90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், இணையம் தீண்டாதவன் எவனுமில்லை.
நாம் அறியாமலேயே, தொழில்நுட்பம் நம் வாழ்க்கைக்குள் புகுந்துவிட்டது. செல்ஃபோனில் துவங்கி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று இன்று நாம் பயன்படுத்தும் அத்தனையும், நம் வாழ்க்கைக்குள் எப்படி வந்தன என்று யோசித்துப்பாருங்கள். அவற்றைப்பற்றி நாம் புரிந்துக்கொள்ளுவதற்கு முன்பாகவே, நம் மீது அவை திணிக்கப்பட்டன என்பது கொஞ்சம் யோசிக்க புலப்படும். ஆம்.. தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கைக்குள் அப்படிதான் வந்தன, வருகின்றன.
உங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, நீங்கள் அதை கவனிக்கிறீர்களோ இல்லையோ, உங்கள் மீது தொழில்நுட்பங்கள் திணிக்கப்படும். நீங்கள் அதன் பயனீட்டாளராக மாற்றப்படுவீர்கள். காரணம், தொழில்நுட்பங்கள் எப்போதும் பொருளாதாரத்தோடு சம்பந்தப்பட்டவை. வணிகத்தோடு சம்பந்தப்பட்டவை. வணிகம் தனக்கான நுகர்வோரைத் தானே தேடி கண்டடையும். அதற்கு கூச்சம், வெட்கம், நாணம், பயிர்ப்பு எல்லாம் கிடையாது. எவனையும் தீண்டும், தன் வாடிக்கையாளனை தேடி, தானே செல்லும். இல்லையெனில், தனக்கான வாடிக்கையாளனைத் தானே உருவாக்கும். தான் உருவாக்கியவனைக் கொண்டே தன்னை வளர்க்கும். செழிக்கும். அடுத்தவனை நோக்கி நகரும். இது வணிகத்தின் இயல்பு. அவ்வணிகமே உங்கள் மீது தொழில்நுட்பங்களை திணிக்கிறது. ஜாலங்கள் காட்டி உங்களை மயக்குகிறது. மயங்கிய உங்கள் பாக்கெட்டிலிருந்து திருடுகிறது. அதை ஒருபோதும் நீங்கள் தடுக்க முடியாது. தவிர்க்க முடியாது.
அதுசரி, இத்தனை பில்டப் எதற்கு இங்கே என்கிறீர்களா..?! காரணமிருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக, ‘குறிப்பிட்ட அந்த தொலைதொடர்பு நிறுவனம்’ கொண்டு வந்த ‘சிம்’ கார்டும், அதன் இணைய சேவையும் நம்மை பரவசப்படுத்துகிறது. முற்றிலும் இலவசம் என்ற சலுகை, அத்தனை பேரையும் கவர்ந்திழுக்கிறது. அதன் விலையில்லா இணையச்சேவையை பயன்படுத்தி, நான் இந்தப்படம் பார்த்தேன், அந்தப்படம் பார்த்தேன் என்று குதூகலித்துக்கொண்டிருக்கிறோம். குப்பனும் சுப்பனும் கூட இன்று இணையத்திலிருந்து தரவிரக்கம் செய்து படம் பார்த்தேன் என்று ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார்கள். நகரத்திலிருந்து கிராமம் வரை, பரவலாக இணையம் சென்றடைந்து கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் இவையணைத்தும் நமக்கு வாய்த்த நற்பயன்கள். அதில் ஒன்றும் தவறில்லைதான். ஆனால், அதற்கு பின்னே இருக்கும் வியாபாரத் தந்திரங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.
இப்போது ஏன், இணையச்சேவையை இலவசமாக வழங்க வேண்டும்? தொலைத்தொடர்பு துறையைச்சார்ந்த ஒரு நிறுவனம் ஏன் இணையத்தை இலவசமாக வழங்குகிறது? காரணமிருக்கிறது.
இன்றையத்தேதியில் நாம் அதிகம் பயன்படுத்தும் கருவி எது.?! நம்மிடம் எண்ணற்ற கருவிகள் இருக்கிறன. கைகடிகாரம், தொலைபேசி, தொலைக்காட்சிப்பெட்டி, மடிக்கணினி, கணினி, ஹீட்டர், வாசிங்மெஷின், மிக்ஸி, கிரைண்டர், அயன்பாக்ஸ் என நீளும் பட்டியலில் கைபேசி என்பதுதான் முதலில் வந்து நிற்கிறது அல்லவா..!
