முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தந்தையர் தினம்:


மிகச்சுதந்திரமான மனிதர். தான் விரும்பியதை செய்துப்பார்த்தவர், கடந்து வந்தவர். ஊர்ப்பெரிய மனிதரின் பிள்ளை, திராவிடக்கழகமும், திமுகவும் வளர்ந்த காலங்களில் அதன் உறுப்பினர். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த தேர்தலில், திமுக சார்பில் தேர்தலில் நின்றவர். எம்ஜிஆர் ஆள் அனுப்பிய போதும், கலைஞரின் நட்பால், அணிமாறாமல் திமுகவில் நின்று குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோற்றுப்போனவர். எம்ஜிஆர் அலையில் எல்லாம் அடித்து போனது வரலாறு. பல அமைச்சரவையில் இடம்பிடித்த  ..சண்முகம் (..) அப்பாவின் நெருங்கிய நண்பர். பிற்காலங்களில் அவர் எங்கள் தொகுதில் நின்றார். அவருக்கு தேர்தல் வேலை செய்ய வேண்டிய நெருக்கடி, நட்பு அப்படி. அதன் பொருட்டு திமுக, கலைஞர் தொடர்பை, அரசியலையும் விட்டவர்

என் பெற்றோரின் திருமணம்சுயமரியாதை திருமணம். 8 அமைச்சர்கள், 14 எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்ட பெரும் விழா அது. எங்கள் ஊருக்கு மின்சாரம் அப்போதுதான் வந்தது. அதனால், அரசியலில் அவருக்கு இரண்டும் பக்கமும் நட்பும், தொடர்பும் இருந்தது. ஊர்த்தலைவராக இருந்தார். இதெல்லாம் அவருடைய நாற்பது வயதுக்குள்ளாக என்பது இப்போது புரியும் போது, நாமெல்லாம் தூசு என்று உணர்கிறேன்


எங்களுக்குஎல்லாம் செய்துகொடுத்தார். வீட்டில் எப்போதும் சுதந்திரம் உண்டு. பெற்றோர்களுக்கே உரிய கண்டிப்பை விட, நட்பு பாராட்டும் தோழனாகவே அவர் இருந்தார். அவரிடம் எல்லாவற்றையும் பேச முடிந்தது. எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டார், பகிர்ந்துக்கொண்டோம். அவருடைய காதல் கதையைக்கூட என்னிடம் சொல்லி இருக்கிறார், அம்மா எதிரில்தான். (அதை இங்கே சொல்ல முடியாது. அவல நகைச்சுவை அது


பிறருக்கு உதவும் குணமிருந்தது. வாழ்வை சுற்றித்திரிந்து அனுபவித்திடும் போக்கு இருந்தது. உணவுப்பிரியர். சொத்து சேர்க்கும் விரும்பமில்லை. எங்களிடம் அவர் இப்படி சொல்லுவார்


எவ்வளவு வேண்டுமானாலும் படிச்சுக்கோஎன்ன செலவானாலும் பார்த்துக்கலாம். ஆனா அது உன் படிப்பால் இருக்க வேண்டும். பணம் கொடுத்து படிப்பும், வேலையும் வாங்கித்தர மாட்டேன். அதேப்போல பரம்பரை சொத்தை எதிர்பார்க்காதே


அதற்கு நான்: “அதெப்படி? எங்க தாத்தா கொடுத்தாரில்லஅதுபோல நீங்களும் கொடுக்கனும்தானே..?”


அவரு விவரம் பத்தாம கொடுத்துட்டாரு, நான் கொடுக்க மாட்டேன்…” என்பார். இதெல்லாம் நகைச்சுவையாகத்தான்


2005-இல் மறைந்துவிட்டார். ஆனாலும் இன்றுவரை, அவரை இழந்ததாக உணரவில்லை. அதிகம் ஊர் சுற்றுவார். வீட்டிலேயே இருக்கும் மனிதர் அல்ல அவர். இப்போதும் எங்களுக்கு அவர் எங்கோ வெளியூர் போய் இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. கூடவே தனித்து நிற்கவும், செயல்படவும் எங்களை பழக்கி இருக்கிறார். அம்மாவையும் அப்படிதான்


யோசித்துப்பார்த்தால்நான் தனியாக சுற்றியதை விட, அவரோடு சுற்றியதுதான் அதிகமோ என்று தோன்றுகிறது. சிறுவயதில் எல்லா விடுமுறைக்கும் சுற்றுலா அழைத்துச்செல்வார். வகை வகையாக உணவு வாங்கித்தருவார். அரசியல் பேசுவார். சினிமா பிடிக்காது


எங்கள் வீட்டில் நான் அம்மா பிள்ளை. அண்ணன் அப்பா பிள்ளை. சாயல்கூட அப்படிதான் இருப்போம்.  


