இப்போதைய சூழல், வாழ்வின் மீதான எதிர்பார்ப்பு, நம்பிக்கை, பிடிமானங்கள் அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது.
இந்தக்காதில் வாங்கி, அந்தக்காதில் வெளியே விட்டுக்கொண்டு திரிந்து தத்துவங்கள் எல்லாம் உண்மையாகிவிடும் சூழலுக்கு வந்துவிட்டோம்.
‘காயமே இது பொய்யடா… காற்றடைத்த பையடா..!’ என்பது எத்தனை நிஜம்…!?
நம்முடைய பலூன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். ‘வெறும் காற்று… வெறும் மண்’ என்றாகிட தயாராகி விட வேண்டியதுதான்.
இதை உணரும் போது, மனம் வெறுமையில் நிற்கிறது.
எதிர்கால வாழ்வு கனவாகிவிடும் சூழலில், கடந்த கால வாழ்வு மட்டுமே கையிலிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு, உருட்டி… உருட்டி விளையாடுவது தவிர வேறென்ன செய்வது இப்போது..!
என் வாழ்வில், என்னை பாதித்த, நடந்த, கடந்து, பாதையைத் திரும்பிப்பார்க்க முயல்கிறேன். வாழ்வு என்னவெல்லாம் கொடுத்தது, எதையெல்லாம் உணர்த்தியது என்பதே சாரம்.
*
கடவுள்:
அப்போது ஏழு வயது இருக்குமென்று நினைக்கிறேன். தாத்தா, பாட்டி, அம்மா, சித்திகள், மாமாக்கள் எல்லோரும் திருப்பதி போக திட்டமிட்டார்கள். அதில் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை. விட்டுட்டு போனால், அழுவேன் இல்லையா?… அதனால் என்னுடைய பெரிய மாமா கலைவாணன் அவர்களோடு வயலுக்கு அனுப்பி விட்டு, அவர்கள் திருப்பதி சென்றுவிட்டார்கள். அங்கே வயல் கிணற்றில் ஆமை பார்த்துக்கொண்டு இவர்களை மறந்து விட்டேன். பின்பு வீடுவந்து, ஏமாற்றப்பட்டதை உணர்த்து… மணி கணக்காக அழுது, சமாதானம் ஆனேன்.
இச்சம்பவம், திருப்பதியை மட்டுமல்ல, கடவுள் குறித்தான ‘முதல் கவன ஈர்ப்பாக’ என் மனதில் பதிவாகி இருக்கிறது.
சிறுவயதில் கடவுள் நம்பிக்கை இருந்தது. சொல்லிக்கொடுத்ததனால் வந்தது. டீச்சர் அடிக்க கூடாது, பரிட்சையில் பாசாகிடமும், வீட்டுப்பாடம் கேட்க கூடாது… என்பதற்கெல்லாம் கடவுளிடம் வேண்டி, கற்பூரம் ஏற்றி இருக்கிறேன். பின்பு, பாடத்தில் ‘பகுத்தறிவு பகலவன்’ என்று பெரியாரைப்பற்றி படத்ததனாலையா அல்லது அறிவு வந்துவிட்டது என்ற ஈகோவினாலா தெரியவில்லை, கடவுள் மீதான சந்தேகங்கள் வலுப்பெற்று, நாத்திகனானேன். நடைமுறையில் கடைபிடிக்கப்பட்ட கடவுள் குறித்தான சம்பரதாயங்கள் மீதான ஒவ்வாமை அதனை செய்தது எனலாம்.
கல்லூரிக் காலங்களில் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, சோ, ஜெயகாந்தன் படித்த போது, வாழ்வு குறித்தான பார்வை விரிவடைந்து(?) கடவுளின் இருப்பு (Existence of God) குறித்தான சந்தேகங்கள் மேலும் வலுபெற்றன.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வியே அநாவசியம் என்று திரிந்தவன்.
“இல்லைன்னு சொல்லல… இருந்தா நல்லாயிருக்கும்” என்ற வசனத்திற்கு கைதட்டி (விசில் அடிக்க தெரியாது) ஆதரவு அளித்தவன் நான்.
பிறகு வயது ஆக, ஆக…
“கவலைப்படாதே, கடந்துடலாம்… நான் இருக்கேன், நாங்கள் இருக்கோம்” என்ற ஆறுதல் வார்த்தைகள் சக மனிதனிடமிருந்து வந்தால் மட்டும் போதாது, என்ற சூழல்களை சந்தித்த போது, கடவுள் குறித்த என் பார்வையில் கொஞ்சம் மாற்றம் வந்தது.
துணைக்கு யாரும் வரமுடியாத, பங்குபெற முடியாத… அகம், புறம் சார்ந்த சிக்கல்களில் நாம் சிக்கிக்கொள்ளும் கணங்களில், சிந்தனை சூராவளிக்குள் தனித்து நிற்கும்போது, யாருடைய கையாவது பற்றிக்கொள்ள முடியாதா? நான் இருக்கிறேன் என்று யாராவது கை நீட்டமாட்டார்களா? என்று மனம் தேடி அலையும் கணத்தில்… கடவுள் குறித்தான என் புரிதல் மாற்றம் அடைந்தது.
(நடந்ததும்… கடந்ததும்…தொடரும்)
#நடந்ததும்_கடந்ததும்
#வாழ்ந்தது_இனிது
#vijayarmstrong
கருத்துகள்
கருத்துரையிடுக