‘காதல் தேசம்’ திரைப்படம் வெளிவந்த போது, நான் பெங்களூரில், கல்லூரிப்படிப்பில் இருந்தேன். வருங்காலத்தில் ஒளிப்பதிவாளராக வரவேண்டும் என்ற எண்ணத்தை, பனிரெண்டாம் வகுப்பு படித்த காலத்தில் வெளியான ‘பம்பாய்’ திரைப்படத்தின் மூலமாக, அதன் ஒளிப்பதிவாளர் திரு.ராஜிவ்மேனன் அழுத்தமாக என்னுள் ஏற்படுத்தி இருந்தார். அதன் பின்பு ஒளிப்பதிவு குறித்து என் தேடல் இருந்த காலம் அது.
அக்காலகட்டத்தில்தான் ‘காதல் தேசம்’ வெளியாயிற்று. படம் பார்த்து மிரண்டு போனேன். அட்டகாசமான ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இருநாயகர்களும் தங்கி இருக்கும் அறை, அதன் சன்னல், அதன் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய டேபில்ஃபேன், அதன் பின்னால் பாய்ந்து வரும் ஒளி, பாடல்காட்சிகள், குறிப்பாக ‘முஸ்தபா முஸ்தபா’ பாடல், அதில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் மலை முகடுகள் என பரவசமான ஒரு உணர்வை அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு கொடுத்தது. அதன் பிறகுதான், யார் அந்த ஒளிப்பதிவாளர் என கவனித்தேன்.
பெயரை பார்த்த போது, ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருசேர வந்தது. காரணம், அந்தப் பெயர் நான் முன்பே அறிந்திருந்த பெயர். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய பாக்கெட் நாவல்களை படிக்கும் பழக்கம் இருந்ததனால், ‘கே.வி.ஆனந்த்’ என்ற அந்த பெயரை பார்த்தபோது மகிழ்ச்சியும், ஆச்சரியமும் சேர்ந்த ஏற்பட்டது.
வாவ்…நம்ம ஆளுடா… இவரா..!? என்ற மகிழ்ச்சியும், பத்திரிக்கை புகைப்படக்காரர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக வரமுடிகிறதே என்ற ஆச்சரியமும்… என் கனவுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.
அதற்கு முன்பாகவே அவர் ‘தென்மாவின் கொம்பத்து’ (தமிழில் முத்து- தமிழில் அவரல்ல ஒளிப்பதிவாளர்) என்ற அவருடைய அறிமுக மளையாளப்படத்திற்கு தேசிய விருதே வாங்கி இருக்கிறார் என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
நாவல்கள் படித்த காலத்தில், அவர் எடுத்த ‘கான்சப்ட்’ அட்டைப்படங்கள் அட்டகாசமாக இருக்கும். தனித்த நின்று, கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒளியமைப்பு இருக்கும். அதனாலையே அவர் பெயரை கவனித்து வைத்திருந்தேன். அதேபோல ஓவியர்களில் ‘அரஸ்’ என் கவனத்தை ஈர்த்தவர்.
இதனாலையே… அவர் வெற்றி பெற்றபோது, அது என்னுடைய வெற்றி போலவே உணர்ந்தேன். தொடர்ந்து அவருடைய ஒளிப்பதிவை கவனிக்கத்துவங்கினேன்.
ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்டவர்கள், அவருடைய படங்களில் இருந்து கற்றுக்கொள்ள பல்வேறு நுட்பங்கள் இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து பரிட்சித்து பார்க்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. காதல் தேசத்தில், ‘ஹலோ டாக்டர்’ பாடலில், ஃபுளோரசண்ட்(fluorescent paint) மற்றும் UV Light -ஐப் பயன்படுத்தியதும், செல்லமே படத்தில் ‘ஆரிய உதடுகள்’ பாடலில் குறைந்த fps-இல் படம்பிடித்து, பிறகு அதனை optical முறையில் 24fps ஆக மாற்றி, ஒருவகையான Motion Blur-ஐப் கொண்டுவந்திருப்பார், இத்தகைய தொழில்நுட்ப யுத்திகள் உணர்வுகளை எப்படி கடத்துகின்றன என்பதை கவனித்தால் புரியும், கே.வி.ஆனந்த் என்ற தொழில்நுட்பக்கலைஞனை.
அவருடைய Composition எப்போதும் தனித்துவமானவை. இயற்கை ஒளியை பயன்படுத்துவதிலும் வல்லவர் அவர். கேமரா நகர்விலும் அவருடைய ஆளுமையை காணலாம். முதல்வன் திரைப்படத்தில் காட்சிகளுக்கு இடைப்பட்ட Shot Transitions, பாடல்களில் கேமராவின் அசைவுகள் போன்றவற்றை கவனியுங்கள்.
என்னைக்கேட்டால்…
ஒரு இயக்குநராக இருந்ததைவிட, அவருடைய தனித்துவம் ஒளிப்பதிவில் தான் வெளிப்பட்டது என்பேன்.
இயக்குநராக, மசாலாப்படங்களையே அவர் செய்தார். வணிக வெற்றிப்படங்களை மிக கவனமாக, பொறுப்பாக கையாண்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம். புழக்கத்தில் இல்லாத தூயத்தமிழில் திரைப்படங்களுக்கு (கோ, மாற்றான், கவண், அநேகன், அயன்) பெயர் வைப்பது, சமூகப்பார்வையை கொஞ்சமாக தொட்டுக்கொள்வது (கோ, கவண்), ஒரு வெகுசன சினிமாவை தொழில்நுட்பம், திரைக்கதை, பாடல், சண்டைக்காட்சிகளில் புதுமை, நாயகர்களின் பலம் ஆகிவற்றை கொண்டு ஒரு வெற்றி திரைப்படமாக்க முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார்.
