நேற்று, BRIIC மாணவர்களுடன், பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ திரைப்படத்தை அவரோடு சேர்ந்து, அகண்டத்திரையில் பார்த்தோம்.
எளிமையான காதல் கதை. காதல் கதைகளுக்கே உரிய பரவசமும், துயரமும் நிரம்பியக்கதை. 1986-இல் வெளியானத்திரைப்படம், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நம்மைப் பாதிக்கிறது. படம் துவங்கியதிலிருந்து இறுதி வரை கட்டிப்போடுகிறது. எனில், அதன் செய்நேர்த்தியையும், கலைத்தன்மையையும் வியக்காமல் இருக்க முடியவில்லை. தன் திரைப்படத்தின் மீது ஒரு இயக்குநருக்கு இருக்க வேண்டிய ஆளூமையை இத்திரைப்படம் நன்கு உணர்த்தியது.
திரைப்பட இயக்கம் என்பது என்ன..? ஒரு கதையை, அதன் சுவாரசியம் குறையாமல், உணர்வுப்பூர்வமாக பார்வையாளனுக்கு கொண்டு சேர்ப்பது தானே..!?
அதை மிகச் சிறப்பாக பாரதிராஜா செய்திருக்கிறார் என்பதும், அவர் ஏன் தமிழின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்பதையும் இத்திரைப்படம் பார்க்கப் புரிந்துக்கொள்ள முடியும். படம் பார்த்தவர்கள் பலருக்கும் அது புரிந்திருக்கும். பார்க்காத நண்பர்களையும், ஏற்கனவே பார்த்த நண்பர்களையும் இத்திரைப்படத்தை (மீண்டும்) பார்க்க பரிந்துரைக்கிறேன்.
படம் முடிந்த பின்.. இயக்குநர் திரு. பாரதிராஜாவோடு ஒரு கலந்துரையாடல் வைத்துக்கொண்டோம். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, இத்திரைப்படம் குறித்து பலவற்றை பகிர்ந்துக்கொண்டார். ஒவ்வொன்றும் ஒரு புதிய சாரளத்தை நமக்கு திறந்து விட்டது. நேற்றைய உரையாடலை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். திரைப்படம் ஆர்வம் கொண்டவர்களுக்கு பயன்படும்.
பல்வேறு கதை களன்களை எடுத்துக்கொண்ட நீங்கள், இக்கதையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு.. காதல் கதைகளுக்கு காரணமா வேண்டும்..!? எத்தனை சொன்னாலும் காதல் சலிக்குமா..?என்றவர்.. கரடுமுரடான ஒரு மனிதனின் வாழ்வில் வரும் பெண்னொருத்தி அவனை சீர் செய்கிறாள் என்பது இதன் கதை. ஒவ்வொரு ஆணின் வாழ்விலும் அப்படியான பெண்னொருத்தி இருப்பாள். ஆணின் நிறை குறைகளை நேர் செய்பவள் பெண். அதன் பொருட்டே இங்கே காதல், கல்யாணம் எல்லாம்.
இக்கதையில் கூட.. ஜெனிஃபர் சின்னப்பதாஸை சரி செய்கிறாள். அவனுள் பொதிந்துக்கிடந்த மனிதனை அவள் மீட்டெடுக்கிறாள். இதுவே இக்கதையின் மையம்.
இதனை, இத்திரைப்படம் துவங்கும் ஆரம்பக்காட்சியிலேயே, பார்வையாளனுக்கு பூடகமாக உணர்த்தும் காட்சி ஒன்று வருகிறது. ஜெனிஃபர் ஊருக்கு வருவதற்கு முன்பாக சின்னப்பதாஸ், பாழடைந்த ஒரு வீட்டின் முற்றத்தில் தங்கி இருப்பான். பேய் இருப்பதாக நம்பப்பட்டு, பாழடைந்து கிடக்கும் அவ்வீடே அவனுடைய இருப்பிடம். ஜெனிபர் டீச்சர் ஊருக்குள் வந்தவுடன், அவர்கள் தங்குவதற்கு அவ்வீடு ஒதுக்கப்பட்டு, வீடு சுத்தம் செய்யப்படும். இதை கண்ட சின்னப்பதாஸ் அங்கே வந்து ரகளை செய்து விட்டு செல்லும் காட்சியும் வரும்.
இதைப்பற்றி குறிப்பிட்ட இயக்குநர்.. சின்னப்பதாஸ் சீரமைக்கப்பட போகிறான் என்பதை உணர்த்தவே அக்காட்சியை வைத்ததாக குறிப்பிட்டார். அட.. :)
ஜெனிஃபர் மற்றும் சின்னப்பதாஸின் கதையில், மாமன்மகள் கங்கம்மா ஏன் வருகிறாள் என்ற கேள்விக்கு.. அவளே இக்கதையை பூர்த்தி செய்கிறாள். அக்கதாப்பாத்திரமே இக்கதையின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்கிறது என்றார். இக்கதையின் சிறப்பான கதாப்பாத்திரம் அவளே. தன் வாழ்வின் கடைசி நம்பிக்கை மாமன் மட்டும்தான் அவளுக்கு. ஆயினும், மாமனின் மனம உணர்ந்து, அவனை அவன் காதலோடு இணைத்து வைக்கிறாள். அவர்கள் இணைந்ததும். மனதார மகிழ்ந்து அவர்களை வாழ்த்துகிறாள். கூடவே உனக்கு பிறகு குழந்தைக்கு என் பெயர் சூட்டி அன்போடு அழை மாமா, அது போதும் எனக்கு என்றும் சொல்லுகிறாள். இதை அவள் மாமனிடம் சொல்லுவதில்லை. அவள் மனதோடு பேசிக்கொள்கிறாள். அங்கே படம் முடிந்து விடுகிறது.
அதன் பிறகு, அவள் ஓடிப்போய் கடலில் விழுந்து இறந்து விடுவதாக காட்சி வைத்திருந்தேன். அதை படம் பிடித்தும் வந்தேன். பிறகு படத்தொகுப்பில், அக்காட்சி கங்கம்மாவின் மேன்மைக் குறைத்து விடுகிறது என்பதை உணர்ந்து கத்தரித்து விட்டேன் என்றார். ஆம்.. தேவையில்லாததை கத்தரித்து எறிவதும் இயக்கம்தான்.
இக்கதையில், சின்னப்பதாஸும் ஜெனிஃபரும் ஒரு புள்ளியில் இணையும் காட்சி ஒன்று வருகிறது. அதுவே அவர்களுக்கிடையேயான உறவை துவங்கி வைக்கிறது.
சின்னப்பதாஸ் குடித்துவிட்டு, தன் தாயை அடித்து விடுகிறான். அடிப்பட்ட தாயை, ஜெனிஃபர் தன் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்துக்கொள்கிறாள். அதை கேள்விப்பட்டு, ஜெனிஃபரை தேடி வரும் சின்னப்பதாஸ், அவளிடம் “ எங்கே அந்த கிழவி.. இருக்காளா..? புட்டுக்கிட்டாளா..!? செத்து போயிட்டாளா..!?” என்று கேட்கிறான். கோபம் கொண்ட ஜெனிஃபர் அவனை அறைந்து விட்டு, திட்டி அனுப்புகிறாள். இக்காட்சியே சின்னப்பதாஸின் வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனை.. பிறகு இரவில் குடித்துவிட்டு, அவள் வீடு தேடி வரும் அவன், அவள் தன் தாயிடம் தன்னைப்பற்றி பேசும் பேச்சைக்கேட்டு மனம் வருந்துகிறான். மனம் திருந்துகிறான். ஜெனிஃபரிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான். அதன் தொடர்ச்சியே அவர்களுக்கிடையேயான உறவை துவங்கி வைக்கிறது.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமான, சின்னப்பதாஸ் தன் தாயை அடிக்கும் காட்சி.. இத்திரைப்படத்தில் இல்லை. அது வசனமாக மட்டும்தான் சொல்லப்படுகிறது. காட்சிப படுத்தப்படவில்லை. இதை குறிப்பிட்டு, ஒரு மாணவர் எழுப்பியக் கேள்விக்கு இயக்குநர் இப்படி பதில் சொன்னார்..