அதுதான்.. அதுதான்.. அவர்களின் இலக்கு. வருங்கால வியபார உத்திகள் அனைத்தும் உங்கள் கைபேசியைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றன. காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தூங்கப்போகும் வரை உங்களோடு இருப்பது உங்கள் கைபேசிதான். கைபேசி இல்லா மனிதன் என்று ஒருவன் இருக்கிறானா..?!
கைபேசி விழுங்கிய கருவிகளின் பட்டியலில்.. தொலைபேசி, கேமரா, கால்குலேட்டர், ஸ்டாப் வாட்ச், கணினி, வானொலி, வாக்மேன், என்பதில் தொலைக்காட்சிப்பெட்டியும் சேர்ந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. தொலைக்காட்சிப்பெட்டியில், கணினியில், மடிக்கணினியில் திரைப்படம் பார்த்தவர்கள் இன்று கைபேசியில் பார்க்க துவங்கி இருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களிடையே கைபேசியில் படம் பார்ப்பது மிகப்பிரபலம். வகுப்பில் படம் பார்க்க அதுதானே வசதியாக இருக்கிறது..!? ஆக.. திரைப்படங்களை கைபேசியில் பார்ப்பதற்கு தயாராகிவிட்ட சமூகம் இது. எனில், அதை ஏன் வியாபாரமாக மாற்றக்கூடாது..!? இதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி..! ஆம், இது உண்மையிலேயே மில்லியன் மில்லியனாக கொட்டப்போகும் கேள்விதான்.
இனி நாம் அனைவரும் திரைப்படங்களை கைபேசியில்தான் பார்க்கபோகிறோம். தரம் குறைந்த பிரதிகளை, திருட்டு தனமாக தரவிரக்கம் செய்து பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு, இனி தரமான பிரதிகள் கிடைக்கபோகின்றன. பழைய படங்கள் மட்டுமல்ல, புதிய திரைப்படங்களும் உங்கள் வீடு தேடி வரப்போகின்றன. இல்லை.. இல்லை.. உங்கள் உள்ளங்கைகளைத் தேடி வரப்போகின்றன.
அதற்கான வேலைகளைப் பல நிறுவனங்கள் துவங்கிவிட்டன. உங்களுக்கே தெரியும், கைபேசியில் தவிர்க்க முடியாத மென்பொருள், ‘APPS’என்று அழைக்கப்படும் சிறிய மென்பொருள் பெட்டகங்கள், செயலிகள். ஒவ்வொரு ‘செயலியும்’ அதற்கென்று பிரத்தியேகமான செயல்பாடுகளைக் கொண்டது. கைபேசியின் சாத்தியங்களை விஸ்தரிக்க வல்லவை அவை. ஒரு புதிய செயலியை நிறுவுவதன் மூலம் ஒரு புதிய வசதியை நாம் நுகர முடியும். அவ்வகையில், இசை, புகைப்படம், நேரம், கணக்கிடுதல், காணொளிப்பார்த்தல் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயலி இருப்பதை நாம் அறிவோம். அவ்வகையில், சமீப காலமாக புதிய வகை செயலி (App) ஒன்று வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அது, திரைப்படங்களை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, விளையாட்டு காணொளிகளை, இசையை இலவசமாக பார்க்கலாம் என்ற வாசகத்தோடு விளம்பரம் செய்யப்படுவதையும் கவனித்திருக்கலாம். இவ்வகை செயலிகள் தான் இனி ஆதிக்கம் செலுத்தப்போகின்றன.
