என்னுடைய சிறுவயதிலிருந்து, நான் மறக்காமல், நினைவில் வைத்திருக்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். இத்தனை வயதுக்கு அப்புறம், நினைக்கும் போதெல்லாம் மனமெங்கும் பரவசம் தருபவர்கள். அவர்களை நான் ஒருபோதும் சந்தித்தது இல்லை. என்றாலும், அவர்களே என்னுடைய சிறந்த நண்பர்கள்..!
புரியவில்லையா…? 😀
அதில் முதல் நண்பன் பேரு… ‘கபீஷ்’
ஆங்… அவனேதான். குட்டி குரங்கு நண்பன். அமர் சித்திரைக்கதைகளிலும், பூந்தளிர் இதழ்கள் மூலமும் வந்து சேர்ந்த நண்பன் அவன். வளரும் தன்மைக்கொண்ட வாலை வைத்துக்கொண்டு அவன் போடும் ஆட்டங்களை மறக்க முடியுமா? இப்போதும், எங்கே குரங்கு குட்டிகளைப்பார்த்தாலும் அவன் ஞாபகம் வந்து விடும்.
கூடவே பல நண்பர்கள்…
காக்கா காளி, புலி புண்யகோடி என காட்டு நண்பர்கள் ஒருபுறம் என்றால்… சுப்பாண்டி, தபால்கார பரமு, வேட்டைக்காரர்(பெயர் மறந்துவிட்டது) என பெரும் நண்பர்கள் வட்டமே இருந்தது. 80களில் சிறுவர்களாக இருந்தவர்களைக் கேட்டுப்பாருங்கள். இவர்கள் எங்களின் பொழுதுகளை எத்தனை சுவாரசியமாக்கினார்கள் என்று சொல்லுவார்கள்.
நகைச்சுவை ததும்பும் கதைகள், மெல்லியதாக இழையோடும் அறறெறி, சுவாரசியமான கதாப்பாத்திரங்கள் என குழந்தைகள் உலகத்து பொக்கிஷங்கள் அவை.
அம்புலிமாமா, பூந்தளீர் புத்தகங்கள் ஒருபுறம் என்றால், தினமலர் நாளேட்டுடன், வெள்ளிகிழமை இணைப்பாக வந்த ‘சிறுவர்மலர்’ இன்னொரு அற்புதம்.
மகாபாரதம், இராமாயிணம், பீர்பால், தெனாலிராமன் என வகைவகையான கதைகளை வாரம்தோறும் கொண்டு வந்து சேர்க்கும்.
‘உயிரைத்தேடி’ என்றொரு கதைத்தொடர், சிறுவர்மலரில் வந்தது. எதிர்காலத்தில், அணுகுண்டு, வைரஸ் போன்ற காரணங்களால் மனித கூட்டம் அழிந்துவிடுகிறது. இரத்தத்தில் ஏதோ ஒரு ஸ்பெஷல் தன்மைக்கொண்ட ஒரு சிறுவன் மட்டும் உயிர் பிழைக்கிறான். அவன் தன்னைபோல வேறு யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா என தேடி, இந்த உலகம் முழுவதும் சுற்றுவதே கதை. அவனுக்கு ஆபத்து, மிருகங்களாலும், வைரஸ் தாக்குதலால், மரணம் அடையாமல்… கொடுரமான உருவத்தையும், குணத்தையும் பெற்றுவிட்ட சில மனிதர்களாலும் வருகிறது. தன்னை காத்துக்கொள்ள, துப்பாக்கி, கார், ஏரோபிளேன், காற்றடைத்த பெரும் பலூன் என பலவற்றை அவன் பயன்படுத்துகிறான். வழியில் அவனைப்போலவே, தப்பிப்பிழைத்த சில சிறுவர்களையும் காண்பான். அவர்களோடு இணைந்து உயிர் வாழ்ந்திட முயல்வதே கதை.
தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, ஏனோ அக்கதை தான் ஞாபகம் வருகிறது. மறக்க முடியாத கதை அது. பெரும் ஆபத்துகளையும், பெரும் சாகாசங்களை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட அக்கதை, அடிப்படையில் அன்பையும், தோழமையும், கூடி வாழ்ந்தலையும் போதிக்கிறது.
உண்மையில்… சிறுவர்களா இருப்பதில் தான், எத்தனை சௌகரியம் இருக்கிறது… இல்லையா?
அது ஒரு காலம். கதைகளின் காலம்…! கற்பனை உலகத்தில் பறந்து திரிந்த காலம். கையில் ஒருபுத்தகம் இருந்தால் போதும், கால இயந்திரத்தில் ஏறியது போன்று… ராஜாக்கள் காலத்துக்கும், வான்வெளிக்கும், காடுகளுக்கும் நொடியில் பயணம் செய்யலாம். சுற்றித்திரிந்து விட்டு திரும்பி வந்தால்… வீட்டில் நேரத்திற்கு திண்பண்டமும், சாப்பாடும் கிடைக்கும். நிம்மதியாய் சாப்பிட்டுவிட்டு உறங்கப்போகலாம் அல்லது மீண்டும் கற்பனை லோகத்தில் உலாவப்போகலாம்.
இப்போது அப்படி செய்ய முடியவில்லை. பாழாப்போன அறிவு அதனை தடுக்கிறது.
(நடந்ததும்… கடந்ததும்…தொடரும்)
#நடந்ததும்_கடந்ததும்
#வாழ்ந்தது_இனிது
#vijayarmstrong
கருத்துகள்
கருத்துரையிடுக