பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி தேர்வை எழுதிவிட்டு.. பல மாதங்களாக கட்டுப்பாடாக படித்தக் களைப்பு போக (!?), ஒட்டுமொத்தமாக பள்ளித்தோழர்கள் அனைவரும், ஒரு திரைப்படத்திற்கு போனோம். காலையில் தேர்வு முடிந்து, மதியம் திரைப்படம்.
கமல் நடிப்பில், பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘சதிலீலாவதி’ திரைப்படம் அது. கமல் படம்.. கமல் ரசிகன்.. அதுவே போதுமானதாக இருந்தது, அப்படத்திற்கு போவதற்கு. சிரித்து சிரித்து மகிழ்ந்தோம் என்பது மட்டும் நினைவிலிருக்கிறது. படம் மதியம் 2.30 துவங்கி மாலை 5.30 மணிபோல் முடிந்தது. நண்பர்களுக்கு விடை கொடுத்தோம். நெருங்கிய நண்பர்கள் நான்கு ஐந்து பேர் மட்டும், மீதமிருந்தோம். எங்களுக்கு தேர்வு முடிந்த களைப்பு இன்னும் போகவில்லை. கலைப்பைப் போக்க வேறெதேனும் செய்ய வேண்டியதாக இருந்தது.
நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கெல்லாம்.. அன்றை நாட்கள் இல்லை. எங்கள் கலைப்பை போக்க, எங்களை மகிழ்விக்க எங்களுக்கு அப்போது இருந்த ஒரே வழி, ஒரே மார்கம்.. திரைப்படம் பார்ப்பதுதான். ஆகவே.. மறுபடியும் இரவுக் காட்சி திரைப்படத்திற்கு போவதென்று முடிவு செய்தோம். ஆனால் நாங்கள் இருந்த ‘செஞ்சியில்’ அப்போது ‘சரவணா’ மற்றும் ‘ரங்கநாதா’ என்ற இரண்டு திரையரங்குகள் தான். அப்போது இன்னொரு திரையரங்கில் என்னப்படம் ஓடியது என்று நினைவிலில்லை. ஆனால் அது நாங்கள் பார்க்க ஆர்வம் காட்டாதா ஏதோ ஒரு படமாகத்தான் இருக்கும். காரணம், நாங்கள் செஞ்சியில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ‘திருவண்ணாமலைக்கு’ சென்று படம் பார்ப்பது என்று முடிவு செய்தோம்.
திருவண்ணாமலைக்கு நாங்கள் சென்றடைந்த போது, இரவுக்காட்சி துவங்கி விட்டிருந்தது. படம் துவங்கி அரை மணி நேரம் கடந்துதான் திரையரங்கிற்குள் சென்றோம். அது அப்போதைய ‘VBC’ திரையரங்கம். திருவண்ணாமலையில் அப்போது சிறப்பான தியேட்டர் அது. பெரியது. ஒளியும், ஒலியும் சிறப்பாக இருக்கும். நாங்கள் தாமதமாக திரையரங்கிற்குள் நுழைந்தது என் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
நாங்கள் உள்ளே நுழைந்தபோது, ஒரு பாடல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. மிகப் பிரபலமான பாடல் அது. காதல் பாடல். தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பிரபலமானப் பாடல். அப்பாடல் காட்சி, படமாக்கப்பட்ட விதம் எல்லோரையும் கவர்ந்தது. அப்பாடல், அதல் இழையோடும் காதல், அதை பாடிய விதம், அதில் நடித்திருந்த நடிகர்கள் என எல்லாமே வசிகரித்தது. எனக்கும் அப்படித்தான்.
வெளியே இருந்து உள்ளே நுழைந்த போது, பெரியத்திரையில் அப்பாடல் காட்சி கண்களுக்கு முன்னே விரிந்த, ‘அக்கணத்தை’ என்னால் இப்போதும் மறக்க முடியாது. சட்டென்று நம் நாசியில் நுழையும் நறுமணம் போன்று.. மனதெங்கும் அக்காட்சியின் அழகு பரவியது. ஒரு அற்புதமான பரவச உணர்வை ஏற்படுத்தியது. இருட்டில் இடம் தேடி அமர்ந்தோம். அப்பாடல் காட்சியில் ஒவ்வொரு சுடுவும்(ஷாட்) என்னை வசிகரித்தன. ஐஸ் கிரிமை ருசித்து உண்ணும் சிறுவனைப்போல ஆனேன். பாடல் காட்சி முடிந்து திரைப்படம் தொடர்ந்தது. அப்படமும், அப்படத்தின் ஒளிப்பதிவும், இசையும் என்னை பெரிதாக ஆட்கொண்டன. படம் முடிவதற்குள்ளாக.. எனக்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தேன்.
அது...
‘நான் ஒரு ஒளிப்பதிவாளனாக வேண்டும்’
ஆம் நண்பர்களே.. பனிரெண்டாம் வகுப்பு முடிந்து, அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்கு பல்வேறு ஆலோசினைகள் இருந்தது. என்ஜினியரிங் படிப்பது, அது இல்லை என்றால் இயற்பியல் படிப்பது, கம்பியூட்டர் சயின்ஸ் படிப்பது, ஐபிஸ் படிப்பது என்று பல விருப்பங்கள் கொண்டிருந்தேன். இராணுவத்தில் சேர வேண்டும் என்று கூட ஒரு திட்டம் இருந்தது.
