திரைத்துறைக்குள் நுழைந்து, ஓர் உதவி ஒளிப்பதிவாளனாக வாய்ப்புத் தேடி, பிரபல ஒளிப்பதிவாளர்களைச் சந்தித்தப்போதெல்லாம், தவறாமல் சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. அதில் மிக முக்கியமானது..
“நீங்கள் ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும்? எதனால் இத்துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்? ”
ஆரம்பத்தில், இப்படியான ஒரு கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற வேட்கை என் பள்ளிப் பருவத்தில் வந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், +2 தேர்வு எழுதி விட்டு, நண்பர்களோடு ஒரு திரைப்படத்திற்குச் சென்றோம். கொஞ்சம் தாமதமாக சென்றுவிட்டோம். நாங்கள் திரையரங்கினில் நுழைந்த போது, திரைப்படம் துவங்கி, ஒரு பாடல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அப்பாடல் மிகப் பிரபலமானதொன்று. படம் வெளியாவதற்கு முன்பே, பெரும் வரவேற்பைப்பெற்ற காதல் பாடல் அது.
அப்பாடலின் இசையும், வரிகளும் இளைஞர்களை வசியம் செய்திருந்தன. நாங்கள் திரையரங்கில் நுழைந்த போது, அப்பாடல்தான் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த அந்தக் கணம், திரையரங்கு முழுவதும் நிரம்பி வழிந்த அதன் இசை எங்களை ஆக்கிரமித்தது. அப்பாடல் படமாக்கப்பட்டிருந்த விதமும் சிறப்பாக இருந்தது. திரையில் விரிந்த அதன் காட்சிகள் எனக்குள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தியன. அப்பாடலின் இசை, அதன் வரிகள் சிறப்பானவை என்றபோதிலும், அதனையும் மீறி அப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விதமும் அதன் அழகும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
அது, ‘பம்பாய்’ திரைப்படம்… அப்படத்தில் இடபெற்ற ‘உயிரே உயிரே’ பாடல்தான் அது.
நீங்களே அறிவீர்கள், அப்பாடல் எத்தகைய புகழ் பெற்றது என்பதை. அதன் இசை, அதன் வரிகள் மற்றும் அது காட்சிப்படுத்தப்பட்டவிதம் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பதை நாம் அறிவோம். என்னளவில், அதன் ஒளிப்பதிவு மிகவும் மறக்க இயலாத ஒன்று.
திரையரங்கில் அப்பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது என் மனதில் அவ்வெண்ணம் மெதுவாக உயிர்த்தெழுந்தது ‘நான் ஒரு ஒளிப்பதிவாளனாக’ வேண்டும். கல்லூரியில் என்ன படிக்கலாம் என்ற எதிர்காலத்திட்டங்கள் வகுத்துக்கொண்டிருந்த அந்நேரத்தில் தோன்றிய அவ்வோசனை வெறும் யோசனையோடு நிற்கவில்லை.
காட்சிகள் மூலம், ஒளிப்பதிவின் மூலம் ஒரு பார்வையாளனை இத்தனை தூரம் பரவசப்படுத்த முடியும் எனில், இது எத்தனை உயர்வானது! இதை ஏன் நான் கற்றுக்கொள்ள கூடாது.!? நான் ஏன் ஓர் ஒளிப்பதிவாளனாக மாறக்கூடாது..!? என்று மனதெங்கும் கேள்விகள் உருவாயின. அத்திரைப்படத்தின் தரமும், அது ஏற்படுத்திய பரவசமும்தான், நான் ஒளிப்பதிவாளனாக மாற வேண்டும் என்ற கனவை முதன் முதலாக என்னுள் விதைத்தவை.
உங்களுக்கு?
(தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக