இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.
முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.
கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பாலானோர், புகைப்படத்துறையை தவிர்த்திருக்கலாம், இன்னும் கொஞ்சம் ஒளிப்பதிவு குறித்து பேசியிருக்கலாம் என்று கருத்து சொல்லி இருந்தார்கள். அதனால், இம்முறை புகைப்படத்துறையை தவிர்த்து, முழுக்க முழுக்க ஒளிப்பதிவுத்துறையை மட்டும் எடுத்துக்கொண்டோம். ஆயினும், எதைச் சொல்லித்தருவது, எதை விடுவது என்ற கேள்வி இருக்கத்தான் செய்தது. வருபவர்கள் பெரும்பாலும் இத்துறை சார்ந்து ஆர்வம் மட்டுமே கொண்டவர்கள், நேரடி அனுபவம் அற்றவர்கள் என்பதனால், இத்துறை சார்ந்த ஒரு முழுமையான அறிமுகத்தை அவர்களுக்குத் தருவதே ஆதார நோக்கம். எதை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது, எதையெல்லாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது, எதுவெல்லாம் இணைந்து ஒரு படைப்பை கொடுக்கின்றன, தொழில்நுட்பமும், கலையும் இணையும் அந்த அற்புதம் எப்படி நிகழ்கிறது, அதற்கான அடிப்படை தகுதி என்ன என்பதை புரிய வைக்க முயன்றோம்.
ஆயினும், இந்த இரண்டு நாட்கள் பயிற்சிப்பட்டறைக்கு போதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுக்கும், நாங்கள் சொல்ல வந்ததை, விரும்பியதை எல்லாவற்றையும் சொல்லி விட முடியவில்லை. கலந்து கொண்டவர்களுக்கும் இந்த இரண்டு நாட்கள் போதவில்லை என்றுதான் தெரிகிறது. எல்லோருமே, அடுத்த முறை நாட்களை அதிகப்படுத்துங்கள். 4 அல்லது 5 நாட்களாக நடத்துங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். சென்னையில் நடந்த பயிற்சிப்பட்டறையின் போதும் கருத்து இவ்வாறே இருந்தது.
இம்முறை, 5C’s of Cinematography பற்றி ஒரு சிறு அறிமுகத்தை மட்டுமே கொடுக்க முடிந்தது. அதை குறித்தான பல விடியோக்கள் எங்களிடம் இருந்த போதும், அதை காட்ட நேரம் போதவில்லை. ஆனால், அத்துணை பேரும் 5C’s of Cinematography-இல் ஆர்வமாக இருக்கிறார்கள். அதைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.. அதனால், அடுத்தமுறை, ஒரு குறிப்பிட்ட டாப்பிக்கை மட்டும் எடுத்துக்கொண்டு பயிற்சிப்பட்டறை நடத்தலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது. குறிப்பாக.. Lighting, 5C’s of Cinematography, Lens போன்றவற்றில் எதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, 4 முதல் 5 நாட்கள் பயிற்சிப்பட்டறை வைக்கலாம். விரைவில் அதைப்பற்றிய தகவலைத் தருகிறோம்.
நாட்களை அதிகப்படுத்துவது, வேறொரு சிக்கலை ஏற்படுத்தும். பலரால் அதிக நாட்களை ஒதுக்க முடியாது. இரண்டு நாட்கள் என்பதே அவர்களின் வேலையை பாதிக்க கூடியதாக இருக்கிறது. அதனாலேயே பலர் கலந்துக்கொள்ளவில்லை. அப்படி நேரம் இருப்பவர்கள் மட்டும் வர நேர்ந்தால், கலந்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். நபர்களின் எண்ணிக்கை குறைந்தால், கட்டணம் அதிகரிக்கும். ஒவ்வொரு பயிற்சிப்பட்டறைக்கும் பல செலவுகள் செய்ய வேண்டியதிருக்கிறது. இடம், உணவு, விளம்பரம், போக்குவரத்து, புரஜெக்டர், ஒலி அமைப்பு, லைட்ஸ், கேமராவுக்கான வாடகை, உதவியாளர்களுக்கான சம்பளம் என செலவுகள் ஒருபுறம் என்றால், அதை ஏற்பாடு செய்ய குறைந்தது ஒருமாதம் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. அப்போது ஆகும் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதனால், அடுத்த தடவை.. அதிக நாட்கள், அதிக வகுப்புகள், அதிக அனுபவம், கூடவே அதிக கட்டணமும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்பலாம்.
கலந்து கொண்டவர்களுக்கும், கோவை நண்பர்கள் ‘தமிழ் செழியன்’, பாபு மற்றும் ஆனந்த் அவர்களுக்கும், AZURE STUDIO நண்பர்கள்.. கௌதம், வர்கீஸ், தினேஷ் அவர்களுக்கும், நண்பர், திரைப்பட ஆர்வலர் திரு. பாஸ்கரன் / உலக சினிமா ரசிகன் அவர்களுக்கும், கேமரா வழங்கிய திரு.ஶ்ரீதர் அவர்களுக்கும் இந்நேரத்தில் எங்கள் நன்றியை சொல்லிக்கொள்கிறோம்.
நன்றி நண்பர்களே! இணைந்திருப்போம்!!
- விஜய் ஆம்ஸ்ட்ராங்
- ஞானம் சுப்ரமணியம்
Sir next workshop yappo?plz next time workshop nadathurapa kandipa information solunga...
பதிலளிநீக்கு