“சின்னப்பதாஸ் இக்கதையின் நாயகன். முரடன்.. ஆனால் நல்லவன். அதனை உணர்த்தும் விதமாகத்தான், அவனுடைய அறிமுகக்காட்சியில் ஊரின் பெரிய மனிதரை அடிக்கும் காட்சிக்கான காரணம் சொல்லப்படுகிறது. மேலும், அவனுள் மெல்லிய மனமொன்று இருக்கிறது. அவன் பிறப்பால் முரடன் இல்லை. அமைந்த வாழ்வும், கிடைத்த வாய்ப்புகளுமே அவனை இப்படி வளர்த்து வைத்திருக்கிறது. இதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். எனில், அவன் தாயை அடிக்கும் காட்சியை வைத்தால், அது பார்வையாளனுக்கு அவன் மீது கோபத்தை ஏற்படுத்தும், அவனை நாயகனாக ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும். இதுவே அவன் வில்லன் என்றால், அதை காட்சிபூர்வமாக வைக்கலாம். இவன் நாயகன், ஆகவே அக்காட்சியை காட்சி பூர்வமாக சொல்லவில்லை என்றார்.
ஆஹா.. எத்தனை நுணுக்கமான பதிவு. காட்சிக்கு (Visual) இருக்கும் அழுத்ததை எத்தனை எளிதாக புரிய வைத்துவிட்டார். ஒரு திரைப்பட ஆக்கத்தில் கவனக்க வேண்டியது எத்தனை இருக்கிறது.
குருதட்சனையாக கொடுப்படும் வலம்புரி சங்கு.. இறுதிகாட்சிகளுக்கு எத்தகைய விதத்தில் வலு சேர்க்கிறது என்பதும். ராஜாவை வளர்ந்த பெண்கதாப்பாதிரத்தின் பின்புலம்.. மீரா கதையின் குறியீடு.. பாறையில் முட்டி தெரிக்கும் கடல் அலை, கூரையில் இருந்து சிறகு விரித்து பறந்திடும் புறாக்கள்.. Good Shepherd-உம் அவருடைய மந்தையில் இருந்து பிரிந்த ஆடு என பலவற்றை பற்றி பேசினோம்.
தானும் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் தாஸ், தனக்கு பாடம் சொல்லித்தரும் படி ஜெனிஃபரிடம் கேட்கிறான். அவள் மறுக்கிறாள். அவள் ஒத்துக்கொள்ளும்வரை தான் ஒற்றைக்காலில் நிற்கப்போவதாக சொல்லி விட்டு, காலையிலிருந்து மாலை வரை, அங்கேயே நிற்கிறான். ஊரே வேடிக்கைப்பார்க்கிறது. ஊர் முழுவதும் அதுவே பேச்சாகிறது. செய்தி கேள்விப்பட்டு, ஜெனிஃபர் ஓடி வந்து பார்க்கிறாள். இருவரின் பார்வையும் சந்திக்கிறது. அவர்களிடையே ஒரு அன்பும், நெருக்கமும் உண்டாகும் காட்சி அது.
அதை தொடர்ந்து வரும் சுடுவு(Shot) தூரத்தில் கடலுக்கு இடையில் ஒரு பாறையில் சிறு புள்ளியாக இவர்கள் இருவரும் நின்று கொண்டிருக்க.. தூரத்திலிருந்து கேமரா, கடற்கரையில் அவர்களை நோக்கி வேகமாக செல்லும். இந்த சுடுவு எனக்கு எப்போதும் ஒரு ஆச்சரியத்தை கொடுக்கும். ஏனெனில் அச்சுடுவை எடுப்பது கடினம். கடற்கரையில், அத்தகைய ஒரு சுடுவை இன்றைக்கு வேண்டுமானால் எளிதாக எடுத்து விடலாம். அன்று அதற்காக வசதி இல்லை. இருந்த போதும் அச்சுடுவை மிக கடினப்பட்டு எடுத்திருக்கிறார்கள். அது ஏன்? கண்டிப்பாக அழகுக்காகமட்டும் இருக்க முடியாது..இதைப்பற்றி இயக்குநரிடம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வெகு நாட்களாகவே இருந்தது. அதைப்பற்றி இயக்குநர் இப்படி சொன்னார்..
