ஒவ்வொரு தடவையும் இது நிகழ்கிறது. ‘யாரேனும்’ ஒரு படைப்பாளி மறைந்து போகும் போதெல்லாம் இந்த பேச்சி வெளிவருகிறது.
‘படைப்பாளியை, கலைஞனை சமூகம் கொண்டாட வேண்டும். அவனை, அவன் படைப்பின் மூலமாக மட்டுமே அடையாளம் காண வேண்டும். அவனுடைய வாழ்வு, முழுக்க முழுக்க அவனுடைய தனிப்பட்ட விஷயம், அதிலிருக்கும் கீழ்மைகளை, குறைகளை, வாசகன் அல்லது ரசிகனுக்கு அநாவசியமானது, கண்டுக்கொள்ள வேண்டியதில்லை’
என்பதாக, பேச்சுகள், விவாதங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.
‘யாரேனும்’ ஒரு படைப்பாளி, என்று நான் குறிப்பிடுவதில் இருக்கும் ‘யாரேனும்’ என்ற பதத்தை நான் கவனத்தோடுதான் எழுதுகிறேன். காரணம், பிரபலமான படைப்பாளிகள் மரணிக்கின்ற பொழுது இத்தகைய பேச்சுகள் எழுவதில்லை. பிரபலம் அல்லாத, மரணிக்கின்ற வரையில் பெரும்பாலான வாசகனை, ரசிகனை சென்றடையாத படைப்பாளி, கலைஞன் மறைவின் போதுதான் இந்தப் பிரச்சனை எழுகிறது.
யார் அவர்? என்று கேட்டும் அளவிற்கே, அவர்களுடைய படைப்பும், எழுத்தும் வாசகனை, ரசிகனை சென்றடைந்திருக்கிறது. அதற்கு யார் காரணம்?
வாசகனா?… படைப்பாளியா?
ரசிகனா?… கலைஞனா?
என்னைக்கேட்டால்… படைபாளியே, கலைஞனே காரணம் என்பேன்.
தனக்குறிய வாசகனை, ரசிகனை சென்றடைவது, படைப்பாளியின் கடமைதான். இன்னும் கொஞ்சம் மாற்றி சொல்ல வேண்டுமானால், அது படைப்பின் கடமை.
ஆம்… படைப்பின் கடமை அது.
அதெப்படி? என்றால்… தகுதியான படைப்பு, அதற்குறிய இடத்தை ஒருநாள் அடைந்தே தீரும்.. அதுவே வரலாற்றில் பதிந்திருக்கிறது. பல்வேறு உதாரணங்களை நாம் பார்க்க முடியும். காலம் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் ஒருநாள் அது மேடையேறும். கொண்டாடப்படும்.
படைப்பையும், படைத்தவனையும் பிரித்து பார்க்க கூடாது. இரண்டையும் ஒப்பு நோக்குவதில்தான், அப்படைப்பின் மீதான மதிப்பீட்டை, படைப்பாளியின் மீதானா மதிப்பீட்டை வைக்க வேண்டும். படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்று பேசுவது, அயோக்கியத்தனம்.
தகுதியானவனிடமிருந்தே, தகுதியான சொல் வரும். வரவேண்டும். தகுதியானவர்களிடமிருந்து சில சமயம், தகுதியற்ற சொல், செயல் வெளிப்படலாம்… பட்டிருக்கிறது. என்றாலும் அது அவருடைய, ‘அப்போதைய’ நிலைமையின் அழுத்தம், வெளிப்பாடாக இருப்பின், அதனை விதிவிலக்காக கொள்ளலாம். ஆனால், அதுவே அவருடைய வாழ்வாக, வழக்கமாக இருந்தால்.. அவர் மீதான மதிப்பீட்டிற்கு அளவுகோலாக கொள்ளப்பட வேண்டும்.
சொல்லும், செயலும் ஒத்துப்போக வேண்டும். சொல் ஒன்று, செயல் ஒன்று இருப்பவனை மதிக்க முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது.
குறிப்பாக… தனிப்பட்ட வாழ்வில், தன் உடல் பேணாது, உறவு பேணாது, நட்பு பேணாது போன ஒருத்தன், சமூகத்தை பேணுவான் என்பதை நம்ப முடியாது… ஏற்க முடியாது.
உடலுக்கும், உறவுக்கும், பொருளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ‘தெரிந்தே’ அதில் வீழ்பவனை, கொண்டாட சொல்லக்கூடாது. கொண்டாடவும் முடியாது. ஏனெனில், அவன் படைப்பு சமூகத்திற்கு வழிகாட்டுமெனில், அவன் வாழ்வு ஒரு தவறான முன்மாதிரியாக மாறிவிடக்கூடிய அபாயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் பொருட்டே, படைப்பும், படைப்பாளியும் ஒத்திசைந்திருக்க வேண்டுமென்கிறோம்.
ஒருவருடைய உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவனே பொறுப்பாகிறான். சமூகம் அல்ல..!
‘ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.’ - திருக்குறள்
(ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்)
- விஜய் ஆம்ஸ்ட்ராங்
ஆறு கடலை டைவதைப் போல படைப்பாளியின் படைப்பு வாசகனை சென்றடைய வேண்டும் என்கிற கருத்தைப் பெற்றுக் கொண்டேன். நன்றி ஜி.
பதிலளிநீக்கு