முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்தது இனிது…! (06)

 


அவர்களுக்கு நாம் என்னவெல்லாம் செய்தோம் என்பதை அவர்கள் ஒருபோதும் அறிவதில்லைஅல்லது நினைவில் கொள்வதில்லை’ 


பிறந்ததிலிருந்து எத்தனை மனிதர்களை சந்தித்திருப்போம், எத்தனை மனிதர்களை கடந்து வந்திருப்போம். அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்ற இரத்த உறவுகளுக்கு அப்பால், மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த மருத்துவர், ஆயாம்மா, நர்ஸ் என துவங்கிபல்வேறு உயிர்களை, மனங்களை கடந்து வந்திருக்கிறோம்


பிற்காலங்களில் அக்கம் பக்கத்து வீடுகளில், தெருவில், பள்ளிக்கூடத்தில், பயணங்களில், திரையரங்களில், கல்லூரியில், பணியிடத்தில் என தொடரும் நட்புறவுகளில்மனதை தொட்டுச்சென்றவர்கள் சிலர், மனதில் தங்கிச்சென்றவர்கள் சிலர், மனதை கடந்து சென்றவர்கள் சிலர்இல்லையா


ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்த உறவு, நட்பு பிறகு இல்லாமல் போகிறது. கறைந்து காணாமல் போகும் மேகத்தைப்போல


உறவுகளை தள்ளி வைப்போம். அது பல்வேறு உளவியல், வாழ்வியல் சிக்கல்களோடும், அந்தரங்க காரணங்களோடும் சம்பந்தப்பட்டது. நட்பைதான் நாம் இங்கே பொதுவெளியில் சிந்தித்துப்பார்க்க முடியும்


நட்பு எனில்… 

நாம் எப்படி நட்பை பெறுகிறோம்? நட்பு எப்படி நம்மை ஆட்கொள்கிறது? அல்லது நட்பு எப்படி நம்மை வந்தடைகிறது


தெருவில், பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில் என துவங்கும் நட்புகள்தாம்நீண்ட கால தொடர்ச்சி கொண்டவைகளாக இருக்கிறன. ஒத்த சிந்தனை, ஒத்த வாழ்வியல், ஒத்த செயல்பாடுகள் என பல்வேறு போக்குகள் ஒத்திருப்பதனால், தொடரும் நட்புகள் அவை


அந்த நட்புகளில் சிலஏதோவொரு கணத்தில் உடைந்து போவதும், தொடர்பற்றுபோவதும் நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கிறது அல்லவா


அது ஏன்


- சிந்தனை, ரசனை, செயலில் உண்டாகும் முரண்பாடு


- அந்நட்பிலிருக்கும் உரிமை எல்லையை யாரோ ஒருவர் மீறுவது


- இருவரில் ஒருவர் அல்லது இருவரும் அந்நட்பில் ஏமாற்றம் அடைவது அல்லது சலிப்படைவது


- தெரிந்தோ, தெரியாமலோ மற்றொருவரின் மனதை புண் படுத்திவிடுவது


- காலச்சுழ்நிலைகளால் உண்டாகும், இடைவெளி, தொடர்பின்பை


இவையெல்லாம் ஒரு நட்பு முறிவதற்கான காரணங்களாகிருப்பின், அந்த நட்பு மீண்டும் துளிர்விடும். ஏதோ ஒரு கணத்தில் அந்த நட்பு மீண்டும் ஒன்று சேரும்


ஒரு சுபநிகழ்ச்சி, ஒரு மரணம், ஒரு சொல், ஒரு பார்வை, ஒரு குறுச்செய்தி, ஒரு தகவல்போதும், காய்ந்து கிடக்கும் நட்பை மீண்டும் துளிர்க்க செய்ய


சில நட்பு முறிதலுக்கு, மேலும் சில காரணங்கள் இருக்கிறன


- பணியிடத்தில், குறிப்பிட்ட அந்த பணிக்காக உண்டாகும் நட்பு, தேவை முடிந்ததும் விலகும்