அப்பா எங்களை யாரிடமாவது அறிமுகப்படுத்துபோது, தமாசாக இப்படி சொல்லுவார்


பெரியவன் எதை சொன்னாலும்.. சரிப்பா, சரிப்பா என்று தலையை ஆட்டுவான். ஆனா செய்ய மாட்டான், சின்னவன் சொல்லும்போதேமுடியாது என்பான். அவன் அம்மா சொல்லனும்” 


ஆம். அது அப்படிதான் அமையும். மரியாதை இல்லாததனால் இல்லை. ஏதே ஒரு இணக்கமின்மை எனக்கு அவரோடு இருந்தது. அவர் ஒரு ஊர் சுற்றி என்பது போல ஒரு பார்வை, குறை இருந்தது எனக்கு


என் படிப்பிற்கான செலவுகளை செய்தார். ஆனால், நான் சினிமா படிப்பு படிக்க போகிறேன் என்ற போது, அதனை மறுத்து, சட்டம் படிக்க நிர்பந்தித்தார். என்னை அரசியல்வாதியாக்க விரும்பினார் என்று நினைக்கிறேன். பிறகு நான் புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்டு, கேமரா கேட்ட போது மறுத்தார். நான் இன்னும் முன்பே சினிமாவிற்கு வந்திருப்பேன், அது காலதாமதம் ஆனதற்கு அவரே காரணம் என்ற கோபம் எனக்கு இருந்தது. தேவையில்லாமல் 5 வருடம் சட்டப்படிப்பில் வீணாகிவிட்டது என்ற எண்ணம்


ஆனாஇப்போது யோசித்தால், எல்லாம் சரிதான் என்று தோன்றுகிறது. அவர் நல்லதைதான் நினைத்திருந்தார். ரசனையும், விருப்பமும் வேறாக அமைந்துவிட்டது. அவ்வளவே


என் நாற்பது வயதுக்கு பிறகுபிறப்பு இறப்பு, லட்சியம், வெற்றி தோல்வி குறித்து என் பார்வை மாறிவிட்டது. பறந்து திரிந்து அடங்கி விடுவதே வாழ்க்கை என தோன்றுகிறது. இயற்கை தாய்மடியை சுற்றிப் பார்த்துவிட்டு போய்விடுவோம் என்று விரும்புகிறேன். யோசிக்க அதைதான், அவரும் செய்தார்.


நகைச்சுவை உணர்ச்சி, நீதியுணர்வு, பகைமை, பொறாமை பாராட்டாமல் இருப்பது, தேவையறிந்து உதவியது, முடிந்ததை தயங்காமல் கொடுத்தது. ஊர் சுற்றித்திரிவது, சொத்து சேமிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தது, கொஞ்சம் ஊதாரிஇதுவே அவரைப்பற்றிய நினைவு குறிப்புகள் எனக்கு


அதுதான் அவர் விட்டுப்போனசெய்தியும் கூடஎன இப்போது உணர்கிறேன்


25 வருடம் கழித்து ஊர் வந்தால், ஊர் அடையாளம் கண்டுக்கொள்கிறது. ‘அப்பா சாயல்என்கிறது. ஆம்.. அப்பா போல தொப்பை வந்துவிட்டது 😬😜


இப்போதெல்லாம் அம்மா என்ன பார்த்து அடிக்கடி சொல்லுவது


நீ அப்படியே உங்க அப்பா மாதிரி ஆயிட்டு வரடா


பாராட்டுகிறார்களாகுறைபட்டுக்கொள்கிறார்களா என்று தெரியவில்லையே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், ...