திரைப்படக்கல்லூரி என்று ஒன்று உண்டு. அங்கே ஒளிப்பதிவுத்துறைக்கென்று படிப்பும் இருக்கிறது என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கிராமத்துக்காரன் அல்லவா! இயற்பியல், கணினி என சிலவற்றை படிக்க விரும்பி, பின்பு தந்தையின் விருப்பத்தின் பேரில், பெங்களூரில் சட்டப் படிப்பில் சேர்த்துவிடப்பட்டேன். முதலில் அது வருத்தமாக இருந்தபோதும், பெங்களூர்’ என்பதனால் சமாதானம் ஆகிக்கொண்டேன்.
பிறந்ததிலிருந்து கிராமத்திலேயே வளர்ந்த ஒருவனுக்கு பெங்களூர் போன்ற பெரும் நகரம் கொடுத்த பரவசத்தை எப்படிச்சொல்ல!?, குளிரும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் இடைப்பட்ட தட்பவெப்ப நிலையில் இருக்கும் அந்த ஊர், மரங்களால் சூழப்பட்ட அதன் சாலைகள், உயர்ந்த கட்டிடங்கள், பெரிய பெரிய திரையரங்குகள், பரந்துவிரிந்த பார்க்குகள் என்று நகரம் முழுவதும் சுவாரசியத்தை உள்ளடக்கி வைத்திருந்த அந்த ஊர், என்னுடைய கல்லூரி காலத்தை அர்த்தமுள்ளதாக்கியது.
அங்கே வாரத்திற்கு நான்கு திரைப்படங்களைப் பார்த்துவிடுவேன். அப்போது பார்ந்த ஆங்கிலப்படங்கள்தான் என்னுடைய ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற ஆசைத்தீயில் மேலும் நெய்யை ஊற்றின.
அதேநேரம் ‘வாசித்தல்’ எனும் பழக்கமும் அதிகரித்திருந்தது. பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் ‘படிப்பு’ இருக்கிறது என்னும் உண்மையை கதைப்புத்தகங்கள் எனக்கு உணர்த்தியிருந்தன. ராணி காமிக்ஸ், லயன், முத்து காமிக்ஸ், ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, ஓஷோ, சுரா, கிரா, திஜா..என்றும் தேடித்தேடி வாசிக்கும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது. திரைப்படத்திற்கும் இலக்கியத்திற்கு தொடர்பு உண்டு என்பதை நம்பத்துவங்கிருந்தேன். சொல்லப்போனால், அதுதான் தூரம் குறைந்த ‘குறுக்கு வழி’ என்ற எண்ணமும் இருந்தது.
ஒளிப்பதிவாளனாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தேடத்துவங்கினேன். சட்டப்படிப்பு ஒருபுறம் இருக்கட்டும். நாம் விரும்பும் ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்ளுவது எப்படி..? அதற்கான தகுதிகள் என்னென்ன? அதை வளர்ந்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
ஒளிப்பதிவாளனாவதற்கு அடிப்படை, ஒரு புகைப்படக்காரனாக இருப்பது என்பதும், ஒளிப்பதிவுத்துறைக்கு அடிப்படை புகைப்படத்துறை என்பதையும் அறிந்துக்கொண்டேன். மேலும், திரைப்படங்களைப் பார்ப்பதும், சிறந்த ஒளிப்பதிவாளர்களை அடையாளம் காணுவதும், அவர்களின் நுட்பங்களை கவனிப்பதும் அவசியம் என்பதையும் புரிந்துக்கொண்டேன். பின்பு, புகைப்படக் கேமராக்களை பழுது பார்க்கும் கடை ஒன்றில் பகுதி நேர ஊழியனாக சேர்ந்து, பல புகைப்படக் கேமராக்களை பற்றி அறிந்துக்கொண்டதும், புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெற்றதும், அதன் வழி பெற்ற அனுபவத்தில் ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘மாணவ பத்திரிக்கையாளனாக’ இணைந்ததும், கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு ரயில் ஏறியதும் நான் கடந்து வந்த பாதை.
கருத்துகள்
கருத்துரையிடுக