வருடா வருடம், பள்ளிகளில், கல்லூரிகளில் ஏன் கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்..!?
படிக்கத்தானே போகிறோம்..! அப்புறம் எதுக்கு இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம்..!? போனோமா.. படித்தோமா.. வந்தோமான்னு இல்லாம.. எதுக்கு இந்த வேண்டாத வேலை..!?
ஆட்டம், கொண்டாட்டம், கூத்து, கும்மாளம், அடிதடி, காதல், மண்ணாங்கட்டின்னு எதுக்கு இது..!?
உண்மையச் சொல்லுங்க.. இப்படி ஒரு சிந்தனை உங்களில் எத்தனை பேருக்கு இருக்கு. கலை நிகழ்ச்சின்னாவே.. அதுவும் குறிப்பா கல்லூரி கலை நிகழ்ச்சின்னாவே.. கொட்டம் அடிப்பதற்குத்தான் என்பது நம்மிடையே பதிந்து போன ஒன்று. கும்பல் கும்பலா, குருப் குருப்பா சேர்ந்து ஆட்டம் போடறதுக்கும், சண்டை போடறதுக்கும், பொண்ணுகளை கலாட்ட செய்யறதுக்கும்தான் அது பயன்படும் என்று நாம் திடமாக நம்புகிறோம் அல்லவா..!?
ஏன்.. கல்லூரி காலங்களில், ஆண்டு விழா, கலை நிகழ்ச்சி என்றவுடன் நமக்கே கூட அதுதான் தோன்றி இருக்கிறது.
ஜாலியாக இருக்கலாம், கொட்டம் அடிக்கலாம், பல கல்லூரிகளிலிருந்து வரும் பெண் பிள்ளைகளை சைட் அடிக்கலாம்.. ஆடலாம்.. பாடலாம்.. லாம்.. லாம்.. எல்லாமிருக்கும். மகிழ்ச்சியான தருணம் அது.
ஆயினும் கூடவே இதனால் எத்தனை பிரச்சனை வந்திருக்கிறது. எத்தனை அடிதடி நடந்திருக்கிறது. எத்தனை காயம் பட்டிருக்கிறது. எத்தனை பகை வந்திருக்கிறது. துயரமான வடுவாகவும் அது இருந்திருக்கிறது.
என்றாலும்…
ஏன் ஆண்டு தோறும்.. கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடந்தப்படுகிறது..!?
அது ஏன் என்பதற்கான பதிலை.. அண்மையில் வெளியாக பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் மலையாளத் திரைப்படம் 'பூமரம்’ சொல்லும்.
'1983' மற்றும் 'Action Hero Biju' திரைப்படங்களின் இயக்குநர் 'Abrid Shine'-இன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், உங்களை, உங்கள் கல்லூரி காலத்திற்கே அழைத்துச் செல்லும்.
குறிப்பாக உங்கள் கல்லூரி காலங்களில், நீங்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டவராகவோ அல்லது அதனோடு ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடைவராகவோ இருந்தால்.. இப்படம் உங்களுக்கு ஒரு கொண்டாட்டம்.
படத்தின் துவக்க காட்சியிலிருந்து, இறுதி காட்சிவரை.. இப்படம் ஒரே ஒரு பதிலைத்தான் தேடுகிறது. இப்படத்தின் அடிநாதமும் அதுதான்.
'மனிதனுக்கு கலையின் தேவை என்ன..?'
இதை உணர்த்துவதற்கு, பல்லேறு வழிமுறைகளை இதன் இயக்குநர் கையாளுகிறார். ஓவியம், சிற்பம், நடனம், இசை, கவிதை, பாட்டு, மிமிக்கிரி, மோனோ ஆக்டிங், தத்துவம், மேற்கோள்கள் என கலையின் அத்தனை கூறுகளையும் பயன்படுத்தி, பலவிதங்களில் இத்திரைப்படம் நம்மோடு உறவாடுகிறது. கூடவே கலை எப்படி உருவாகிறது..? கலை மனிதனை என்ன செய்யும்..? என்பதற்கும் பதில் தேடுகிறது.
இத்திரைப்படம் ஒரு அனுபவம். இசை அனுபவம், காட்சிமொழி அனுபவம், தத்துவ அனுபவம். கலை அனுபவம்.
நடிப்பும், இசையும், ஒளிப்பதிவும், வசனமும் ஒன்றோடு ஒன்று இழைந்து தரும் பரவச அனுபவம் அது.
தவற விடாதீர்கள் நண்பர்களே..!
'Abrid Shine' ஒரு மகாகலைஞன். A True Artist
கருத்துகள்
கருத்துரையிடுக