அதேநேரம்… அவருடைய ஒளிப்பதிவை எடுத்துக்கொண்டால், அதில் பல்வேறு புதுமைகளை கையாண்டார். தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு வரலாற்றில், குறிப்பிட்ட தகுந்த ஒரு மாற்றத்தை அவருடைய ஒளிப்பதிவில் நிகழ்த்தி இருக்கிறார்.
வருடம், இரண்டாயிரத்திற்கு பிறகான தமிழ் சினிமாவில், பாடல் காட்சிகளில் ஆடிக்கொண்டிருக்கும் கேமராவை பார்த்திருப்போம். ஒன்று ஜூம் லென்சுகளை ஆட்டுவார்கள் அல்லது கேமராவை…. இதன் மூலம் பாடலின் தாளகட்டுக்கு ஏற்றார்போல் கேமராவை அசைத்து, கொண்டாட்ட உணர்வை அதிகரிப்பது நோக்கம்.
இந்தப்போக்கை தன்னுடைய ‘முதல்வன்’ படத்தில் வரும் ‘உப்பு கருவாடு’ பாடலின் மூலம் துவங்கி வைத்தவர் கே.வி.ஆனந்த் தான். அப்பாடலின் வெற்றி, இதே பாணியிலான கேமரா அசைவுகள் எல்லோரும் பின்பற்ற தூண்டியது. இதேபோல, கேமரா அசைவை சிறப்பாக கையாண்டு, அதனை தன்னுடைய பாணியாக மாற்றிக்கொண்டவர் ஒளிப்பதிவாளர் திரு.R.D.ராஜசேகர் அவர்கள். ‘காக்க காக்க’-வில் துவங்கி, ஃபோர் தி பீப்பிள், பீமா, என பலவேறு திரைப்படங்களில் சிறப்பாக கையாளப்பட்டிருப்பதை காணலாம்.
நீலம் வழியும் வானத்தையும், அதிகாலையில் ஒளிக்கதிர்கள் பாய்ந்து பரவுவதையும், அந்திபொழுதையும், Back light-இல் அமைந்த பல்வேறு குளோஸ் அப் சுடுவும்(shots), வைட் ஆங்கிள் லென்ஸ், ப்ரைம் சென்சுகளின் பயன்பாடு, அள்ளித்தெளிக்கப்பட்ட வண்ணஙக்ளையும் கே.வி.ஆனந்துவின் ஒளிப்பதிவில் காணலாம். நாம் ரசித்து மகிழும் PostCard Image-களில் காணப்படும், கண்கவர் பிம்பங்களை அவர் தன் ஒளிப்பதிவில் கொண்டு வந்தார். எல்லாம் அழகாக இருக்கும். அதேநேரம், காட்சிகளுக்கு தகுந்த வீரியமும் கொண்டிருக்கும். அது அவருடைய பலம்.
அழகான ஒளிப்பதிவு செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. காட்சிகள் அழகாக இருக்கும், ஆனால் உயிர் இருக்காது. ஒளியை கவனமாக கையாள வேண்டும். இல்லையெனில், அதீதமாக மேக்கப் போட்ட பெண்களைப்போல காட்சித்தரும். அது பார்வையாளனை காட்சியின் உயிர்தன்னைக்கு அழைத்து செல்லாமல், தள்ளி நிற்க வைத்துவிடும். அதை இன்று பல்வேறு திரைப்படங்களில் பார்க்கலாம். ஒளிப்பதிவு என்பது, அழகாக மட்டும் இருக்க வேண்டியவை அல்ல. உயிர் இருக்கிற ஒரு பிம்பத்தை படைத்திட வேண்டும். இதனை கே.வி.ஆனந்த் சிறப்பாக கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
புகைப்படத்துறையில் இருந்து வந்ததனால், அவருடைய Composition எப்போதும் பிரமாதமாக இருக்கும். ஒலியின் துணையில்லாமலேயே அக்காட்சியின் உணர்வை கடத்த முயன்றிருப்பார். எப்போதும் எதாவது ஒரு புதிய நுட்பத்தை தன்னுடைய ஒளிப்பதிவில் பரிட்சித்து பார்த்துக்கொண்டே இருந்தார்.
என்னைக்கேட்டால்…. அவர் ஒளிப்பதிவாளராக மட்டும் நீடித்திருந்தால், இன்னும் பல உயரங்களை தொட்டிருப்பார். இயக்குநர் அவதாரம், அவரை வேறு பாதைக்கு திருப்பிற்று. அது நீண்ட பயணமாக இருக்கலாம்… ஆனால் உயரமான பயணம் அல்ல.
தொழில்நுட்பங்களை நுண்ணுணர்வோடு பயன்படுத்திய கலைஞன் அவர். பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது அவருடைய படைப்பில். 90-க்கு பிறகான கமர்சியல் திரைப்பட ஒளிப்பதிவில் பெரும் புரட்சியை செய்தவர்களில் மறைந்த ஒளிப்பதிவாளர் திரு.ஜீவாவும், திரு.கே.வி.ஆனந்தும் மிக முக்கியமானவர்கள். இவர்களுடைய மறைவு, உண்மையிலேயே தமிழ் / இந்திய சினிமா உலகிற்கு பெரும் இழப்பு.
ஆன்மா அமைதி கொள்ளட்டும்…!
கருத்துகள்
கருத்துரையிடுக