- தம் தேவைக்காக நட்பு பாராட்டும் நட்புதேவை தீர்ந்த பின் விலகும். அல்லது இனி தேராது என்றவுடன் விலகும்


- சுயநலம் அல்லது உள்நோக்கம் கொண்ட நட்புகாலத்தே மெல்ல நழுவிச் செல்லும்


இவ்வகை நட்புகள்தாம், சிக்கலானவை. நட்புகாலத்திலும் உண்மையாக இருக்காது, பிரிவிலும் உண்மையாக இருக்காது. முகம் பார்த்தால் புன்னகைக்கும், திரும்பினால் தூற்றும்


நீங்கள் வேண்டுமானால் கவனித்துப்பாருங்கள். உங்களைப்பற்றிய அவதூறை இந்த நட்புகளே துவக்கி வைக்கின்றன. இவர்களோடு இருந்த காலங்களில் எதுவெல்லாம் சிறப்பு என்று கொண்டாடினார்களோடு, அதையெல்லாம் நம்முடைய சாபங்கள் என்பார்கள். அதுவே நமக்கான புதைகுழி என்பார்கள். நமக்கு வேண்டாதவர்களையும், நாம் விலக்கியவர்களையும் தேடி தேடிச்சென்று நட்பு பாராட்டுவார்கள். நமக்கு எதிராக ஒரு அணி திரட்ட முயற்சிப்பார்கள். பெரும்பாலும் அதற்கு தாம் தலைமை வகிக்க முயற்சிக்காமல், பிறரை தலைமை ஏற்க தூண்டுவார்கள். அல்லது தேவைப்படும் போது, வெளியிலிருந்து ஆதரவு தர தாம் தயாராக இருப்பதாக உணர்த்துவார்கள். உங்களை முன்நோக்கி நகர விடாமல், பின்னிருந்து இழுக்கும். உங்கள் காலுக்கடியில் குழித்தோண்டும். அல்லது நீங்கள் கட்டியெழுப்பும் கோட்டைக்கு கைத்தராமல், பின்னே கைக்கட்டி நிற்கும்


நட்பில் இதுவொரு சாபம். தேவை முடிகிற வரை உடன் இருப்பது. நம்மை பயன்படுத்திக்கொள்வது. இனி இதன் தேவை ஏற்படாது அல்லது தேவையில்லை என்றான போது விலகுவது மட்டுமல்லாமல், அவதூறை துவங்கியும் வைப்பது, அதனை வலுசேர்க்கவும் முயல்வது


சரி போகட்டும்


இதில் துயரம் என்னவென்றால்


அவர்களுக்கு நாம் என்னவெல்லாம் செய்தோம் என்பதை அவர்கள் ஒருபோதும் அறிவதில்லைஅல்லது நினைவில் கொள்வதில்லைஎன்பதுதான்


அதை அறிந்துக்கொள்ளும் தகுதியோ, மனமோ, பக்குவமோ இல்லாதிருப்பது. அல்லது இதையெல்லாம் தாண்டிய சுயநலச்சிந்தனை. எப்படியோ வேலை முடிந்தால் போதுமென்ற மனப்போக்கு. தாம் நீலவண்ண நரி என வேஷம் பூண்டு அலையும்


ஆம் அது அப்படிதான். மனம் கலங்க வேண்டாம். ஒருநாள் பொழியும் மழையில் வேஷம் பூண்ட நரியின் சாயம் வெளுத்துபோகும்


நட்பென்றால் எப்படி இருக்குமென்று கவிஞர் அறிவுமதியின் கவிதை ஒன்று இப்படி சொல்கிறது


நீ என்னிடம்

பேசியதை விட

எனக்காகப்

பேசியதில்தான்

உணர்ந்தேன்

நமக்கான

நட்பை ....’ 


#நடந்ததும்_கடந்ததும் 

#வாழ்ந்தது_இனிது

#vijayarmstrong

கருத்துகள்