இச்சூழலில் தான் அப்படத்திற்கு போனோம். அப்படம் என் வாழ்க்கையை திசை மாற்றியது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ‘அப்பாடல்’ என் வாழ்க்கையை மாற்றியது. படத்தின் துவக்கத்திலேயே சென்றிருந்தால் கூட இத்தகைய தாக்கம் எனக்கு ஏற்பட்டிருக்குமான என்பது சந்தேகமே. வெளியே இருந்து பரபரப்பாக உள்ளே நுழைந்தவனுக்கு அப்பாடல் காட்சியின் அழகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
‘உயிரே.. உயிரே’ என்பது அப்பாடல். அரவிந்த் சாமி, மணிஷா கொய்ராலா நடிப்பில், மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ திரைப்படம் அது. அப்படத்தின் கதை, இசை, நடிப்பு, நாயகி, பாடல்கள், பாடகர்கள் என பலதையும் அன்றைய தமிழகம் கொண்டாடியது. என்னை அதன் ஒளிப்பதிவு வசிகரித்தது. அதன் ஒளிப்பதிவாளர் ‘ராஜூவ் மேனன்’ பெரிதும் பாராட்டப்பட்டார்.
அப்படமே.. இன்று ‘விஜய் ஆம்ஸ்ட்ராங்’ எனும் நான், ஒளிப்பதிவாளனாக இருப்பதற்கான விதை.
——
எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை உண்டு. நாம் ஒவ்வொருத்தரும், அவரவர் துறையில் முன்னேறி வர பல்வேறு நிலைகளை கடந்து வந்திருக்கிறோம். குறிப்பிட்ட இலக்கை அடைந்த பிறகு, திரும்பிப் பார்த்தால் நீண்டு கிடக்கும் நெடிய பாதை ஒன்று எல்லோர் வாழ்விலும் இருக்கிறது. அப்பாதையில் நல்லது கெட்டதும் கலந்துதான் இருக்கிறது. எதுவும் உயர்ந்ததில்லை, எதுவும் தாழ்ந்ததில்லை. எனினும் அப்பாதையின் அனுபவம் தந்த பாடம் பெரிது.
அவ்வனுபவத்தை, நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்த எப்போதும் முயல்கிறோம். வரும் தலைமுறையை வழி நடத்த அது உதவலாம் என்று நம்புகிறோம். தமக்கு கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்து, அதை தன் பிள்ளைகளுக்கோ, தன் மாணவர்களுக்கோ கடத்துகிறோம்.
என் அனுபவத்தை ‘நான் எப்படி ஒளிப்பதிவாளனானேன்’ என்பதைப்பற்றி, எழுத நினைக்கிறேன். திரைப்படமென்னும் மாபெரும் துறைக்குள் நுழைய, பலரும் முயல்கிறார்கள். அதன் இரும்பு கதவுகள் அவ்வளவு சுலபத்தில் திறப்பதில்லை. அதன் கோட்டை சுவரை கடந்து உட்செல்வதும் அத்தனை இலகுவானதில்லை. அது ஒரு போராட்டம், அது ஒரு வாழ்க்கை.
ஆம்.. அது ஒரு முழுமையான வாழ்க்கை. திரைப்படமென்று மாய உலகம் உங்களின் முழு வாழ்க்கையையும் அடகு வைக்க கோரும்.
பேர், புகழ், பணம், செல்வாக்கு, கலை, கற்பனை, படைப்பாக்கம், ஆத்ம திருப்தி என எதை வேண்டுமானாலும் ஒரு பக்க தராசில் வையுங்கள்.. மறுபக்கம் அதற்கு ஈடாக உங்கள் வாழ்க்கை முழுவதையும் வைக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
அப்படி என் வாழ்க்கையில் நான் கடந்து பாதை, படித்த புத்தகம், கேட்ட இசை, பார்த்த படம், பயின்ற பாடம், பயணித்த தூரம் என பலவற்றை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள நினைக்கிறேன். நான் ஒரு ஒளிப்பதிவாளனாக தகுதி அடைய என்னவெல்லாம் செய்தேன் என்பதே இதன் உட்பொருள். ஒருவிதத்தில் இது என் சுயபுராணமும் கூட.
இன்றைய ‘என்னை’ தெரிந்தவர்களுக்கு, நான் கடந்து வந்தப் பாதையை அடையாளம் காட்ட முயல்கிறேன். இதில் உங்களுக்கு ஏதேனும் பயன் இருக்கலாம்.. அல்லது இல்லாமலும் போகலாம். எவ்வித உத்தரவாதமும் இல்லை. திரைத்துறைக்குள் நுழைய விருப்பம் கொண்டவர்களுக்கு இதில் ஏதேனும் வழிகாட்டல் கிடைக்கலாம். செய்ய வேண்டியவைகள், செய்யக்கூடாதவைகள் என்று எதாவது தட்டுப்படலாம்.
ஆர்வம் கொண்டவர்கள் பின் தொடருங்கள்.
வரலாறு என்பது.. அரசுக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு. 😀😁😜 இது என் வரலாறாகவும் இருக்கலாம். உங்கள் வரலாறும் சொல்லுங்கள் பரிமாரிக்கொள்வோம்.
வாழ்த்துக்கள் நண்பா
பதிலளிநீக்கு