இப்போதைக்கு, விஜய் டிவியின் HOTSTAR, ஏர்டெல்லின் Wynk, NETFLIX போன்ற செயலிகள் உங்களின் கவனத்திற்கு வந்திருக்கலாம். விஜய் டீவியின் HOTSTAR செயலியில் அனைத்தையும் இலவசமாக பார்க்கலாம். விஜய் டீவியில் ஒளிபரப்பான திரைப்படங்கள், தொடர்கள், விருது நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் இப்போதைக்கு இலவசமாக பார்க்க அனுமதிக்கிறார்கள். அதேபோன்று, இந்தி, ஆங்கில என எல்லா மொழி தொலைக்காட்சிகளும் தங்களுக்கென செயலிகளை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றன. இப்போதைக்கு இவற்றில் பெரும்பாலானவை இலவசம் தான். NETFLIX, iTunes போன்ற கட்டணம் கட்டி பார்க்கக்கூடிய செயலிகளும் உள்ளன. மாத சந்தா முறையில் இவை இயங்குகின்றன. iTunes, Youtube போன்றவற்றில் குறிப்பிட்ட திரைப்படங்களை விலைக்கோ அல்லது வாடகைக்கோ எடுத்தோ பார்த்துக்கொள்ளலாம். ஆங்கில திரைப்படங்களைப் பார்ப்பதற்கு பல செயலிகள் உள்ளன. இவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை நோக்கி வருகின்றன. இங்கே இந்திய நிறுவனங்களும் தங்கள் கிளைகளை இத்துறை நோக்கி பரப்ப துவங்கி இருக்கின்றன. பெரும் பணம் முதலீடு செய்யப்படுகிறது. நடிகர் தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு
’Wunderbar Films’ என்று பெயர் வைத்திருக்கிறார். அதே பெயரில் ரஜினியின் மகள் சௌந்தரியாவோடு இணைந்து ‘Wunderbar Apps’ கொண்டுவரப்போவதாக கேள்வி. இதிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம், இத்துறையில் குவிக்கப்படும் முதலீடுகளையும், வருங்காலத்தில் நம்மை நோக்கி வரப்போகும் வசதிகளையும்.
பழைய படங்களை மட்டுமல்லாது, புதிய திரைப்படங்களை வெளியிடுவதற்கும் முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. திரையரங்கில் வெளியாகும் அதே நாளில் உங்கள் கைபேசியிலும் வெளியிடப்படும். சில சமயம் கைபேசியில் மட்டும் கூட வெளியிடப்படலாம். உங்களுக்கு பிடித்த படத்தை முதல் நாள் முதல் ஷோவாக நீங்கள் உங்கள் கைபேசியில் பார்த்து மகிழலாம். இதைத்தான் ‘விஷ்வரூபம்’ திரைப்படத்தின் போது கமல்ஹாசன் சொன்னார். தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடுவதைப்பற்றி அப்போது அவர் பேசியதை அத்துணை திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து எதிர்த்தார்கள் என்பதை நாம் அறிவோம். அன்றைய தேதியில் அவர் சொன்னதுதான் வருங்காலத்தில் நிகழப்போகிறது. அவர் தொலைக்காட்சிக்கு சொன்னார், இனி அது கைபேசிக்கும் வரப்போகிறது. SmartTV, Apple TV வடிவில் இவ்வகை செயலிகள் இனி தொலைக்காட்சி பெட்டியிலும் இடம் பிடிக்கும். இனி செயலிகள்தான் எல்லாம். உலகம் செயலிகளால் செயல்படப்போகிறது.
இத்தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர, இணையம் அத்தியாவசியமானது. இணையம் இருந்தால்தான், இந்நுட்பங்களை நுகரமுடியும். எனில், பாமரனும் இணைய வசதியைப் பெற வைப்பது எப்படி..!? குப்பனை சுப்பனையும் இணைய வழி திரைப்படங்களைப் பார்க்க வைக்கும் தூண்டில் எது..?!
வேறெது..? இலவசம்தான். இலவசமாக கொடுத்தால்தான், அத்தனை பேரும் இதற்கு அடிமை ஆவார்கள். இதன் சுவை அறிவார்கள். வலைக்குள் விழுவார்கள் என்பது கணக்கு. அதன் அடிப்படையிலேயே இப்போது இலவச இணையவசதியோடு சிம் கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. தொலைத்தொடர்பு துறையோடு மட்டுமல்ல, அதற்கு மேலும் பல கணக்குகள் இருப்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இன்று இலவசமாக வழக்கப்படுவது, நாளை விலை வைக்கப்படும். பழக்கத்திற்கு வந்துவிட்ட ஒன்றை விட்டொழிப்பது மனிதனுக்கு ஆகாத ஒன்று. விலை கொடுத்து வாங்கத் தயங்கமாட்டான். இப்படித்தான், தேனீர், காபி போன்றவற்றை கொண்டுவந்தார்கள். நம் காலத்தில் நாமே பார்த்திருக்கிறோம். ஐநூறு ரூபாய்க்கு கைபேசி என்று கொண்டுவந்துதான், இன்று ஒவ்வொருவர் கையிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் விலையில் கைபேசியை அடைத்திருக்கிறார்கள். நாளை இணையமும் அப்படித்தான்.
விலை, வியாபாரம் என்பது ஒருபுறம் இருந்தாலும், தொழில்நுட்பம் என்பது தவிர்க்க முடியாதது. தற்போதைய சூழலில் திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது என்பது மிக ஆடம்பரமான ஒன்று. குடும்பத்தோடு திரைப்படம் பார்ப்பது பெரும்பாலான குடும்பங்களுக்கு கட்டுபடி ஆகாத செலவு என்பது நிதர்சனம். வருங்காலங்களில், இச்செலவு குறையலாம். குடும்பத்தோடு அமர்ந்து வீட்டிலேயே திரைப்படங்களை பார்க்கலாம். இணையத்தின் வழி திரைப்படங்கள் வெளியிடப்படுவது நடைமுறைக்கு வரும். புதியப்படங்களை, தரமான பிரதியாக கண்டுகளிக்கலாம். இத்திரைப்படங்களை நீங்கள் இணையம் பயன்படுத்தி பார்க்கலாம். ஆனால் தரவிரக்கம் செய்ய முடியாது. ‘Movie Streaming’ என்றொரு நுட்பம் உண்டு. இதன் மூலம் திரைப்படங்களைப் பார்க்க முடியும், தரவிறக்கம் செய்ய முடியாது.
இத்துறையின் வளர்ச்சி அபாரமாக இருக்கப்போகிறது என்பது இப்போதே பிரகாசமாக தெரிகிறது. உலகம் உங்கள் கையில் என்ற வாக்கியம் சுருதி சுத்தமாக உரக்க ஒலிக்கப்போகிறது. தயாராகுங்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதுவே உங்கள் காதில் வந்து விழும், கேட்டுத்தானாகவேண்டும்.










தங்களுடைய இந்தக் கட்டுரை சிறப்பாக உள்ளது. நான் பல முறை இதுதொடர்பாக சிந்தித்திருக்கிறேன். கைப்பேசிகளில் படம் பார்க்கும் நிலை நாம் விரும்பாமலேயே தற்போது திணிக்கப்பட்டு வருகிறது உண்மைதான். சில செயலிகளில் படங்களை பதிவிறக்கம் செய்தோ அல்லது நேரடியாகவோ தற்போது கண்டு ரசிக்க முடிகிறது.
பதிலளிநீக்குஇதன்மூலம் ஒரு நன்மை என்னவென்றால் தேடி அலைந்து கிடைக்காத திரைப்படங்களை அந்தச் செயலியைப் பயன்படுத்தி நம்மால் பார்க்க முடிகிறது என்பது மட்டும்தான். என்னதான் இருந்தாலும் இருள் சூழ்ந்த
அறையில், அகன்ற திரையில் திரைப்படங்களைக் கண்டு ரசிப்பது போல் வருமா?
ஏற்கெனவே பல்வேறு சேனல்களின் வருகையாலும், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாலும் திரையரங்கை நோக்கி செல்லும் ரசிகர்களின் எண்ணி்க்கை குறைந்தது வருகிறது.
திரையரங்கங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே எனது விருப்பம்.
Download Panna mudiyatiyum screen capture option la record pannikalam ji
பதிலளிநீக்குVarungalathai ethrkolla neraya thunichal thevai.. romba bayanthu poiruken intha apps al... Thanks for the article. very useful information.
பதிலளிநீக்குசிறப்பான கட்டுரை! அதை விடச் சிறப்பான நடை! பின்னுகிறீர்கள்! நன்றி!
பதிலளிநீக்கு