஐ Alexa XT கேமராவில் இணைத்துள்ளனர்.



XT Drive


டிஜிடல் சேமிப்பின் தரம் அல்லது வகைகள் (Digital image file types):

டிஜிட்டல் கேமராவில், அதன் சென்சார்களின் வழி உணர்ந்த தகவல்கள் டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். அப்படி சேமித்து வைக்கும் தகவல்கள் ஒரு குறிப்பிட்ட ‘Digital image file types' அல்லது ‘Format' -இல் சேமித்து வைக்கப்படுகிறது. அக்கோப்புகளின் தரத்தின் அடிப்படையில் அக்கேமராவின் தரம் மதிப்பிடப்படுகிறது. ஒரு டிஜிட்டல் கேமரா அது பெறும் அத்தனை ஒளித்தகவல்களையும் அப்படியே சேமித்து வைப்பதில்லை. அதன் தகுதிக்கேற்ப தகவல்களை சுருக்கியும் குறைத்தும் சேமிக்கும். ஏனெனில் பெறப்படும் அத்தனை தகவல்களையும் சேமித்து வைக்கும் அளவிற்கான தகுதியோ இடமோ அக்கேமராவில் இருக்காது. இது அக்கேமராவின் விலையோடு சம்பந்தப்பட்டது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. மேலும் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கே உரிய ‘Codec' -ஐ பயன்படுத்துகின்றன. அவ்வகையில் பல வகையான கோப்பு வகைகளை (File Formats) நாம் பெறமுடிகிறது. இங்கே ALEXA, RED ONE மற்றும் RED EPIC கேமராவில் நாம் பெறும் கோப்பு வகைகளை மட்டும் பார்ப்போம். 

ALEXA Output options:


RED ONE Output options:

ACQUISITION FORMATS:
4.5K RAW (2.4:1)
4K RAW (16:9, HD, 2:1, and Anamorphic 2:1)
3K RAW (16:9, 2:1, and Anamorphic 2:1)
2K RAW (16:9, 2:1, and Anamorphic 2:1)
DELIVERY FORMATS: * FROM REDCINE-X
4K : DPX, TIFF, OpenEXR (RED RAY via optional encoder)
2K : DPX, TIFF, OpenEXR (RED RAY via optional encoder)
1080p RGB or 4:2:2, 720p 4:2:2 : Quicktime, JPEG
Avid AAF, MXF. 1080p 4.2.0, 720p 4:2:0 : H.264, .MP4
REDCODE™
12-bit RAW : RC28, 36, 42 Quality Levels
1-30 fps 4.5K, 4K
1-60 fps 3K
1-120 fps 2K


Epic Mysterium-X Output options:

ACQUISITION FORMATS:
5K RAW (Full Frame, 2:1, 2.4:1 and Anamorphic 2:1)
4.5K RAW (2.4:1)
4K RAW (16:9, HD, 2:1 and Anamorphic 2:1)
3K RAW (16:9, 2:1 and Anamorphic 2:1)
2K RAW (16:9, 2:1 and Anamorphic 2:1)
1080p RGB (16:9)
720p RGB (16:9)
DELIVERY FORMATS: * FROM REDCINE-X
4K : DPX, TIFF, OpenEXR (RED RAY via optional encoder)
2K : DPX, TIFF, OpenEXR (RED RAY via optional encoder)
1080p RGB or 4:2:2, 720p 4:2:2 : Quicktime, JPEG
Avid AAF, MXF. 1080p 4.2.0, 720p 4:2:0 : H.264, .MP4 

REDCODE™
12 and 16-bit RAW : Compression choices of 18:1 to 3:1
1-120 fps 5K, 4.5K
1-150 fps 4K
1-200 fps 3K
1-300 fps 2K

என்ன, திடுமென ஒரு மின்னணுப் பொறியியல் வகுப்புக்குள் வந்ததைப்போல் உணர்கிறீர்களா? உண்மையில் இவை மிகவும் மேலோட்டமான தகவல்களே! ஒரு அலைபேசியை வாங்குவதாக இருந்தால் கூட சில அடிப்படைத் தகவல்களை நாம் தெரிந்துகொண்டுதான் ஆகவேண்டும்.

வெறுமனே பேசுவதற்காக மட்டும் அதைப் பயன்படுத்தப்போகிறோமா? தரமான புகைப்படங்கள் எடுப்பதில் நமக்கு ஆர்வமுண்டா? இசை கேட்பதற்காக அதை நாம் பயன்படுத்தப்போகிறோமா? வீட்டிலிருந்தே, அலைபேசியில் அலுவலக வேலைகளைச் செய்யும் திட்டமிருக்கிறதா? எனப் பல விஷயங்களையும் நாம் சிந்திக்கவேண்டும். ஒவ்வொரு காரணிக்காகவும், தனித் தன்மையோடு தயாரிக்கப்பட்ட அலைபேசிகள் கிடைக்கின்றன. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமில்லாத நாம், ஒரு உயர்ரக கேமரா வசதிகொண்ட ஒரு அலைபேசியை வாங்கிக்கொள்வதில் பயன் என்ன? அதற்கான செலவு வீணாவதோடு, ஒரு அரிய பொருளும் வீணாக்கப்படுகிறது அல்லவா? இசை கேட்கும் ஆர்வம் கொண்ட நாம், அதற்குப் போதுமான நினைவாற்றல் இல்லாத அலைபேசியை வாங்கிவிட்டால் அது நம் அறியாமைதானே! போலவே கேமராக்களையும், அவை செயல்படும் விதத்தையும் தெரிந்துகொள்ளாவிட்டால் நமக்குத் தேவையான சரியான கேமராக்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அவற்றோடு இயங்குவதிலும் பல கட்டங்கள் நாம் பின் தங்கிவிடுவோம் என்பதும் நிஜம்.!

குறிப்பு: இக்கட்டுரை கடந்த ஆண்டு எழுதியது. தற்போது கேமராக்கள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன. 

கருத்துகள்

  1. அருமையான நடையில் எழுதப்பட்ட பதிவு, விஜய்.

    பதிலளிநீக்கு
  2. Keep up the good work Vijay. மிக எளிமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் கோட்பாடுகளை எடுத்தியம்பியமைக்கு பாராட்டுக்கள்!!!

    பதிலளிநீக்கு
  3. I visited your blog. Great. All my best wishes for your service. Many would get benefited

    Gnanasekaran.

    பதிலளிநீக்கு
  4. sir its really good... i understand in easy way thanking u sir.

    பதிலளிநீக்கு
  5. தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது.....நடைமுறை தமிழில் இருந்திருந்தால் இன்னும் எளிதில் புரியகூடிய வகையில் இருந்திருக்கும்... முயற்ச்சிக்கு நன்றி...தவறேனும் இருப்பின் மன்னிக்கவும்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,