தற்போதெல்லாம் குறும்படம் எடுப்பது என்பது, ஒரு வணிகப்படத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாக… நுழைவுச்சீட்டாகத்தான் பார்க்கப்படுகிறது. இரண்டரை மணிநேரப்படத்தை சுருக்கி ஒரு குறும்படமாக அதனை காட்டி, பெரும்படத்தை பெற்றுவிடுவது நோக்கம்.
இது பலருக்கும் கைக்கொடுத்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ், நளன் குமாரசாமி, லோகேஷ் கனகராஜ்…என்று பெரும் பட்டியலே இருக்கிறது. சொல்லப்போனால், திரைத்துறையில் இருப்பவர்களே, அதைத்தான் கேட்கிறார்கள். ஒரு கதையைச் சொன்னால், அதனை ஒரு குறும்படமாக எடுத்துக்கொண்டு வாருங்களேன், பார்க்கலாம் என்கிறார்கள். காரணம், சொல்லும் கதையை, திரையில் கடத்த அவருக்கு வருகிறதா? என்று கண்டு கொள்வதற்காக.
இது ஒருவிதத்தில் நன்மை பயக்கக்கூடியதுதான். இன்னொரு விதத்தில், சிக்கலானதும் கூட… பொருளாதார குறை, அதனால் ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடு, நடிகர்களின் திறமை இன்மை, இடம், கலை சார்ந்த போதாமை என பல்வேறு குறைகளைக் கொண்ட படைப்பாக அது வெளிப்பட்டு, அதனால் தடைபட்டு விடும் வாய்ப்பு என இருமுனை கத்தியாக இருக்கிறது. சரி அது இருக்கட்டும் ஒருபுறம்.
உண்மையில்… ஒரு குறும்படத்தின் தேவை என்ன?
ஒரு வணிகப்படத்தைப பெறுவதற்கான அறிமுகச்சீட்டா அது? அல்லது அதே களத்தை, கதையை சுறுக்கி பேசுவதா?
இல்லை…!
ஒரு வணிக்கப்படம் பேசமுடியாத, சாத்தியப்படாத கதையை, களத்தை அணுகுவதற்கும், பேசுவதற்குத்தான் குறும்படங்கள் பயன்படவேண்டும். மெல்லிய உணர்வுகளை, எளிய மனிதர்களை, தவீர்க்கப்பட்ட களங்களை, சொல்லத்துணியாத கதைகளை பேசுவதற்கும், பதிவுசெய்வதற்கும் குறும்படங்கள் ஒரு சுலப கலை வடிவம்.
அவ்வகையில், ஒரு சிறு எண்ணத்தைவோட்டத்தை, சிறு கண்ணி திறப்புகளை கோடிட்டு காட்ட, குறும்படங்களை, சிலர் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.
அண்மையில், ‘Not all answers are found in Google’ எனும் குறும்படத்தைப் பார்த்தேன். இப்பெரும் தொற்றுக்காலத்தில், லாக்டவுன் குறும்படமாக இதனை அதன் இயக்குநர் ‘Triden V Balasingam’ எடுத்திருக்கிறார். தாத்தாவிற்கும் பேத்திக்குமான மெல்லிய உணர்வை, நெருக்கத்தை உரையாடல்கள் வழியாகவும், சிறு சிறு சம்பவங்களின் வழியாகவும் கடத்தி இருக்கிறார். இறுதியில் நம் மனதில் நிற்கும் ஒரு செய்தியோடு படம் முடிகிறது. எளிய முயற்சி. சிறப்பான முயற்சியும் கூட…
காட்சி வடிவமாக இல்லாமல், உரையாடலாகவே கதையை நகர்த்துவது ஒரு குறை… என்றாலும் இது லாக்டவுன் காலம், அதில் கிடைத்த குறைந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி செய்த படம் என்ற ‘பலனை’ அவருக்கு கொடுப்போம்.
கடந்த வருடம், லாக்டவுன் அறிவித்த போது, Triden V Balasingam… இணையம் வழியாக என்னிடம் ‘ஒளிப்பதிவு’ குறித்து பாடம் பயின்றார். ஈழத்து இளைஞர். கனடாவில் வசிக்கிறார். தொலை தொடர்புத்துறையில் பணி புரிகிறார், என்றாலும் கலையின் மீதும், திரைத்துறையின் மீதும் மிகுந்த ஆர்வமும், மதிப்பும் கொண்டவர். புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நேர்த்தியான, சிறந்த திரைப்படங்கள் ஒருநாள் வரும் என்பது என் அசைக்க முடியாத எண்ணம். அவ்வெண்ணத்தை மேலும் வலுவாக்கியவர். மிகுந்த பொறுப்புணர்வும், அன்பும், சிரத்தையும் கொண்டவர். தான் கற்றுக்கொண்டதை மேலும் மெறுகூட்ட, தன்னாலான எல்லாம் முயற்சிகளையும் மனம் தளராது செய்யக்கூடியவர். ஏற்கனவே ‘Toaster ‘ எனும் குறும்படம் எடுத்து சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்றவர்.
வாழ்த்துகளும், அன்பும்… சகோதரா…!
- விஜய் ஆம்ஸ்ட்ராங்
கருத்துகள்
கருத்துரையிடுக