நான் நேசிக்கும், போற்றும் ஆசான்கள், சக கலைஞர்கள், தொழில்நுட்பாளர்கள், அம்மா, துணைவியார், நண்பர்கள், தோழர்கள் ஒன்று கூடி எங்கள் விழாவை சிறப்பாக்கிவிட்டீர்கள்.
‘குறும்படம் எடுப்பது எப்படி?’ என்ற பயிற்சிப்பட்டறையில் ‘கசடற’ குறும்படத்தை எடுத்தோம். அதன் நோக்கம் பயிற்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு நேர்த்தியாக ஒரு குறும்படத்தை எப்படி எடுப்பது என்ற பயிற்சியை வழங்குவதுதான். அதைத்தவிர்த்து வேறெதும் திட்டமில்லை அப்போது.
குறும்படம் தயாராகிய போது, அதனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த நண்பர்கள், படம் சிறப்பாக இருக்கிறது. அது பேசும் ‘கருப்பொருள்’ மிக முக்கியமானது, அதனால் குறும்பட விழாக்களுக்கு அனுப்பி வையுங்கள் என்றார்கள். சில போட்டிகளுக்கு அனுப்பி வைத்தேன். விருதுகளைப் பெற்றது. அதன் பிறகு எப்படி வெளியிடுவது என்ற குழப்பம் தொடர்ந்துக் கொண்டிருந்தபோது, எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று நான் மதிக்கும் சில ஆளுமைகளுக்கு அனுப்பி வைத்தேன்.
அதில் எழுத்தாளர், இயக்குநர் திரு.ரவிசுப்பிரமணியன் படத்தைக் குறித்தும், பாராட்டியும் நீண்ட கட்டூரை ஒன்றை எழுதி அனுப்பினார். அது மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுத்தது. டிஸ்கவரி புக் பேலஸ் திரு.வேடியப்பன் படத்தைப் பார்த்துவிட்டு, சிறப்பாக இருக்கிறது… திரையிடலாம் என்றார், நான் தயங்கியபோது, ‘டிஸ்கவரி - நிகழ்வு’ சார்பாக நாங்கள் செய்கிறோம் என்றார். திரு.ரவிசுப்பிரமணியன் மற்றும் திரு.வேடியப்பன் அவர்களின் முயற்சியாலும், தூண்டுதலாலுமே இந்நிகழ்வை நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
நிகழ்வை நடத்தலாம் என்றானவுடன், திரு.பி.சி.ஶ்ரீராம், திரு.ராஜூவ்மேனன் அவர்கள்தாம் நினைவுக்கு வந்தார்கள். இருவரும் என் மானசிக குருமார்கள். நான் ஒளிப்பதிவாளனாக வரவேண்டும் என்ற எண்ணத்தை, விருப்பத்தை என்னுள் விதைத்தவர்கள் இவர்கள் இருவரும்தாம். என் மீது அன்பும் பிரியமும் கொண்டவர்கள். என் வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த உதவியை, உற்சாகத்தை எப்போதும் வழங்கக்கூடியவர்கள். அவர்களுடனான நட்பும் பழக்கமும்… வாழ்வு எனக்கு கொடுத்த கொடை. இருவருக்கும் சாத்தியப்படக்கூடிய நாளைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன். இருவருமே பேசிய அடுத்த கணம் “வருகிறேன்” என்றார்கள். தேதி முடிவாகியது.
பிறகு திரு.செழியன் அவர்களோடு பேசினோம். படத்தைப்பார்த்துவிட்டு “அருமையான படம், விழாவில் சந்திப்போம்” என்றார். என் மீது எப்போதும் அன்பும், அக்கறையும் கொண்ட திரு.இளவரசு அவர்களோடு பேசினேன் “கண்டிப்பாக வருகிறேன் தம்பி” என்றார். தோழர், இயக்குநர் திரு.கோபி நயினாரை அழைத்தேன். எழுத்தாளர் திரு.பாஸ்கர் சக்தி அவர்களுக்கு குறும்படத்தை அனுப்பி விட்டு, நீங்கள் வரவேண்டும் சார் என்றேன். படத்தைப்பார்த்து விட்டு தொலைபேசியில் தன் கருத்துகளைப் பகிர்ந்துக்கொண்டார். விழாவிற்கு வருகிறேன் என்றார். தோழி, எழுத்தாளர் திருமதி.ஜா.தீபா அவர்களையும் அழைத்தேன். இரு பெண்குழந்தைகளுக்கு அம்மா அவர்கள், அவர்களுடைய கருத்தை அறிய ஆவலாய் இருந்தேன். நண்பர், எழுத்தாளர் திரு.பாபு சீனிவாசன் அவர்களின் முயற்சியில், கவிஞர், பாடலாசிரியர் திரு.இளங்கோ கிருஷ்ணன் அவர்களையும் அழைத்தோம். விழா அன்று, அவருக்கும் பாடல் பதிவு இருந்தபடியால் வரமுடியாமல் போய் விட்டது.
இவ்விழா சிறப்பாக நிகழ்ந்தேறியது என்று என்னால் இப்போது சொல்ல முடிவதற்கு காரணம், இவர்களும்… என் நண்பர்களாகிய நீங்களும் தாம்.
விழா ஏற்பாடு ஆனவுடன் நான் முதலில் அழைத்து துணை நிற்க கேட்டது, மூத்த பத்திரிக்கையாளர், புகைப்படக்காரர் திரு.சிவபெருமாள் அவர்களைத்தான். என் மீது அன்பும், நட்பும் பாராட்டக்கூடியவர், ஆனந்த விகடனில் என்னுடைய சீனியர். அவரும் என்னோடு இணைந்துக்கொண்டார். இருவரும் டிஸ்கவரிக்கு சென்று ஏற்பாடுகளை கவனிக்கத்துவங்கினோம். விழாவிற்கு எத்தனை பேர் வருவார்கள், அதற்கு ஏற்ற இடம் போதுமானதா என்று திரு.வேடியப்பனோடு கலந்தாலோசித்தோம். அங்கே இருந்த அரங்கு 70 நபர்கள் தாங்கக்கூடியது, அது போதும் அவ்வளவுதான் வருவார்கள் என்று நினைத்தோம். இப்போதெல்லாம் கூட்டங்களுக்கு அவ்வளவாக யாரு வருவதில்லை, எல்லோரும் யூடியூபில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள், வழக்கமாக 30-40 பேர் வருவார்கள் என்றார் வேடியப்பன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை மீறி 200 அதிகமான நண்பர்கள் கூடி விழாவை சிறப்பாக்கிவிட்டீர்கள்.
மேலும் பாபு சீனிவாசன்,மகேந்திரன்,சூர்யா, வெங்கட் என்ற என் நண்பர்கள் குழுவும் துணை நின்றது. வீட்டில் என் துணைவியார், அம்மா இருவரும் விழாவை சிறப்புற நிகழ்த்த பல்வேறு யோசனைகளை வழங்கினார்கள். அம்மா “இனிப்பு பொங்கல்” செய்துத்தரவா எல்லோருக்கும் குடுக்க என்றார்கள். மனைவி “நான் விழாவை தொகுத்து வழங்கவா..?” என்றார்கள்.
இத்தனைப்பேரின் துணையும், ஆதரவும் அன்பும்தான் நான் உற்சாகத்தோடு நடைபோட உதவுகிறது.
எல்லோர் மீதான என் அன்பும் நன்றியும் எப்போதும் மனதில் நிற்கும்.
நன்றி குருமார்களே…!
நன்றி நண்பர்களே…!
நன்றி தோழர்களே…!
கருத்துகள்
கருத்துரையிடுக