முரடனும், டீச்சரும் காதலில் விழவேண்டும். இருவருக்குமான இடைவெளி மிக அதிகம். அவர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைந்து அவர்களை நெருங்க வைக்க வேண்டும். அதை பலக் காட்சிகளின் வழியாக சிறுக சிறுக பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் விதம் சொல்லலாம். அது ஒரு விதம். ஆனால், அதே தேவையை, பல காட்சிகளின் மூலம் சொல்லாமல், ஒரு சில காட்சித்துண்டுகளின் வழி சொல்ல முயன்றேன். பார்வையாளன் மனதில் கேள்விகள் எழா வண்ணம், தந்திரமாக அவனை நம்ப வைக்க முயன்றேன். ஒரு சிறுபாடலும் (தாஸ் தாஸ்..சின்னப்பதாஸ் தாஸ்), அதனை காட்சிப்படுத்தும் சில காட்சித்துண்டுகளின் வழி, இருவருக்குமான இடைவெளியை குறைத்து அவர்களை நெருங்க வைத்து விடுகிறது. அதன் துவக்கமாகத்தான், அந்த நீண்ட கடற்கரை சுடுவு என்றார். அந்தக் காட்சியாகப்பாருங்கள். அது எத்தகைய நேர்த்தியான காட்சி அமைப்பு என்பது புரியும்.
அதேப்போல், பிரிதொரு சமயத்தில், இயேசுவின் Good Shepherd ஓவியத்தை பார்க்கும் தாஸ் அதனைப்பற்றி ஜெனிஃபரிடம் கேட்கிறான். அதற்கு விளக்கம் கொடுக்கும் அவள், தானே ஒரு ஆடாக உன்னிடம் வந்தால் என்ன செய்வாய் என்று கேட்பதன் மூலம், தன் காதலை அவனுக்கு உணர்த்துகிறாள். அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், பாறையில் மோதும் அலை, ’சிறகு விரித்து பறந்திடும் புறாக்கள்.. அதைத்தொடர்ந்து வரும் ‘அடி ஆத்தாடி’ பாடலும் அதன் சுடுவுகளைப்பற்றியும் (shots) பேசினோம். மனவெழுச்சி, நம்பிக்கை கீற்று, வாழ்வில் வந்த வசந்தம்.. அதனை உணர்த்தும் சுடுவுகளே.. தொடர்ந்து வருகிறது. அப்பாடல் முழுவதும் சின்னப்பதாஸ் ஓடிக்கொண்டிருப்பதைப்பற்றி குறிப்பிட்டார். அப்பாடலைப்பாருங்கள். ஒவ்வொரு சுடுவுக்கும் பொருள் இருக்கிறது.
மேலும்… இத்திரைப்படத்தின் மேன்மைக்கு தான் மட்டுமே காரணம் அல்ல. இதன் முதல் நாயகன், இளையராசாதான், பிறகு வசனகர்த்தா ஆர்.செல்வராஜ் பிறகுதான் நான் வருகிறேன் என்றார் பாரதிராஜா. எத்தகைய கலைஞன் இவர் என்பதை உணர்த்தும் வார்த்தைகள் இவை. மகாகலைஞன். இத்தனை ஆண்டுகளுக்கு பின்பும், தன்னோடு உழைத்தவர்களை தாங்கி பிடிக்கும், தூக்கி பிடிக்கும் அந்த உயர்ந்த உள்ளம் ஒரு உயர்ந்த மனிதனுக்கானதும் கூட.
ஒரு நேர்த்தியான திரைப்படம் பார்த்த பரவசமும், அதைத்தொடர்ந்து அதன் படைப்பாளியிடம் உரையாடும் சூழலும் எத்தகைய மன நிறைவை கொடுக்கும் என்பது, திரைப்பட விழாக்களுக்கு சென்றிடும் நண்பர்கள் அறிவார்கள்.
மொத்தத்தில், இப்படம் நேற்றைய நாளை மிக சுவாரசியமான நாளாகவும், பயனுள்ள நாளாகவும் மாற்றிற்று..
பரவசமும், கண்ணீரும் நிறைந்த ஒரு திரையிடலாக இந்நிகழ்வு முடிந்தது.
பின்குறிப்பு: இயக்குநரோடு நிகழ்ந்த உரையாடல் முழுவதும் கானொளியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சூழல் வரும்போது அதனை பதிவேற்றுகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக