முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிதம்பர நினைவுகள்:



நண்பன் ஞானத்தின், படப்பிடிப்பு சம்பந்தமாக ‘எர்ணாகுளம் / கொச்சின்’ வரவேண்டியதிருந்தது.  முதல் நாள் படப்பிடிப்பு, இங்கே புகழ்பெற்ற கல்லூரியான ‘மகாராஜாஸ் கல்லூரியில்’ நடந்தது.  பழைமையும், பாரம்பரியமும் கொண்ட கட்டிடம். நீண்ட வராண்டாவும், அகண்ட வகுப்பறைகளும், விஸ்தாரமான திறந்த வெளியும், அடர்ந்த மரங்களும் கொண்ட கல்லூரி அது. பரவசமான இடம். அதற்கு எதிரே நீர்பரப்பும், படகு குழாமும், பெரிய பூங்காவும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருப்பது அப்பகுதியில்தான். காலையிலும், மாலையிலும் அப்பூங்காவிற்கு நடை பயிற்சிக்குப் போவதும், படகில் அருகிலிருக்கும் தீவுகளுக்கு போவதுமாய் கடந்த இரண்டு நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.

இன்றைக்கு கூட காலையில் பூங்காவிற்கு சென்று விட்டு, அப்படியே காலை உணவாக ‘தொட்டுக்கொள்ள கிழங்கும், அப்பளமும் கொண்ட கஞ்சியை’ குடித்து விட்டு அறைக்குத் திரும்பினேன்.  நேரம் கடத்த ஏதாவது படிக்கலாம் என்று நினைத்து, கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்தால்...

அட.. என்ன ஆச்சரியம்..! வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது..!

கடந்த வாரம், சொந்த ஊர் செஞ்சிக்கு சென்றிருந்த போது, அப்படியே திருவண்ணாமலையில் எழுத்தாளர் திரு.பவா செல்லத்துரையைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அன்பு, நட்பு, இரவு உணவு, நெடுநேர உரையாடல்.. என தொடர்ந்த அச்சந்திப்பின் முடிவில், அன்பளிப்பாக சில புத்தகங்களைக் கொடுத்திருந்தார். அதில் ஒன்றுதான்.. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய ‘சிதம்பர நினைவுகள்’.



பாலச்சந்திரன் சுள்ளிக்காடு படித்தது, இதே மகாராஜாஸ் கல்லூரியில்தான். இப்புத்தகத்தில் அவர் விவரிக்கும் பல இடங்களை, கடந்த இரண்டு நாட்களாக நான் சுற்றி வந்திருக்கிறேன். படிக்கும்போது, ஒவ்வொரு இடமும், இதுவாக இருக்குமா? அதுவாக இருக்குமா என்று மனம் அசைபோடுகிறது.  எழுத்து மனதுக்கு இன்னும் நெருக்கமாகிறது.

நான் எர்ணாகுளம் வருவேன் என்பதோ.. அதற்கு முன்பாக பவாவை சந்திப்பேன் என்பதோ.. அவர் இப்புத்தகங்களை பரிசளிப்பார் என்பதோ.. நிர்ணயிக்கப்படாதது.  எவ்வித முன்திட்டமிடலும் இல்லாதது..!

ஒரு எழுத்தை அது எழுதப்பட்ட மண்ணிலிருந்தே வாசிப்பது, எத்தனை சுக அனுபவமாக இருக்கிறது தெரியுமா..!?

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றி முன்பே அறிந்திருந்தபோதும், எதுவும் படித்திருக்கவில்லை.  ஏனோ அது வாய்க்காமல் போய்விட்டிருந்தது இத்தனை காலமும்.  இன்று அது வாய்த்தது.

‘சிதம்பர நினைவுகள்’ படிக்க படிக்க.. நம்முள் ஏதோ ஒன்று உடைபடுகிறது.  எத்தனை விதமான மனிதர்கள்..! எத்தனை விதமான வாழ்க்கை..! வாழ்வில் நாம் கடந்து வரும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஒரு பாடத்தை கற்றுத்தருகிறார்கள்.  நம்முடைய சுயத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள்.  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சுட்டிக்காட்டும் ஒவ்வொரு சம்பவமும், மனிதர்களும் நமக்குள் பல கேள்விகளை எழுப்புகின்றன.  நாம் கடந்து வந்த பாதையை, வாழ்வை, மனிதர்களை அசை போட வைக்கின்றன.  அவர் எழுதும் இத்தனை சம்பவங்களைப் படிக்கும்போதெல்லாம்.. அட, இந்த மனிதனின் வாழ்வில் மட்டும்தான் இதெல்லாம் நடந்ததா, அல்லது பிறர்க்கும் நமக்கும் நடந்ததா.. என்று மனது யோசிக்கிறது.

தம்மை பற்றியும், பிறரைப் பற்றியும் எவ்வித ஒளிவுமறைவுமில்லாது எழுதிக்கொண்டு செல்லுகிறார் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. நெருங்கிய நண்பனிடம் மனம் விட்டுப் பேசும் தொனியில் இருக்கிறது அவருடைய எழுத்து.  தாம் கடந்து வந்த பெருமைகளை மட்டுமல்லாது, சிறுமைகளையும் மறைக்காது வெளிப்படுத்துகிறார்.  இணக்கமற்ற உறவு, அதிகாரத் தந்தை, இளமையில் ஏழ்மை, மருத்துவப் படிப்பை உதறிவிட்டு தன்னை நம்பி வந்த பெண்ணை சரியாக பார்த்துக்கொள்ள முடியாமை, முதல் சிசுவைக் கலைத்த பாவம், சிவாஜி கணேசனை சந்தித்த அந்த கணம், வறுமையில் உழலும் கவிஞன், தெருவோர வேசி, தன்னுடைய முறை தவறிய பாலுணர்ச்சி, தூர தேசத்து மார்த்தா அம்மா, கமலாதாஸ் என பலவற்றைப் பேசுகிறார்.

நம்முடைய ஒவ்வொரு வாழ்விலும் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சிலவற்றை கடந்து வந்திருக்கிறோம். சிலவற்றை வாழ்ந்து வந்திருக்கிறோம். சிலவற்றை வெளிப்படுத்தியிருக்கிறோம். சிலவற்றை மறைத்து வைத்திருக்கிறோம்.  வெளியே சொல்ல முடியாத சம்பவங்கள் நம் எல்லோருடைய வாழ்விலும் உண்டுதானே..! பெரிதாக இல்லாவிட்டாலும், சின்னச் சின்ன தவறுகளும், சின்னச் சின்ன விதி மீறல்களும் நாம் எல்லோரும் செய்திருக்கிறோம்.  அதை எல்லாம் என்றேனும் ஒரு நாள் மனம் திறந்து சொல்ல முடிந்தால், எத்தனை சுகம் அது..! உண்மை எப்போதும் நிம்மதியைத் தருகிறது.  பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போல பொது வெளியில் சொல்ல முடியாவிட்டாலும், மனதுக்கு நெருக்கமான நட்பிடம் சொல்லவாவது இந்த வாழ்வு எல்லோருக்கும் அருள் புரியட்டும்.

மலையாள மொழியில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளை, தமிழில் அதன் சாரத்தோடும், அழகோடும் கொண்டு வந்திருக்கிறார் மொழிப்பெயர்ப்பாளர் திருமதி.கே.வி.ஷைலஜா அவர்கள். வேறொரு மொழியின் கட்டுரைகளைப் படிக்கிறோம் என்ற எண்ணம் எழவே இல்லை.  அத்தனை சரளம் மொழியில்.  கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து விடக்கூடிய சுவாரசியம் கொண்டது இப்புத்தகம். தேம்பலும், கண்ணீரும் இல்லாமல் இப்புத்தகத்தை கடந்து வர முடியாது. நிச்சயம் உங்கள் வாழ்வை அசை போட வைக்கும் புத்தகம் இது.

நண்பர்கள் அனைவருக்கும் இப்புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.


சிதம்பர நினைவுகள்
மலையாள மூலம்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
தமிழில் : கே.வி.ஷைலஜா
வெளியீடு: வம்சி புக்ஸ்
விலை: 150/-


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...