முதல் பாகத்திலிருந்து பார்த்தேன்.
தீவிரவாதத்தைத் தடுக்கும் அதிகாரியும், அவர்தம் வாழ்வும். இந்த டெம்ப்லெட், உலக சினிமா வரலாற்றில் அரதபழசானது, என்றாலும் சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். சிறப்பான எழுத்து, ஆக்கம். இரசிக்கலாம்.
இரண்டாம் பாகத்தின் பரபரப்பான சண்டைக்காட்சிகள், இரண்டு சீசனிலும் கதாப்பாத்திரங்களின் பரஸ்பர அன்பு, நட்பு, உறவுகளை காட்சிப்படுத்தியவிதம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என பல்வேறு நுட்பங்களை பாராட்டலாம்.
முதல் சீசனில், இஸ்லாமிய தீவரவாதம். பாகிஸ்தானும், காஷ்மீரியர்களும் பலி ஆடுகள். இரண்டாம் பாகத்தில் விடுதலைப்புலிகளும், தமிழர்களும்.
ஆட்டம் சுவாரசியமாக இருப்பதற்காக, தகுடுத்தத்தம் செய்யக்கூடாது. வெகுசன சினிமா, பொழுதுபோக்கு என்றாலும் பொய்ப்பேசக்கூடாது, அவதூறு செய்யக்கூடாது.
வெகுசன புத்தி என்பது, மீடியாக்களால் கட்டமைக்கப்படுவது. உண்மையோ பொய்யோ, அரசும் மீடியாவும் விரும்பும் திசையிலேயே பொதுபுத்தி சிந்திக்க வைக்கப்படுகிறது. எனில், கலையின் பணி என்ன? அதற்கு தூபம் போடுவதா? அரைத்த மாவை மேலும் அரைத்து வைப்பதா?
‘பத்திரிக்கையில் வந்த செய்திகளின் அடிப்படையில்’ என்று கார்டு போடுகிறார்கள். என்றாலும், பல்வேறு பொய் செய்திகள் தொடர் முழுவதும் தூவப்பட்டிருக்கிறது. வெகுசன ஊடகங்கள் கடைபிடிக்கும் அதே போக்கை, படைப்பாளிகளும் கடைபிடிக்க கூடாது.
நிகழ்ந்ததை வெவ்வேறு பார்வையில் இருந்து புரிந்துகொள்வது என்பது வேறு, நிகழாத ஒன்றை நிகழ்ந்தவற்றோடு இணைத்து பரப்பி விடுவது வேறு. இத்தொடர் அதை பல இடங்களில் செய்கிறது. பார்வையாளனால் எது நடந்தது, எது கற்பனை என்று பிரித்தறிய முடியாது. எல்லாவற்றையும் நம்புவான், காரணம் அவன் அறிந்த, செய்திகளில் அடிப்பட்ட, நிகழ்ந்த சில சம்பவங்களை நினைவுறுத்தும்படியான காட்சிகளுக்கிடையே அவை பொதிந்துக்கிடக்கின்றன.
சினிமாட்டிக் எக்ஸ்பிரியன்ஸ் என்று எதை வேண்டுமானாலும் காட்சிப்படுத்திவிடும் போக்கு நம்மிடைய நீண்டகாலமாக இருந்து வருகிறது. இத்தொடரிலும் அது தொடர்கிறது. அப்படி செய்யலாமா, செய்யக்கூடாதா என்பது நீண்ட விவாதத்திற்கு உட்பட்டது.
குறிப்பாக உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படமெடுக்கும் படைப்பாளிகளுக்கென்று ஒரு அறம் இருக்க வேண்டும். அது…
‘எவ்வகையிலும் உண்மையை திசைதிருப்பி விடக்கூடாது’
என்பதுதான்.
Family Man படைப்பாளிகளுக்கு அந்த அறம் இல்லவே இல்லை.
மற்றபடி, உண்மை ஒருபோதும் மறைந்து விடுவதில்லை. அதன் மீது எவ்வளவு புழுதி படிந்தாலும் என்பது நாம் அறிந்ததுதான்.
#familymanseason2 #familyman2 #familyman2_against_tamils #family_man_against_truth
கருத்துகள்
கருத்துரையிடுக